ஏலம் போன டயானாவின் உடை!



அதிர்ச்சி வேண்டாம். 1997ம் ஆண்டு விபத்தில் மரணமடைந்த பிரிட்டிஷ் இளவரசி டயானா அணிந்த உடைதான் 26 ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் ஏலம் போயிருக்கிறது!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் பிரபல ஏல நிறுவனமான சாத்பைஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்பனையாகியுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 4.9 கோடி ரூபாய்!

இதன் மூலம் இதுவரை நடைபெற்ற ஏலங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஆடை என்ற பெருமையை டயானாவின் ஆடை பெற்றுள்ளது!உண்மையில் இந்த ஆடை 80 ஆயிரத்தில் இருந்து 1.2 லட்சம் டாலர் வரை விற்பனையாகும் என்றுதான் ஏல நிறுவனமான சாத்பைஸ் நினைத்ததாம். ஆனால், எதிர்பார்ப்புக்கு மேலாக 5 மடங்கு அதிக விலைக்கு விற்பனையானது தங்களுக்கே ஆனந்த அதிர்ச்சியாக இருப்பதாக சாத்பைஸ் கண்சிமிட்டுகிறது.

ஏலம் போன அந்த உடையை இளவரசி டயானா, கடந்த 1991ம் ஆண்டு அரச குடும்ப வரைபடத்திற்காக அணிந்திருந்ததாகவும் அதன்பிறகு 1997ம் ஆண்டு ஃபோட்டோ ஷூட்டுக்காக மீண்டும் இந்த உடையை இளவரசி டயானா அணிந்ததாகவும் சொல்கிறார்கள்.

இளவரசி டயானாவின் இந்த ஆடையை 1989ம் ஆண்டு பிரிட்டிஷ் வடிவமைப்பாளர் விக்டர் எடெல்ஸ்டீன் வடிவமைத்தார். இந்த விக்டர் எடெல்ஸ்டீன், இளவரசி டயானாவின் நீண்டகால ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர். 1982 முதல் 1993 வரை அவருக்காக ஆடைகளை உருவாக்கியவர் இவர்தான்.

காம்ஸ் பாப்பா