காலையில் கல்லூரிப் பேராசிரியர்..மாலையில் கரகாட்டக் கலைஞர்!
நம் பாரம்பரியக் கலைகளில் ஒன்று கரகாட்டம். இதில் ஈடுபடும் கலைஞர்கள் பெரும்பாலும் வழிவழியாகவே கரகம் ஆடுபவர்களாக இருப்பார்கள். அதேநேரம், போதிய படிப்பறிவு இல்லாமலும் இருப்பார்கள். ஆனால், மதுரையைச் சேர்ந்த மலைச்சாமி இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்.
 கரகாட்டக் குடும்பத்திற்கும் அவருக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது. எம்.இ எஞ்சினியரிங் முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றிக்கொண்டே கரகாட்டக் கலைஞராக மிளிர்கிறார். காலையில் கோட், டை சகிதம் பேராசிரியராக கல்லூரியில் பாடங்களை எடுக்கும் அவரை, அதே தினம் மாலையில் பளபளவென ஜிகினா சட்டை அணிந்து, தலையில் கரகத்தை வைத்தபடி ஜொலிக்கும் ஒரு கரகாட்டக் கலைஞராகவும் பார்க்கலாம். அந்தளவுக்கு கலையின் மீதான தாகத்தால் கரகாட்டத்தைப் போற்றி வருகிறார் மலைச்சாமி. கரகாட்டம் மட்டுமல்ல. காவடியாட்டம், ஒயிலாட்டம், மாடு, மயில் ஆட்டங்கள், பொய்க்கால் குதிரை, காளியாட்டம், கருப்பசாமி ஆட்டம், தீச்சட்டி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமியக் கலைகளும் பேராசிரியர் மலைச்சாமிக்கு அத்துப்படி. அதனாலேயே சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை எல்லா மாவட்டங்களிலும் கிராமிய ஆட்டங்களுக்காக இவரை வாஞ்சையுடன் அழைத்துச் செல்கின்றனர். இது கோயில்களில் திருவிழாக் காலம் என்பதால் நிகழ்ச்சிகளுக்காக தூக்கமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார் மலைச்சாமி.
 ‘‘சொந்த ஊர் மானாமதுரை. பிறந்து வளர்ந்து படிச்சதெல்லாம் மதுரை. கரகாட்டக் கலைக்கும் என் குடும்பத்திற்கும் சம்பந்தமே கிடையாது. என் அப்பா சுப்ரமணியன் வங்கியில் கேஷியராக இருந்தார். அம்மா அழகம்மாள் ஹவுஸ்வொய்ஃப். இப்ப அவங்க இல்ல. ரெண்டு அக்காக்கள், ஒரு அண்ணன்னு ஆறு பேர் குடும்பம். நான் நல்லா படிச்சு சிறப்பாக வரணும்னு அப்பாவின் ஆசை. அதனால, அப்பாவின் ஆசையையும் நிறைவேற்றினேன். என் ஆர்வத்தையும் செயல்படுத்தினேன்...’’ எனச் சிரித்தபடியே தொடர்ந்தார் மலைச்சாமி.
 ‘‘கரகாட்டம் மேல ஆர்வம் வரக் காரணம் என் பள்ளிதான். ஏன்னா, கரகாட்டப் போட்டியில் சேர்ந்த ஒரு பையன் பயிற்சி அன்னைக்கு வரலனு என்னை கேட்டாங்க. அப்படியாக நான் உள்ளே சேர்ந்து ஆர்வமாகிட்டேன். மதுரை தெப்பக்குளம் தியாகராசர் நன்முறை மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிச்சிட்டு இருந்த நேரம். அப்ப கலை, இலக்கியப் போட்டிகள் நிறைய நடக்கும். போட்டிகள்னு வர்றப்ப அந்தக் கலை சம்பந்தமான கலைஞரை வெளியிலிருந்து அழைச்சிட்டு வந்து சொல்லிக் கொடுப்பாங்க. பிறகு, போட்டிகளுக்கு அனுப்புவாங்க.
ஆறுபேர் கொண்ட கரகாட்டக் குழுவுல ஒரு பையன் வரல. அப்ப வகுப்பாசிரியை, ‘கரகாட்டம் ஆடுறியா மலைச்சாமி’னு கேட்டார். சரினு போனேன். அதுக்கு முன்னாடி பள்ளியிலிருந்து ஒயிலாட்டம் கத்துக் கொடுத்தாங்க. அதுல நான் பங்கேற்று ஆடியிருந்தேன். பித்தளை செம்பு, கிளி எல்லாம் பார்க்கிறப்ப எனக்குள்ள ஒரு ஈர்ப்பு வந்துச்சு. இருந்தும் வீட்டுல திட்டுவாங்கனு பயந்து ஒரு செம்பை எடுத்து பின்னாடி பள்ளமாகத் தட்டி பயிற்சிக்குப் போனேன்.
