அரண்மனை குடும்பம் - 56



முகத்தில் பொங்கிய குரூரப் பிரகாசத்துடன் மகள் மஞ்சுவை குலசேகரர் பார்த்தபோது சுந்தரவல்லியும் வந்து இணைந்து கொண்டாள்.
“என்னங்க... காரசாரமா ஏதோ பேசிக்கிட்டிருக்கீங்கபோல இருக்கு..?”

“எல்லாம் அந்த வடநாட்டுக்காரி பத்திதான் சுந்தரம்...”“இன்னிக்கு அவ கணக்கை முடிக்கறதா சொல்லியிருக்கீங்க. ஞாபகம் இருக்குல்ல..?”

“அதுக்குதான்மா நானும் வழிய சொல்லிக் கிட்டிருக்கேன். நடுவுல அந்த மலை பள்ளத்துல விழுந்த மூணு பேரால இப்ப பெரிய குழப்பம்...”
“அவங்கதான் அந்த குழியிலயே இல்ல... யாரோ காப்பாத்திட்டதா சொன்னீங்களே?”
“அது யாரோ இல்ல... அந்த ரத்தி!”

“என்னடி சொல்றே... அவ எங்கடி அங்க வந்தா?”

“எல்லாம் ஒரு சந்தேகம்தான்... தெளிவா எதுவும் இல்ல. அந்த மூணுபேர் இப்ப ஆஸ்பத்திரில இருக்காங்க. ஆனா, எந்த ஆஸ்பத்திரி... யார் கூட்டிகிட்டு போனான்னு எதுவும் தெரியாது...”“என்னடி இப்படி கொழப்பறே... என்னங்க சொல்றா இவ?”“சுந்தரம்... உன்னமாதிரிதான் நானும் குழம்பி இருக்கேன். நாம ஒண்ணு நினைச்சா நடக்கறது நேர் எதிரா இருக்கு...”
“ஆரம்பத்துல இருந்தே அப்படித்தானேங்க இருக்கு?”

“அது எப்படி வேணா இருந்துட்டு போகட்டும்... இப்ப அந்த ரத்தியும் நம்பள போலவே கொழப்பத்துலதான் இருக்கா. இங்க நம்ம கூட இல்லாம நமக்கு வசதியா ஏற்காட்ல இருக்கா. அவளை போட்டுத் தள்ள இதைவிட ஒரு சந்தர்ப்பம் வரவே வராது...” மஞ்சு இடையிட்டு பலவித முகபாவங்களோடு சொல்லி நிறுத்தினாள்.“எல்லாம் சரி... அதை எப்படி பண்ணப் போறீங்க..?” சுந்தரவல்லியும் கையை ஆட்டிக் கேட்டாள்.

“அம்மா... கணேஷ் அத்தான் செல் அவர் ரூம்ல மோடா மேலதான் இருக்கு. அத்தானும் மும்முரமா லேப்டாப்ல ஏதோ பண்ணிகிட்டு இருக்காரு. அந்த செல் மூலமா ‘ரத்தி உடனே புறப்பட்டு நம்ம எஸ்டேட் பாசன கிணத்துகிட்ட வா’ன்னு நான் மெஸேஜை அனுபபிட்றேன்.அப்பா நீங்க இப்பவே புறப்படுங்க. இப்ப மணி ஒண்ணு... இரண்டு மணிக்கு நீங்க அந்த கிணத்துகிட்ட போயிடலாம். நான் 1.45க்கு மெஸேஜ் பண்ணா சரியா இருக்கும். ரத்தியும் வருவா. அப்ப பிடிச்சு தள்ளிட்டு திரும்பிப் பார்க்காம வந்துடுங்க...
செத்து பிணமா மிதக்கட்டும். மறக்காம அந்த குட்டியையும் தள்ளி விட்றுங்க...”

தனக்கே உண்டான ஹிஸ்டீரியா படபடப்போடு சொன்னவளை குலசேகர ராஜா ஒரு மாதிரி பார்த்தார்.
“என்ன பாக்கறீங்க... புறப்படுங்க. அங்க போய்ட்டு போன் பண்ணுங்க...”
“இல்லம்மா... அந்த ரத்தி மெஸேஜை பாத்துட்டு வருவாளா? அப்படியே வந்தாலும் கூட அந்த பங்கஜமும்ல வருவா? அப்புறம் இதை பேசியே சொல்லலாமே... எதுக்கு மெஸேஜ் அப்படின்னு சந்தேகப்பட மாட்டாளா?”“என்னப்பா... பயம் வந்துடிச்சா... அதான் இப்படி கேள்வியா கேக்கறீங்களா?”“தைரியமா கொலை செய்ய நான் என்ன எதாவது கேங் லீடரா? இப்படி செய்யலாம்னா எப்பவோ செய்திருப்பேனே... எதுக்கு பாம்பு பிடிக்கறவன், வசியக்காரன் கிட்டல்லாம் நான் பேசணும்?”

