சில்வர் சிந்து to கோல்ட் சிந்து!
இந்திய பேட்மின்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவுக்கு அறிமுகம் தேவையில்லை. இந்தியாவுக்காக தங்கம் வென்ற தங்கத் தாரகையான இவர், தான் கடந்து வந்த பாதையைக் குறித்து கல்லூரி விழா ஒன்றில் உரையாற்றினார்.
 அதன் தொகுப்புதான் இது...உங்களது குழந்தைகள் விரும்பும் விளையாட்டை கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள். பெற்றோர்களுக்குதான் தங்கள் பிள்ளைகள் எதில் ஆர்வமாக உள்ளனர் என்று தெரியும். அதை அறிந்து ஒரு தோழனாக அவர்களுக்கு தோள் கொடுங்கள். 
வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் சகஜம். சிலருக்கு வெற்றி உடனே கிடைக்கும். சிலருக்கு தோல்வி மட்டுமே ஆரம்பத்தில் கிடைக்கும். ஆனால், விடாமுயற்சியை மேற்கொண்டால் இந்தத் தோல்வியும் ஒருநாள் வெற்றியாகும்.
ஆக, இறுதி இலக்கு வெற்றி என்பதை மட்டுமே தாரக மந்திரமாக உங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள்.அப்படித்தான் என் பெற்றோர் என்னை ஊக்கப்படுத்தினார்கள். நிறைய நேரங்களில் தோல்விகளை மட்டுமே நான் தழுவினேன். அப்பொழுதெல்லாம் என்னைத் தட்டிக் கொடுத்து அரவணைத்து மேற்கொண்டு நகர வைத்தவர்கள் என் பெற்றோர்தான். படிப்படியாகத்தான் வாழ்க்கையில் முன்னேறி உங்கள் முன் இப்போது நிற்கிறேன். விருதுகள், சான்றிதழ்கள் எல்லாம் உடனடியாக கிடைத்துவிடாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்குத் தெரியுமா..? என்னை சில்வர் சிந்து என்றுதான் அழைப்பார்கள். பாராட்டாக அல்ல... கேலியாக.ஆரம்பத்தில் இதைக் கேட்டு துவண்டு போனேன்.
ஆனால், யோசித்தபோது வேறொரு கோணம் கிடைத்தது. நாம் தொடர்ந்து சில்வர் மெடல் வாங்குவதால்தானே நம்மை ‘சில்வர் சிந்து’ என கேலி செய்கிறார்கள்... நாம் தங்க மெடல் வாங்கிவிட்டால் கேலி செய்பவர்களே நம்மைப் பாராட்டுவார்கள் அல்லவா..? இதற்காக என் பயிற்சியை அதிகப்படுத்தத் தொடங்கினேன். நாள்தோறும் காலையும் மாலையும் 27 கிமீ ஓடினேன். ‘நம்மால் முடியும்...’ என்பதை மட்டுமே மந்திரம்போல் உச்சரித்தேன்; உச்சரிக்கிறேன். மூன்று மாதங்கள் வரை செல்போனை பயன்படுத்தவில்லை. கேட்ஜெட்ஸ் பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை. இக்காலங்களில் ஸ்நாக்ஸ் உள்ளிட்ட துரித உணவுகளை முற்றிலுமாக தவிர்த்தேன்.
ஆனால், நம்புங்கள்... இந்தியாவுக்கு தங்கம் வெல்லும் என் முயற்சி ஒரு முறை இரு முறை அல்ல... ஏழு முறை தோற்றது. எட்டாவது முறைதான் கடந்த டிசம்பர் மாதம் வெற்றி கிடைத்தது. ஆம். இந்தியாவுக்காக தங்கம் வென்று சேம்பியன்ஷிப்பை அடைந்தேன்.அப்போதுதான் எனக்கு உண்மை புரிந்தது. என்னுடைய வாழ்வில் நான் கற்றுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான். அது, தோல்விகளின்போது நான் கற்றுக் கொள்கிறேன் என்பதுதான்!
‘சில்வர் சிந்து’ என என்னை கிண்டல் அடித்தவர்கள் இப்போது ‘கோல்ட் சிந்து’ என உச்சிமுகர்ந்து பாராட்டுகின்றனர். இதற்கெல்லாம் எவ்வளவு கடினமாக உழைத்தேன் என பட்டியலிட விரும்பவில்லை.
ஏனெனில் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே கடினமான உழைப்பாளிகள்தான். அவரவர் துறையில் எவ்வளவு கடினமாக உழைக்க முடியுமோ அவ்வளவு கடினமாக உழைத்தால்தான் உச்சத்தை அடைய முடியும். உச்சம் என்பதும் நிரந்தரமல்ல. அது மாறிக்கொண்டே இருக்கும்; அதாவது நமக்கான உச்சத்தை நாம் அதிகரித்தபடியே இருக்க வேண்டும்.
இன்று அடைந்த நிலை என்பது இன்றுக்குரியதுதான். நாளை நாம் அடைய வேண்டிய இலக்கு இன்றை விட ஒரு படியாவது அதிகமாக இருக்க வேண்டும்.
Born with silver spoon ஆக பிறக்காமல் நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த இந்த சிந்துவால் இன்று ‘கோல்ட் சிந்து’வாக நிற்க முடிகிறது என்றால்... உங்களாலும் முடியும். முயற்சி செய்யுங்கள். முயற்சி செய்து கொண்டே இருங்கள்!
ஜான்சி
|