அரண்மனை குடும்பம் - 54ஐம்பதடி ஆழ பள்ளத்தில் ரத்த விளாராகக் கிடந்த மூன்று பேரையும் பார்த்த ரத்திக்கு கொஞ்சம் திக்கென்றது. யார் இவர்கள்... இறந்து விட்டார்களா இல்லை உயிரோடு இருக்கிறார்களா..? இங்கே வந்து எப்படி விழுந்தார்கள்... இவர்களை எதற்காக சாமியார் தன்னைப் பார்க்கும்படி செய்துள்ளார் என்கிற கேள்விகளோடு திரும்பி வந்தவளை ஒரு மென்னகையோடு பார்த்தார் சாமியார்.“ஜீ... யார் அவங்க..? ஏன் இப்படி கிடக்கறாங்க... உயிரோட..?” என்று ரத்தி கேட்டு முடிக்கு முன்பே -“உயிரோடதான் இருக்காங்க... ஆனா, இப்படியே விட்டுட்டா சில மணி நேரத்துல இறந்துடுவாங்க. அவங்கள காப்பாத்தணும்... காப்பாத்துவோமா..?” நறுக்காகக் கேட்டார் சாமியார்.

“நிச்சயமா... உயிருக்கு போராட்றவங்கள காப்பாத்தறதுதானே ஜி மனுஷங்களோட கடமை?”

“சரியா சொன்னே... நீ கூட இப்ப அப்படி போராட்றவதான்...” என்று சாமியார் முத்தாய்ப்பாக சொல்லவும் ரத்திக்கு சுருக்கென்றது.“ஸ்வாமிஜி... நான் இப்ப சாவோட மட்டுமில்ல, வாழ்க்கைக்கே போராடிகிட்டு இருக்கேன். என் வாழ்க்கை தலை கீழா மாறிப்போச்சு... நான் இப்ப இருக்கற நிலைக்கு செத்துட்றது எவ்வளவோ மேல்னு தோணுது...” எனும்போது ரத்தியின் விழிகள் கலங்கிவிட்டன.

“உன் கட்டம் இப்ப எப்படிப் பட்டதுன்னு எனக்குத் தெரியும் பேட்டி. கவலப்படாதே... எல்லாம் நல்லபடியா மாறும். இப்ப இவங்கள காப்பாத்தறத பத்தி மட்டும் சிந்திப்போம்...”

“இவங்க யார் ஸ்வாமிஜி... இங்க எப்படி வந்தாங்க..?”

“விதி இவங்கள யானை ரூபத்துல துரத்திச்சு... அப்ப இந்த பள்ளத்துக்குள்ள விழுந்து இப்படி ஆயிட்டாங்க... உன் கையால இவங்கள காப்பாத்து. எந்த ஒரு செயலுக்கும் ஒரு பதில் விளைவு உண்டு. உனக்கும் இவங்கதான் பதிலாகப் போறாங்க...”

“அது எப்படி..?”

“பேசறதுக்கான நேரமோ, இடமோ இது இல்ல. முதல்ல இவங்கள காப்பாத்துவோம். உனக்கு என் சிப்பந்தி உதவி செய்வான்...” என்று சாமியார் ரத்தியையும், பங்கஜத்தையும் அழைத்து வந்த அவர் உதவியாளன் ராம்சிங் என்பவனைப் பார்த்தார்.ராம்சிங் வேகமாக அந்த பள்ளத்தில் இறங்கி அவர்கள் இப்போது இருக்கும் நிலையை அறியத் தயாரானான்.
ஓரிடத்தில் பல மீட்டர் நீளமுள்ள நைலான் கயிறு வடமாக சுருண்ட நிலையில் கிடந்தது. ரத்தியும், பங்கஜமும் அந்த கயிறை எடுத்துக் கொண்டு பள்ளத்தின் விளிம்பருகே சென்று எட்டிப் பார்த்தனர்.

ராம்சிங் அவர்களைத் தொட்டுப் பார்த்து காயங்களை கவனித்தான். பின் அந்த பள்ளத்தில் எந்தப் பக்கம் புதர்களின்றி மேலே செல்ல தோதாக உள்ளது என்பதைப் பார்த்து அந்தப் பக்கமாய் வந்து நின்று அங்கிருந்து கயிற்றின் நுனியை தன்னை நோக்கி போடச் சொன்னான்.அடுத்த சில நிமிடங்களில் ஒவ்வொருவர் உடம்பும் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் பங்கஜமும் ரத்தியும் அந்த உடல்களை தங்கள் சக்தியைத் திரட்டி மேலே இழுத்தனர்.

