அஜித்துக்கு ஸ்டண்ட் அமைத்த எம்ஜிஆர் குருநாதரின் பேரன்!



இந்திய சினிமாவின் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் சுப்ரீம் சுந்தர். தேசிய விருதுக்கு சொந்தக்காரர். அஜித்தின் ‘துணிவு’க்கு ஸ்டண்ட் அமைத்த துணிச்சல்காரர். இப்போது நிற்க நேரமில்லாதவராக தமிழ், இந்தி என பறந்துகொண்டிருக்கிறார்.உங்க பேருக்கு முன்னாடி இருக்கிற அடைமொழி நீங்களே சூட்டிக்கொண்டதா?

ஒவ்வொரு ஸ்டண்ட் மாஸ்டருக்கும் ஒரு அடைமொழி இருக்கும். ‘ஆணை’ படத்தில் என்னை முதன் முதலாக ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் செல்வா. அப்போது ஹீரோ அர்ஜுன் சாரும், செல்வா சாரும் சேர்ந்து சூட்டிய பட்டப் பெயர் ‘சுப்ரீம்’.

சினிமாவுல நடிக்கணும் என்பதுதான் பலருடைய ஆசை. நீங்க அடிவாங்கணும் என்றே வந்தீர்களா?

எங்கள் குடும்பம் சினிமாவுக்கு பெயர் பெற்ற குடும்பம். ஊமைப் பட காலத்திலிருந்தே எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் சினிமாவில் இருக்கிறார்கள். புகழ் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் சோமு என்னுடைய தாத்தா. எம்ஜிஆரின் குருநாதராக இருந்து கத்திச் சண்டை, வாள் சண்டை உட்பட பல மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்சி அளித்தவர். தாத்தா, ஸ்டண்ட் கலைஞர்களின் தந்தை என்று எம்ஜிஆரால் வர்ணிக்கப் பட்டவர். தாத்தாவை கெளரவப் படுத்தும்விதமாக எம்ஜிஆர் ஆட்சியில் இருக்கும்போது சென்னை எம்ஜிஆர் நகரில் ஒரு தெருவுக்கு ‘ஸ்டண்ட் சோமு தெரு’ என்று பெயர் சூட்டினார்.

முதல்வர் ஆன சமயத்தில் செய்தித் தாளில் தாத்தா கையிலிருந்து வீர வாள் வாங்குவதுபோல் ஒரு புகைப்படத்தை பிரசுரித்து  ‘ஸ்டண்டுக்கு தந்தை ஸ்டண்ட் சோமு - என்னுடைய குருநாதர்’ என்ற விளம்பரம் கொடுத்து தாத்தாவை பெருமைப்படுத்தினார்.அப்பா ஜூனியர் கோபால், அண்ணன் ஆக்ஷன் பிரகாஷ் என எல்லோரும் ஃபைட் மாஸ்டர்ஸ். நான்காவது ஜெனரேஷனாக என்னுடைய அண்ணன் மகன் சந்தோஷும் ஃபைட் மாஸ்டராக இருக்கிறார்.

ஆபத்து நிறைந்த ஸ்டண்ட் தொழிலுக்கு குடும்பத்தின் ஆதரவு எப்படி இருந்தது?

ஆரம்பத்திலிருந்து சினிமாவுல இருந்ததால் பெரிய பயம் இல்லை. சில சமயம் அப்பா, அண்ணன் படப்பிடிப்பிலிருந்து வரும்போது காயங்களுடன் வருவார்கள். அப்போது பயந்து, இந்தத் தொழிலில் இருந்தால் காயங்களுடன்தான் வாழணும் என்று  நினைத்து வேறு வேலைக்கு செல்லலாம் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.

எனக்கு படிப்பு அவ்வளவாக வராது. தெரியாத தொழிலுக்கு போவதைவிட தெரிந்த தொழிலில் கவனம் செலுத்தலாம் என்று ஸ்டண்டில் மும்முரமாக இறங்கினேன்.
ராம்போ ராஜ்குமார் மாஸ்டரிடம் உதவியாளராக சேர்ந்து என்னுடைய பயணத்தை தொடங்கினேன். சினிமாவுல ஃபைட்டராக இருப்பவர் காலம் முழுவதும் ஃபைட்டராக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

எனக்கு தாத்தா, அப்பா மாதிரி மாஸ்டராக வேண்டும் என்ற விருப்பம். மாஸ்டராக வர விரும்புபவர்களுக்கு எடிட்டிங் நாலெட்ஜ் அவசியம். இது மாஸ்டர்களுக்கு மட்டுமல்ல; இயக்குநர், கேமராமேன் உட்பட மெயின் டெக்னீஷியன்களுக்கும் எடிட்டிங் சென்ஸ் இருந்தால் சீக்கிரத்தில் முன்னுக்கு வர முடியும் என்பதை புத்தகங்களில் படித்திருக்கிறேன்.

