உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஏன் இந்தியா சொதப்பியது..?



இந்திய ஆண்கள் ஹாக்கி அணி உலகக் கோப்பை வென்று 47 ஆண்டுகள் கடந்துவிட்டன. 1975ம் ஆண்டு அந்த மகத்தான சம்பவம் நடந்தது. அப்போது பாகிஸ்தானை
2 -1 என்ற கோல் கணக்கில் வென்று உலகக் கோப்பையைத் தனதாக்கியது. அதேபோல் ஒரு தருணம் சமீபத்தில் ஒடிசாவில் நடந்த 2023ம் ஆண்டுக்கான உலக ஹாக்கி போட்டியிலும் நிகழும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், நியூசிலாந்து அணியுடனான நாக்அவுட் சுற்றில் பெனால்டி ஷூட்அவுட்டில் கோட்டைவிட்டு உலகக் கோப்பையிலிருந்தே வெளியேறி ரசிகர்களின் மனதை சுக்குநூறாக்கியது இந்திய அணி.

கடந்த 1980ல் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அதன்பிறகு சர்வதேச போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. அந்தக் குறையை கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று போக்கியது. இப்போது நிச்சயம் உலகக் கோப்பை வெல்லும் என நினைத்திருந்த நேரத்தில் நாக் அவுட்டிலேயே வெளியேறியதை ரசிகர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
உலகின் மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாக விளங்கும் இந்திய ஹாக்கி அணிக்கு என்னதான் ஆச்சு? தோல்விக்கான காரணங்கள் என்ன? இனி என்ன செய்ய வேண்டும்... என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், 1980ல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றபோது இந்திய அணியின் கேப்டனாக இருந்தவருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஸ்கரனிடம் பேசினோம்.

‘‘முதல்ல இந்திய அணியிடம் எதிர்பார்ப்புகள் அதிகம் வச்சிட்டோம். காரணம், உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை நாம் நடத்துறோம். அதனால், நாம் கோப்பை வெல்ல நிறைய வாய்ப்புகள் இருப்பதாக நினைச்சது. ரெண்டாவது, ஒலிம்பிக்ஸ்ல நாம் வெண்கலம் வென்றிருக்கோம். அதனால, இந்த உலகக் கோப்பையை வெல்வோம் என்கிற நம்பிக்கை. இந்த இரண்டு எண்ணங்களும் ரசிகர்களுக்கு மட்டுமல்ல. வீரர்களுக்கும் கூட இருந்தது.

அது அதிக அழுத்தத்திற்குக் கொண்டு போய் தோல்விக்கான காரணமாகிடுச்சு...’’ என வருத்தமாக  ஆரம்பித்தார் பாஸ்கரன். ‘‘நாம் முதல் போட்டியில் ஸ்பெயினுடன் ஆடும்போது 2 - 0னு வெற்றி பெற்றோம். அதை சாதாரண வெற்றினுதான் சொல்லணும். ரொம்ப அவுட்ஸ்டேண்டிங்காக ஆடி வெற்றி பெறல. அடுத்து இங்கிலாந்துடனான போட்டியில்தான் அதிக அழுத்தம் ஏற்பட்டுச்சு. நாம் நிறைய அட்டாக் பண்ணல. டிஃபன்ஸ் நல்லா செய்தோம். அந்த போட்டியில் நாம் ஜெயிக்க வேண்டியது. ஆனா, டிரா செய்தோம். சில மாசங்களுக்கு முன்னாடி அவங்கள நாம் ஜெயிச்சிருந்தோம்.  

இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை அடுத்தடுத்து அதிக ப்ரஷர்லேயே ஆடிட்டாங்க. தோல்விக்கான முதல் காரணமே அதுதான். இந்திய அணியின் பயிற்சியாளரான கிரஹாம் ரீட் கூட அழுத்தத்தில்தான் இருந்தார். அது அவரின் இன்டர்வியூல நன்றாகத் தெரிந்தது.ரெண்டாவது, இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் சிங் இந்தியாவிற்காக நூறு கோல்களுக்கு மேல் அடித்தவர். ஆனா, அவர் இந்த நான்கு போட்டியிலும் எதிர்பார்த்த அளவில் கோல் அடிக்கல. அவர் கோல் அடிப்பதில் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். மற்ற நாட்டு கோல் கீப்பர்கள் அவரைப் பார்த்தால் பயப்படுவாங்க. ஆனா, அவர் சிறப்பாக சோபிக்கல.

கடைசி போட்டியில் வேல்ஸ் அணியுடன் விளையாடினோம். பிரிட்டன் இவர்களுடன் ஐந்து கோல்கள் அடிச்சாங்க. நாம் 4 கோல்களே அடிச்சோம். பதிலுக்கு வேல்ஸ் 2 கோல்கள் அடிச்சாங்க. இதனால, பிரிட்டனுக்கும் நமக்கும் கோல் வித்தியாசம் அதிகரிச்சிடுச்சு.வேல்ஸுடன் ஆறு கோல்கள் வரை அடிச்சிருந்தால் நாம் அந்தப் பிரிவில் முதலிடத்திற்கு வந்திருப்போம். எளிதாக காலி றுதிக்கு முன்னேறியிருப்போம்.

ஆனா, அதிக அழுத்தத்தில் ஆடினது எல்லாவற்றையும் மாற்றிடுச்சு.நியூசிலாந்து அவங்க பிரிவுல மூன்றாவது இடத்துல இருந்தாங்க. அந்த அணியிடம் 3 - 0 என்றாவது நாம் வெற்றி பெற்றிருக்கலாம். அங்கேயும் எட்டு பெனால்டி கார்னர் மிஸ் பண்ணினாங்க. ஒரு கேப்டன் மிஸ் செய்தால் எப்படி? அதுவும் கடைசி கால்மணி நேரத்தில் நடந்தது. 3 - 1 இருந்தது, 3 - 3னு டிராவாகி எல்லாமே தலைகீழாக மாறிடுச்சு.

கடைசிநேரத்தில் நடந்த ஷூட் அவுட்டில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கோல் போட்டிருக்கணும். அதுலயும் கோட்டைவிட்டார். அப்பதான் எனக்கு அவர் அண்டர் ப்ரஷர்ல இருக்கார்னு தெரிஞ்சது. நேற்று அவரை சந்திச்சப்ப, ‘என்னனு தெரியல கோச். நான் நிறைய மிஸ் பண்றேன். பெஸ்ட்டா கோல் அடிக்கதான் முயற்சி செய்றேன். ஆனா, கோல் ஆகமாட்டேங்குது கோச்’னு வேதனையாகச் சொன்னார்.  

நான் ஏன் கோல் ஆகலனு பார்க்கிறப்ப, இவரின் பெனால்டி கார்னரை எல்லா நாட்டு கோல்கீப்பர்களும் புரிஞ்சுகிட்டாங்கனு தெரிஞ்சது. அவங்க தெரிஞ்சாலும் இவர் கோல் அடிக்கணும். அதுதானே திறமை..?இவர் என்ன பண்ணியிருக்க லாம்னா வேறு ஆங்கிள்ல கோல் போட்டிருக் கலாம். கோல்கீப்பர் எதிர்பார்ப்பை மாற்றி இடது பக்கமாகப் போட்டிருக்கலாம். இவர் வலதுபக்கமாக போடுவதை கண்டறிந்து நெருக்கமாக ‘பேக்’ பண்ணிட்டாங்க.இந்நேரம் பயிற்சியாளர் என்ன செய்திருக்கணும்னா, அடுத்தடுத்த போட்டிகளில் பெனால்டி ஷூட்டில் நேரடியாக கோலடிப்பதை விடுத்து மறைமுகமாக பாஸ் செய்து கோலடிக்க வீரர்களிடம் சொல்லியிருக்கலாம். இந்த முயற்சி நல்ல பலன் கொடுத்திருக்கும். ஆனா, அப்படி செய்யல.