மேலே இழுக்கப்படும் போதே மூவரிடமும் மயக்கம் தெளிந்து விட்டது. ஆனாலும் எலும்பு முறிவால் உண்டான வலியில் கத்தினர். மாரப்ப வாத்திக்கு காலில் எலும்பு முறிவு, நிற்கமுடியாத நிலை. போதி முத்துவுக்கு கையில். ஜல்லிக்கு மட்டும் எலும்பு முறிவுகள் இல்லை - ஆனாலும் தோள் பட்டையில் சதை பிசகி ரத்தம் கசிந்து கொண்டிருந்தது...
மேலே வந்துவிட்ட நிலையில் மாரப்ப வாத்தி அரைக் கண் திறந்து முதலில் பார்த்தது பூபால தாஸ் சாமியாரைத்தான்!

வெண்ணிற தவ ஆடையில் கண்களில் கருணை மின்னத் தெரிந்த அவரைப் பார்க்கவும் வாத்தியிடம் ஒரு சிலிர்ப்பு.“சாமி நீங்களா..?” என்று தரையில் கிடந்த நிலையில் வாத்தி கைகளைக் கூப்பி வணங்க முயன்றார். “நான் எவ்வளவோ சொன்னேன், நீ கேக்கல... இப்ப பாத்தியா..?”  சாமியார் திருப்பிக் கேட்கவும் வாத்தியின் கண்களில் கண்ணீர்.“ஆமா சாமி... நான் எல்லார் கண்ணையும் கட்றவன். ஆனா, விதி நேத்து என் கண்ணை கைக்கெடிகார வடிவத்துல கட்டிடுச்சி!

அதுல பேட்டரி தீந்து போய் நின்னுடிச்சி. ஆனா, அது ஓடிக்கிட்டிருக்கறதா நினைச்சு தப்பான நேரத்துல என்னையும் அறியாம புறப்பட்டேன். என் விதி கிட்ட நானும் சிக்கிட்டேன்...”“இனியாவது நேர்வழியில வாழப் பார்... இந்தப் பொண்ணு உனக்கு எல்லா உதவியும் செய்வா...” என்ற சாமியார், ‘‘பேட்டி... இவங்கள உன் பங்களாவுக்கு கூட்டிகிட்டு போ. உன் கூடப் பிறந்தவங்களா நினைச்சு எல்லா உதவியும் செய். புறப்படு...” என்றார்.சாமியார் அப்படிச் சொல்லவும் ரத்தியிடம் சற்று தயக்கம். தான், வந்த விஷயத்தை பேசாதது ஒரு புறம் இடித்தது.

“என்ன பேட்டி... என்ன தயக்கம்..? உன் நிலை எனக்கு தெரியும். இப்ப நீ செய்யப்போறதெல்லாம் பரிகாரங்கள். போகப் போக உனக்கு எல்லாம் புரியும்... எல்லாமும் சரியாகும். ம்... புறப்படு...”
சாமியாரின் பூடகமான பேச்சைத் தொடர்ந்து ராம்சிங் மாரப்ப வாத்தியை தன் தோளில் தூக்கிப் போட்டுக்கொள்ள, மற்ற இருவரும் மெல்ல நடக்க முயல, அவர்கள் மூவருக்குமே தன் கையில் இருந்து மூன்று வாழைப்பழங்களை எடுத்து தன் கையாலேயே உரித்தும் கொடுத்து சாப்பிடச் சொன்னார் சாமியார். அது அவரின் அருட் சக்தியைக் கடத்தும் விதம் என்பது மாரப்ப வாத்திக்கும் நன்றாகத் தெரியும்.

அதை பிரசாதம் போல சாப்பிட்ட வாத்தி, ராம்சிங் தோள் மேல் கிடந்த நிலையில் சாமியாரைப் பார்த்து கண்ணில் நீர் மல்க கும்பிட்டார்.சாமியார் முகத்தில் ஒரு மென்னகை!வழுக்குப் பாறையில் இருந்து அப்படியே மேலேறும் சேர்வராயன் மலையின் ஒற்றையடிப்பாதை மேல் குலசேகர ராஜாவும், மூர்த்தியும் நடந்தபடி இருந்தனர். குலசேகர ராஜாவால் ஓரளவுக்கு மேல் நடக்க முடியவில்லை. அங்கங்கே பாறை மேல் உட்கார்ந்து பெருமூச்சு விட்டார். அப்போதெல்லாம் மூர்த்தி, போதிமுத்துவின் செல்போனுக்கு முயற்சி செய்தபடி இருந்தான்.