எடிட்டிங் சென்ஸ் இருந்தால் இயக்குநர் மூன்று கோணங்களில் சொல்லும் சீக்வென்ஸை பத்து கோணங்களில் எடுக்க முடியும். அந்த வகையில் இயக்குநர் கதை சொல்லும்போதே சண்டைக் காட்சி என் கண்களில் விரிவடைய ஆரம்பித்துவிடும். ராம்போ மாஸ்டர் பலமுறை எடிட் பண்ணும் வாய்ப்பை கொடுத்தார்.

‘மாடக்குளம்’ ரவி ஸ்டண்ட் பண்ணிய ‘அத்தை மகள் ரத்தினமே’ படத்தில்தான் ஃபைட்டராக அறிமுகமானேன். பிறகு ராம்போ ராஜ்குமார் மாஸ்டரிடம் ‘அமைதிப் படை’யில் சேர்ந்து பல்வேறு மொழிகளில் சுமார் ஐந்நூறு படங்களில் ஒர்க் பண்ணியிருப்பேன்.

2006ல் ‘ஆணை’யில் அர்ஜுன் சார் வாய்ப்பு கொடுத்தார். அன்று ஆரம்பித்த பயணம் இப்போது வரை  தொடர்கிறது. மாஸ்டராக தமிழில் 118 படங்கள், மலையாளத்தில் 48 படங்கள் முடித்துவிட்டேன். மலையாளத்தில் ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. சமீபத்தில் டோவினோ தாமஸ் நடித்த ‘தள்ளுமாலா’ பெரிய ஹிட்.

வெற்றிகரமான சண்டைக் காட்சிக்கு இலக்கணம் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு ஃபைட் பேசப்பட வேண்டுமானால் ஸ்கிரிப்ட் முக்கியம். ஃபைட் சீக்வென்ஸ் யதார்த்தமாக இருக்கணும். படம் பார்க்கும் ஆடியன்ஸ் சீட் நுனிக்கு வந்து, ஹீரோவைப் பார்த்து அடி... அடி... என்று சொல்ல வேண்டும். அப்படி ஹீரோ அடிக்கும்போது அந்த சண்டைக் காட்சிக்கு பெரிய வரவேற்பு, வெற்றி கிடைக்கும்.

 இது டைரக்டர் கொடுக்கும் மூடைப் பொறுத்து அமையும். அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படியொரு வாய்ப்பை இயக்குநர் விஜய் மில்டன் ‘கோலிசோடா’வுல கொடுத்தார். மார்க்கெட் ஃபைட் சிங்கிள் ஷாட்ல எடுத்தது.

நான் எப்போதும்  கதையைவிட்டு விலகாமல் எடுக்க நினைப்பேன். அந்த வகையில் என்னை டைரக்டரின் ஃபைட் மாஸ்டராகவே வெளிப்படுத்த நினைப்பேன். அதனால் பல இயக்குநர்களின் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து டிராவல் பண்ணுகிறேன்.

‘துணிவு’ வாய்ப்பு எதிர்பார்த்தீர்களா?

‘கோலிசோடா’ டைம்லருந்து இயக்குநர் எச்.வினோத் பழக்கம். இணைந்து வேலை செய்வோம் என்று சொல்லியிருந்தார். அதற்கான வாய்ப்பு ‘துணிவு’ல அமைந்தது.
முந்தைய படங்களில் அஜித் சாரிடம் ஃபைட்டர்ஸ் வந்து அடிவாங்குகிறார்கள் என்றெல்லாம் விமர்சனம் வந்ததை அறிந்து இதில் அஜித் சாரை பழைய ஆக்ஷன் ஹீரோவாக காண்பிக்க நிறைய ஹோம் ஒர்க் பண்ணினேன். என்னுடைய ஒவ்வொரு  ஐடியா வுக்கும் அஜித் சார் பிரமாதமான ஒத்துழைப்பைக் கொடுத்தார். படமும் மெகா ஹிட். ‘துணிவு’ வெற்றி மூலம் என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ் அமோகமாக ஆரம்பித்துள்ளது.

யாரெல்லாம் பாராட்டினார்கள்?

நிறைய  இடங்களிலிருந்து பாராட்டினார்கள். மற்ற மொழிகளிலிருந்தும் ஃபைட் மாஸ்டர்ஸ் பாராட்டினார்கள். ‘மாயாண்டி குடும்பத்தார்’ பண்ணியபோது கனல் கண்ணன் மாஸ்டர் பாராட்டினார். அதுபோல் தமிழிலும் முன்னணி ஃபைட் மாஸ்டர்ஸ் மனம் திறந்து பாராட்டினார்கள்.

தமிழ் சினிமாவின் ஸ்டண்ட் தரம் இப்போது எப்படி உள்ளது?

