ஒவ்வொரு வருடமும் சுமார் 4 கோடி யூனிட்கள் ரத்தம் தேவை!



ஒடிசா மாநிலம், பாலாசோர் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோரமண்டல் விரைவு ரயில், சரக்கு ரயிலுடன் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்தியாவில் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்தாகக் கருதப்படும் இதில் 288 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்தக் கோர விபத்தின் பகுதியை இப்போது சென்று பார்த்தாலும் நம் கண்களுக்குப் பளிச்சென தென்படுவது அந்நிலத்தில் இருக்கும் சிவப்பு நிறம்தான். அத்தனை உயிர்களின் ரத்தம் சிந்தியதன் விளைவுதான் நிலம் அப்படிச் சிவக்கக் காரணம். இப்போது மட்டுமல்ல வருடம் முழுக்கவே மருத்துவத் துறையில் தேவையான ஒன்றாக இருப்பது ரத்தம்.
அதிலும் இப்படியான விபத்துக் காலங்களில் எவ்வளவு ரத்தம் தேவைப்படும் என்பது மருத்துவர்களாலேயே அவ்வளவு சுலபமாக, விரைவாகக் கணக்கிட்டுச் சொல்லிவிடமுடியாது. ஒவ்வொரு நபராக சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ளும் தருவாயில்தான் ரத்தம் எவ்வளவு தேவை என்பதே தெரியவரும்.

ஆனால், எப்படி வெட்ட வெட்ட முடி வளருமோ அப்படி கொடுக்கக் கொடுக்க உற்பத்தி ஆகும் நம் உடலின் ரத்தத்தை இன்றும் கூட கொடுப்பதற்கு பலரும் தயக்கம் காட்டுகிறார்கள்.
ஒடிசா விபத்து, அதில் தேவைப்பட்ட ரத்தம், மேலும் ரத்தக் கொடை குறித்தும் பல விபரங்களையும் பகிர்ந்தார் ஸ்ரீவத்ஸா வேமா. ரத்த தான ஒருங்கிணைப்பாளரான இவர், ‘‘என் புகைப்படம் வேண்டாம். எங்களுடைய குழுவின் புகைப்படம் மட்டும் பதிவு செய்யுங்கள்...’’ என தங்களது ரத்த தானக் குழுவின் அடையாளத்தை (Platelet Club) மட்டுமே பகிர்ந்து கொள்ளச் சொன்னார்.

சுமார் ஆயிரம் கொடையாளர்கள் ஒன்றிணைந்து இந்தக் குழு நடத்துகிறார்கள். ஆண்டுதோறும் தமிழகம் முழுக்க இருக்கும் பல ரத்தத் தேவைகளுக்கு இக்குழு ரத்தம் பெற்றுத் தருகிறார்கள். மேலும் பல தன்னார்வலர்கள் இருக்கும் இக்குழு சார்பாக ஆண்டுதோறும் ரத்ததான முகாம்களும் நடக்கின்றன. ‘‘18 வயது நிரம்பிய , 50 கிலோ எடையுள்ள யாவரும் ரத்தம் கொடுக்கலாம். ஒரு சில ஆரோக்கியப் பிரச்னைகள் மற்றும் கருத்தரித்த பெண்கள், மாதவிடாய் காலத்தில் பெண்கள்... ஆகியோர் மட்டுமே அக்காலங்களில் ரத்தம் கொடுக்க அனுமதிக்கப்
படுவதில்லை. மற்றபடி யாவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்தம் கொடுக்கலாம்.

ஒருசில விபத்துகளில் அவ்வளவு ரத்தம் தேவைப்படாது. ஏன், இங்கேயே நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் அதே ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடினார்கள். ஆனால், ரத்தம் தேவைப்பட்டது வெறும் 5 நபர்களுக்குத்தான். அதே சமயம் ஒடிசாவில் சுமார் 150 யூனிட் ரத்தம் தேவையாக இருந்திருக்கிறது. ஆச்சர்யம்... சுமார் 600க்கும் மேலான இளைஞர்கள், வயதானவர்கள் என அவ்வளவு பேர் ரத்தம் கொடுக்க தாமாகவே முன்வந்திருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த விழிப்புணர்வு மட்டும் போதாது. டிஜிட்டல் யுகம் குறித்த விழிப்புணர்வும் அவசியம். முதலில் உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை அல்லது விபத்தால் ரத்த  இழப்பு எனில் முதலில் நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காக ரத்தம் கொடுக்க முன்வாருங்கள். எடுத்த எடுப்பிலேயே குறுஞ்செய்தியாக்கி சமூக வலைத்தளம், வாட்ஸ்அப் என அனுப்புவது அல்லது அவசரத்தில் தன்னார்வலர்கள் அமைப்புகளைத் தொடர்பு கொள்வது என நேரத்தை விரயமாக்காதீர்கள்.