ரிங்டோன் மிக இளைப்பாக சில இடங்களில் கேட்டது. சில இடங்களில் டவர் கிடைக்காமல் திரையில் அதற்கான சிக்னலே கண்ணில் படாது போனது.“பாஸ்... விட்டுவிட்டுதான் சிக்னலே கிடைக்குது. சிக்னல் கிடைச்சாதான் அவங்கள பாக்கவே முடியும். பாருங்க... எல்லா பக்கமும் ஒரே மாதிரி இருக்கு. நாமும் இப்ப எங்க இருக்கோம்னே தெரியல...” என்றான்.
“பேசாம ஃபாரஸ்ட் ஆபீசுக்கு போய் அங்க இருந்து ஃபாரஸ்டரை கூட்டிகிட்டு வந்திருக்கலாமோ?”

“அவங்களால இவங்க விழுந்து கிடக்கற பள்ளத்தை கண்டு பிடிச்சிடலாம். இவங்கள தேடி நாம எதுக்கு வந்தோம்னு ஒரு கேள்விய அவர் கேப்பாரே..? அப்புறம் போலீஸ் கேஸால்ல போயிரும்...”“ஆமாமா... சனியன தேடிப்போய் நாமளே பிடிச்சிக்க சொன்ன மாதிரி ஆயிடும். நான் ஒருத்தன்... மலப்புல ஔறிட்டேன்...” என்று தன் தலையில் செல்லமாய் தட்டிக் கொண்டார்.

பின் திரும்ப எழுந்து மேலே ஏறத் தொடங்கினர். சற்று நேரத்தில் வாகனங்கள் செல்லும் சப்தம் காதில் கேட்டது. ஏற்காடு நோக்கி மேலேறும் தார்ச் சாலை வளைவு ஒரு நூறு மீட்டர் தொலைவில் கண்ணில் பட்டது.

“யாராவது தெரிஞ்சவன் இப்ப என்ன இந்த கோலத்துல இங்க பார்த்தா நான் தொலஞ்சேன்...” என்று சாலைமேல் செல்லும் காரைப் பார்த்து சடைத்துக் கொண்ட குலசேகர ராஜா, “மூர்த்தி... இவங்கள இந்த மலைக் காட்டுல கண்டுபிடிக்க முடியும்னு நீ நம்பறியா?” என்று ஒரு பாறைமேல் அமர்ந்தபடியே நம்பிக்கையின்றிக் கேட்டார்.“எனக்கும் சந்தேகமாதான் இருக்கு பாஸ்... இருந்தாலும் வந்துட்டோம். இன்னும் கொஞ்ச தூரம் போய்ப் பார்ப்போம் பாஸ்...”“இந்த மாரப்ப வாத்திக்கு இந்த உலகத்துல வேற இடமே கிடைக்கலியா... இப்படியா இந்த மலைல வந்து உக்காந்துக்குவான்... ம்...” என்று சடைத்துக்கொண்டே திரும்ப மேலே ஏறத் தொடங்கினர்.

ஓரிடத்தில் உடும்பு ஒன்று பாறை ஒன்றின் மேல் தன்முன் இரு கால்களை மட்டும் உயர்த்தி, தன் இரட்டைப்பிளவு நாக்கையும் சில அங்குலங்கள் முன் நீட்டி ஒரு மிரட்டு மிரட்டியது.
அதைப் பார்க்கவும் ஒரு இனம்புரியாத அச்சமும் ஏற்பட்டு பின் அடங்கியது. பல இடங்களில் முட்செடிகளில் பேண்ட்டின் பாகங்கள் சிக்கிக் கொள்ளவும், அதை எடுத்து விட்டு தொடர்வதும் பெரும்பாடாக இருந்தது.கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது மணி ஒன்பதைக் கடந்து விட்டிருந்தது. பனிமூட்டம் விலகி வெய்யிலும் காயத் தொடங்க கழுத்து, கன்னம் என்று எல்லா பாகங்களிலும் வியர்வைப் புள்ளிகள் தோன்றி மண் புழுக்கள் போல நெளிந்து ஓடத் தொடங்கின.

மூர்த்தி இடை இடையே செல்போனில் முயற்சித்தபடியேதான் நடந்தான். நல்ல வேளையாக ஓரிடத்தில் பதில் ரிங் டோன் சப்தம் சற்று அருகில் இருந்து கேட்டது.
“பாஸ்... சத்தம் கேட்குது பாஸ்... இங்கதான் எங்கையோ கிடக்கறாங்க...” என்று மூர்த்தியும் சற்று உற்சாகமானான். குலசேகர ராஜாவிடமும் அப்பாடா என்கிற பெருமூச்சு.
“பாரு... பாரு... செத்துக் கெடக்கப் போறாங்க. அப்புறம் நாம இவ்வளவு தூரம் வந்தும் பிரயோஜனமில்லாம போயிடப் போகுது...” என்று முணுமுணுத்தார்.

