நந்தா பிகினிங் to ... via நான் மகான் அல்ல... வினோத் கிஷானின் ஜர்னி



‘நந்தா’ படத்தில் சின்ன வயது சூர்யாவாக தன் சினிமா பயணத்தைத் தொடங்கிய வினோத், இன்று ‘பிகினிங்’ படத்தில் வித்யாசமான மனவளர்ச்சி குறைந்த நடிகராக, உடல்மொழி, வாய்மொழி என அனைத்தையும் மாற்றி ஹீரோவாக நடித்திருக்கிறார். படம் முழுக்க குளறும் பேச்சு, தத்தி நடக்கும் இயல்பு, திரும்பத் திரும்ப சொன்ன விஷயத்தையே சொல்வது என வினோத் கிஷானின் நடிப்பு நம்மை அடடே சொல்ல வைத்திருக்கிறது.

ஆசியாவிலேயே முதல் முயற்சியாக ஒரே நேரத்தில், ஒரே திரையில், ஒரே படத்தின் இரு சம்பவங்கள் என ‘பிகினிங்’ படம் பல நாடுகளின் சினிமா விழாக்களில் விருதுகளும், அங்கீகாரங்களும் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் நாயகன் வினோத், தான் கடந்த வந்த பாதை குறித்து மனம் விட்டு பேசினார்.

‘பிகினிங்’ கேரக்டருக்கு எப்படி தயார் ஆனீர்கள்?

குறைஞ்சது ஒரு மாதம் ஆச்சு நான் திரும்பவும் பழைய மாதிரி சரளமா பேசவே. ஆனால், யாரையும் எடுத்துக்காட்டா எடுத்துக்கிட்டு எல்லாம் இந்த கேரக்டர் செய்யலை. நிறைய குழந்தைகள், பெரியவங்களை ரெஃபரன்ஸ் எடுத்துக்கிட்டு நிறைய பயிற்சி செய்தேன். உண்மையாகவே அப்படி நடிக்கறது அவ்வளவு சுலபமா இல்லை. கொஞ்சம் கடினமாத்தான் இருந்துச்சு. ஆனா, என் கேரக்டருக்கு ஒரு கட்டத்திலே ஆடியனஸ் கிளாப்ஸ் அடிக்கும்போது இதுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்னு தோணுச்சு.

இந்தப் படத்தின் விநியோகஸ்தராக, இயக்குநர் லிங்குசாமி என்ன சொன்னார்?

அவர் செம ஹேப்பி. படம் முடிச்சு ஓடிடின்னுதான் படக்குழு திட்டமிட்டிருந்தாங்க. ஆனா, ஃபிலிம் ஃபெஸ்டிவல்ல சார் படம் பார்த்திருக்கார். உடனே ‘நான் தியேட்டர்ல ரிலீஸ் செய்யறேன்’னு அவரே முன்வந்தார். என் நடிப்பு பிரமாதமா இருக்கறதாவும் பாராட்டினார். ‘ஆமால்ல... பெரிய ஸ்கிரீன்ல ஒரே நேரத்துல இரு காட்சிகள் ஓடினா நல்ல இருக்கும்ல’ன்னு அப்பதான் நாங்களும் யோசிச்சோம்.

‘நந்தா’ டூ ‘பிகினிங்’... பயணம் எப்படி இருக்கு..? என்ன கிடைச்சிருக்கு?

நல்ல நடிகன்னு ஒரு அங்கீகாரத்தை மக்கள் கொடுத்திருக்காங்க. ரொம்ப ஆசைப்படறதில்ல; அவசரப்படறதில்ல. அதுக்கேத்த மாதிரியான படங்களும் சரியா வந்துட்டு இருக்கு. எங்க போனாலும் இத்தனை வருஷங்கள் கழிச்சும் கூட ‘நந்தா’ படம் என்னுடைய அடையாளமா நிற்குது. தொடர்ந்து ‘சமஸ்தானம்’ படத்திலே சின்ன வயது ஆசிஷ் வித்யார்த்தி சார் கேரக்டர், ‘சேனா’ படத்திலே சின்ன வயது சத்யராஜ் சார் கேரக்டர், ‘கிரீடம்’ படத்திலே அஜித் சார் தம்பி... இப்படி நடிச்சுட்டு அப்புறம் சினிமாவுக்கு பிரேக் கொடுத்துட்டு படிப்பை முழுமையா முடிக்கணும்னு முடிவெடுத்தேன்.

