83 வயது இயக்குநர்!



இதுவரை உலகளவில் வெளியான திரைப்படங்களில் தலைசிறந்த படமாகக் கொண்டாடப்படுகிறது, ‘த காட்ஃபாதர்’ எனும் ஆங்கிலப்படம். இதன் இயக்குநர் ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கபோலா. சுருக்கமாக கபோலா. உலகத் திரைப்பட வரலாற்றில் 1960 முதல் 1980 வரையிலான காலத்தை ஹாலிவுட்டின் மறுமலர்ச்சி அல்லது புது ஹாலிவுட் காலம் என்று சொல்கின்றனர்.
அந்தக் காலங்களில் ஹாலிவுட்டிலிருந்து அசாதாரணமான படங்கள் வெளியாகி திரைப்படத் துறையில் பெரும் பாய்ச்சலை உண்டாக்கியது. இந்த ஹாலிவுட் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இயக்குநர்களில் முக்கியமானவர் கபோலா.

ஐந்து ஆஸ்கர், ஆறு கோல்டன் குளோப், இரண்டு முறை கான் திரைப்பட விழாவின் உயரிய விருது... என ஏராளமான விருதுகளை அள்ளியிருக்கிறார் கபோலா.விஷயம் இதுவல்ல. தனது 83 வது வயதில் ‘மெகாலோபொலிஸ்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ‘மெகாலோபொலிஸ்’ என்றால் பெரு நகரம் என்று பொருள். ஒரு பேரழிவுக்குப் பிறகு நியூயார்க் நகரம் மறுகட்டமைப்பு செய்யப்படுவதுதான் படத்தின் கதை. இதை சயின்ஸ் பிக்சன் வகைமையில் படமாக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்துக்குப் பின்னணியில் இருக்கும் கதையும், திரைப்படக்கலையின் மீதான கபோலாவின் காதலும் வியக்க வைக்கிறது. அத்துடன் புதிதாக திரைப்படம் இயக்க வருபவர்களுக்கு உந்துதல் அளிக்கக்கூடியது. கபோலாவின் கனவுத் திரைப்படம் இது. தான், சினிமாவில் கற்றுக்கொண்ட அத்தனை வித்தைகளையும் இதில் காட்டப்போவதாகச் சொல்லியிருக்கிறார்.

‘த காட்ஃபாதர்’ (1972), ‘த கன்வர்சேஷன்’ (1974), ‘த காட்ஃபாதர்: பாகம் 2’ (1974), ‘அபோகலிப்ஸ் நவ்’ (1979) போன்ற திரைக்காவியங்களை இயக்கி புகழின் உச்சியில் கபோலா இருந்த காலம் அது. இதற்கு மேல் கபோலா சினிமாவில் செய்ய எதுவுமில்லை என்று அவரை பாராட்டித் தள்ளிக்கொண்டிருந்த 1980களில் ‘மெகாலோபொலிஸ்’ படத்துக்கான திரைக்கதையை எழுத ஆரம்பித்தார்.

தனக்கு இருந்த கடனை அடைக்கவும், ‘மெகாலோபொலிஸை’ யாரும் தயாரிக்க முன்வரவில்லை என்றால், தானே தயாரிப்பதற்கு பணம் வேண்டும் என்ற முனைப்பிலும் ‘டிராகுலா’ போன்ற கமர்ஷியல் படங்களை இயக்கினார்.

 ஓரளவு கடன் அடைந்ததும் தனது கனவில் இறங்கிவிட்டார் கபோலா. 2001ல் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களிடம் கதையைச் சொல்லியிருக்கிறார். பட வேலைகளை ஆரம்பிக்கலாம் என்றபோது அமெரிக்காவில் இரட்டை கோபுர தகர்ப்பு நடக்க, பட வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அப்போதும் படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. 2007ம் வருடம் முழுவதுமாக ‘மெகாலோபொலிஸை’ கைவிட்டுவிட்டார். ஆனால், கனவு அவரை துரத்திக்கொண்டே இருந்தது. 2019ல் ‘மெகாலோபொலிஸை’ இயக்கும் வேலையில் இறங்கினார்.  

இப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. 2024ல் படம் வெளியாகலாம். இதுவரை, தான் சேமித்து வைத்திருந்த 120 மில்லியன் டாலரை, அதாவது 978 கோடி ரூபாயை இப்படத்துக்காக செலவு செய்யப்போகிறார் கபோலா என்பதுதான் இதில் ஹைலைட். இதற்கு முன் கையில் இருந்த பணத்தைப் போட்டு தயாரித்த ‘ஒன் ஃப்ரம் த ஹார்ட்’ (1981) என்ற படம்தான் கபோலாவைத் திவாலாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.  மீண்டும் அவர் சினிமாவுக்காக தன் பையில் இருக்கும் பணத்தைச் செலவழிப்பது என்பது அவருக்கு சினிமா மீதிருக்கும் பெருங்காதலையே மெய்ப்பிக்கிறது.

த.சக்திவேல்