இந்த நான்கு போட்டிகளிலும் நமக்கு 26 பெனால்டி கார்னர் கிடைச்சது. இதில் 5 கோல்கள்தான் அடிச்சிருக்கோம். கிடைச்ச வாய்ப்புகளை கோட்டைவிட்டோம். அதுதான் பிரச்னை.
இதுதவிர மிஸ் பாஸஸ், மிஸ் ட்ரப்பிங், ராங் பாஸஸ்னு நிறைய இருந்தது. இவையெல்லாம் அடிப்படை விஷயஙகள். இதில் சொதப்பினதாலேயே இந்த உலகக் கோப்பையை கோட்டைவிட்டிருக்கோம்...’’ என்கிறவர், இன்னும் சில தவறுகளைச் சுட்டிக்காட்டினார்.  

‘‘பெனால்டி கார்னரை மற்ற அணிகள் எல்லாம் சிறப்பாக செய்றாங்க. குறிப்பாக எல்லா அணிகளும் சயின்ஸ் டெக்னால ஜியை பயன்படுத்துறாங்க. நாம் செய்யும் தவறுகளை கவனமாக கணிச்சு அவங்க அதை தங்களுக்கு சாதகமாக மாத்திக்கிடுறாங்க. ஒவ்வொரு டீமும் மற்ற அணிகளைப் பார்த்து படிக்கிறாங்க. அப்ப பயிற்சியாளர்கள்தான் வீரர்களுக்கு பல தொழில் நுட்பங்களை போட்டிகளுக்குத் தகுந்தாற் போல மாற்றணும். எப்ப பெனால்டி கார்னரில் நேரடியாக சரியாக போடலையோ உடனே ரெண்டாவது ஆப்ஷன்படி மறைமுகமாக போட நம் பயிற்சி யாளர் சொல்லியிருக்கணும். அதை செய்யத் தவறிட்டார். இந்தியாவுக்கு கிடைச்சிருப்பது நல்ல பயிற்சியாளர்தான். ஆனா, அவர் இந்த விஷயத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம்.

அன்னைக்கு நாங்க ஆடும்போதும் சரி, நான் பயிற்சியாளராக இருந்தபோதும் சரி இப்போது உள்ளதுபோல் வசதிகள் கிடையாது. இன்னைக்கு தலைமைப் பயிற்சி யாளருக்கு உதவியாக 11 பேர் இருக்காங்க. அனலிடிக்கல் கோச், சயின்ஸ் டெக்னாலஜி கோச், எதிரணியினர் எப்படி ஆடுறாங்க என்பதை கண்டறிந்து சொல்ல ஆபோனன்ட் கோச்னு நிறைய உதவி பயிற்சியாளர்கள் வந்திட்டாங்க. இந்த டெக்னிக்கல் டீம் மற்ற அணிகளைவிட இந்திய அணிக்குதான் அதிகம். இவ்வளவு இருந்தும் தோற்றதுதான் எனக்கு வருத்தம்.

இதுமட்டுமல்ல. சில வீரர்கள் தேர்விலும் அவசரப்பட்டிருக்காங்க. வருண்னு ஒரு வீரர். அவர் நான்கு மாதங்களாக இந்திய அணியில் கிடையாது. இப்ப மறுபடியும் அவரை சேர்த்திருக்காங்க. அவர் எப்படி வந்தார்னு தெரியல. லலித் உபாத்யாயனு முன்கள வீரர். அவரும் சில மாதங்கள் ஹாக்கி விளை யாடல. ஃபிட்னஸ்ல இருந்து வெளியே போனவரை மறுபடியும் அணியில் சேர்த்திருக்காங்க. அதுமாதிரி ஜர்மன்ப்ரீத் சிங்கும் ஃபிட்டானு தெரியல.இந்தப் போட்டிகள்ல லலித் ஒரு பந்தையும் சரியாக பிடிக்கல. ஜர்மன்ப்ரீத் சிங் ரொம்ப லாங் பாஸாக தந்தார். வருண் ரொம்ப மெதுவாக ஆடினார். என்னைப் பொறுத்தவரை இவர்களை அணியில் சேர்த்திருக்கக் கூடாது. இதைவிட சிறந்த வீரர்கள் இருக்காங்க.

