உலகம் முழுக்க இப்ப திரும்பவும் இசைத் தட்டுல பாடல்களை கேட்க ஆரம்பிச்சிருக்காங்க!



புன்னகைக்கிறார் 6 ஆயிரம் இசைத்தட்டுகளை சேகரித்து வைத்திருக்கும் சீனிவாசன்

பாட்டு பாடுபவர்களுக்கு மட்டுமல்ல, பாட்டை லயித்துக் கேட்பவர்களுக்கும் கூட பேச்சில் இப்படி பூவிதழின் மென்மைத் தன்மை கூடி நிற்குமா என்ன?
 மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சாயலை மட்டுமல்ல, அவர் பேச்சின் மென்மையான அணுகுமுறையையும் கொண்டிருக்கிறார் சீனிவாசன். ‘இத்தனையும் வைத்திருக்கிறீர்களே, உங்களுக்குப் பாடத்தெரியுமா?’ என்று கேட்டால், ‘‘பாடுவேன். ஆனா, நீங்க கேட்க முடியாது...’’ என்று சொல்லிச் சிரிக்கிறார். இவரிடம் ஏன் இப்படி பாடக்கேட்க வேண்டும்; இவர் பாடகரா... என்று கேட்கலாம்.
இவர் பாடகர் அல்ல; பாட்டின் காதலர்- அதுவும் இசைத்தட்டுகளின் காதலர்!   
ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரு பிரத்யேக பெரிய அறையில் 6000க்கும் மேற்பட்ட இசைத்தட்டுகளை அடுக்கி வைத்திருக்கிறார். அறையின் நடுவே அந்தக்காலத்து பழமையான ரெக்கார்டு பிளேயரையும், ஸ்பீக்கர் பாக்சையும் அம்சமாக வைத்து அருமையாக பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மண்ணில் செய்த இசைத்தட்டுகள், காகிதத்தில் தயாரித்த இசைத்தட்டுகள், பீங்கான், கிரேயான், மைக்கா, பிளாஸ்டிக், வைபர் கிளாஸ்... இப்படி எத்தனையோ வகையான இசைத்தட்டுகள் எல்லாம் வந்து போய், அதன் பிறகு ஒலி நாடா, கேசட்டுகள் வந்து, சி.டி, டிவிடி வகையறாக்கள் வந்து, அதுவும் கடந்து பென்டிரைவ் போட்டுக் கேட்டு, அதுவும் இப்போது பல்வேறு ‘ஆப்’களால் வழக்கொழியக் காத்திருக்கும் நேரத்தில் ஒருவர் இப்படி இசைத்தட்டுகளையும் ரெக்கார்டு பிளேயரையும் வைத்துத்தான் பாட்டு கேட்பேன் என்று அடம்பிடித்து அதையேதான் இதுவரை செய்து கொண்டிருக்கிறார் என்றால்... எவ்வளவு பெரிய ஆச்சர்யம்.   

கோவை பூண்டி செல்லும் வழியில் இருக்கிறது செம்மேடு கிராமம். அங்கே பழங்கால அரண்மனை போன்ற வீடு. மாடியில் பெரிசு பெரிசாய் அறைகள். அதில் மிகப்பெரிய அறை ஒன்று, பர்மா தேக்கு கதவுகளால் சாத்தப்பட்டிருக்கிறது. அதைத் திறந்தால் முழுக்க உள்ளே நாம் காணச்சென்ற இசைத்தட்டுகளின் உலகம். அலமாரி, அலமாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
அறையின் நடுவே ஒரு டேபிளின் மீது கண்ணாடிப் பெட்டி அல்ல, பேழை. அதன் முன்னே அமரும் சீனிவாசன், அதன் மூடியைத் திறக்கிறார். ரெக்கார்டு பிளேயரின் பட்டனைத் திருகுகிறார். பிளேயர் ஓடத் தொடங்குகிறது. அதன் நடுவே இசைத்தட்டை செருகி, அதன் மீது அலுங்காமல் முள்ஏந்தியை வைக்கிறார்.

