M C D N A R Y T இதுதான் இந்த இளைஞரின் பெயர்!



‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி ஸ்டைலில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கலக்குகிறார் தீனா!

M C D N A R Y T என்றால் யாருக்காவது புரிகிறதா? ப்ளஸ்டூ படிக்கும் போது தனககுத்தானே வைத்துக் கொண்ட பெட் நேம் என்கிறார் தீனா. இவரை நண்பர்கள் எல்லாம் டிஎன்ஏ என்று அழைக்க, கல்லூரியில் படிக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவ - மாணவிகள் இவரை ஹிப்ஹாப் தீனா என்றே அறிந்திருக்கிறார்கள்.
இவர் படிக்கும் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடந்த பிரம்மாண்ட விழாவுக்கு நடிகர் ஆர்யாவை அழைத்திருந்தார்கள். அவர் வர தாமதமான நிலையில் கல்லூரி மாணவர்கள் மேடையில் தங்கள் தனித்திறனைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது மேடையேறினார் நம் டிஎன்ஏ என்கிற ஹிப் ஹாப் தீனா. மைக்கைப் பிடித்தார். படபடவென்று சொல்லிசை (ஹிப்ஹாப்) கூட்டி ஒரு பாடலைப் பாட ஆரம்பித்தார்.
எடுத்த எடுப்பில் அந்த மொழி புரியவில்லை. ஊன்றிக் கவனித்தபோதுதான் தெரிந்தது அட நம் தாய்மொழி தமிழ்!‘அண்டம் பிறந்தது முதலடி பதிந்தது. தமிழனே பதித்த நிஜம் அதைக் கேளு. அகிலம் யாவையும் ஆளப் பிறந்தவன். ஆழியில் போனவன் ஒரு வரலாறு..!’ என நீளும் பாடல். தமிழனுக்கே தமிழ் புரியாத அளவு அவ்வளவு ஸ்பீடு.

பல்லாயிரக்கணக்கான மாணவ - மாணவிகளின் ஆட்டமும், விசில் சத்தமும், கரகோஷமும்  பாடின பாடலைக் கேட்க விடாமல் செய்தது. போதாக்குறைக்கு ஒன்ஸ் மோர் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சுத்தத்தமிழில், தானே பாட்டெழுதி, இசையும் இசைத்து, பாப் டான்ஸும் ஆடி அசத்தும் ஒடிசலான இளைஞருக்குள் நிறைந்து நிற்பது கவிதை. பள்ளிக்கூட நாட்களிலேயே நூற்றுக்கணக்கான கவிதைகளை எழுதியிருக்கிறார்.

அதுவே ஹிப்-ஹாப் தமிழா ஆதியை மூவியில் பார்த்துப் பார்த்து, தானும் அப்படி ஹிப்-ஹாப் பாடல் எழுத வேண்டும் என்று முயற்சி செய்து முப்பது பாடல்களை நிரப்பி விட்டார். அத்தனை பாடல்களையும், தான் இதுவரை ஏறிய பத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மேடைகளில் உலாவ விட்டிருக்கிறார். விளைவு... ‘எனக்காக ஒரு ஹிப் ஹாப் சாங் போடுடா!’ என மற்றவர்கள் கேட்கும் அளவு செம பாப்புலர்.

போதாக்குறைக்கு சில நாட்கள் முன்பு ‘HABIBI’ என்ற தலைப்பில் ஒரு பாடல் டீசர் வெளியிட்டிருக்கிறார். ‘‘கூட்டத்தின் நடுவினில் அமர்ந்த பெண் அவள், கண்களைக் கொண்டு என்னைக் கடத்திச் சென்றவள். என் எண்ணம் முழுக்க  அவள் கண்கள் பதிய கண் மையிலே தீட்டியே வந்த மயிலவள்..!’’ என்று தொடங்கும் அந்த ஹிப்ஹாப் செம அசத்தல். அதை தன் ‘RYTGUYS’ என்ற யூட்யூப் சேனலில் பதிவேற்றி உலாவ விட்டிருக்கிறார்.

இவரின் இந்த செயல்பாடுகளைப் பார்த்த திரைத்துறையில் இருக்கும் சீனியர் மாணவர் ஒருவர் இவரைப் பற்றி, தான் டைரக்டராகப் பணியாற்றும் திரைப்பட தயாரிப்பாளரிடம் சொல்ல, அவர் இவரை சந்திக்க கோவை வர உள்ளார். அதற்கு பிப்ரவரி மாதம் தேதி கொடுத்துள்ளார். அவர் வரும்போது பாடிக் காட்ட இப்பவே ஆறு பாடல்கள் ரெடியாம்! 