பொதுவா, சிறந்த லெவன் இருந்து எல்லோரும் 80 சதவீதம் ஆடினால்தான் டீம் வெற்றி பெறும். இதுல மூணு பேர் 80 சதவீதமும், மற்றவர்கள் 40 சதவீதமும் ஆடினால் தோல்வியே கிடைக்கும். இதுதான் இப்ப இந்தியாவுக்கு நடந்தது. ஹாக்கி என்பது ஒரு குழு விளையாட்டு...’’ என்கிறவரிடம், என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்றோம். ‘‘எதிர்காலத்துல பழைய பேட்டர்னை மாற்றணும். கோர் குரூப்னு சொல்வாங்க. அதாவது முக்கியமான வீரர்கள் முப்பது பேர் கொண்ட குழு அது. எனக்கு தெரிஞ்சு கடந்த எட்டு ஆண்டுகளாக 30 பேர் கொண்ட ஒரே குழுதான் ஹாக்கி அணியில் இருக்கு. இப்ப விளையாடிய இதே வீரர்கள்தான் விளையாடிட்டு வர்றாங்க.

அப்ப எட்டு ஆண்டுகளாக எந்த புது வீரரையும் கண்டறியலயா என்கிற கேள்வி எழுது. எவ்வளவோ தேசிய போட்டிகள் இந்த எட்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டிருக்கு. அதிலிருந்து ஒருவர் கூட தேறலயா?இவ்வளவு பெரிய நாட்டுல ஒவ்வொரு ஆண்டும் முப்பது பேர் புதுசா வரணும். முதல்ல முப்பது பேர்னு வைச்சிருக்கிறதே தவறு. அதிலும் அதே வீரர்களை வச்சிருக்கிறது பெரிய தவறு. ஹாக்கி போட்டிகள் தேசிய அளவில், மாநில அளவில் நடக்குது. சாய் அகடமியும் நடத்துறாங்க. இதிலிருந்து வீரர்களை கண்டறியணும். இந்த கோர் குரூப்பை மாற்றணும். மாநில அளவில் நிறைய போட்டிகள் நடத்தி அதிலிருந்து வீரர்களைத் தேர்ந்தெடுக்கணும்.

குறிப்பாக, அண்டர் 14லேயே நாம் தேர்ந்தெடுத்து விளையாட வைக்கணும். கால்பந்தில் மெஸ்சி எப்படி உருவானார்? அவங்க சின்ன வயசுல இருந்தே எடுத்திட்டு போறாங்க. ஆனா, நாம் 20 வயதில்தான் ஒரு ஹாக்கி வீரரை கண்டுபிடிக்கிறோம்.

அந்த 20 வயதில்தான் அவர் மனதளவில், உடலளவில் ஃபிட்டாக இருப்பார்னு நினைக்கிறோம். நம் இந்திய மனநிலையில் விளையாட்டு கற்றுக்கொள்ளும் வயது 14தான். அதனால, 14 வயதிலயே ஒரு பையனுக்கு இந்த விளையாட்டுக்கான உடலமைப்பு இருக்கா, அதுல ஆர்வமும் இருக்கானு திறமையை அடையாளம் காணும் பணிகளைச் செய்யணும். பிறகு அந்தப் பையனை தயார்படுத்தணும். அப்பதான் எதிர்கால இந்திய ஹாக்கி சிறப்பானதாக மாறும். கோப்பைகளை வெல்லும்...’’ என அழுத்தமாகச் சொல்கிறார் பாஸ்கரன்.

பேராச்சி கண்ணன்