அறையெங்கும் பியானோ இசை நிரம்புகிறது. சீனிவாசன் வலது கைவிரல்கள் அவர் தொடை மீதமர்ந்து அவரையும் அறியாமல் தாளமிடுகிறது. ‘தேடி வந்த தெய்வமே... தேவ பந்தமே... எங்கே என் தேவனே... உன்னைக் கண்டேனே... என்னைத் தந்தேனே...’ என ‘உயர்ந்த உள்ளம்’ படப்பாடல் ஒலிக்கிறது.

கொஞ்சநேரம் பல்வேறு படப்பாடல்களைப் போட்டு நம்மை கேட்க வைத்து விட்டு பிறகு பேச ஆரம்பிக்கிறார் சீனிவாசன்.‘‘இசைத்தட்டில் நான் ஏன் பாடல்களை இப்படி இன்னமும் கேட்கிறேன்னா, ஒவ்வொரு இசைத்தட்டுக்கும் ஒவ்வொரு உணர்வு இருக்கு. Every music has a story அப்படின்னு சொல்லுவாங்க.

ஒவ்வொரு இசைக்கும் ஒரு கதை இருக்கிற மாதிரி, ஒரு இசைத்தட்டை எடுத்து அந்தப் பிளேயரில் வச்சு, டோனாவையும் எடுத்து சுழலும் தட்டுமேல வைக்கும்போது, நம்ம அந்த இசைத்தட்டு அட்டையைப் பார்க்கிறோம். அது இசையாக ஒலிக்கிறதை கேட்கிறோம். இப்படிக் கேட்கும்போது நம் நினைவுகள் பின்னோக்கிப் போகும்போது அதன் அதிர்வுகளை ரசிப்பீங்க. அது மனதுக்கு இதமாக இருக்கு.

அதுவே ஸ்ட்ரீமிங்ல கேட்கையில ஏதோ ஒரு பாட்டு பாடுது, நம்ம ஏதோ ஒரு வேலை செஞ்சுட்டு இருக்கிறோம்ங்கிறது மட்டும்தான் இருக்கு. மத்தபடி பாட்டுல லயிச்சுக் கேட்கறதுங்கறது சாத்தியமில்லாம இருக்கு. இதைக்கேட்க நீங்க பக்கத்துலயே இருக்கணும். ஃபிஸிக்கல் ஃபீலிங் வரும். அந்தக்காலத்துக்கே நம்மை இந்த இசைத்தட்டுகள் கொண்டு போகுது.

அந்தக்காலத்தில் ஒரு லிமிடெட் டெக்னாலஜி. இப்ப மாதிரி 24 ட்ராக், டிஜிட்டல் டிராக் எல்லாம் கிடையாது!’’ இசையோடு மட்டுமல்ல, இசைத்தட்டோடு அந்தக்கால இசை அமைப்பாளர்களோடு, பாடகர்களோடு லயித்து நின்று பேசுகிறார் ‘‘எப்பவுமே இந்த இசைத்தட்டுகளில்தான் பாடல்கள் கேட்பேன். எனக்கு மத்ததுல பாட்டு கேட்வே பிடிக்காது.

நான் இருக்கிறது டவுன்ல. இது பூர்வீக வீடு. சனி, ஞாயிறுகள்ல இங்கே வந்துடுவேன். மதியம் சாப்பிட்டுட்டு கதவை அடைச்சு  உட்கார்ந்துட்டேன்னா, இந்த இசைத்தட்டுகளோடதான், இதன் பாட்டுகளோடதான்!’’ என்னும் சீனிவாசனுக்கு இந்த இசை ஆர்வம் எல்.கே.ஜி படிக்கும்போதே வந்துவிட்டதாம்!

