பெரியவர்களை இயற்கையா வழியனுப்பும் தலைக்கூத்தல்!
‘‘நடிக்கும் ஆசையில்தான் அமெரிக்காவிலிருந்து வந்தேன். ஆனால், இங்கு வந்த பிறகு பாதை மாறி இயக்குநரானேன்...’’ நிதானமாகப் பேசுகிறார் ‘தலைக்கூத்தல்’ இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.
 ‘தலைக்கூத்தல்’ டைட்டிலுக்கு விளக்கம் சொல்லமுடியுமா?
தலைக்கூத்தல் என்பது தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஒரு சம்பிரதாயம். உயிர் போகும் நிலையில் உள்ளவர்களை இயற்கை முறையில் வழியனுப்பி வைக்கும் ஒரு நடைமுறையைத்தான் தலைக்கூத்தல் என்று சொல்வார்கள். அப்படி தலைக்கூத்தலை கருவாகக் கொண்ட படம் இது. இதற்கு முன் இந்த ஜானர்ல ‘கே.டி’, ‘பாரம்’ போன்ற படங்கள் வந்துள்ளது. ஆனால், அந்தப் படங்களுக்கும் இந்தப் படத்துக்கும் ஒரு சதவீத ஒற்றுமையும் இருக்காது.

ஒரு குடும்பத்தில் வயதானவர் இருக்கும்போது அந்த குடும்பத்தினர் தலைக்கூத்தல் முடிவை எப்படி எடுக்கிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியுள்ளேன். மரணப் படுக்கையில் இருப்பவருக்கும் சில கனவுகள், சில ஆசைகள் இருக்கிறது.
 அதையும் இந்தப் படம் பேசுகிறது.கதையில், சமுத்திரக்கனியின் அப்பாவுக்கு இப்படியொரு நிலை ஏற்படுகிறது. அவருடைய அப்பாவுக்கு கனவில் ஒரு கதை வருகிறது. கனவில் வரும் கலர்ஃபுல் லவ் ஸ்டோரியில் கதிர் வர்றார். இந்த இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் எப்படி இணைகிறது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியுள்ளேன். சமுத்திரக்கனி கெட்டப் பரிதாபத்தை அள்ளுதே…கதை சொல்லும்போதே பவுண்ட் ஸ்கிரிப்ட் கொடுத்தேன். முழுவதும் படித்துவிட்டு ஓ.கே. சொல்லிவிட்டார். அவருடைய போர்ஷன் லைவ் சவுண்ட்ல வரும். அதுக்காக நடந்த ஒர்க் ஷாப்ல தவறாம கலந்துக்கிட்டார். படப்பிடிப்புக்கு எப்பவும் முழு ஆயத்தத்துடன்தான் வருவார். ஸ்கிரிப்ட்ல எல்லாமே தெளிவா இருந்ததால் படப் பிடிப்பு சுமுகமாக முடிந்தது.
கனி சாருக்குள் ஒரு இயக்குநர் இருந்தாலும் அவரை ஹேண்டில் பண்ணுவது எளிமையா இருந்துச்சு. லொகேஷன்ல ஆன் டைம்ல இருப்பார். வழக்கமா கனி சார் படத்துல அவருக்கு நிறைய டயலாக் கொடுப்பாங்க. இதுல மிகவும் கம்மியாதான் பேசியிருப்பார். அநேகமா அவர் கம்மியா பேசின படம் இதுவாகத்தான் இருக்கும்.
அவருடைய அப்பாவித்தனமான தோற்றம் கேரக்டரை மேலும் வலுவாக்கிக் கொடுத்தது. அவருடைய மனைவி ரோலில் வசுந்தரா வர்றாங்க. கேரக்டருக்கு நூறு சதவீதம் நியாயம் செய்யக்கூடிய ஆர்ட்டிஸ்ட்.
கதிர் கெட்டப் அமர்க்களப்படுதே…
கதிர் முதன் முறையாக காதல் நாயகனாக வர்றார். முழுப் படத்திலும் பியூட்டிஃபுல் கெட்டப்புல இருப்பார். மத்த படங்களைவிட இதுல அழகா தெரிவார். அவருடைய ரோல் எல்லாருக்கும் பிடிக்கும். கதிர் ஒரு இயக்குநரின் நடிகர். இந்தப் படத்துல முதலில் வந்தவர் அவர்தான். அப்போது தயாரிப்பாளர் கூட முடிவாகவில்லை.
ஆனால், சில காரணங்களால் அவர் இந்தப்படம் பண்ணமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவருடைய பாட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. பாட்டியை நலம் விசாரிக்கச் சென்றவர் அங்கிருந்தே எனக்கு ஃபோன் பண்ணி நீங்க எப்ப கூப்பிட்டாலும் நான் வர்றேனனு சொல்லிட்டார். பாட்டியோட சந்திப்பு அவருக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கணும்னு நினைக்கிறேன். கதிர் ஜோடியா பெங்காலி நடிகை கத்தா நந்தி பண்றார். அவருடைய கேரக்டருக்காக நீண்ட நாள் தேடுதலில் இருந்தேன். ‘ஷாம் ஷிங்கா ராய்’ படத்துல சின்ன கேரக்டர் பண்ணியிருந்தார். டுவிட்டர்ல ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதைப்பார்த்துட்டு தொடர்பு கொண்டேன். அவரும் தமிழில் படம் பண்ண ஆர்வமா இருந்ததால் உடனே ஆடிஷன்ல கலந்துக்கிட்டார். மொழி, கலாசாரம் என சில வேறுபாடு இருந்தாலும் கேரக்டருக்கான ரியாலிட்டியை மிக சுலபமா கொண்டு வந்து ஆச்சர்யப்படுத்தினார்.