கூப்பிட்டவுடன் ஓடிவரும், சுற்றம், உறவினர்கள், நண்பர்களிடம் முதலில் கேளுங்கள். குறைந்தபட்சம் பதற்றமேனும் குறையும். அடுத்து ரத்த தானம் அளிப்பதால் உண்டாகும் சின்ன மயக்கம் அல்லது கிறக்கம் போன்ற நிலை. முதல் முறை ரத்தம் கொடுக்கும் போதுதான் இப்படி ஏற்படும். தொடர்ந்து கொடுக்கும்போது இவை ஏற்படாது...’’ என்ற வத்ஸா, நம் நாட்டின் ரத்தத் தேவை எவ்வளவு உள்ளிட்ட விபரங்களையும் பகிர்ந்தார்.

‘‘ஒவ்வோர் ஆண்டும் நமது தேசத்தின் மொத்த தேவை சுமார் 4 கோடி யூனிட்கள். ஒரு யூனிட் ரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் என்பதை நாம் அறிவோம்தானே..? ஆனால், கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள்தான்.ரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை. ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 38,000த்துக்கும் மேல் ரத்த கொடையாளிகள் தேவை.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்களிடம் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. ரத்தம் இவர்களில் பலருக்கு தேவைப்படலாம். கீமோதெரபி சிகிச்சையின்போது தினமும் தேவைப்படும். ஒற்றை கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 யூனிட்களுக்கு மேல் ரத்தம் தேவைப்படலாம். இதில் பாம்பே ரத்தம் என்னும் ஒரு பிரிவு உள்ளது. இந்த ரத்தத்திற்குத்தான் அதிக தேவை. மிகக் குறைந்த கொடையாளர்களே இருக்கும் அரிய வகை ரத்தப் பிரிவு இது.  

மிகவும் நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘பாம்பே ஓ’ வகை ரத்தம் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. 10 லட்சம் பேரில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டுமே இந்த வகை ரத்தம் இருக்கும். இது ‘ஓ’ ரத்த வகையைப் போலிருந்தாலும், இந்த ரத்தத்தில் ‘ஆன்ட்டி ஹெச் சீரா’ என்ற ரசாயனத்தை சேர்த்து பார்க்கும்போதுதான் அரிதான ரத்த வகை தெரிய வரும்.

இந்த ரத்த வகை உள்ளவர்களுக்கு வேறு எந்த ரத்த வகையைச் சேர்த்தாலும் மரணம் ஏற்படும். எங்கள் தன்னார்வலர்கள் அமைப்பின் கணக்கீட்டின்படியே தமிழகத்தில் 30 பேருக்குத்தான் இந்த ரத்தம் உள்ளது. ஆனால், இன்னும் நிறைய பேருக்கு இருக்கலாம். அவர்கள் எல்லாம் தாமாக முன்வந்து தங்களின் ரத்தங்களைப் பதிவு செய்துகொள்வது சமூகத்துக்கு நல்லது என்பதைக் காட்டிலும் அவர்களுக்கே முதலில் நல்லது. காரணம், ‘பாம்பே ஓ’ வகை ரத்தத்தின் தேவை அதிகமாக இருக்காது என்பதால், இந்த ரத்தம் வங்கிகளில் சேமிக்கப்படாது. அப்படி சேமிக்கப்பட்டால் அது வீணாகும் சூழல் உருவாகும்.

‘பாம்பே ஓ’ வகை ரத்தம் உள்ளவர்கள் தங்கள் ரத்த வகை விபரங்களை அடையாள அட்டை அல்லது குறிப்பு எடுத்து எப்போதும் தங்களிடமே இருக்குமாறு வைத்திருக்க வேண்டும் என்பதும் மருத்துவர்கள் ஆலோசனை. காரணம், அவசரக் காலத்தில் பொதுவான ரத்த சோதனை மட்டுமே எடுப்பதுண்டு. அதில் பாம்பே ரத்தம் என தெரிய வராமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். இதனால் ரத்தம் மாற்றி ஏற்றப்படும் ஆபத்துகள் உருவாகும்...’’ என்ற வத்ஸா, ரத்தம் கொடுப்பதால் என்னென்ன நன்மைகள் உள்ளன என்றும் விளக்கினார்.

‘‘ரத்தப் பிரிவு, ரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு ரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

ரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல; தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல; தன்நலன் மேம்படுவதற்கும் உதவும். ரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய ரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம். இப்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக ரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஹீமோகுளோபின் அளவைக் கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் ரத்த தானம் பயன்படுகிறது.

ரத்த தானம் செய்வதன் மூலம் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகிறது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகிறது. ரத்த தானம் செய்வதன் மூலம் எந்த பின்
விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் வருவது போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே ஏற்படுகிறது என்பதுதான் உண்மை. மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையை வைத்தவாறு அமர வைக்க வேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவார்கள். இந்த அறிகுறியும் நம் உடலுக்கு இரும்புச்சத்து தேவை என்பதை வெளிப்
படையாகக் காட்டிவிடும். தயங்காமல் ரத்தம் கொடுங்கள். மற்றவர்களின் நன்மைகளைக் காட்டிலும் கொடுப்பவர்களுக்கு இன்னும் நன்மைகள் கூடும்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் ஸ்ரீவத்ஸா வேமா.

ஷாலினி நியூட்டன்