‘‘என்னோட பெரியப்பா செல்வகுமார், வெள்ளக்கிணறுல இருக்கிறார். அவர்தான் ஒரு ஹெச்எம்வி ஃபியஸ்ட்டா பிளேயரும், 20 இசைத்தட்டுகளையும் முதன்முதலாக எனக்குப் பரிசா கொடுத்தார். ‘ஓ ரசிக்கும் சீமானே...’, ‘கொக்கரக் கொக்கரக்கோ சேவலே...’, ‘கல்யாண சமையல் சாதம்...’ன்னு அந்தப் பாடல்கள் டைட்டில் கூட ஞாபகம் இருக்கு. அதுலயிருந்தே எனக்கு இசையும், இசைத்தட்டுகளும் கூடப் பிறந்த சொத்தாவே ஆயிடுச்சு. அப்ப எனக்குப் பிடிச்ச அந்த மோகம் இப்ப வரைக்கும் மாறலை. இசையில்லாமல் நானில்லைன்னே சொல்லிடலாம்!’’

சீனிவாசன் தன்னிடம் உள்ள இசைத்தட்டுகளில் 1907ம் ஆண்டு வந்த பழமையான இசைத்தட்டுகளும் உண்டு எனச் சொல்லி ஆச்சர்யமூட்டுகிறார். ‘‘1907ல் பெங்களூரு நாகரத்தினம்மா பாடின பாடல்தான் எங்கிட்ட இருக்கிற பழமையான இசைத்தட்டு. நாலு வருஷத்துக்கு முன்னாடி நான் ஒரு குரூப் சேர்த்து சோனி கம்பெனியில் பேசி, எச்எம்வியில் சரிகமல பேசி ஏ.ஆர். ரகுமானோட எல்.பி ஒண்ணு ரிலீஸ் பண்ணினோம்.

முந்நூறு எல்பி வந்தது. அதுக்கப்புறம் அது நல்லா போக ஆரம்பிச்சவுடனே அவங்களே இப்ப தொடர்ச்சியாக நிறைய படப்பாடல்களை ரிலீஸ் பண்ண ஆரம்பிச்சாங்க!
பாட்டுக்கு மூலதனம் இதுதான். ஒலிநாடாக்களில் இருந்தது. பிறகு இசைத்தட்டுக்கு மாறியது. இசைத்தட்டுல இருந்து கேசட் திரும்ப வந்தது. கேசட்லயிருந்து காம்பாக்ட் டிஸ்க், பென் ட்ரைவ் வந்து இப்ப ஸ்ட்ரீமிங் ஆடியோ வந்துடுச்சு.

இப்ப பார்த்தீங்கன்னா உலகம் திருப்பியும் இசைத்தட்டுக்கேதான் போகுது. வெளிநாடுகளில் எல்லாம் வருஷா வருஷம் இசைத்தட்டுகளோட வியாபாரம் கூடிக்கொண்டேதான் இருக்கு. குறுந்தட்டு எல்லாம் மேனுஃபாக்சரிங்கே கிடையாது. புதுப்படங்கள் எல்லாமே ஸ்ட்ரீமிங்கில்தான் போகுதே ஒழிய சிடி பார்மேட்ல வர்றதில்லை. இந்தியிலேயே சமீபத்தில் 40, 50 படங்கள் இசைத்தட்டுகளில்தான் பாடல் ரிலீஸ் ஆகியிருக்கு. மலையாளத்தில் இரண்டு படம் வந்துருச்சு.

யு.எஸ்., யு.கே, மத்த நாடுகளில் எல்லாம் லேட்டஸ்ட் ரிலீஸ் எந்த அளவுக்கு சிடியில் பண்றாங்களோ அதைவிட டபுள் மடங்கு இந்த இசைத்தட்டுல விடறாங்க. ஆக, மக்கள் பழைய பக்கம் திரும்பறாங்கன்னுதான் நினைக்கிறேன்!’’ என்னும் சீனிவாசன் இதில் பாடல் கேட்பதற்கும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பாடலைக் கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்கிறார்.