“பயப்பட்றீங்க... நல்லா தெரியுது... நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க. இப்படி பயந்து பயந்தே நாம எல்லாத்தையும் இழந்து கிட்டிருக்கோம்...” மஞ்சு டெம்பர் ஆகி நகம் கடிக்கத் தொடங்கி விட்டாள்அடுத்து நிச்சயமாக பொருட்களைப் போட்டு உடைப்பதில்தான் அது முடியும் என்பதை உணர்ந்த சுந்தரவல்லி, “இந்தாடி... டென்ஷன் ஆகாத. இவர் கேட்டதுலயும் அர்த்தம் இருக்குடி. அந்த பங்கஜம் கூட வந்தா இவர் அவளையும்ல கொல்லணும்?ரத்தி சாவுக்கு நாம கணேசன் ஒதுக்கி வெச்சதை காரணமா சொல்லிடலாம். பங்கஜத்துக்கு என்ன சொல்வே?”
“இப்படி கேள்வியா என்ன கேட்டீங்க... நான் இப்ப உங்களை இங்கயே கழுத்த நெரிச்சி கொன்னுடுவேன். நான் மெஸேஜ் அனுப்பும் போது நீயும் குழந்தையும் மட்டும் வரவும்னு டைப் பண்ணா முடிஞ்சது.

இல்லையா, நானே என் போன்ல அவகிட்ட பேசி நானும் உன் புருஷனும் இப்ப எஸ்டேட் கிணத்துகிட்ட சல்லாபத்துல இருக்கோம். உன்னால இனி என்னை ஒண்ணும் பண்ண முடியாதுன்னு பேசறேன். அப்ப அலறி அடிச்சுகிட்டு ஓடி வருவால்ல?” மஞ்சு பற்கள் நரநரக்க பத்ரகாளி போல் உசுப்பிக் கொண்டு கேட்கவும் -“இப்ப நீ சொன்னியே... இது சரியா இருக்கு... இப்படியே செய். என்னாங்க நீங்க கிளம்புங்க...” சுந்தரவல்லி குலசேகர ராஜாவை தோளைத் தொட்டு தள்ளி விட்டாள்.

அவரும் அரை மனதாக புறப்பட்டார். அறையை விட்டு வெளியே வந்தவர் கணேச ராஜா அறைப் பக்கம் முதலில் சென்றார். அவன் லேப்டாப்பில் மும்முரமாக இருந்தான். குலசேகரர் வரவும் ஏறிட்டான்.“என்ன மாப்ளை... லஞ்ச் டயத்துல சாப்பிடாம அப்படி என்ன வேலை?”

“வேலைக்கா பஞ்சம் மாமா... நம்ம சேலம் சென்னை எட்டு வழிச்சாலை எப்படியும் வரத்தான் போகுது... அதுக்கான ரோட் கான்ட்ராக்ட் சம்மந்தமாதான் பாத்துகிட்டு இருக்கேன். இந்த எம்.பி. அருணாசலம் கூட அவன் பினாமிங்க மூலமா ட்ரை பண்றது நல்லா தெரியுது...”

“பெரிய பிராஜக்ட் ஆச்சே மாப்ளா?”

“ஆமாம் மாமா... இதை மட்டும் நான் வாங்கிட்டேன்னு வைங்க பத்து பர்சன்ட் லாபம்னாலும் நூறு கோடி நிக்கும்...”

“நூறு கோடியா?”

“சும்மா தோராயமா சொன்னேன்... இன்னும்கூட கூட கிடைக்கலாம். ஆயிரக்கணக்கான லேபர்கள்... பல நூறு கிலோ மீட்டர்கள்... இதுல அங்கங்க ரெஸ்ட் ரூம்ஸ்... பவர் ஸ்டேஷன்ஸ்... வாட்டர் சோர்ஸ்ன்னு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. ஒரு அணையை கட்டிமுடிக்கற மாதிரியான விஷயம்தான் இது...”

