புதிய தொடர்-டார்க்நெட்
01. பாதாள உலகின் வாசல்
அமெரிக்கா.கேரி அல்ஃபோர்டிடம் அந்தச் சின்ன கவரை கூரியர் நபர் தந்தார். அந்தக் கவரை பிரித்துப் பார்த்தார் கேரி. உள்ளே ஒரு சின்ன பொட்டலம். முகர்ந்து பார்த்தார். சந்தேகமே இல்லை போதைப் பொருள்தான். கேரிக்கு உற்சாகம் தாங்கவில்லை. கேரி அல்ஃபோர்ட் அமெரிக்காவின் புலன் விசாரணை அமைப்பான எஃப்.பி.ஐ (FBI)யில் போதை தடுப்பு பிரிவில் பணிபுரியும் காவலர். அமெரிக்காவில் போதை மருந்து விற்பவர்களைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவதுதான் அவரின் வேலை.
 கூரியரில் வந்த அந்தக் கவரில் ஒரு 50 கிராம் போதைப்பொருள் இருக்கலாம். அதை எடுத்துக்கொண்டு தன் மேலதிகாரியிடம் சென்றார். அந்த போதைப் பொருள் பொட்டலத்தை நீட்டியபோது மேலதிகாரிக்கு கோபம் வந்தது. வழக்கமாக கேரியின் குழு போதை மருந்தைக் கைப்பற்றினால் அது கிலோ கணக்கில் இருக்கும். சாதாரண 100 கிராம், 200 கிராம் போதை மருந்து என்றால் அங்கு இருக்கும் லோக்கல் போலீசை அனுப்புவார்கள். கிலோ கணக்கு என்றால் மட்டும்தான் எஃப்.பி.ஐ கேசை எடுக்கும்.
 கேரியின் 50 கிராம் பொட்டலம் மேலதிகாரியின் கோபத்தைக் கிளறியதில் ஆச்சரியம் இல்லை.ஆனால், கேரி இந்த பொட்டலத்தின் பின்னிருக்கும் மிகப்பெரிய ஆபத்தை விளக்கினார். “ சார்... முதலில் இந்த பொட்டலம் சாதாரண கூரியரில் வந்து சேர்ந்தது. இதை லோக்கல் ஏஜென்ட் அனுப்பவில்லை. இதை நான் ஒரு வலைத்தளத்தில் ஆர்டர் செய்தேன். கனகச்சிதமாக கூரியரில் எனக்கு சரக்கை அனுப்பி விட்டார்கள். அமெரிக்காவின் சாதாரண போஸ்டல் சர்வீஸ், கூரியரைப் பயன்படுத்தி இப்படி 50 கிராம் பொட்டலங்களாக பல கிலோ போதை மருந்தை இன்டர்நெட் வாயிலாக விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
 காலம் மாறிவிட்டது. எல்லாம் இணையத்தில் நடந்து கொண்டிருக்கிறது. நாம் இருட்டான வீதிகளில் போதை மருந்து விற்பவரைத் தேடிக்கொண்டிருப்பதில் இனி பயனில்லை...’’ என்றார். மேலதிகாரிக்கு குழப்பம். “இன்டர்நெட்டில் என்றால் அவர்களை மிக எளிதாகப் பிடித்து விடலாமே..? பின்னே என்ன குழப்பம்..?” எனக் கேட்டார்.‘‘சார்... சாதாரண இன்டர்நெட் என்றால் எப்போதோ நம் சைபர் பிரிவிற்கு சொல்லி அவர்களைப் பிடித்துவிட்டிருப்பேன். அவர்கள் பயன்படுத்துவது ரகசிய இன்டர்நெட். அவர்களை அவ்வளவு சாமானியமாக பிடிக்க முடியாது...’’ என கேரி கூறினார்.
 “கேரி... எனக்கு சுத்தமாகப் புரியவில்லை... அது என்ன ரகசிய இன்டர்நெட்?”
கேரி இப்போது மேல் மூச்சை வாங்கினார். தன் மேலதிகாரிக்கு இந்தத் தொழில்நுட்பம் புரியவில்லை என்பது அவருக்கு உரைத்தது. அதனால் இந்த தொழில்நுட்பத்தைப் புரிய வைத்தால்தான் இந்த கேசை நகர்த்த முடியும். எப்படியாவது இவருக்கு அதை விளக்கிவிட வேண்டும் என்று முயன்றார்.

‘‘சார்... அது பேரு ‘டார்க் நெட்’...’’ என்றார் கேரி.கேரியின் குழப்பம் உண்மைதான். அந்தக் காலகட்டத்தில் இன்டர்நெட் மட்டும்தான் பரவியிருந்தது. பலருக்கு டார்க் நெட் பற்றி தெரிய வாய்ப்பில்லை. அதன் ஆபத்தும் புரியவில்லை. அதனால் கேரி விளக்கத் தொடங்கினார்.“ சார்... இதன் பேர் ‘டார்க் நெட்’. நாம் பயன்படுத்தும் இன்டர்நெட் என்பது மிகவும் வெளிப்படையானது. அதில் பயன்படுத்துவோரின் அடையாளங்கள் இருக்கும்.
