Must Watch
 அன் ஆக்ஷன் ஹீரோ சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்ற இந்திப்படம், ‘அன் ஆக்ஷன் ஹீரோ’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் பார்க்க கிடைக்கிறது.
ரசிகர்களின் மத்தியில் பிரபலமான ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருகிறார் மானவ். படப்பிடிப்புக்காக அரியானாவுக்கு வருகிறார் மானவ். உள்ளூர் அரசியல்வாதியான விக்கி, மானவ்வைச் சந்திப்பதற்காக படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே காத்திருக்கிறார்.
ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் விக்கியை மானவ் கண்டுகொள்வதில்லை. விக்கிக்குக் கோபம் தலைக்கேறுகிறது. ஷூட்டிங் முடிந்த பிறகும் விக்கியைக் கண்டுகொள்ளாமல் தனது புது காரை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார் மானவ். கடுப்பாகும் விக்கி, மானவ்வைத் துரத்திச் செல்கிறார். ஓர் இடத்தில் இருவரும் நேருக்கு நேராகச் சந்திக்க, பிரச்னை வெடிக்கிறது. விக்கியை மானவ் தள்ளிவிடுகிறார். எதிர்பாராதவிதமாக கல்லில் அடிபட்டு விக்கி இறந்துவிடுகிறார். இரவோடு இரவாக அரியானாவிலிருந்து வெளியேறுகிறார் மானவ். விக்கியின் சகோதரன் மானவ்வைத் தேடி வர சூடுபிடிக்கிறது திரைக்கதை. ஆக்ஷன் மற்றும் திரில்லிங் பிரியர்களுக்கு நல்ல விருந்து வைத்திருக்கிறது இந்தப் படம். மானவ்வாக கலக்கியிருக்கிறார் ஆயுஷ்மான் குரானா. படத்தின் இயக்குநர் அனிருத் ஐயர். எ மேன் ஆஃப் ஆக்ஷன்
‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இருக்கும் ஸ்பானிஷ் மொழிப்படம், ‘எ மேன் ஆஃப் ஆக்ஷன்’. ஆங்கிலத்திலும் காணக்கிடைக்கிறது. ஸ்பெயினில் உள்ள ஒரு கிராமம். 1940ம் வருடம். சிறுவன் லூசியோ உர்தோபியாவின் தந்தை மரணப்படுக்கையில் கிடக்கிறார். மருத்துவம் பார்க்க பணம் இல்லாததால் ஒரு வங்கியில் கொள்ளையடிக்க கிளம்புகிறான். பயத்தில் வீட்டுக்குத் திரும்புகிறான். தந்தை இறந்துவிடுகிறார்.
ஊரில் பிழைக்க முடியாது என்று லூசியோ அக்கா பாரிஸ் நகருக்குச் சென்றுவிடுகிறாள். பத்து வருடங்கள் வேகமாக ஓடுகின்றன. அக்காவைத் தேடி பாரிஸுக்குச் செல்கிறான் இளைஞனாகிவிட்ட லூசியோ. அங்கே அவனுக்கு கொத்தனார் வேலை கிடைக்கிறது. அரசு மற்றும் அதிகாரங்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் அராஜகவாதிகளின் தொடர்பும் கிடைக்கிறது.
அராஜகவாதி கூட்டாளி ஒருவருடன் சேர்ந்து வங்கிக்கொள்ளையில் ஈடுபடும் லூசியோ, எப்படி உலகின் முக்கியமான அராஜகவாதியாக உருவெடுக்கிறான் என்பதே மீதிக்கதை. அராஜகவாதியாகவும், வங்கிக் கொள்ளைக்காரனாகவும், ராபின் ஹுட்டுடன் ஒப்பிடும் ஓர் ஆளுமையாகவும் அறியப்பட்ட லூசியோ உர்தோபியா என்பவரின் நிஜக்கதைதான் இந்தப் படம். இதன் இயக்குநர் ஜேவியர் ருயிஸ் கால்டெரா.
கோரமீனு
‘அமேசான் ப்ரை மி’ல் அதிரடி காட்டிக்கொண்டிருக்கும் தெலுங்குப் படம், ‘கோரமீனு’. ஒரு மீனவ கிராமத்துக்கு மாற்றலாகி வருகிறார் கமிஷனர் மீசைல ராஜு. ரவுடிகள் எல்லோரும் அவரைப் பார்த்தாலே அலறுவார்கள். மீசைதான் அவரது அடையாளம். அவர் பதவிக்கு வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பே மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் முகமூடி அணிந்து வந்து மீசைல ராஜுவின் மீசையை எடுத்துவிடுகிறது. பலத்த அவமானத்துக்கு உள்ளாகும் ராஜு தன்னுடையை மீசையை எடுத்தவர்களைக் கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்.
இன்னொரு பக்கம் மீனவ கிராமத்தில் டானாக வலம் வருகிறார் கருணா. அவருடைய டிரைவர் கோட்டி. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி, கருணாவைக் காதலிக்கிறாள். அதே நேரத்தில் மீனாட்சியை உயிருக்கு உயிராக காதலிக்கிறான் கோட்டி. மீசைல ராஜு, மீனாட்சி, கோட்டி, கருணா ஆகிய நால்வரும் ஒரு புள்ளியில் வந்து இணைய சுவாரஸ்யமாகிறது திரைக்கதை. தெலுங்கு மசாலா எதுவும் இல்லாமல் உண்மைக்கு நெருக்கமாகப் படமாக்கியிருப்பது சிறப்பு. கதாபாத்திரங்களின் தேர்வு கச்சிதம். படத்தின் இயக்குநர் ஸ்ரீபதி காரி.
சாட்டர்டே நைட்
நட்பைப் பற்றி ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் முக்கியமானவற்றைப் பட்டியலிட்டால் ‘சாட்டர்டே நைட்’ எனும் மலையாளப் படத்துக்கும் ஓர் இடம் இருக்கும். ‘ஹாட் ஸ்டாரி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே ஸ்டான்லி, அஜித், ஜஸ்டின், சுனில் ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்கள்.
நான்கு பேரும் வெவ்வேறு விதமான கருத்துகளையும், பழக்க வழக்கங்களையும் கொண்டவர்கள். வயதான பிறகு நால்வரும் நான்கு திசையில் சென்றுவிடுகின்றனர். ஏழு வருடங்களுக்கு மேலாக ஜஸ்டினும், அஜித்தும் மற்ற நண்பர்களைச் சந்திக்கவில்லை. அவ்வப்போது சுனிலும், ஸ்டான்லியும் சந்திந்துக் கொள்கின்றனர். ஜஸ்டினுக்கு ஒரு பிரச்னை ஏற்பட மற்ற நண்பர்களைத் தேடி வருகிறான். அப்போது ஸ்டான்லி முற்றிலும் வேறொரு புது மனிதனாக மாறியிருக்கிறான. ஸ்டான்லி எப்படி மற்ற நண்பர்களுக்கு நட்பின் உன்னதத்தையும், வாழ்க்கையின் கொண்டாட்டத்தையும் கற்றும்கொடுக்கிறான் என்பதே ஜாலியான மீதிக்கதை.
நான்கு நண்பர்களின் வாழ்க்கையினூடாக வாழ்க்கையின் உன்னதமான பக்கங்களை நகைச்சுவையாக திறந்துகாட்டுகிறது இந்தப் படம். ஸ்டான்லி எனும் கதாபாத்திரத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார் நிவின் பாலி. படத்தின் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.
தொகுப்பு: த.சக்திவேல்
|