“வாவ்... இது கட்டாயம் கிடைக்குமா மாப்ள?”

“கிடைக்கணும்... அதுக்கு என்ன உண்டோ அதை செய்வேன். சொல்லப் போனா இப்பதான் சந்தோஷமாவே ஃபீல் பண்றேன். மஞ்சுவை கல்யாணம் பண்ண முடிவெடுக்கவுமே எனக்கு நல்ல காலம் தொடங்கிட்ட மாதிரிதான் தெரியுது...”கணேசராஜா சொன்ன விதமே குலசேகரரை ஆகாயத்தில் மிதக்கச் செய்து விட்டது.“இருந்தாலும் காலைச் சுத்தின பாம்பா இந்த ரத்தி இருக்காளே மாப்ள...”“அவளப் பத்தி இப்ப எதுக்கு மாமா பேச்சு... அதான் அவளை தூர தள்ளி வெச்சிட்டேனே..?”

“தள்ளி வெச்சிட்டா அவ கிட்ட வராமலா போய்டுவா?”

“ஆமா மாமா... அவ அப்படியே ஒதுங்கிப் போறவ கிடையாது. அதுலயும் அவ நாக ஜாதி... நாகங்கள் பயங்கரமா பழி வாங்குமாமே?”

“என்ன மாப்ள நாக ஜாதி அது இதுன்னு கிட்டு... கையில் பாம்பு பச்சை குத்திகிட்டா பாம்பாகிட முடியுமா? எந்த காலத்துல இருந்து கிட்டு என்ன பேசறே நீ..?”
“அப்ப அவளால ஒண்ணும் பண்ணமுடியாதுங்கிறீங்களா?”

“என்ன பண்ணமுடியும் மாப்ள..? வேணும்னா தற்கொலை பண்ணிக்கலாம். என் புருஷன் எனக்கு துரோகம் பண்ணிட்டாருனு. அவளுக்குன்னு யார் இருக்கா நியாயம் கேட்க?”
“அப்படி பண்ணிக்கிட்டாதான் பரவால்லியே... பண்ணிக்க மாட்டேங்கறாளே..?”

கணேசராஜா சொன்ன விதமே குலசேகர ராஜாவை குதூகலப்படுத்தத் தொடங்கி விட்டது.

“அப்படி பண்ணிக்கிட்டா உனக்கு கெட்ட பெயராயிடுமே மாப்ள... அதப்பத்தி கவலையில்லையா
உனக்கு?”“அதுக்கெல்லாம் நான் யோசிச்சு வெச்சிருக்கேன் மாமா... அத தற்கொலைன்னு சொன்னாதானே கெட்டபேர் வரும்? ஆக்சிடென்டலா நடந்துடிச்சின்னா சிம்பதிதானே வரும்..?”
“அது எப்படி மாப்ள ஆக்சிடென்டலா?”“எல்லாம் நாம சொல்றதுலதானே இருக்கு..? ஆனா, நாம இப்படி பேசறதுல எல்லாம் ஒரு பிரயோஜனமும் இல்ல மாமா. இப்போதைக்கு ரத்தி பத்தி யோசிக்காம நம்ம வேலைய பாப்போம்னுதான் இந்த காண்ட்ராக்ட் விஷயத்த பாத்துகிட்டிருக்கேன். பெரிய புராஜக்ட்.. பெரிய அளவுல டெபாசிட்னு என் கவனமெல்லாம் இப்ப இது மேலதான்...”

“ரைட் மாம்ள... நீ இதையே பாரு... ரத்தி விஷயத்த விட்று... சொன்ன மாதிரி அதை அது போக்குல விட்றுவோம். நானும் போய் என் வேலைய பாக்கறேன்...” என்று கணேசராஜாவை விட்டு விலகி வந்தவர் முகத்தில் முன்பைவிட அதிக பிரகாசம்.வெளியே வந்தவர் எதிரில் கணேசராஜாவின் அப்பாவான கைலாசராஜாவும், அம்மா கஸ்தூரியும் எதிர்ப்பட்டு, “என்ன குலசேகரா... இப்பல்லாம் நீ இங்க இருக்கறதேயில்ல போல இருக்கே..?” என்று அவர்கள் கேட்கவும் செய்தனர்.