அங்க எங்களுக்கு, ‘கரகாட்டக்காரன்’ படத்துல நடிகர் ராமராஜனுக்கு டூப் போட்ட ஏ.லூர்துசாமி என்பவர் சொல்லித்தர வந்தார். பள்ளி அளவில் இருக்கும்போது அவரிடம் கத்துக்கிட்டேன். பத்தாம் வகுப்பு முடிச்சதும் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் ஒன் சேர்ந்தேன். அங்கேயும் இதேமாதிரியான போட்டிகள் வந்துச்சு. அப்ப அங்குள்ள தமிழ் அய்யாவிடம் நானும் ஆடுவேன்னு சொன்னேன். அவரும் உற்சாகப்படுத்தினார். அங்கேயும் மாவட்ட அளவுல கலந்துக்கிட்டு முதல்பரிசு, ரெண்டாம் பரிசுனு வாங்கினேன்.
அப்ப கரகாட்டத்தை முறையாக கத்துக்க நினைச்சேன். இந்நேரம் ப்ளஸ் டூ முடிச்சு பி.இ கருவியியல் மற்றும் கட்டுப்பாட்டுப் பொறியியல் துறையில் சேர்ந்தேன். அதேநேரம், காந்தி மியூசியத்துல ஒவ்வொரு ஆண்டும் மே மாச விடுமுறையில் நாட்டுப்புறக்கலைகள் சொல்லித் தருவாங்க. இலவசப் பயிற்சிதான். அதுலயும் கலந்துகிட்டேன். இங்க முறையான ஆட்ட அடவுகளை கரகாட்டக் கலைஞர் கலைமாமணி வீ.வேலு என்பவர் எனக்கு கற்றுத்தந்தார். செம்பை எடுத்து எப்படி முறைப்படி தலையில் வச்சு ஆட்ட அடவுகளை ஆடணும்னு சொல்லித் தந்தார். படிப்புடன் கரகாட்டமும் தொடர்ந்தது.
பிறகு, கல்லூரிப் படிப்பு முடிஞ்சது. அப்ப நான் ஆடிட்டு இருந்த குழுவுல என்னுடன் ஒரு பொண்ணு ஆடினாங்க. அவங்க பேராசிரியர் பத்ம விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவில் இருந்தாங்க. நான் ஆடுவதைப் பார்த்திட்டு நவநீதகிருஷ்ணன் அய்யாவிடம் சொல்லியிருக்காங்க. அந்நேரம் அவங்களுக்கு ஒரு ஆண் கரகாட்டக் கலைஞர் தேவைப்பட, உடனே என்னை வரச்சொன்னார்.
‘பல்லடத்தில் நம்ம நிகழ்ச்சி இருக்கு. மாலை வந்திடுங்க’னு சொன்னார். அதுதான் நான் ஏறிய முதல் தொழில் நிமித்தமான கமர்ஷியல் மேடை. அய்யாவிடமும், அம்மாவிடமும் நிறைய கத்துக்கிட்டேன். நிறைய நிகழ்ச்சிகளுக்கும் கூட்டிட்டு போனாங்க. வெளிநாடுகளுக்கும் என்னை அழைச்சிட்டு போனாங்க. அவங்க குழுவில் நான்கு ஆண்டுகள் ஆடினேன். நான் பி.இ முடிச்சதுமே மதுரை வரிச்சூரில் இருந்த பாலிடெக்னிக்கில் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்திட்டேன். காலையில் கல்லூரி, மாலையில் நவநீதகிருஷ்ணன் அய்யா கூப்பிட்டால் நிகழ்ச்சினு போயிட்டு இருந்தேன்.
இந்நேரம், தஞ்சாவூர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் சீனியர் விரிவுரையாளராக வேலை கிடைக்கவும் அங்க ஷிஃப்ட் ஆனேன். அப்ப தஞ்சாவூர்ல கலைமாமணி தேன்மொழி ராஜேந்திரன் அக்காவின் தொடர்பு கிடைச்சது. அவங்க குழுவுல போய் இணைஞ்சேன். 2005ம் ஆண்டு என் அம்மா லூகேமியா நோயால் இறந்திட்டாங்க.
எனக்கு மறுநாள் திருமணம் நடக்க இருந்தது. இரவு அம்மா தவறிட்டதால எல்லோரும் உடைஞ்சு போயிட்டோம். அப்புறம், நான்கு மாசம் கழித்து எனக்கு திருமணமாச்சு. அதே ஆண்டு எம்.இ. எஞ்சினியரிங் படிப்பையும் முடிச்சேன் இப்ப பிஹெச்.டி முடிக்கிற தருவாயில் இருக்கேன். தஞ்சாவூர்ல ஐந்து ஆண்டுகள் இருந்தேன். அங்க நிறைய மேடைகள் கிடைச்சது. கரகாட்டம் மட்டுமில்லாம காவடி, பொய்க்கால்குதிரை, மாடு, மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம்னு நிறைய கத்துக்கிட்டேன்.ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அப்பா ஓய்வு பெற்றதும் மதுரைக்கே திரும்பினேன். இங்க நான் படிச்ச சேது பொறியியல் கல்லூரியிலேயே உதவி பேராசிரியராக வேலை கிடைச்சது. மதுரைக்கு வந்ததும் என் குரு கலைமாமணி வேலு குழுவுல சேர்ந்தேன்.