திரும்பவும் கல்லூரியிலே செகண்ட் இயர் படிக்கும் போதுதான் ‘நான் மகான் அல்ல’ படத்துல நாலு டெரர் பசங்க லிஸ்ட்ல  ஒருத்தனா நடிச்சேன். பலரும் என் கேரக்டர் பயம் உண்டாக்கினதா பாராட்டினாங்க.

அடுத்தடுத்து கூத்துப் பட்டறை, நடிப்புப் பயிற்சின்னு பயணிச்சேன். சில படங்களும் அதுக்கேத்த மாதிரி நல்ல கேரக்டர், கதைகள்ன்னு அமைஞ்சது. இப்ப ‘ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ சீரீஸில் ‘மிரர்’ எபிசோட் பார்த்துட்டு எமோஷனலா இருக்குன்னும், ‘பிகினிங்’ பார்த்துட்டு பாலசுப்ரமணியன் பையன் மாதிரி வீட்டுக்கிட்ட ஒரு பையன் இருக்கணும்னு சொன்னதுதான் என் நடிப்புக்குக் கிடைச்ச பாராட்டு.

குழந்தை நட்சத்திரமாக பல வருட சினிமா பயணம்... பிளஸ், மைனஸ் என்ன?

மைனஸ்ன்னு நான் எதையுமே சொல்ல மாட்டேன். பிளஸ்தான் நிறைய கிடைச்சிருக்கு. பலரும் கேட்பாங்க, ஒரு பெரிய ஹிட்டா, மாஸ் ரோலா கிடைக்காம இருக்கறது உங்களுக்கு தடையா தெரியலையான்னு.நாலு படம் டிரெண்டிங்ல கொடுத்துட்டு காணாம போறதை விட நல்ல நடிகனா, நல்ல நல்ல கதைகள்ல தொடர்ந்து நடிச்சிட்டே இருக்கறதுதான் லைஃப் டைம் உதவும்.

கிட்டத்தட்ட எனக்கு சினிமாவிலே கிடைச்சிருக்கும் அங்கீகாரம் தங்க முட்டை கதை மாதிரி. நான் தினம் கிடைக்கற ஒரு முட்டையை கொண்டாடணும்னு நினைக்கிறேன். ஒரு நாள் டிரெண்டிங்கு ஆசைப்பட்டு மொத்தமா காணாமப் போயிடக் கூடாது. கன்ஸிஸ்டன்ஸி சினிமாவிலே ரொம்ப முக்கியம்.

கதைகளையும், கதாபாத்திரங்களையும் எதன் அடிப்படைல தேர்வு செய்யறீங்க?

எனக்கான கேரக்டர் என்னவா இருக்கு... கொஞ்ச நேரம் வந்தாலும் பரவாயில்லை... கதை என்ன, மனசிலே நம்ம கேரக்டர் நிற்குமா... இதைத்தான் பார்க்கறேன். அதே சமயம் தொடர்ந்து ஒரே மாதிரி கேரக்டரா வந்தா அதை சரி செய்துக்க ஒரு கேரக்டர் செய்யணும்னு ஆசைப்படுவேன். ‘நான் மகான் அல்ல’ படத்துக்கு அப்புறம் எனக்கு நெகட்டிவ் கேரக்டரா வந்துச்சு.

அந்த டைம் ஒரு பிரேக் தேவைப்பட்டுச்சு. ஆனா, நாம எதுவும் அந்த நேரம் முடிவு செய்ய முடியாதே... தவிர நெகட்டிவ் கேரக்டர் எல்லாருக்கும் அவ்வளவு சுலபமா கிடைச்சிடாதுன்னு அதையும் பாசிட்டிவ்வா எடுத்துக்கிட்டேன்.

உங்க அடுத்தடுத்த படங்கள் பத்தி சொல்லுங்க?

‘கொஞ்சம் பேசினால் என்ன’ படம் முடிஞ்சிடுச்சு. ரிலீஸ்க்கு காத்திருக்கேன். தெலுங்கிலே ஒரு படத்திலே மெயின் லீடா நடிச்சிருக்கேன். தனுஷ் சார் கூட ‘கேப்டன் மில்லர்’ படத்திலே ஒரு முக்கியமான ரோல். ஷூட் போயிட்டு இருக்கு. இது இல்லாம சில படங்கள் பேசிட்டு இருக்காங்க. அறிவிப்புக்காக நானும் காத்திருக்கேன்.

ஷாலினி நியூட்டன்