‘‘ நீங்களே கேட்டுப் பாருங்க...’’ என மறுபடியும் சில பாடல்களைப் போட்டு கேட்கவிடுகிறார். வித்தியாசத்தை உணர முடிந்தது ‘‘டிஜிட்டல்ல வர்றது ‘ஸ்கொயர் வேவ்ஸ்’ன்னு சொல்றோம். இதுல இருக்கிறது ‘சைன் வேவ்ஸ்’. இசைக்கான மென்மைத்தன்மை (ஸ்மூத் கவர்ஸ்) இசைத்தட்டில் நல்லாயிருக்கும். புதுப்பாடல்கள் எல்லாமே டிஜிட்டல் ஆயிருச்சு. அதனால் அதை டிஜிட்டல்லயே கேட்டுட்டுப் போயிடறோம்.

ஆனா, பழைய பாடல்களை, டிஜிட்டலில் மாற்றும்போது, அதனுடைய ஃபிளேவர் மாறிப் போயிடுது. வாய்ஸ், மியூஸிக்கின் டெப்த், பேஸ் நோட்ஸ் எல்லாமே மாறிடுது.
இசைத்தட்டு, ஒலிநாடாவில் கேட்கும்போது அந்த ஆர்க்கெஸ்ட்ரா வந்து நம்ம முன்னாடி பெர்ஃபார்ம் பண்ற அனுபவமே கிடைக்குது. வீணை வாசிக்கறதுக்கும், கீ போர்டுல அதை வாசிக்கறதுக்கும் வித்தியாசம் இருக்குதுதானே…’’ என்று நாம் உணர்ந்த, சொல்லத் தெரியாத வித்தியாசத்திற்கு அர்த்தம் கற்பித்தார் சீனிவாசன்.

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பகலில் மட்டுமல்ல இரவில் பனிரெண்டு மணி வரை கூட இசைத்தட்டு பாடலிலேயே லயிக்கும் சீனிவாசன், கோவையின் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் பங்குதாரர். ஜமீன் குடும்ப வம்சாவளி. நிலச்சுவான்தார். வசதிக்கு குறைவில்லை. இவரைப் போலவே இசைத்தட்டு சேகரம் செய்து, அதில் பாடல்கள் கேட்பவர்கள் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் பலர் உள்ளனர். அவர்களில் சிலர் தொடர்பும் சீனிவாசனுக்கு உள்ளது.

‘‘இதைப் பராமரிப்பது ரொம்பக் கஷ்டம். இசைத்தட்டுகளை அடிக்கடி போட்டுக் கேட்காவிட்டால் பூஞ்சை படர்ந்து வீணாகப் போக வாய்ப்பு உண்டு. அதனாலேயே இதை கவனமாகப் பராமரிச்சுட்டு வர்றேன். நான் எந்த இசைத்தட்டையும் சும்மா வச்சுட்டு இருக்கிறதில்லை. ஒவ்வொரு இசைத்தட்டும் மூன்று மாசத்துக்குள்ளே கேட்பதற்கு மறுசுழற்சிக்கு வந்து
விடும்.

சும்மா எண்ணிக்கைக்கு இதை வச்சிருக்கறதில்லை. எனக்குப் பிடிச்ச பாடல்களை இப்பவும் இசைத்தட்டு வடிவில் கிடைச்சா கண்டிப்பா வாங்கறேன். கேட்கிறேன்.
இங்கே இருக்கிற இசைத்தட்டுகள் எல்லாமே நான் போட்டுக் கேட்டதுதான். கேட்டுக்கிட்டே இருக்கிறேன். புத்தகம் எப்படி கரையான் அரிக்குமோ அப்படி ஸ்டேட்டிக் டஸ்ட்னு சொல்லக்கூடிய நம்ம காற்றுல இருக்கிற அழுக்கை ஈர்க்கும் சக்தி இந்த மெட்டீரியலுக்கு இருக்கு. அதனால துடைச்சு குறிப்பிட்ட டெம்பரேச்சர் - கண்ட்ரோல்ல இருக்கணும். வெயில் படக்கூடாது. அதிகமான ஈரப்பதமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தா வளைஞ்சுடும்...’’ என்கிறார் சீனிவாசன்.

கா.சு.வேலாயுதன்