தாடி உணவு திருமணம் One to One with ராகுல் காந்தி!



இந்திய ஒற்றுமைக்காக பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார் அல்லவா ராகுல் காந்தி..? அப்போது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி வைரலாகியிருக்கிறது. அதில், சுவாரஸ்யமான பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவற்றின் ஹைலைட்ஸ் மட்டும் இங்கே...

உணவு

அசைவ உணவுகளை அதிகம் விரும்பும் எனக்கு சிக்கன் கபாப் (Chicken kebab), ஆம்லெட், ஷீக் கபாப் (Seekh Kebab - அரைத்த இறைச்சியில் செய்யப்படும் உணவு) ஆகிய உணவுகள் பிடித்தமானவை. காலையில் மட்டும் தினமும் காபியை விரும்பிக் குடிப்பேன். கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை கூடிய வரையில் தவிர்த்துவிடுகிறேன். அரிசி சாதம் அல்லது கோதுமை ரொட்டி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிட்டே ஆகவேண்டும் என்றால் நான் ரொட்டியை தேர்ந்தெடுப்பேன். பலாப்பழம், பட்டாணி ஆகியவை பிடிக்காது.

படிப்பு

பாட்டி இந்திரா காந்தி இறக்கும்வரை போர்டிங் ஸ்கூலில் இருந்தேன். அவரது படுகொலைக்குப் பிறகு என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக வீட்டிலேயே படிக்கவேண்டி வந்தது. அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் ஓராண்டு வரலாறு படித்தேன். பின்னர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் பற்றி படித்தேன்.

அப்பா ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கிருந்து மாறவேண்டி வந்தது. பின்னர் ஃப்ளோரிடாவில் உள்ள ரோலிங்ஸ் கல்லூரியில் சர்வதேச உறவுகள் மற்றும் பொருளாதாரம் படித்தேன். அதன் பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் முடித்தேன்.

முதல் சம்பளம்

லண்டனைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில்தான் முதலில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது எனக்கு 25 வயது. அந்த நிறுவனம் எனக்கு 3000 பவுண்ட்களை முதல் சம்பளமாக வழங்கியது. அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய சம்பளம்.

உடற்பயிற்சி

தற்காப்புக் கலைகளில் எனக்கு ஆர்வம் அதிகம். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க அது மிகவும் உதவுகிறது. இந்திய ஒற்றுமை யாத்திரையின்போதுகூட தினமும் தற்காப்புக் கலை வகுப்புகளில் பங்கேற்று வந்தேன். இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது நடக்கும்போதே தியானம் செய்திருக்கிறேன்.

தாடி

இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது முடி வெட்டக்கூடாது, ஷேவிங் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதன் விளைவால் தாடி பெரிதாக வளர்ந்துவிட்டது.

இந்த தோற்றம் எனக்கு பிடித்திருக்கிறது. என்ன... சாப்பிடும்போதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது!

திருமணம்

நான் திருமணத்துக்கு எதிரானவன் அல்ல. ஆனால், என் பெற்றோரின் அழகான திருமண வாழ்க்கையைப் பார்த்து வளர்ந்ததால் என் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது. பாசமுள்ள, புத்திசாலித்தனமான பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்.

படுக்கைக்கு அருகில் வைத்திருக்கும் பொருட்கள்

என் படுக்கைக்கு அருகில் உள்ள மேசையில் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள், ருத்ராட்சம் உட்பட மதம் தொடர்பான பொருட்கள், செல்போன் ஆகியவற்றை எப்போதும் வைத்திருப்பேன்.

பிடித்த உணவகங்கள்

தில்லியில் உள்ள மோத்திமகால், சாகர், சுவாகத், சரவண பவன் ஆகிய உணவகங்களில் சாப்பிடப் பிடிக்கும்.

இந்தியப் பிரதமரானால்...

நாட்டின் கல்வித் திட்டத்தை மாற்றுவதில் கவனம் செலுத்துவேன். மத்தியதர தொழில் நிறுவனங்களுக்கு உதவுவேன். விவசாயிகள், வேலையில்லா பட்டதாரிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக இருப்பேன்.

என்.ஆனந்தி