தமிழ் என்பதைவிட சவுத் இந்திய சினிமாவுல இருக்கிற டெக்னீஷியன்கள் இந்தியாவிலேயே இல்லை எனலாம். ‘ஆர்.ஆர்.ஆர்.’ பார்த்துவிட்டு ராஜமெளலி சாரை ஹாலிவுட்காரர்கள் வியந்து பாராட்டுகிறார்கள். ‘பாகுபலி’, ‘தள்ளுமாலா’, ‘துணிவு’ போன்ற படங்கள் அதிக பொருட் செலவில் எடுக்கப்படுகிறது. ‘துணிவு’ல 360 டிகிரி ரிக் யூஸ் பண்ணினேன். அது பேசப்பட்டது. ஜிம்னாஸ்டிக் தெரியாதவர்கள் கூட ரிக் மூலம் ஃபைட் பண்ண முடியும். அந்தளவுக்கு டெக்னாலஜி வந்துள்ளது.

அதே மாதிரி பாதுகாப்பு அம்சங்களும் அதிகம். முன்பு வைக்கோல் மீதுதான் விழ வேண்டும். இப்போது ஏர் பெட் வந்துவிட்டது. முன்பு காயம் ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் ரத்தம் அதிகம் இழக்க வேண்டிய அபாயம் இருந்தது. இப்போது படப்பிடிப்பின்போது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப் படுகிறது. சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் படப்பிடிப்புக்கு வந்ததும் ஆம்புலன்ஸ், டாக்டர்ஸ் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.

இப்போது என்ன மாதிரியான சண்டைக் காட்சிகளுக்கு வரவேற்பு அதிகம் கிடைக்கிறது?

கதைதான் ஆக்ஷனை தீர்மானிக்கிறது. படத்தில் ஹீரோ பைக் ரேஸர் என்றால் படம் வெளியானதும் அந்த பைக் ரேஸ் காட்சிகள் டிரெண்டிங்ல இருக்கும். கிராமத்து கதையாக இருந்தால் கொம்பு சண்டை பேசப்படும். இப்போது டெக்னாலஜி ஃபைட்டுக்கு வரவேற்பு அதிகம். அதே சமயம் நேச்சுரல் ஃபைட்டுக்கும் வரவேற்பு கொடுக்கிறார்கள்.
எந்த நடிகரிடம் சண்டைக் காட்சிக்கான ஆர்வம் அதிகம் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

என்னுடைய குடும்பம் சினிமா குடும்பம் என்பதால் ரஜினி, கமல் சார் படங்களின் ஃபைட் சீன்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர்கள் பண்ணும் ஃபைட் பெரிய ஆச்சர்யத்தைக் கொடுக்கும். சினிமாவுல ஃபைட் காட்சிகளுக்கான நிறைய எக்யூப்மென்ட்ஸை கமல் சார் அறிமுகப்படுத்தியிருக்கிறார். கமல் சார் ஃபைட்ல ரிஸ்க் எடுப்பார். ரஜினி சார் ஃபைட்ல ஸ்டைல் இருக்கும். இப்போது விஷால், சூர்யா சார் ஆக்ஷன் காட்சிகளில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

‘சூர்யா 42’ படத்துல சூர்யா சாருடன் ஒர்க் பண்ணும் வாய்ப்பு கிடைத்தது. படத்தோட முக்கியமான சண்டைக் காட்சியை ஒரு துறைமுகத்தில் எடுத்தோம். சூர்யா சார் ஓடி வந்து கன்டெயினர் மீது ஏறணும். 100 அடி உயரமுள்ள கன்டெயினர் மீது ரோப்ல அவரே ரிஸ்க் எடுத்து ஏறினார். சிங்கிள் ஷாட் என்பதால் தரையில் எந்த பாதுகாப்பும் இருக்காது. சூர்யா சார் மட்டுமல்ல, இப்போதுள்ள அனைத்து ஹீரோக்களும் டூப் வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

 கைவசம் என்ன படங்கள்  வைத்துள்ளீர்கள்?

தமிழில் சூர்யா, விஜய் ஆண்டனி உட்பட பல முன்னணி ஹீரோக்கள் படங்கள் உள்ளன. தெலுங்கில் நாகசைதன்யா, பாலகிருஷ்ணா படங்கள். பாலகிருஷ்ணா படம் கமிட் பண்ணும்போதே அவருடைய முந்தைய படங்களைப் பார்க்க வேண்டாம் என்ற கண்டிஷன் போட்டு, எங்களுக்கு சுப்ரீம் சுந்தர் ஸ்டைலில் ஃபைட் வேண்டும் என்று கேட்டுள்ளார்கள்.
மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் படங்கள் கைவசம் உள்ளன. பாலிவுட்ல  ரன்பீர் கபூருடன் ‘அனிமல்’.

எஸ்.ராஜா