பிலிப்பைன்ஸின் விவசாய தொழில் அதிபர்!
அக்ரிநர்ச்சர், இன்க்.
பிலிப்பைன்ஸ் பங்குச் சந்தையில் இடம்பிடித்த முதல் மற்றும் ஒரே விவசாய நிறுவனம் என்ற பெருமையைத் தன்வசம் வைத்திருக்கிறது,
 விவசாயம், விநியோகம், சில்லறை விற்பனை, ஏற்றுமதி... என ஒரு கார்ப்பரேட் போல இயங்குகிறது இந்நிறுவனம். அரிசி, சோளம், காய்கறிகள், பழ வகைகள் என பிலிப்பைன்ஸ் மண்ணில் விளையும் அனைத்தையும் விளைவிக்கிறது ‘அக்ரிநர்ச்சர்’. இதுபோக விவசாய இயந்திரங்களையும் விற்பனை செய்கிறது. பிலிப்பைன்ஸிலே அதிகளவு மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதும் இந்நிறுவனம்தான்.
 குறிப்பாக இதன் விவசாயப் பொருட்கள் சீனா, ஜப்பான், கொரியா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன. இந்நிறுவனத்தை உருவாக்கியவர் அந்தோணியோ ட்யூ. ஒரு விவசாய தொழில் அதிபராக அறியப்படுகின்ற ட்யூவின் கதை, விவசாயம் பிசினஸாக மாறினால்தான் நிலைத்திருக்கும் என்பதை ஆழமாகப் பதிவு செய்கிறது. பிலிப்பைன்ஸில் வசித்து வந்த ஒரு சாதாரண குடும்பத்தில் 47 வருடங்களுக்கு முன்பு பிறந்தார் அந்தோணியோ ட்யூ. வசதியற்ற பெற்றோர் என்பதால் ட்யூவுக்குக் கொடுப்பதற்கு அவர்களிடம் ஒரு சென்ட் நிலம் கூட இல்லை. அப்பாவுடைய சொற்ப வருமானத்தில் குடும்பம் நகர்ந்தது.
 நன்றாகப் படிக்கக்கூடியவர் ட்யூ. அதனால் மணிலாவில் உள்ள டிஎல்எஸ்யூ பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகப்பாடம் படிக்க அவருக்கு இடம் கிடைத்தது. தான், வாங்கும் குறைந்த வருமானத்திலிருந்து ஒரு தொகையை ட்யூவுக்கு அனுப்பி வைப்பார் அவரது தந்தை. படிப்பை முடிப்பதற்கு ஒரு வருடம் இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். நிலைகுலைந்து போனார் ட்யூ. அதே நேரத்தில் தன்னால் பணம் ஈட்ட முடியுமா என்ற பாதுகாப்பின்மையும் அவருக்குள் உருவானது.
‘‘பாதுகாப்பின்மைதான் பலரது தவறான முடிவுகளுக்குக் காரணம். ஆனால், என் வாழ்க்கையில் பாதுகாப்பின்மைதான் என்னுடைய வளர்ச்சிக்கு காரணம். அப்பா இறக்கும் வரை ஒரு ஜாலியான இளைஞனாக, எந்தவித பொறுப்பும் இல்லாமல் இருந்தேன். அவர் இறந்த பிறகு பொருளாதார ரீதியாகவும், உறவு ரீதியாகவும் எனக்குள் ஒருவித பாதுகாப்பின்மையை உணர்ந்தேன். ஜாலியான இளைஞனிலிருந்து தீவிரமான மனிதனாக என்னை மாற்றிக்கொண்டேன்...’’ என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார் ட்யூ.
அடுத்த ஒரு வருடம் பகுதி நேரம் வேலை பார்த்து படிப்பை முடித்தார் ட்யூ. கல்லூரிப் படிப்புக்குப் பிறகுதான் ட்யூவின் வெற்றிக்கதை ஆரம்பித்தது. ட்யூவுக்கு விவசாயிகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. விவசாயிகளுடனான வேலை அவருக்கு விவசாயம் மற்றும் விவசாயிகளின் மீது பெரும் மரியாதையைக் கொடுத்தது. அத்துடன் விவசாயத்தில் இருக்கும் பிசினஸ் வாய்ப்புகளையும் கண்டுபிடிக்க உதவியது. மிகக்குறைந்த சம்பளம் என்ற போதிலும் விவசாயிகளுடனான வேலை அவருக்கு திருப்தியைக் கொடுத்தது.
