சிறுகதை - சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!



சாய்ந்த வாக்கில் அமர்ந்திருந்தவளை அவளையும் அறியாமல் தூக்கம் வாரிக்கொண்டது. இப்படியொன்று நடப்பதென்பது எப்போதாவது தான் சாத்தியம். சில நாட்களுக்கு முன்பு வரை இதுவும் கூட சாத்தியமற்றே இருந்தது. அப்போதெல்லாம் தூக்கம் வருவதற்காக மாத்திரையை நாடி ஓடிக் கொண்டிருந்தாள்.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு விருப்பமில்லாத ஒன்றாகிவிட அதுவும் விலக்கி வைக்கப்பட்டது.சமீபத்திய நாட்களாகத்தான் தூக்கம் இவளுக்கு சொந்தமானது. இவள் கைவசம் வந்தது. சாய்ந்த வாக்கிலோ அல்லது படுத்த உடனேயும் தூக்கம் தழுவுவது  வரமே! கவலைகளை மறந்து தன்னிலையிலிருந்து வேறொரு உலகத்தில் சஞ்சரிப்பதுதான் உறக்கமென்பது.

விழிப்பு கண்டும் அவள் கண் இமைகளில் தூவானம் போல் தூக்கம்  மிச்சம் இருந்தது. ஜன்னலுக்கு வெளியில் இருந்த மாமரத்தின் இலைகள் காற்றிற்கு ஈடு கொடுக்க முடியாமல் மேலும் கீழுமாய் படபடத்துக் கொண்டிருக்க, சில பழுத்த இலைகள் சுழன்று சுழன்று கீழே சென்று மண்ணில் சரணடைந்தன.

விருட்டென்று தரை தாழப் பறந்து வந்த ஒற்றைக் காகம் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த கோழிக் குஞ்சை தன் கால்களில் ஏந்த, அடுத்த கணம் தன் மொத்த சக்தியையும் திரட்டி அக்காகத்துடன் போரிட்டு குஞ்சை மீட்க முயற்சித்துக் கொண்டிருந்தது தாய்க்கோழி.‘‘அ...ம்...மா…’’  தன்னையும் அறியாமல் அலறிவிட்டாள் ராணி.

அடிவயிற்றில் சம்மட்டியால் அடித்தது போல் ஒரு வலி. இந்த வலி அவ்வப்போது வந்து உயிரைக் கரைத்துக் கொண்டிருந்தது. மென்மையான வயிற்றை மெல்ல அமுக்கி அந்த அசுர வலியை கட்டுக்குள் கொண்டு வந்து, தன்னை இயல்பாக்கிக் கொண்டாள்.

முந்தின நாள் சென்று வந்த பயணத்தின் களைப்பில் சேலைத் தலைப்பை தரையில் விரித்து படுத்திருந்த கற்பகம் அலறியடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள். சில நிமிடங்கள் அவள் நெஞ்சுக்கூடு பதற்றத்தில் வேகமாய் மேலும், கீழும் ஏறி இறங்கியது.அன்றலர்ந்த மலரென அமைதியாய் அமர்ந்திருந்த மருமகள் ராணியைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டாள். அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் அவளால்?

எல்லாமே அவனாகவே  தேடிக் கொண்டது. ‘‘எவளையோ கட்டிக்கப் போறேன்னு சொல்றியே... ஜாதகம் பார்க்கணும்! பொருத்தம் பாக்கணும்! நம்ப ஜாதியா? இல்ல அசலா...ன்னு முதல்ல விசாரிக்கணும்! இவ்வளவு விஷயம் இருக்கு? நீ பாட்டுக்கு கட்டினா அவளைத்தான் கட்டுவேன்னு வந்து நிக்கிறீயே? இது உனக்கே நல்லா இருக்கா?’’ எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடியும் அவள்தான் உலகமென்று பிடிவாதமாய் திருட்டு கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்து நின்றான் மகன் கதிர்.

வீடு கடனில் இருந்தது. மகனின் வருமானத்தில்தான் குடும்பம் ஓடிகொண்டிருந்தது. இந்த லட்சணத்தில் வேறு மதத்து பெண்ணை கட்டிட்டு வந்து நிற்கிறான் என்கிற கோபம் அவன் அப்பாவிற்கு. அவருக்கு காதல் என்றால் ஒவ்வாமை. காதலிப்பவர்களை கண்டால் வெறுப்பு.கற்பகத்துக்கு மட்டும் மருமகளை வைத்துக் கொண்டாட வேண்டுமென்ற எண்ணமா என்ன? இல்லவே இல்லை.

சொந்தத்தில் ஒரு பெண் இருந்தாள். ஐம்பது சவரன் நகையும் பல்சர் வண்டியும் தருவதாய் பேசி முடிவாகிய பின்புதான் இந்த சம்பவம் நடந்து தொலைத்தது. கற்பகம் வெளியில் தலை காட்ட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள். அக்கம் பக்கத்தாரும், சில உறவுகளும் ஏதோ துக்க காரியம் நடந்த வீட்டில் வந்து விசாரிப்பது போல் விசாரித்ததுதான் இவளுடைய ஒதுக்கத்திற்குக் காரணம்.

‘‘என்னப்பா இப்படி பண்ணிட்ட... நம்ப மதத்திலாவது ஒண்ணைப் பார்த்திருக்கலாமே. அவ நெத்தியில பொட்டு வைக்க மாட்டாளாம்? கோயில் குளத்துக்கெல்லாம் வந்தாலும் விபூதி குங்குமம் எடுத்துக்க மாட்டாளாம்? முகத்துக்கு நேரா சொல்றா... அவ மதமென்ன நம்ம மதமெதன்ன? அவ பேருகூட வாயில வரமாட்டுது.

கடைசி வரைக்கும் பிரச்னையில கொண்டுவந்து விட்டுட்டியே?’’ என்று மகனிடம் மனக்குறையை வெளிப்படுத்திய போது,‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா... எந்த காலத்துல இருக்கே... அவளுக்கு பிடிச்ச சாமியை அவள் கும்பிடட்டும். உனக்கு பிடிச்ச சாமியை நீ கும்பிடு. பேர மாத்தி உங்களுக்கு பிடிச்ச பெயர சொல்லி கூப்பிட்டுக்கோங்க! அவ எந்த விதத்திலேயும் உங்களுக்கு இடைஞ்சலா இருக்க மாட்டாள். நீங்களும் அப்படியே இருப்பீங்கன்னு நம்புறேன்...’’ ஒரேடியாக வாயை அடைத்தான் கதிர்.

அன்றிலிருந்து ‘விக்டோரியா ராணி’ கற்பகத்துக்கு வெறும் ராணியானாள்.மகன் செய்த காரியத்தைக் கேட்டு கணவர் வானத்துக்கும் பூமிக்குமாய் குதிப்பாரென்று எண்ணியிருந்தாள். ஆனால், அவர் அமைதியாக இருந்தது பயத்தை உண்டு பண்ணியது.கல்லு மாதிரி உட்கார்ந்து இருக்கிறாரே... என்று அவரைப் பார்க்கும் போதெல்லாம் விதுக்கென்று இருந்தது.
எண்ணி முப்பதே நாட்கள்தான். ராணுவத்திலிருந்து தகவல் வந்து விட்டது.“உன் பொண்டாட்டி யையும் கூட்டிட்டு போகப் போறீயாப்பா?” ராத்திரி அடுக்களைக்கு வந்த மகனிடம் ரகசிய குரலில் கேட்டாள் கற்பகம்.

‘‘இல்லம்மா ஆறு மாசம் கழிச்சு மாற்றலாகி தில்லிக்கு வந்துடுவேன். அப்புறமாத்தான் வந்து கூட்டிட்டு போகணும்...” என்றவன் அம்மாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு, “அம்மா, அவளுக்கு அப்பா அம்மா இல்லை. சொந்தம்னு சொல்லிக்க யாருமில்ல... நான் இல்லாதப்ப அவகிட்ட கொஞ்சம் அனுசரணையா நடந்துக்கோம்மா...’’அப்படிச் சொல்லிவிட்டு போன புள்ளையத்தான் தீவிரவாதிகளின் தாக்குதலால் மார்பில் குண்டு பாய்ஞ்சு உயிர் போயிடிச்சு என துணியில சுத்தி  பெட்டியில் வைத்துக் கொண்டு வந்தார்கள்.

அமைச்சர் வந்தார், கலெக்டர் வந்தார். பத்திரிகை, டிவிக்காரங்கள் வந்தார்கள். இவர்கள் மூன்று பேரையும் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தார்கள். இருபத்தோரு குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.குடும்பத்தை தலை கீழாய்ப் புரட்டிப் போட்டது கதிரின் இறப்பு. அழுது அழுது சோர்ந்து போய் மயங்கிக் கிடந்தாள் கற்பகம். சுப்பிரமணியோ பச்சத்தண்ணீ இறங்காமல் முடங்கிக் கிடந்தார்.பெற்றவர்களின் நிலை இப்படி என்றால் அவன் மனைவியோ கிழித்துப்போட்ட நாராய் ஜீவனற்ற நிலையில் கிடந்தாள்.

யாரிடமும் பேசாமல், எதுவும் சாப்பிடாமல் கண்ணைக் கூட அசைக்காமல் அப்படியே அவள் அமர்ந்திருந்த கோலம் அச்சத்தை உண்டு பண்ணியது. வைத்தியத்துக்கு மேல வைத்தியம் பார்த்தும் அவளுடைய உடல்நிலை தேறவே இல்லை. ரொம்ப கட்டாயப்படுத்தி சாப்பிடச் சொன்னால் கண்களில் இருந்து கண்ணீர் வழியும்.

புத்திர சோகம் பெரிய சோகம் என்றிருந்த கற்பகமே மனதை மாற்றிக்கொண்டு மருமகளை மகளாய்ப் பாவிக்கத் தொடங்கினாள்.கொஞ்ச நாட்களாகவே இந்த அலறலும் கூக்குரலும் பழகிக் கொண்டிருந்ததால் சங்கடம் எதுவுமில்லை. மருமகளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சா என்ன... அவளிடம் மெல்ல பேச்சை ஆரம்பித்தாள் கற்பகம்.

அலறிவிட்டாள் ராணி. ‘‘கதிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சாகுற வரைக்கும் என் மனம் மாறாது. கட்டாயப் படுத்தினீங்கன்னா தற்கொலைதான் தீர்வு...’’அன்றிலிருந்து அது சம்பந்தமாகப் பேசுவதை தவிர்த்தாள் கற்பகம்.அமைதியே உருவாய் அமர்ந்திருந்த மருமகளின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.

அலைமடியும் கடலென சலனமற்று இருந்தது. கண்களில் உறக்கம் மிச்சம் இருந்தது. மெல்ல எழுந்து வந்து மருமகளின் தலையைக் கோதிய கற்பகம், அவளை திரும்பவும் படுக்கையில் படுக்க வைத்தாள்.மாமியாரின் பரிவும் தொடுதலும் தூக்கத்தைத்  தூண்ட கால்களைச் சுருக்கி வயிற்றுக்குள் அமுக்கியபடி மீண்டும் கண் மூடினாள்.

இரவெல்லாம் பெய்த மழைக்கு முற்றம் துடைக்கப்பட்டு பளிச்சென்றிருந்தது. ராணியை எங்கு தேடியும் காணவில்லை என்றவுடன் சற்று பதற்றத்துடன் வராண்டாவுக்கு வந்தாள். வெளிப்புறத் திண்டில் சாய்ந்தமர்ந்திருந்த கணவன் சுப்பிரமணி வாசலில் விறகு பிளந்து கொண்டிருக்கும் ஏழுமலையிடம் ஏதோ வம்படித்துக் கொண்டிருந்தார்.“என்னங்க... ராணியை பார்த்தீங்களா? வீட்டுல காணலையே...’’ என்று கேட்டவுடன் சுப்பிரமணியன் முகம் கருத்துப் போனது.“அந்த தண்ட சோத்த பத்தி என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும்? எங்கேயாவது உட்கார்ந்திருப்பா போய் பாரு...” என்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டார்.

சுப்பிரமணியத்தைப் பொறுத்தவரை மகன் இறப்புக்கு மருமகளின் ஜாதகம்தான் காரணம் என்றிருந்தார். எப்படியாவது அவளை வீட்டைவிட்டு துரத்திவிட வேண்டும் என்றிருந்த நேரத்தில் தாத்தாவின் சொத்து பேரனுக்கும் அவன் குடும்பத்துக்கும் மட்டுமே சேரும் என்று வக்கீல் சொன்ன தகவல் வாயை அடைக்க வைத்ததுஅவள் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை அதுவும் கணவனைப் பிரிந்து அவள் மொட்டையாக இருப்பதைப் பார்க்கும்போதெல்லாம் மகனை விழுங்கி விட்டாள் என்று அவள் மேல் வெறுப்புதான் மண்டியது.

“குளம் குட்டைன்னு விழாமல் இந்த வீடுதான் கெதின்னு கிடைக்கிறான்னா அவளுக்கு போக்கிடம் இல்லன்னுதானே அர்த்தம்? திரும்பவும் அவளைப் போட்டு வைய வேண்டாமே? அவளைக் கஷ்டப்படுத்த வேண்டாமே?” என்று கணவனை சமாதானப் படுத்திவைத்தாள் கற்பகம்.இருக்கட்டும்... எல்லாம் கொஞ்ச நாள்ல மாறிடும். அவளைப் பாத்தாலே ஒவ்வாமை அவருக்கு. ஆனாலும் வாரிசுன்னு பார்த்தா அவளும் இந்த வீட்டிற்கு உரிமைக்காரிதானே?

சேர்த்து வைத்த சொத்தை எல்லாம் செத்துப் போனதுக்கு அப்புறம் சுருட்டிக்கிட்டா போகப்போறோம். மனுஷனுக்கு கொஞ்சம் கூட அறிவில்ல... என்று மனதிற்குள் அவரை குறைபடாத நாளில்லை கற்பகம்.ஜோசியரைக் கூப்பிட்டு மருமகள் ருதுவான தேதியைக் கொடுத்து ஜாதகம் பார்க்கச் சொன்னபோது அவள் மறுப்பேதும் சொல்லாமல் கைகூப்பி அமர்ந்திருந்தாள்.

“சருகுகள் உதிராமல் இருக்கும் நிலையில், பச்சை இலை உதிருவதும், பட்டுப் போன மரம் மறுபடி துளிர்ப்பதும் அவனின் விளையாட்டுதான். தொடக்கம் என்று ஒன்று இருந்தால் அதற்கு கண்டிப்பாக முடிவு என்று ஒன்று இருக்கும். இங்கே முடிவு முன்னால் வந்திருக்கிறது. அதிலிருந்து தொடக்கம் ஆரம்பிக்கப் போகிறது...” என்று சூசகமாக ஏதோ சொல்லிவிட்டு கிளம்பினார் ஜோசியர்.

அன்றோடு மகன் இறந்து முப்பது நாள் முடிந்தது. செய்ய வேண்டிய சடங்கெல்லாம் செய்து முடித்துவிட்டு, மருமகளின் கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றவேண்டாம்    என்றாள்   கற்பகம். ஊர் மக்களிடம்  “பச்ச மண்ணுங்க... அவன் கட்டின தாலியாவது அவகூட இருக்கட்டுமே...” என்றாள்.“அப்படின்னா?’’“கொஞ்ச நாள் போன உடனே அவளுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கலாம்னு இருக்கேன். அதுவரைக்கும் அவ கழுத்துல அது இருக்கட்டும்...” கற்பகம் சொன்ன அடுத்த நொடி சுப்பிரமணியத்தின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

அன்று இரவு குடலைப் புரட்டிக் கொண்டு வாந்தி எடுத்தாள் ராணி. சாப்பிட்டது ஒத்துக் கொள்ளவில்லை என்று இவர்கள் எண்ணிக் கொண்டிருக்க, காலையில் மயங்கிக் கிடந்தவளை டாக்டரை அழைத்துக் காட்டிய போது அந்தச் செய்தியைச் சொன்னார் டாக்டர்.“உங்களுக்கு பேரப் பிள்ளை பிறக்கப் போகிறது....” என்று சொன்ன மறுகணம், “அப்பனை முழுங்கிட்டு வாரிசு வந்திருக்கா?” என்று கடுகடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு வெளியேறினார் சுப்பிரமணி.

அடுத்த நாள் காலையில் பழ வண்டி வாசலில் வந்து நிற்க, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளம் என்று விதவிதமாய் வாங்கியவர் பப்பாளிப் பழத்தைத் தவிர்த்தார். “மருமக உண்டாகி இருக்கா... இது மட்டும் வேணாம்...” என்று சொல்லிவிட்டு,  “ஏம்பா இந்த குங்குமப்பூ எங்கே கிடைக்கும் என்று தெரியுமா... காசு கொடுக்கிறேன் வாங்கிட்டு வந்து கொடுக்குறீயா?” என்று கேட்டவரை தூணுக்குப் பின்னால் நின்று ஆச்சரியத்தோடு பார்த்தாள் கற்பகம்.

வாழவே வேண்டாம், தற்கொலைதான் ஒரே வழி என்றிருந்த ராணி தன் கணவனே தன் வயிற்றில் வந்து பிறக்கப் போவதாய் மாமியார் சொல்லவும் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள்.

வாழ்வுதான் தீர்வு என்கிறபோது தற்கொலை எப்படி தீர்வாக முடியும்? தேடாமல் இருப்பதும் தொலைந்து போவதும் ஒன்றுதான்.. காதல் தேடல் எனில் தேடுவதுதான் வாழ்க்கை... அவளுக்கோ ஓ வென கத்தவேண்டும்போல தோன்றுகிறது... ம்கூம், ஆசைக்குக்கூட இனி அழக்கூடாது. கதிரின் வாரிசைப் பெற்றெடுக்க வேண்டும். அப்பாவைப்போல பிள்ளையையும் ராணுவ வீரனாக்க வேண்டும்.“அத்தை பசிக்குது, சாப்பிட ஏதாவது கொடுங்களேன்...”“இதோ...” நிறைந்த மனதோடு சமையல்கட்டை நோக்கி ஓடினாள் கற்பகம்.    

- டெய்சி மாறன்