ஒருகட்டத்துல என்னை நம்பி தனியாக வேலை வந்தது. என் அம்மா பெயரை வைத்து அழகம்மாள் கிராமியக் குழு தொடங்கினேன். வெவ்வேறு இடங்களுக்கு போய் நிகழ்ச்சிகள் செய்தேன். இப்படியாக தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் போய் நான் ஆடுறேன். தனியாக எனக்கு வர்ற நிகழ்ச்சிக்கும் போவேன். நான் ஆடின குழுவுல இருந்தும் கேட்பாங்க. அதுக்கும் போயிட்டு இருக்கேன்.
இந்த ஆண்டு இதுவரை 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் பண்ணிட்டேன். எங்களுக்கு சீசன் காலமே மாசி மாசம் முதல் ஆவணி மாசம் வரைதான். இப்ப காளியாட்டம், கருப்பசாமி ஆட்டம்னு மரபுக் கலைகள் எல்லாமே ஆடுறேன். ஆரம்பத்துல கல்லூரியில் பசங்க ரொம்ப கிண்டல் செய்தாங்க. நாட்கள் போகப் போக அந்த பார்வை மாறிச்சு. ரொம்ப மதிக்கிறாங்க. இப்ப நான் லதா மாதவன் பொறியியல் கல்லூரி மின்னியல் துறையில் இணை பேராசிரியராக வேலை செய்றேன். இங்கேயும் நல்ல அங்கீகாரம் தந்து பாராட்டுறாங்க.
இதுவரை லீவு போட்டு எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக்கிட்டதில்ல. இரவு எத்தனை மணிக்கு நிகழ்ச்சி முடிஞ்சாலும் கல்லூரிக்குப் போயிடுவேன். அதனால, யாரும் எதுவும் சொல்றதில்ல.
என் மனைவி கவிதா விருதுநகர் அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராக இருக்காங்க. எங்களுக்கு ரெண்டு பசங்க. ஒருத்தன் ப்ளஸ் டூ முடிச்சிட்டு கல்லூரிக்குப் போக காத்திருக்கான். இன்னொரு பையன் எட்டாம் வகுப்பு படிக்கிறான்.
என்னுடைய மனைவிக்கு இப்பவரை நான் கரகம் ஆடுறது பிடிக்காது. ஆனா, இதை நான் ஒரு கலையாகவே பார்க்கிறேன். ரொம்ப புரொஃபஷனலா ஆடக்கூடிய கலைஞன் நான். பெரும்பாலும் என் ஆட்டம் எல்லாமே மேடையில்தான்...’’ என்கிறவர், கவிஞராகவும், சிறுகதை எழுத்தாளராகவும் மிளிர்கிறார். இவரது கனவு தமிழக அரசின் கையால் கலைமாமணி விருது பெற வேண்டும் என்பதே! ‘‘நான் மாவட்ட அளவுல தமிழ்நாடு அரசின் கலைச்சுடர்மணி விருதினை மதுரை கலெக்டர் கையால் வாங்கினேன். இருந்தும் என் கனவு, ஆசையெல்லாம் இருபது ஆண்டுகளாக கரகாட்டக் கலைஞராக இருக்கிற எனக்கு ஓர் அங்கீகாரம் வேண்டும் என்பதுதான். இதுக்காக ஒவ்வொரு ஆண்டும் நான் கலைமாமணி விருதுக்காக விண்ணப்பிச்சிட்டே இருக்கேன். ஆனா, கிடைக்கல. இந்தாண்டும் விண்ணப்பிச்சிருக்கேன். கிடைச்சால் மகிழ்ச்சியாக இருக்கும்.
அடுத்ததாக, இந்த ஆட்டத்தை இன்னமும் வேறுகோணத்தில் பார்க்கிறவங்களும் இருக்காங்க. அதை மாற்றி இது பாரம்பரியக் கலைனு சொல்ல வேண்டியிருக்கு. அதுக்கு என்னாலான முயற்சிகளை செய்யணும்னு இருக்கேன். ஆனா, முன்னாடி இருந்ததைவிட இப்ப நிறைய விழிப்புணர்வு வந்திருக்கு.
பாடத்திட்டங்களும் இருக்கு. நாட்டுப்புறக் கலைஞர்களை வைத்து நாட்டுப்புறக் கலைகளை அரசுப் பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளுக்குச் சொல்லித் தரும் ஓர் அரசாணை கூட இருக்கு. நானே நிறைய பள்ளிகளுக்குப் போய் சொல்லிக் கொடுத்திட்டு வர்றேன். இல்லம் தேடி கல்வியிலும் அரசு நிறைய விஷயங்களை செய்றாங்க. அதனால, இந்தக் கலை அழியாமல் காலத்திற்கும் இருக்கும்னு நம்பிக்கை இருக்கு…’’ என உற்சாகம் பொங்க சொல்கிறார் பேராசிரியரான கரகாட்டக் கலைஞர் மலைச்சாமி.
பேராச்சி கண்ணன்
|