இத்தனைக்கும் தீனா பி.எஸ்சி ஃபுட் ப்ராசசிங் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் மூன்றாமாண்டு படிப்பவர்.

தமிழைப் படிக்க, பேச, எழுதவே வாய்ப்பற்றுச் சென்று கொண்டிருக்கும் நம் இளைய தலைமுறை மத்தியில் இவருக்கு எப்படி இப்படி சுத்தத் தமிழில் கவிதையும், பாட்டும் எழுதி, அதை ஹிப்ஹாப் எனப்படும் சொல்லிசையில் ஆடிக் கொண்டே பாடத் தோன்றியது... கேள்வியுடன் தீனாவை சந்தித்தோம்.

‘‘எனக்கு தமிழ் மேல ரொம்ப ஆர்வம். என் அம்மா தமிழ் டீச்சர். அவர் படிக்கப்படிக்க அதைக் கேட்டுக் கேட்டு அதிலேயே லயிச்சுப் போயிட்டேன். அப்படித்தான் சின்னச் சின்ன கவிதைகள் எழுதிட்டிருந்தேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போதே நூறு கவிதைகளுக்கு மேல எழுதிட்டேன்.

அதுக்குப் பிறகுதான் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடைய பாடல் மூவ்மெண்ட் எல்லாம் பார்த்தேன். அது போலவே செய்யணும்ன்னு ஆசை வந்துடுச்சு. சொல்லிசைக்கு ஏற்ற மாதிரி பாட்டெழுத ஆரம்பித்தேன். அப்படி முதன் முதல் தமிழுக்காக எழுதிப்பாடின பாடலே என் கல்லூரி மேடைகளில் ஹிட் ஆனது!’’ எனச் சொல்லி அதை சாதாரண வேகத்துடனும், ஹிப் ஹாப் வேகத்திலும் பாடினார்.

‘‘அண்டம் பிறந்தது முதலடி பதிந்தது. தமிழனே பதித்த நிஜம் நீ அதைக் கேளு. அகிலம் யாவையும் ஆளப் பிறந்தவன். ஆழியில் போனவன் ஒரு வரலாறு... புதைந்த பூமியில் விளைந்த முத்துக்கள். என் மனம் அறியும் நான் யாரென்று. எந்தன் மண்ணில் உந்தன் ஆதிக்கம் என்றும் அமையா நீ நடை கட்டு.

அடிமைத்தனத்தை அடியோடு ஒழிக்க, மத, சாதி போதையை மண்ணுள் புதைக்க, சகுனிகள் ஆடிடும் ஆட்டத்தைக் கலைக்க, மதங்கொண்டு வருகிறான் வெறி கொண்ட வீரனாய், ஆண்ட பரம்பரை அடிமையாவதா? எவனோ ஒருவன் நம்மை ஆள்வதா? கலப்படம் இல்லா அரசியலாக தமிழனே என்றும் தமிழனை ஆள, தடம் பதிக்கணும், தடைகளை உடைக்கணும்.  தலைமுறை தமிழினை, தரத்தினை போற்றட்டும்.

விழி திறக்கட்டும், விடியலும் பிறக்கட்டும் என் தமிழ் கவிமொழி ஆட்சியில் பரவட்டும். சிறுவயதிலே சிந்தனைத் தீயிலே ஊற்றிய வார்த்தைகள். கேள்விகள் முழங்கட்டும். வழிமாறிச் சென்ற தலைமுறைகள் வந்து சேரும் வரை என்  வார்த்தைகள் போரிடும். வரலாறை வாசித்துப் பாரடா. வந்தவன் யாராடா? ஆண்டவன் யாரடா?

அனைத்தையும் அறிந்து விட்டால் ஆண்டவன் பரம்பரை நாமென கூறிடுவாயடா. வந்தேறியவன் சூடிய வேடம். சில காலம் சில்லறை வியாபாரம். அதன் மேலே உனக்கென்ன மோகம். அனைத்தையும் துறந்திடு. தமிழே உன் அடையாளம்!’’

இந்தப் பாடலை சாதாரணமாகப் பாட ஒரு நிமிடம் பத்து செகண்ட் எடுத்துக் கொண்டார். அதுவே ஹிப் ஹாப்பில் 38 செகண்டில் பாடி முடித்தார். இப்படி நமக்கு ஏழெட்டு பாடல்களைப் பாடிக் காண்பித்தார். அவ்வளவும் சிறப்பு.