“ஆமாம் அத்தான்... என் தோப்புல இப்ப தேங்கா பறிக்கறாங்க. எப்படியும் லட்சம் காய் தேறும். கேரளாவுல ஒரு தேங்கா எண்ணெய் ஃபேக்டரிகாரங்க அப்படியே வாங்கிக்கறாங்க. அது சம்மந்தமா நிறைய வேலை...”“என்ன தோப்போ என்ன காண்ட்ராக்டோ... எதுக்கு இப்படி அலையறே?”“என்னக்கா இப்படி கேட்டுட்ட... உங்களுக்கு கணேசன் இருக்கான். எனக்கு யார் இருக்கா..? குறிப்பா மஞ்சுவுக்கு..?’’ அதுதான் வாய்ப்பென்று ஒரு பஞ்ச் டயலாக் பேசவும் கஸ்தூரியிடம் பெருமூச்சு.

கைலாச ராஜாவோ, “அதான் உம் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கறேன்னு கணேசன் சொல்லிட்டானேப்பா...” என்றார்.“வாஸ்தவம்தான்... நடந்து முடியறவரை எதுவும் நிச்சயம் இல்லையே அத்தான். நீங்க கூட குடும்ப கௌரவம், மீடியா அது இதுன்னு பயந்து கிட்டுல்ல இருக்கீங்க..?”“சரி நீயே சொல்லு... என்ன பண்ணலாம்..?” கைலாச ராஜா சோபா ஒன்றில் அமர்ந்தபடி தீர்க்கமாய் கேட்ட விதமே குலசேகரரை உற்சாக உச்சிக்கு தூக்கிக் கொண்டு போனது.

“என்னத்தான் என்னக் கேக்கறீங்க... என்னால என்ன இருக்கு? எங்க வரைல கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத கதைதானே?” என்று கழிவிரக்கமாய் திருப்பிக் கேட்டார்.
“அப்படி சொல்லாதே... நானும் உங்கக்காவும் ஒரு முடிவெடுத்துட்டோம்...” என்று அதிர்ச்சி யளித்தார் கைலாச ராஜா.“என்னத்தான்..?”“அந்த பொண்ணைப் பாத்து நீயா விவாகரத்து வாங்கிக்க... அதுக்கு எவ்வளவு கோடி வேணுமோ கேள்... தரோம்னு சொல்லி நாங்களே பேசப் போறோம்...”

“அப்படியா... இது என்னத்தான் புது திருப்பம்?”

“ஆமாம்ப்பா... இந்த விவகாரம் எக்காரணம் கொண்டும் வெளிய தெரியக் கூடாது. காதும் காதும் வெச்சமாதிரி முடியணும். அதுதான் இந்த அரம்மண குடும்பத்துக்கும் நல்லது. இதுதான் எங்க தீர்மானமான முடிவு...”“அத்தான்... அவ உங்க கோடிகளுக்கு சம்மதிக்கலேன்னா?” “நிச்சயம் சம்மதிப்பாடா... சம்மதிப்பா. எங்களுக்கு இந்த அரம்மண குடும்ப மானம் மரியாதை கௌரவம்லாம்தான் பெருசு. சொத்துல சரிபாதிய கூட கொடுத்துட்டு போவோம். பீடை ஒழிஞ்சா போதும் எனக்கு...” கைலாச ராஜா குரலில் பெரும் சடைப்பு.

“சரிபாதியா... ஐயோ... அதுவே ஆயிரம் கோடிங்கள தாண்டுமே அத்தான்...”“போகட்டும்... அதைவிட மானம் மரியாதை பெருசு இல்லியா? பணத்தை சம்பாதிச்சிடலாம்... மானம் மரியாதை போனா சம்பாதிக்க முடியுமா?”“இல்ல அத்தான்... அதுக்கெல்லாம் தேவையே இல்ல. ஒரு வேலைக்காரிக்கு ஆயிரம் கோடிங்களா... கூடாது அத்தான்...”“கூடாதுன்னா நீ ஒரு நல்ல வழிய சொல்லு...”“நீங்க இன்னிக்கு ஒரு நாள் மட்டும் கொஞ்சம் அமைதியா இருங்க. வழி தானா பிறக்கப் போவுது பாருங்க...” என்றவர் எல்லாமே தனக்கு சாதகமாக இருக்கும் அதீத சந்தோஷத்துடன் எஸ்டேட் தோட்டம் நோக்கி புறப்பட்டார்.

