காலேஜ் படிக்கும்போதே டைரக்டரானேன்... ஷூட் பிரேக்ல பிராக்டிக்கல் க்ளாஸ் போனேன்!



அறிமுகமான முதல் படத்திலேயே அஜித்தை இயக்கிய பெருமைக்குரிய இயக்குநர் ‘முகவரி’ வி.இசட்.துரை. தொடர்ந்து விஜயகாந்த், விக்ரம், சிம்பு என முன்னணி நடிகர்களின் படங்கள் செய்து கோலிவுட்டில் தனக்கென தனி இடம் பிடித்தவர். இப்போது ‘இருட்டு’க்குப் பிறகு இரண்டாவது முறையாக சுந்தர்.சி.யை வைத்து ‘தலைநகரம் 2’ இயக்கி முடித்துள்ளார். ரிலீஸ் பரபரப்பில் இருந்த வி.இசட்.துரையிடம் பேசினோம்.

வி.இசட்.துரை என்றால் இயக்குநர், தயாரிப்பாளர், பிசினஸ்மேன் என்றுதான் வீக்கிபிடியா தகவல் தருகிறது..?

ஃபிலிம் டைரக்டராவதற்கு முன்பே எனக்கு ஃபேமிலி பிசினஸ் இருந்தது. ஷாகுல் அமீது என்ற என்னுடைய நெருங்கிய உறவினர் கன்ஸ்ட்ரக்‌ஷன் துறையில் பெரும் புள்ளி. அந்த கம்பெனியில் நானும் அங்கம் வகித்தேன். இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் எங்கள் வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். அப்போது பிசினஸ் என் வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாக இருந்தது. மிக ஆடம்பரமான வாழ்க்கை அது. அதன் பிறகே டைரக்டரானேன்.

கல்லூரி படிக்கும்போதே யாரிடமும் உதவியாளராக இல்லாமல் எப்படி உங்களால் டைரக்டர் ஆக முடிந்தது?

எம்.ஏ. புள்ளியியல் படிக்கும்போது கவனம் சினிமா பக்கம் திரும்பியது. முதல் படமான ‘முகவரி’  முடித்த பிறகும் கூடுதலாக இரண்டு கோர்ஸ் முடித்தேன்.‘முகவரி’ ஃபைனல் ஒர்க் பண்ணும்போது தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி சாரிடம் ‘பிராக்டிக்கல் வகுப்புக்கு போயிட்டு வர்றேன்’னு சொல்லும்போதெல்லாம் ‘நீ சினிமா டைரக்டரா, மாணவனா, பிசினஸ்மேனா’ என்று விளையாட்டாகக் கேட்டதுண்டு.   

இந்தப் பேட்டியில் சக்கரவர்த்தி சாரை நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், என்னை வைத்து அவர் படம் தயாரிச்சது துணிச்சலான முடிவு. ‘வாலி’ ஹிட்டுக்குப் பிறகு ‘முகவரி’ தயாரித்தார். அப்போதெல்லாம் யாரிடமாவது கோ-டைரக்டராக இருந்தால்தான் சினிமா வாய்ப்பு கிடைக்கும். யாரிடமும் வேலை பார்க்காத என்னை நம்பி அவர் படம் கொடுத்தது மிகப் பெரிய செயல்.

யாரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்று சினிமாவை வாய் மொழியாக எனக்கு சொல்லிக்கொடுத்தவர் சக்கரவர்த்தி சார். பொதுவாக சினிமா பிரபலங்கள் மறைந்தால் தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு என்று சொல்வார்கள். அந்த வார்த்தைக்கு சரியாக பொருந்தக்கூடியவர் சக்கரவர்த்தி சார்.  என்னால் படம் பண்ணமுடியும் என்று அவர் நம்பிக்கை வைத்தார். நான் இறைவன் மீது நம்பிக்கை வைத்தேன். அஜித் சார் சக்கரவத்தி மீது நம்பிக்கை வைத்தார். அந்த காம்பினேஷன்தான் ‘முகவரி’.

டிரைலரில் சுந்தர்.சி ‘உடம்புல அருவா படாத இடமே இல்ல’னு சொல்லுமளவுக்கு ஆக்‌ஷன் தெறிக்குதே?

ஆக்‌ஷன் படத்தை எந்தளவுக்கு ரியலிஸமாக எடுக்க முடியுமோ அப்படி எடுத்துள்ளோம். பொதுவாக தாதா என்றால் சினிமாவில் வருவதுபோல் ஒரு பிம்பம் இருக்கும். ஆனால், ஒரிஜினல் தாதா ரொம்ப எளிமையாக இருப்பார். அதே சமயம் அவரிடம் எல்லா பவரும் இருக்கும். அதை இதுல காட்சிப்படுத்தி யிருக்கிறேன். அது ஆடியன்ஸுக்கு ஃப்ரெஷ் ஃபீல் கொடுக்கும்.

‘தலைநகரம்’ படத்துல ரைட்டு கேரக்டர் ஹிட். அதே பேர்லதான் சுந்தர்.சி., வர்றார். தலைவரைப் பொறுத்தவரை அவருடன் நான் பண்ணும் இரண்டாவது படம். சுந்தர்.சி சாரை தலைவர்னுதான் கூப்பிடுவேன். மணிவண்ணன் - சத்யராஜ் சார் கூட்டணி எப்படியோ அப்படித்தான் எங்கள் கூட்டணி.

நானும் அவரும் ஒரே ஊர்க்காரர்கள். பள்ளியில் என்னுடைய சீனியர். எங்களுக்கிடையே இருக்கும் புரிதலால்தான் தொடர்ந்து படம் பண்ணுகிறோம். அடுத்து ‘இருட்டு - 2’ பண்ணுகிறோம்.

சுந்தர்.சி சாருக்கு சினிமாவில் தெரியாத கிராஃப்ட் இல்லை. எனக்கு குருநாதர் இல்லாத குறையை தீர்த்துவைத்தவர் அவர். நிறைய நுட்பங்களை அவரிடம் கற்றுக்கொண்டேன். ஈகோ இல்லாதவர். எளிமையாகப் பழகுவார். ஒருவர் மீது நம்பிக்கை வந்துவிட்டால் கண்ணை மூடிக்கொண்டு வேலை செய்வார். முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்வார்.
இந்தப் படத்துல என்ன ஸ்பெஷல் என்றால் அவர் இயக்கி நடிக்கும் படங்களிலேயே அதிகம் மெனக்கெட மாட்டார்.

ஏனெனில், சுந்தர்.சி டைரக்‌ஷனில் சுந்தர்.சியை ஆடியன்ஸ் பார்க்கும் விதம் வேறு. அதுல அவரிடம் லைட் வெயிட் சப்ஜெக்ட்டைத்தான் எதிர்பார்ப்பாங்க.இதுல அவர் உடலை வருத்தி நடித்தது, மேக்கப், விக் என கமல் சார் பண்ற வேலையை செய்திருக்கிறார். ஏழு மணிக்கு மேக்கப் ஆரம்பித்து ஒன்பது மணிக்கு ஷாட்டுக்கு வந்துவிடுவார். அவர் படத்துக்கே அதை செய்யமாட்டாராம். அவரே பலமுறை ‘சார் உங்களுக்காகத்தான் பண்றேன்’னு சொல்வார்.

படப்பிடிப்பு தளத்திலும் அவருடைய வேலை கடினமாக இருக்கும். வழக்கமாக கேமரா ஆங்கிள் எந்தப் பக்கம் இருக்கிறதோ அந்தப் பக்கம் மட்டும் நடித்தால் போதும். ஆனால், நான் எல்லா கோணங்களிலும் நடிக்கணும்னு எதிர்பார்ப்பேன். எடிட்டிங் சமயத்துல அது உதவும். அதற்கும் ஒத்துழைப்புகொடுத்தார். ஆக்‌ஷன் காட்சிகளை ரியலாக ஷூட் பண்ணினோம். டூப் இல்லாமல், ஒரிஜினல் அரிவாளுடன் நடித்தார். டப்பிங்கிலும் வழக்கமான குரலில் பேசாமல் எந்தளவுக்கு அழுத்தமான குரலில் பேச முடியுமோ அப்படி பேசியிருக்கிறார்.

‘நாய் சேகர்’ இல்லாமல் ‘தலைநகரம் 2’ படம் பற்றி பேசமுடியாதே?

இது ‘தலைநகரம்’ இரண்டாவது பாகம் என்றாலும் அதன் தொடர்ச்சி கிடையாது. ‘தலைநகரம்’ என்ற டைட்டிலும், முன்னாள் ரவுடி கேரக்டரும் தேவைப்பட்டதால் அதை மட்டும் எடுத்துகொண்டோம். இது ஃப்ரஷ் கதை.நாயகி பாலக் லால்வாணி. படத்துல நடிகையாகவே வர்றார். நடிகைகளுக்கான நியாயத்தை அழுத்தமாக வெளிப்படுத்துமளவுக்கு சிறப்பாகப் பண்ணினார்.  

தம்பிராமையா சார் முக்கியமான கேரக்டர்ல வர்றார். படம் முழுக்க தத்துவம் பேசுவார். வெர்சடைல் ஆர்ட்டிஸ்ட் என்பதால் சோகத்திலும் காமெடி பண்ணியிருக்கிறார்.யூ-டியூப் பிரபலம் ஐரா இருக்கிறார். ‘பாகுபலி’ பிரபாகரன், ஜோஸ், விஷால் என மூன்று வில்லன்கள் இருக்கிறார்கள். ஒளிப்பதிவு கிருஷ்ணசாமி. ‘6 மெழுகுவர்த்திகள்’, ‘இருட்டு’, ‘நாற்காலி’ என தொடர்ந்து என்னுடன் பணிபுரிந்து வருகிறார். அவர் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான இடத்தில் இருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு சுந்தர்.சி சார் படங்களிலும் மற்ற படங்களிலும் பிஸியாக இருக்கிறார்.