பிலிப்பைன்ஸில் மிகக்குறைந்த தினக்கூலிக்கு வேலை செய்பவர்களாக விவசாயிகள் இருந்ததைக் கவனித்தார். அதே நேரத்தில் விவசாயப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் பெரும் பணக்காரர்களாக இருப்பதையும் கண்டுகொண்டார். இந்த அனுபவத்தைக் கொண்டு விவசாயிகளையும், வாடிக்கையாளர்களையும் இணைக்கும் விதமாக 1997ம் வருடம் ‘அக்ரிநர்ச்சர், இன்க்’ எனும் நிறுவனத்தை ஆரம்பித்தார் ட்யூ.
அப்போது அவரது வயது 22. ஆரம்பத்தில் வெளிநாட்டிலிருந்து அறுவடைக்குத் தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்து விற்று வந்தார். பிறகு அரிசி மற்றும் சோள விவசாயம் செய்தார். விவசாயம் செய்வதோடு அவரே நேரடியாக விற்பனையையும் செய்தார். பிறகு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்தார்.
இப்போது 40 ஆயிரம் ஹெக்டேரில் பழங்கள், காய்கறிகள், அரிசி, சோளம் என பல பொருட்களை விவசாயம் செய்கிறது ‘அக்ரிநர்ச்சர், இன்க்’. ‘‘என்னுடைய நிர்வாகக் குழு ஒவ்வொரு நாளும் நிறுவனத்தின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறது. தினமும் 0.001 சதவீத முன்னேற்றம் இருந்தாலும் சில வருடங்களில் ஒரு நல்ல வளர்ச்சியை எட்டிவிட முடியும்.
நேற்று இருந்ததைவிட, இன்று இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்றே என்னையும் எதிர்பார்க்கிறேன்...’’ என்கிற ட்யூ ‘அக்ரிநர்ச்சர்’ உட்பட வெவ்வெறு விதமான 22 நிறுவனங்களின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். அதில் ஒன்று, ‘பிலிப்பைன் இன்ஃப்ராதேவ் ஹோல்டிங்ஸ்’ எனும் பிலிப்பைன்ஸின் முக்கியமான கட்டுமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவி.
கடந்த பிப்ரவரியில் இந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார் ட்யூ. ‘‘இனிமேல் விவசாயத்தில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தப் போகிறேன். இன்று நாட்டின் முக்கியத் தேவையே உணவுப் பாதுகாப்புதான்...’’ என்று பதவியை விட்டதற்கான காரணத்தைச் சொல்லியிருக்கிறார் டியூ.
பிலிப்பைன்ஸின் உணவுப் பாதுகாப்புக்காக 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சோளத்தைப் பயிரிடப் போகிறார். இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 300 கோடி ரூபாயை முதலீடு செய்யப்போகிறார். வருடத்துக்கு ஒரு ஹெக்டேரில் 2 லட்சம் முதல் 3 லட்சம் டன் வரையிலான சோளத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்பது அவரது எதிர்காலத் திட்டம். மட்டுமல்ல; ‘‘நாட்டின் ஒட்டுமொத்த பணக்கார விவசாயிகளையும், ஏழை விவசாயிகளையும் ஒருங்கிணைத்தால் ஏழை விவசாயி என்று பிலிப்பைன்ஸில் யாருமே இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு விவசாயியும் பணக்காரர் ஆகிவிட்டால் பிலிப்பைன்ஸும் பணக்கார நாடாகிவிடும்.
தவிர, விவசாயி வங்கி ஆரம்பிப்பதைக் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். இது வங்கிக் கடன்களில் பாதிக்கப்படும் விவசாயிகளைப் பாதுகாக்கும். விவசாயி வங்கிகள் பணத்துக்குப் பதிலாக விவசாயம் செய்வதற்குத் தேவையான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் உட்பட அனைத்தையும் கடனாகத் தரலாம்...’’ என்கிறார் ட்யூ. இன்று அவரது சொத்து மதிப்பு சுமார் 1200 கோடி ரூபாய்.
த.சக்திவேல்
|