எல்லாவற்றையும் மஞ்சுவும் சுந்தரவல்லியும் பார்த்தபடியே இருந்தனர்.பங்கஜத்தின் சமையலில் நல்ல மணம்! ஆனால், ரத்திதான் சாப்பிடாமல் சிலை போல அமர்ந்திருந்தாள். அருகில் தியா.

“என்னம்மா யோசனை... சாப்பிடுங்கம்மா... உங்களுக்கு பிடிச்ச களி கோஸ் சாம்பார்மா...” என்ற அவள் குரல் ரத்தி காதிலேயே விழவில்லை. கண்களிலும் கலக்கம்!
“என்னம்மா... நீங்க போன் பண்ணியும் சார் எடுக்கலேங்கற வருத்தமா?”

“வருத்தம்கற வார்த்தைல்லாம் சாதாரணம் பங்கஜம். எப்படி இப்படி அவர் மாறினார்னுதான் புரியல... நம்ம சாமிய பார்த்தா பிரச்னை தீரும்னு நினைச்சேன். ஆனா, இப்ப பிரச்னை பெருசாயிடிச்சு. நாம காப்பாத்தின மூணு பேரும் என்ன ஆனாங்கன்னும் தெரியல. ஏதோ பெருசா நடக்கப் போகுது பங்கஜம்...”“ஆமாம்மா... நீங்க சொல்லச் சொல்ல எனக்கும் அப்படித்தான் தோணுதும்மா. வேணும்னா இன்னொருதடவ சாமிய போய் பார்த்து நடந்ததை சொல்வோமா?”“அதுதான் சரி... இப்பவே புறப்படு...”ரத்தி சாப்பிடாமலே எழுந்திருக்கையில் அவள் கைபேசியும் ஒலித்தது. திரையில் மஞ்சு பெயர்.

ரத்திக்கு கொஞ்சம் போல நெஞ்சையடைத்தது. சுதாரித்து காதைக் கொடுத்தாள். மறு புறம் மஞ்சு பேசப்பேச கண்களில் கண்ணீர் பிரவாகமாய் கொட்டத் தொடங்கியது.
“சாரி ரத்தி... இனி நீ என் வாழ்க்கைல குறுக்கிடாதே. இப்ப கூட நான் அவர் கூட நம்ம எஸ்டேட் கிணத்துகிட்டதான் இருக்கேன். அனேகமா கொஞ்ச நேரத்துல அவர் என் கழுத்துல தாலி கூட கட்டலாம்.

உனக்கு நிச்சயம் இவர் எதாவது செய்வார். நீ இவர் தர்ற பணத்தோட உங்க நாக்பூருக்கு போயிடு. அதான் உனக்கு நல்லது. இதை சொல்லத்தான் கூப்பிட்டேன்...” என்று
மஞ்சு போட வேண்டிய தூண்டிலைப் போட்டு முடிக்க, அதில் சிக்கிய மீனாய் ரத்தியும் எஸ்டேட் கிணறு நோக்கி புறப்பட்டாள்!

(தொடரும்)

ஒவ்வொரு பாம்புச் சட்டையும் ஒரு பிறவி முடிப்பதை குறிக்கிறது எனும் பொருளில் மண்ணாங்கட்டியார் சொன்னதில் ஒரு புதிய பொருளை உணர்ந்த அசோகமித்திரன், “குரு... இதைத் தொட்டு ஒரு கேள்விய கேட்கலாமா?” என்று இடையிட்டார்.“உம் கேளு...”
“மறுஜென்மம்கறது உண்மையா..?”
“ஓ... அதுலயே உனக்கு சந்தேகமா?”
“இந்த உலகம்தான் என்னை சந்தேகப்பட வெச்சிருக்கு...”
“எந்த வகைல?”

“இன்றைய உலக மக்கள் தொகை 750 கோடி. இதுல இந்தியாவோட மக்கள் 125 கோடி... அதுல இந்துக்கள் சராசரியா 75 கோடி. அந்த வகைல உலக மக்கள் தொகைல பத்து பேர்ல ஒருத்தன்தான் இந்து! மீதி இருக்கற 9 பேர் பல வேறு மதங்களைச் சேர்ந்தவங்க. அந்த மதங்கள்ல மறு பிறப்பு பற்றிய நம்பிக்கைகளோ, கருத்தோ பெருசா இல்லை.