இசை ஜிப்ரான். அவரை கமிட் பண்ணும்போது ‘உங்களுடைய இசை பலமாக இருக்கணும்’னு சொன்னேன். ஃபைனல் அவுட்புட் பார்த்தவர்கள் ‘ஜிப்ரான் மியூசிக் ப்ளஸ்ஸாக இருக்கிறது’ என்றார்கள். ஜிப்ரான் எப்போதும் இயக்குநரின் மியூசிக் டைரக்டராக நம்முடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். ஆடியன்ஸ் பார்வையிலிருந்து அவர் பண்ணும் மியூசிக் ஸ்டைல் பிடிச்சிருக்கு. எஸ்.எம்.பிரபாகரனும், நானும் சேர்ந்து தயாரித்துள்ளோம்.

சுந்தர்.சி மாதிரியான ஆளுமையைக் கையாள்வது எந்தளவுக்கு எளிமை? எந்தளவுக்கு கடினம்?

விஷயம் தெரிந்தவர்களுக்கு எளிது. விஷயம் தெரியாதவர்கள் பற்றி சொல்லத் தெரியல. ஏன் சொல்கிறேன் என்றால், சுந்தர்.சி சார் மட்டுமல்ல, அஜித், சிம்பு ஆகியோருடனும் என்னால் எளிதாக வேலை செய்ய முடிந்தது. இயக்குநர்கள் தெளிவாக இருந்தாலே நடிகர்கள் தங்களை முழுமையாக ஒப்படைத்துவிடுவார்கள்.‘முகவரி’ பண்ணும்போது புதுசுலேயே புதுசு என்ற இடத்தில்தான் நான் இருந்தேன். அதுல பி.சி.ஸ்ரீராம், தேவா, எடிட்டர் சுரேஷ் அர்ஸ், தோட்டா தரணி, கே.விஸ்வநாதன், ரகுவரன் இருந்தார்கள். அதுல நான் மட்டுமே மிகவும் சிறுவனாக இருந்தேன். ஆனால், என்னுடைய தெளிவான பார்வை எல்லோருக்கும் திருப்தி அளித்தது.  

‘இருட்டு 2’ எப்போது?

சமூகத்தை அச்சுறுத்தும் கொடுமையான விஷயத்தை கையில் எடுத்திருக்கிறேன். ஆரம்ப கட்ட வேலைகள் முடிந்துவிட்டது. சுந்தர்.சி நடிக்கிறார். சீக்கிரத்தில் அறிவிப்பு வெளியாகும்.  
‘முகவரி’ வெற்றிக்காக அஜித் உங்களுக்கு கார் பரிசளித்தாராமே?

எங்கள் வீட்டில் அப்போது நான்கு கார்கள் இருந்தன. அஜித் எனக்கு சான்ட்ரோ கார் பரிசு கொடுத்தார். அஜித் கமிட்டாகும்போது சக்கரவர்த்தி சார் மீதுள்ள நம்பிக்கையில் என்னிடம் கதை கேட்கவில்லை. படம் ஆரம்பிக்கும்போது அஜித் என்னிடம், ‘துரை நல்ல படம் எடுங்க, உங்களுக்கு கார் பரிசு தர்றேன்’ என்றார். நானோ, ‘சார் கார் வேண்டாம், உங்கள் நட்பும், கால்ஷீட்டும் போதும்’ என்றேன். ஆனாலும் ‘என் வாக்கை காப்பாத்துவேன்’ என்று சொன்னார்.

சினிமாவில் வெற்றி அடைந்த பிறகுதான் கார் அல்லது மற்ற பரிசு கொடுப்பார்கள். ரீ ரிக்கார்டிங் சமயத்தில் படம் பார்த்து கண்கலங்கிய அஜித், ‘நீங்க உங்க வாக்கை காப்பாற்றிய மாதிரி நான் என்னுடைய வாக்கை காப்பாற்றுவேன்’ என்று சொன்னபடியே பக்கத்தில் இருந்த தன் மனைவி ஷாலினியைப் பார்த்து ‘பத்து கார் பரிசு தருமளவுக்கு துரை படம் பண்ணியிருக்கிறார். நாம் உடனே ஒரு கார் பரிசு தருவோம்’ என்று மறுநாளே கார் பரிசளித்தார். எங்கள் வீட்டில் பல கார்கள் இருந்தாலும் அஜித் கொடுத்த கார் விலைமதிப்பு இல்லாதது. ஏனெனில், படம் வெளியாகாமலேயே அவர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி, கார் பரிசளித்தது தனிச் சிறப்பு.

எஸ்.ராஜா