வையாபுரி முக்கியமான ரோல் பண்றார். அவர் இதுவரை பண்ணாத கேரக்டர்னு சொல்லலாம். ‘ஆடுகளம்’ முருகதாஸ் இருக்கிறார்.ஒளிப்திவு மார்ட்டின் டான்ராஜ். அவருக்கு இது முதல் படம். பாலசுப்ரமணியெம் உதவியாளர். கவின்கலைக் கல்லூரி மாணவர். மிகச் சிறப்பாக ஓவியம் போடக்கூடியவர். அவருடைய ஓவியத்தை முகநூலில் பார்த்து கூப்பிட்டேன். இது விஷுவல் முக்கியத்துவம் உள்ள படம். அதுக்கேற்ற மாதிரி மிகப் பிரமாதமா படமாக்கிக் கொடுத்தார்.
இசை கண்ணன் நாராயணன். ‘தமிழ்ப் படம் 1, 2’ பண்ணியவர். அற்புதமான மியூசிக் கொடுத்தார். பாடல்கள் சமூக வலைத்தளத்துல பெரியளவில் வைரலாகியிருக்கு. பின்னணி இசை புது அனுபவமா இருக்கும். எடிட்டர் டேனி சார்லஸின் ஒர்க் பேசப்படும். சவுண்ட் என் ஜி னியர் ராஜேஷ் ஒர்க் அதிகம் கவனிக்கப்படும்.
படத்துல வேறென்ன ஹைலைட்ஸ்?
இது விஷுவல் ட்ரீட் உள்ள படம். ஆடியன்ஸ் அனாவசியமா வெளியே எழுந்துபோகமாட்டாங்க. படத்துல வரும் லவ் சீன்ஸ் ரசிக்க வைக்கும். படம் பார்க்கும் ரசிகர்கள் வீட்ல இருக்கிற வயதான அப்பா, அம்மாகிட்ட அன்பு காட்டுவாங்க. இந்தப் படத்தை அவர்களையும் பார்க்க வைப்பாங்க. பேய், காமெடி படங்களிருந்து மாறுபட்ட படமா இருக்கும். படப்பிடிப்புல நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் எதாவது ஞாபகம் இருக்கிறதா?
இது லைவ் சவுண்ட்ல எடுக்கப்பட்ட படம். டேக் போகும்போது எந்த சவுண்டும் இருக்கக்கூடாது. படப்பிடிப்பு நடந்த இடத்துல ஒரு மாடு இருந்தது. டேக் போகும்போது மாட்டுக் கழுத்திலிருந்த மணிச் சத்தம் வந்துடும். சவுண்ட் என்ஜினியர் மாட்டோட மணிக்கு ஸ்டிக்கர் ஒட்டி சத்தம் வராதபடிக்கு பார்த்துக்கொண்டார். ஒருமுறை படப்பிடிப்பு முடிந்து நாங்கள் கிளம்ப தயாரானோம். அப்போது ஒரு அம்மா, ‘தம்பி இப்ப மிக்ஸி போடட்டுமா, சட்னி அரைக்கணும். நீங்கதான் மிக்சியை நிறுத்தச் சொல்லியிருந்தீங்க. அதுக்கப்புறம் ஆன் பண்ணச் சொல்லவே இல்லையே’ என்றார்.
லைவ் சவுண்ட் என்பதால், இருமல் வந்தால் இரும முடியாது, தும்மல் வந்தால் தும்ம முடியாது. எமோஷனல் சீன் எடுக்கும்போது ஆடியன்ஸ், படக்குழுவினர் அவர்களையும் அறியாமல் அழுவார்கள். ஆனா, அப்போது அழுற சத்தமும் வரக்கூடாது என்பதால் எல்லோரும் ஷாட் ஓ.கே. ஆனபிறகுதான் தங்கள் ரியாக்ஷனைக் காட்டுவாங்க. அப்படி பல சமயங்களில் பொறுமை காத்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள். பொதுவா ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் என்று சொல்வார்கள். இதுல சவுண்ட் என்றுதான் முதலில் சொல்வேன்.
உங்களைப்பற்றி சொல்லுங்களேன்?
பிறந்தது கேரளா. வளர்ந்தது, படித்தது எல்லாமே தமிழ்நாடு. படிப்புக்குப் பிறகு அமெரிக்காவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை. ஆறு மாதம் அங்கிருந்திருந்தால் க்ரீன் கார்டு கிடைத்திருக்கும் என்ற நிலையில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு பறந்துவந்தேன். அஜித் சாரின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித் சார் ஃப்ரெண்ட் கேரக்டர் பண்ணினேன். அடுத்து ‘வஞ்சகர் உலகம்’ பண்ணினேன்.
இயக்குநராக ‘லென்ஸ்’ என்னுடைய முதல் படம். அந்தப் படத்துக்கு தனியார் நிறுவனத்தின் சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது. இரண்டாவதாக ‘மஸ்கிட்டோ பிலாஸபி’. அந்தப் படம் பல சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டது. மூன்றாவது ‘தலைக்கூத்தல்’.
அடுத்து என்ன படம் பண்றீங்க?
‘காதல் என்பது பொதுவுடமை’. ‘ஜெய்பீம்’ லிஜோமோல் ஜோஸ், வினித் முக்கிய வேடம் பண்றாங்க. படப்பிடிப்ப்பு முடிந்துவிட்டது. மலையாளத்துல ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை தயாரிச்ச நிறுவனம் முதன் முறையா தமிழுக்கு வர்றாங்க.
எஸ்.ராஜா
|