ஒரு மதம் கடவுள், பாவ புண்ணியத்துக்கு ஏற்ப தண்டனை தர்றதா சொல்லுது... ஒரு மதம் எல்லா பாவங்களையும் மன்னிச்சிட்றதா சொல்லுது. ஆனா, திரும்பப் பிறப்பது பற்றி பெருசா கருத்துகள் இல்லை...”“ஏ... நீ இப்ப ஒன்பது பேர் நம்பிக்கை பெருசா... இல்ல ஒருத்தன் நம்பிக்கை பெருசான்னு என்னை கேக்காம கேக்கற... அப்படித்தானே?”
“ஆமாம் சாமி... அப்படியும் சொல்லலாம்...”“எண்ணிக்கைல சிக்கிட்டியா நீ... போகட்டும், உனக்கு எண்ணிக்கையாலயே சொல்றேன்.

ஊருக்கு ஊர் போலீஸ் ஸ்டேசன் இருக்குதானே?”“இருக்கு...”“இந்த ஊரையே எடுத்துக்க... பத்தாயிரம் பேர் வாழறாங்க! இந்த ஊர்ல போலீஸ் ஸ்டேசனும் இருக்கு. அதுல பத்து பேர் வரை இருக்காங்க! இந்த பத்து பேர்தான் பத்தாயிரம் பேரை காவல் காக்கறாங்க! இந்த பத்து பேர்தான் சட்டம் ஒழுங்குக்கும் பொறுப்பு. நமக்கெல்லாமும் பொறுப்பு இருந்தாலும் அதிகாரம் நமக்கு கிடையாது. அது இவங்க கிட்ட மட்டும்தான் இருக்கு. இப்ப சொல்லு... பத்து பெருசா? பத்தாயிரம் பெருசா?”

“புரியுது சாமி... எண்ணிக்கைல எதுவுமில்ல... எண்ணத்துலதான்னு சொல்ல வர்றீங்களா?”
“அப்படி வா வழிக்கு... நான் இப்ப உன்கிட்ட கேட்கறேன். இப்ப நீ மனுஷப் பிறப்பெடுத்துட்ட ஒரு மனுஷன். இதுல உனக்கு சந்தேகமில்லையே?”
“இல்லை...”“உன் முன்பிறப்பு எது?”“அதான் தெரியாதே..?”“சரியா சொல்லு... தெரியலியா இல்லை இதான் உன் முதல் பிறப்பா?”
“தெரியல... தெரிஞ்சுக்கவும் முடியலங்கறதுதான் குரு யதார்த்தம்...”“அப்படியா? போகட்டும்... இல்லாத ஒண்ணை ஒருத்தன் அடைய முடியுமா?”
“இல்லாத ஒண்ணை நினைச்சுக் கூட பார்க்க முடியாதே?”

“அப்படின்னா முன்ன நீ இல்லாம இருந்திருந்தா இப்ப நீ பிறந்திருக்க முடியுமா?”
‘‘லாஜிக்கா இந்த பதில் சரியா இருக்கு சாமி... ஆனா, நான்கற இந்த உடம்பு எப்பவும் இப்படி இல்லையே? இதே உடம்புல நான் வாலிபனா இருந்தப்ப என் தோற்றம், எடை எல்லாம் வேற. குழந்தையா இருந்தப்ப வேற... அவ்வளவு ஏன், அப்பா அம்மாவோட சுக்ல சுரோணிதமா இருந்தப்ப நான் திரவ வடிவத்துலதானே இருந்துருக்கேன்?”

“உன் விஞ்ஞானம் இப்ப அந்த திரவத்தை கைல எடுத்து கிட்டு கண்ணாடிக் குடுவைக்குள்ளல்லாம் குழந்தையை உருவாக்கிக் காட்டறேன்னு மார் தட்டி சாதிச்சிக்கிட்டும் இருக்கு. அந்த விந்து திரவத்தைத்தானே சொல்றே?”
“ஆமாம் சாமி...”

“அதுக்குள்ள பல கோடி உயிரணுக்கள் இருக்குதெரியுமா?”
“தெரியும் சாமி...”“அது ஒரு பரம்பரைத் தொடர்ச்சிதானே?”
“ஆமாம் சாமி...”“அப்ப உனக்குள்ள உன் தாத்தா பாட்டியெல்லாம் கூட இருக்காங்கதானே?”
“நிச்சயமா சாமி...”“இதுக்கு பேர் என்னடா... இது மறுஜென்மமில்லியா?”
மண்ணாங்கட்டியார் பொட்டில் அடித்தார்.

இந்திரா செளந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி