சொத்து மதிப்பு ரூ.44 ஆயிரம் கோடி... அமெரிக்காவின் நம்பர் ஒன் விவசாயி!
உலகளவிலான பாதாம் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடு, அமெரிக்கா. குறிப்பாக கலிபோர்னியாவில் விளையும் பாதாம்தான் உலக பாதாம் சந்தையில் 80 சதவீதத்தை தன்வசம் வைத்திருக்கிறது. இதற்கு மூல காரணம், ஸ்டூவர்ட் ரெஸ்னிக் எனும் பணக்கார விவசாயி. 80 ஆயிரம் ஏக்கரில் பாதாமையும், 75 ஆயிரம் ஏக்கரில் பிஸ்தாவையும், 35 ஆயிரம் ஏக்கரில் திராட்சை யையும், 13 ஆயிரம் ஏக்கரில் ஆரஞ்சு பழங்களையும் விளைவிக்கிறார்.தவிர, மதிப்புக் கூட்டப்பட்ட விவசாயப் பொருட்களை விற்பனை செய்துவரும் ‘த வொண்டர்ஃபுல் கம்பெனி’ என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார் இவர்.
 அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இவரது நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பொருளாவது நுகரப்படுகிறது. ஸ்டூவர்ட்டின் விவசாய பிசினஸுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் அவரது மனைவி லிண்டா. விவசாயத்தின் மூலமும் பில்லியன் கணக்கான வருமானத்தை ஈட்டி, ஆயிரக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும் என்று நிரூபித்திருக்கிறது ஸ்டூவர்ட் ரெஸ்னிக்கின் வாழ்க்கைக்கதை.
 இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள். ஸ்டூவர்ட்டின் தாத்தாவான ரெஸ்னிக்கும், பாட்டியும் பிழைப்புக்காக உக்ரைனிலிருந்து அமெரிக்காவுக்கு குடி வந்தனர். அப்போது ஸ்டூவர்ட்டின் தந்தைக்கு வயது 3தான். யூத குடும்பத்தைச் சேர்ந்தவர் ரெஸ்னிக். அதனால் யூதர்கள் அதிகமாக வாழ்ந்துவந்த ப்ரூக்ளின் நகரில் குடியமர்ந்தது அவரது குடும்பம். தையல் ஊசி மற்றும் எம்ப்ராய்டரி வணிகத்தில் ஈடுபட்டார் தாத்தா ரெஸ்னிக்.
 அமெரிக்காவில் குடியேறிய இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு ஸ்டூவர்ட்டின் அப்பா அங்கிருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொண்டார். அப்போது பொருளாதாரச் சிதைவு ஏற்பட அமெரிக்காவே திண்டாடியது. மறுபடியும் பிழைப்பைத்தேடி நியூ ஜெர்ஸி மாகாணத்துக்குக் குடிபெயர்ந்தது ஸ்டூவர்ட்டின் குடும்பம். நியூ ஜெர்ஸியில் 1936ம் வருடம் பிறந்தார் ஸ்டூவர்ட் ரெஸ்னிக்.
ஸ்டூவர்ட்டின் தந்தை வீட்டுக்கு அருகிலேயே சிறிய அளவில் மது அருந்தும் கூடத்தை நடத்தி வந்தார். குடும்பத்தைக் கவனிக்காமல் குடிப்பழக்கத்திலும், சூதாட்டத்திலும் பணத்தை இழந்தார் ஸ்டூவர்ட்டின் தந்தை. வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் சூதாட்டத்தில் பந்தயம் கட்டி இழந்துவிடுவார். ஒரு நாள் ஸ்டூவர்ட் தன்னுடைய நண்பர்களுடன் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும்போது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த காரைக் காணவில்லை. அந்த காரையும் அவரது தந்தை சூதாட்டத்தில் இழந்திருந்தார் என்பது பிறகுதான் ஸ்டூவர்ட்டுக்குத் தெரிய வந்தது. இப்படியாகச் சென்றது ஸ்டூவர்ட்டின் குழந்தைப்பருவம்.
தந்தையின் பொறுப்பற்ற தன்மை காரணமாக 13 வயதிலேயே வேலைக்குப் போக வேண்டிய நிலை. ஸ்டூவர்ட்டுக்கு ஒரு மருந்து நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அவர் வாழ்க்கையில் பார்க்கப்போகிற முதல் வேலைக்காக விரைவாகவே நிறுவனத்துக்குச் சென்றுவிட்டார். முதலாளி வரும் வரை காத்திருந்தார். நிறுவனத்துக்கு வந்த முதலாளி வெளியே இருக்கும் ஸ்டூவர்ட்டைக் கண்டு கொள்ளவில்லை. ஸ்டூவர்ட்டே வலுக்கட்டாயமாக முதலாளியின் அறைக்குச் சென்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார்.
ஸ்டோர் ரூமில் ஒழுங்கில்லாமல் சிதறிக்கிடக்கும் மருந்துப் பொருட்களை வரிசையாக ஒழுங்குபடுத்தி வைக்கவேண்டும் என்பதுதான் ஸ்டூவர்ட்டிடம் முதலாளி சொன்ன முதல் வேலை.
எந்தப் பொருள் முதலில் வரும், எது கடைசியில் வரும், எது நடுவில் வரும் என்று எதுவுமே ஸ்டூவர்ட்டுக்குத் தெரியாது. இருந்தாலும் முதலாளி சொல்கிறார் என்பதற்காக செய்கிறேன் என்று தலையாட்டிவிட்டார். முதலாளியும் ஸ்டூவர்ட்டிடம் வேலையைச் சொல்லிவிட்டு வெளியில் கிளம்பிவிட்டார்.
என்ன செய்வதென்று தெரியாமல் அந்தப் பொருட் களைப் பார்த்துக்கொண்டே சில மணி நேரங்கள் நின்றிருந் தார் ஸ்டூவர்ட். வெளியில் சென்றிருந்த முதலாளி நிறுவனத்துக்கு திரும்பிவிட்டார். ஸ்டோர் ரூமுக்குச் சென்றவர், வேலை எதுவும் நடக்கவில்லை என்று ஸ்டூவர்ட்டைக் கடிந்துகொள்ளவில்லை. ‘சரி, இப்போது ஆரம்பி’ என்று கனிவுடன் ஸ்டூவர்ட்டிடம் சொல்லியிருக்கிறார்.
முதலாளியின் வார்த்தைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்ட ஸ்டூவர்ட் , தனக்குத் தெரிந்தபடி பொருட்களை வரிசைப்படுத்தி ஒழுங்குபடுத்தியிருக்கிறார். பின்னாட்களில் முதலாளியின் அந்த மூன்று வார்த்தைகளே ஸ்டூவர்ட்டின் பிசினஸ் மந்திரங்களாகிவிட்டன.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே நிறுவனம் மற்றும் மருத்துவ மனைகளைச் சுத்தம் செய்யும் ஒரு துப்புரவு நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டி ருக்கும்போதே நிறுவனத்தை விற்றுவிட்டு செக்யூரிட்டி சர்வீஸ் கம்பெனியைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தில் 100 பேர் வரை வேலை செய்தனர். எழுபதுகளில் கலிபோர்னியாவில் வறட்சி ஏற்பட்டது. பலர் குறைந்த விலைக்கு விவசாய நிலங்களை விற்க முன்வந்தனர்.
செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தை விற்ற பணத்தில் 2500 ஏக்கர் ஆரஞ்சு தோப்பை வாங்கினார் ஸ்டூவர்ட். அப்போது அவருக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது. அதனால் விவசாயத்தில் நன்கு அனுபவம் வாய்ந்தவர்களை வேலைக்குச் சேர்த்தார். அவர்கள் ஸ்டூவர்ட்டின் விவசாயத்தைக் கவனித்துக்கொண்டனர். விவசாயத்துக்குத் தேவையான நீரை அரசிடமிருந்து பணம் கொடுத்து வாங்கினார். ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலிருந்து நீரைத் தன்னு டைய இடத்துக்குக் கொண்டு வந்தார். ஆரஞ்சுக்கு அடுத்து மாதுளை, பாதாம், பிஸ்தா பயிரிட ஒரு லட்சம் ஏக்கரை வாங்கினார்.
உலகிலேயே விவசாயம் செய்ய ஒரு லட்சம் ஏக்கரை வாங்கிய முதல் விவசாயி ஸ்டூவர்ட்தான். தன் நிலத்தில் விளைந்த பொருட்களை, தானே விற்பனை செய்வதற்காக ‘வொண்டர் ஃபுல்’ என்ற பிராண்டை உருவாக் கினார். பாதாம், பிஸ்தா, மாதுளை எல்லாம் மதிப்பு கூட்டப்பட்டு சந்தையில் புரொடக்டுகளாக மாறின. இதற்கு மார்க்கெட்டிங் செய்வதில் பக்கபலமாக இருந்தார் ஸ்டூவர்ட்டின் மனைவி லிண்டா.
2005களில் கலிபோர்னியாவில் வறட்சி தாண்டவமாடியபோது 100 கிலோமீட்டருக்கும் தொலைவில் இருந்த நதியிலிருந்து நீரைக் கொண்டுவந்து பாதாம் தோப்பைக் காப்பாற்றினார். லாஸ் ஏஞ்சல்ஸில் வசிப்பவர்கள் பயன்படுத்தும் நீரைவிட அதிகளவிலான நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறார் ஸ்டூவர்ட்.
இன்று அமெரிக்காவிலேயே மிகப்பெரிய விவசாயி ஸ்டூவர்ட் ரெஸ்னிக்தான். கலிபோர்னியாவின் நில அமைப்பையும், அங்கு வாழ்கின்ற மக்கள் எதை சாப்பிட வேண்டும் என்பதையும், அங்கே என்ன விளையும் என்பதையும் மாற்றி அமைத்தவர் ஸ்டூவர்ட் என்றால் மிகையாகாது. மட்டுமல்ல, விதைப்பை புற்றுநோயிலிருந்து மீண்டு வந்திருக்கிறார் ஸ்டூவர்ட். அவர் தோப்பில் விளைகின்ற மாதுளையிலிருந்து எடுக்கப் படும் பழரசத்தை தினமும் அருந்துகிறார். இந்தப் பழரசம்தான் அவரை ஆரோக்கியமாக வைத்திருப் பதாக ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார் ஸ்டூவர்ட்.
ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்களில் தங்களுக்கு நெருங்கிய மற்றும் அருகிலுள்ள 4000 நண்பர்களுக்கு பரிசுப் பெட்டிகளை அனுப் புவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர் ஸ்டூவர்ட்டும், லிண்டாவும். அந்தப் பெட்டியில் அவர்களின் தோட்டத்தில் விளைந்த பாதாமும், பிஸ்தாவும், மாது ளையும், ஆரஞ்சு பழங்களும் இருக்கும்.இன்று ஸ்டூவர்ட் ரெஸ்னிக்கின் நிகர சொத்து மதிப்பு சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய்.
த.சக்திவேல்
|