ஆனால், இந்த ‘டார்க் நெட்’ என்பது மிகவும் ரகசியமானது. இதைப் பயன்படுத்துபவர்களின் அடையாளம் யாருக்கும் தெரியாது. இந்த டார்க் நெட்டிற்குள் நுழைந்து, அதனுள் இருக்கும் வெப்சைட் ஒன்றைத் திறந்து அதில் நான் ஏதாவது செய்தால் என்னைப் பற்றிய அடையாளங்கள் யாருக்கும் தெரியாது.
இப்போது கூட நான் டார்க்நெட்டில் உள்ள ஒரு வலைத்தளத்தில் (டார்க்வெப்)தான் இந்த போதை மருந்தை ஆர்டர் செய்தேன். என்னைப் பற்றிய தகவல்கள் போதை மருந்து விற்பவருக்குத் தெரியாது. போதை மருந்தை விற்பவரின் தகவல்கள், அடையாளங்கள் எனக்குத் தெரியாது. என்னுடைய முகவரியைக் கூட நான் டிஜிட்டல் சங்கேதக் குறிகளாக மாற்றித்தான் அனுப்பினேன்.
ஒரு வேளை நான் என் முகவரியை வேறு ஒன்றாகக் கொடுத்திருந்தால் நிச்சயம் அவர்களால் என்னை கண்டுபிடிக்க முடியாது. இன்டர்நெட் உதவியுடன் சில சிறப்பு மென்பொருட்களைப் பயன்படுத்தி இந்த டார்க் நெட்டில் பலர் உலவுகிறார்கள்.
என்ன சோகம் என்றால்... இதில் பல சைபர் கிரிமினல்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த டார்க்நெட்டின் ரகசியத் தன்மையைப் பயன்படுத்தி பல கிரிமினல் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்...’’ என மேலதிகாரிக்குப் புரியவைக்க முயன்றார்.மேலதிகாரிக்கு இன்னும் திருப்தி வரவில்லை. “ கேரி... நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையும் சைபர் பிரிவும் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? அமெரிக்க புலனாய்வுத் துறைகளுக்குத் தெரியாத... தெரியாமல் ரகசியம் எல்லாம் இருக்க முடியாது...’’ என தீர்க்கமாகக் கூறினார்.
அமெரிக்க புலனாய்வுத் துறையின் சாகசங்கள் உலகம் முழுக்க பல கதைகளாகப் பரவி இருக்கிறது; ஹாலிவுட் படங்களாகவும் வந்திருக்கிறது. அமெரிக்க புலனாய்வுத் துறைக்குத் தெரியாமல் ரகசியமாக அமெரிக்காவினுள் போதை மருந்து விற்கிறார்கள் என்று சொன்னால் எந்த ஒரு மூத்த அமெரிக்க குடிமகனும் நம்ப மாட்டார்கள். ஆனால், டார்க் நெட் விஷயத்தில் அந்த கசப்பான உண்மையை தன் மேலதிகாரிக்குப் புரிய வைத்துத்தான் தீர வேண்டும்.
“ சார்... இந்த டார்க் நெட்டை உலகம் முழுக்க உள்ள பல மென்பொருள் நிபுணர்கள் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். மிகவும் சிக்கலானது. இப்போதைக்கு அமெரிக்க அரசால் கூட இந்த டார்க் நெட்டில் பெரிதாக ஏதும் செய்துவிட முடியாது. நாம் கடினமாக சைபர் துறையுடன் சேர்ந்து உழைத்தால் ஒருவேளை இந்த போதை மருந்து விற்கும் கிரிமினலைப் பிடித்து விடலாம்...’’ என்றார் கேரி.
“கேரி... ஏதோ சிறப்பு மென்பொருள் கொண்டுதான் இந்த டார்க்நெட்டை பயன்படுத்த வேண்டும் என்றாயே... அந்த மென்பொருளைப் பிடித்து விட்டால்... தடை செய்து விட்டால்..?’’ கேரி தன் தொண்டையை சரி செய்துகொண்டு அந்த அதிர்ச்சியான உண்மையை தன் மேல் அதிகாரியிடம் மெல்லச் சொன்னார்.
“முடியாது சார்... இந்த டார்க் நெட் மென்பொருளை உருவாக்கி இயக்குவதற்கு பணம் கொடுப்பது அமெரிக்க ராணுவம்தான்..!” இதைப் படிக்கும் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். அப்படியே காத்திருங்கள். அடுத்த வாரம் இன்டர்நெட் பாதாள உலகமான டார்க்நெட்டினுள் நுழையலாம். பல சைபர் கிரிமினல்களை சந்திக்கலாம்.
(தொடரும்)
வினோத் ஆறுமுகம்
|