இதேபோல் ‘RYTGUYS’ என்ற தன் யூட்யூப்பில் ஆடியபடி பாடிய பாடல்களையும் காட்டினார். அதில் சமீபத்தில் வெளியிட்ட ஹபீப் சாங்கில் ஒரு இளம்பெண்ணும் இணைகிறார். அந்தப் பெண் இவருக்கு சீனியர் மாணவி. அனுசுயா. இதை ஒளி, ஒலிப்பதிவு செய்தது இவரின் நண்பர்கள் குழு. இந்தப் பாடலுக்கு ஒரு பெண் நவீன தேவதை போல் நடந்து வருவது போல் சில ஷாட்டுகள் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று இவரின் நண்பர்கள் குழு யோசித்ததாம். அதன் அடிப்படையில் நம் தீனாவுக்கு இந்த அனுசுயாவின் ஞாபகம் வந்திருக்கிறது.

‘‘அவரை அணுகி, ‘அக்கா இப்படி ஒரு சாங் பண்ணணும். நீங்க அதில் நடக்கற மாதிரி பர்ஃபாமன்ஸ் கொஞ்சம் கொடுக்க முடியுமா?’ எனக் கேட்டேன். உடனே சம்மதித்து விட்டார். அப்படி ஷூட் செய்யப்பட்டதுதான் இந்தப் பாடல்!’’ என்ற தீனா, ‘‘எனக்காக மெனக்கெட்டு இப்படி படம் எடுக்க பத்துப் பேர் கொண்ட நண்பர்கள் டீமே இயங்குகிறது.

அவர்கள் எல்லாம் சீனியர் மாணவர்கள். நான் எழுதும் தமிழ்ப் பாடலை சில இடங்களில் ஆங்கிலமாக மொழி மாற்றம் செய்ய வேண்டி வரும். அதற்கெனவே இரண்டு பேர் உள்ளார்கள்!’’ என்ற தீனா, தனது பெட் நேம் ஆன ‘டிஎன்ஏ’ எப்படி வந்தது என விளக்கினார்.

‘‘நான் ப்ளஸ்டூ சயின்ஸ் ஸ்டூண்ட். ஜுவாலஜி வகுப்பு நடந்துட்டிருக்கும்போது அதில் அடிக்கடி டிஎன்ஏவைப் பற்றிய பாடம் வந்தது. நம்ம பேர் தீனா. அதையே ஏன் டிஎன்ஏவாக சுருக்கக்கூடாது? அதுவே ஏன் எனக்கு பிராண்ட் ஆகக்கூடாதுன்னு யோசிச்சேன். அதுக்காக டிஎன்ஏவுக்கு முன்னாடி எம்.சின்னு சேர்த்துட்டேன்.

எம்.சி.ன்னா மாஸ்டர் ஆப் செரிமணி (master of ceremany)! அதாவது எந்த ஒரு மேடையையும் எடுத்துக் கொள்பவன் என்ற பொருள். அப்போ இருந்து என் செல்லப்பெயரே டிஎன்ஏ ஆகி விட்டது!’’ என்றவரிடம், ‘அப்படியானால் RYT என்று கூடவே ஒரு வார்த்தை... அதிலேயே உங்க யூட்யூப் பெயரும் வருகிறதே... அதற்கும் இது மாதிரி அர்த்தம் உண்டா?’ என்று கேட்டோம்.

‘‘நிச்சயமா. நம்ம பசங்க அடிக்கடி யூஸ் பண்ற வார்த்தை என்ன என்று கவனித்தேன். ‘ஆ... ரைட்... ஓ... ரைட்... சரி... ரைட்!’ இப்படி ரைட் என்கிற வார்த்தையையே பயன்படுத்தினாங்க. அதுதான் சரியா வரும்ன்னு RIGHT என்பதை பேச்சுமொழி உச்சரிப்புக்கு ஏற்ப RYTனு சுருக்கிட்டேன்!இந்த ஹிப் ஹாப் சாங் மியூசிக் எங்கே, எப்படி உருவானதுன்னு பார்த்தா... இதோட ஆரிஜின் ஆப்பிரிக்கா. கறுப்பின மக்கள் இனவெறிக்கு ஆளாக்கப்பட்டபோது தங்களுக்குத் தாங்களே முன்னிலைப்படுத்திக் கொள்ள பாட ஆரம்பித்த பாடல்கள்.

பின்னாளில் ரொம்ப ஹிட் ஆகி உலகம் முழுக்க பரவிச்சு. அதுதான் இன்னைக்கு அனைத்து மொழிகளிலும் பரிணாம வளர்ச்சி பெற்று ஆதிக்கம் செலுத்த ஆரம்பிச்சிருக்கு...’’ புன்னகைக்கிறார் தீனா, மன்னிக்க... MC D N A R Y T தீனா!அடேயப்பா! நம்ம இளைஞர்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு எழுத்துக்குள்ளும்தான் எத்தனை அர்த்தம் இருக்கிறது. அது பேசிப் பார்த்தால்தானே புரிகிறது!

கா.சு.வேலாயுதன்