மூர்த்தியும் சப்தம் வந்த திசை நோக்கிச் சென்று அவர்கள் கிடந்த பள்ளத்தையும் கண்டுபிடித்து கீழே பார்த்தான். பள்ளத்தின் ஒரு மூலையில் இருந்து இலையும் தழையும் மூடிக்கிடக்க செல்போனின் ஒலி மட்டும் கேட்டது. உள்ளே அவர்கள் இல்லாத வெறுமை ஆச்சரிய மூட்டியது.“பாஸ்... செல் மட்டும் உள்ள கிடக்கு! ஆனா, அவங்கள காணோம்..!” என்றபடியே பள்ளத்தின் ஒரு பாகத்தைப் பார்த்தான். அந்தப் பக்கமாக கயிறு கட்டி அவர்களை மேலே இழுத்த தடயங்கள் தெரிந்தன.

“யாரோ வந்து காப்பாத்தி தூக்கிட்டு போயிட்ட மாதிரி தெரியுது பாஸ்...” என்று மூர்த்தி சொல்லச் சொல்லவே குலசேகர ராஜாவும் அவனருகில் வந்து பள்ளத்தையும், அந்தப் பக்கத்தையும் பார்த்து முடித்து ஒரு பெருமூச்சும் விட்டார்.

‘‘இப்ப என்ன பாஸ் பண்றது?”

“என்ன பண்றது... திரும்பிப் போக வேண்டியதுதான்!”“யார் வந்து காப்பாத்தியிருப்பாங்க..? போதிமுத்து நமக்கு போன் பண்ணி சொன்ன மாதிரி, வேற யாருக்காவதும் சொல்லியிருப்பானோ?”
“என்ன எழவோ... இந்த பில்லக்கா பசங்களுக்காக நான் கிடந்து கஷ்டப்படணும்னு இருக்கு பார்... சரி சரி நாம திரும்பி நடப்போம்...”“ஒருவேளை ஃபாரஸ்ட் ஆட்கள் கூட இந்தப் பக்கம் ரெய்டு வரும்போது பாத்து காப்பாத்தியிருக்கலாம்...”“சரி... இனி இவனுங்கள பத்தி யோசிக்கறதுல அர்த்தமில்ல... இவனுங்க பொழச்சி எழுந்து வரதுக்கும் நாளாகும்... நாம அடுத்த கட்டத்தைப் பத்தி யோசிக்க வேண்டியதுதான்...” என்ற குலசேகரராஜா அப்போதே ரத்தியைப் பற்றி யோசிக்கத் தொடங்கி விட்டார்!

பங்களாவுக்குள் நுழைந்த மூன்று பேரையும் பார்த்த நாச்சிமுத்துவிடம் விடைப்பு.“யார் பங்கஜம் இவங்க..?” என்று கேட்க பங்கஜமும் அவனிடம் நடந்ததைச் சொல்லி முடித்தாள்.
“சாமி சொல்லி அனுப்பியிருக்கார்னா நிச்சயம் அதுல அர்த்தமிருக்கும்...” என்று சொன்ன நாச்சிமுத்துவிடம் ரத்தியும், “டாக்டரை அழைத்து வரமுடியுமா?” என்று கேட்டாள்.
“இதோ... இப்பவே போய் கூட்டிகிட்டு வரேம்மா...” என்று அவனும் வெளி நோக்கி ஓடினான்.மூவரையும் ஒரு அறையில் படுக்க வைத்திருந்தாள் ரத்தி.

பங்கஜம் ஒரு ஈரத்துணியால் ரத்த ஒழுக்கை எல்லாம் துடைத்து சுத்தம் செய்தபடி இருக்க, அவள் கை படும் போதெல்லாம் அவர்களிடம் வலியின் அலறல்.அவர்கள் மூவரையும் ரத்தியும், தியாவும் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தனர். தியா வரையில் அவர்கள் மிகவும் பரிதாபமாகத் தெரிந்தனர். மாரப்ப வாத்தியும் அவர்களைப் பார்த்தான். தியாவை அவனுக்கு அந்த நிலையிலும் மிகவும் பிடித்துப் போனது.“பாப்பா... உன் பேர் என்ன?” என்று நடுங்கும் குரலில் கேட்டான். இரண்டு முறைக்கு மேல் கேட்ட பிறகே ‘‘தியா...’’ என்றாள்.“தாயி உன் பேரு?” ரத்தியைப் பார்த்தும் கேட்டான்.

“ரத்தி...”
“நீ... வடக்கத்தி பொண்ணா தாயி..?”
“அ... ஆமா...”
“தமிழும் பேசுறியே...”
“கத்துகிட்டேன்...”

“நான்லாம் பெரும்பாவி... இருந்தாலும் கொஞ்சம் புண்ணியமும் பண்ணியிருக்கேன் போல... அதான் சாமி உன் உருவத்துல வந்து எங்கள காப்பாத்திட்டாரு. நீ நூறு வருசம் பூவும் பொட்டுமா நல்லா இருக்கணும் தாயி...”“நீங்க என்ன பண்றீங்கண்ணே... அந்த காட்டுப்பக்கம் உங்களுக்கென்ன வேலை..?”“அதாம்மா... உங்களுக்கு தான் காடு. ஆனா, அதுதான் எனக்கு வீடு. நான் யாருன்னு தெரிஞ்சா நீ பயந்துடுவே. வேண்டாம் விட்று... என்னாலதான் இவனுங்களுக்கும் இப்ப கஷ்டம். லட்சம் கோடிக்குன்னு ஆசைப்பட்டாலே சிக்கல்தான்...”
மாரப்ப வாத்தியிடம் பொதுவாய் ஒரு புலம்பல். அதைக் கேட்டு ஜல்லியும், போதிமுத்துவும் கூட நெளிந்தனர்.

உள்ளே இப்படி பேச்சு ஓடிக் கொண்டிருக்க வெளியே பங்களா காம்பவுண்டு வாசலுக்கு அப்பால் ஒரு குரங்கு குல்லாய் தரித்திருந்த ஒருவன் உட்புறமாய்ப் பார்த்தபடியே குலசேகர ராஜாவுக்கு போன் செய்து, “அய்யா... யார்னு தெரியல... ரத்தக் காயங்களோட மூணு பேர் இப்ப பங்களாவுக்குள்ள இருக்காங்க.  இந்த வட நாட்டுப் பொண்ணுதான் போய்
கூட்டிகிட்டு வந்துருக்கு. நாச்சிமுத்துவும் வேகமா வெளிய போயிருக்கான்...” என்று சொல்லி முடித்தான்!

(தொடரும்)

மண்ணாங்கட்டியாரின் கேள்விக்கு கனபாடிகள் தனக்குத் தெரிந்த பதிலைக் கூறத் தொடங்கினார்.“தனக்கான உயிர் மூச்சை பிரிச்சு அதை இன்னொரு உடம்புக்குள்ள புகுத்தி அந்த உடம்பை உயிப்பிக்கச் செய்து பின் அந்த உடல் மூலமா நடமாட்றதுங்கற விஷயங்கள் வேதத்துலயோ இல்ல புராணங்கள்லயோ எனக்குத் தெரிஞ்சு இல்ல. சங்கர சரிதைல ஆதிசங்கரர் கூடுவிட்டு கூடு பாஞ்சிருக்கார். ஆனா, சர்ப்ப சம்பந்தமான விஷயங்கள் நிறையவே உண்டு.

ஈரேழு பதினான்கு உலகங்கள்னு ஒரு வரிசை உண்டு. அதல, விதல, சுதல, தலாதல, மகாதல, பாதாள, ரஸாதலன்னு கீழ ஏழு லோகங்கள்; பூ, புவர், சுவர், மஹர், ஜனோ, தபோ, சத்யலோக என்று மேல ஏழு லோகங்கள்... இதே போல மனுஷ்ய, தேவ, அசுர, கந்தர்வ, யட்ச, வானர, நாக இனம்னும் ஏழு இனம் உண்டு. அதுல நாக இனத்தைச் சார்ந்தவாளால மனுஷரூபமும் எடுக்க முடியும்கறது அவாளுக்கான விசேஷ சக்தி.

மகாபாரதத்து அபிமன்யுவோட பேரன் பரீட்சித்துங்கற ராஜாவை அப்படித்தான் தட்சகன்கற நாக இனத்தவன் தன் பாம்பு உருவத்துல வந்து பூமாலைல ஒளிஞ்சிருந்து, அந்த பூமாலையை பரீட்சித்து கழுத்துல போட்டப்ப, கழுத்து பாகத்தைக் கடிச்சு அதனால விஷம் பாய்ஞ்சு பரீட்சித்து இறந்ததா புராணக் கதை உண்டு.சொல்லப்போனா நாக சம்பந்தமில்லாத புராணமே இல்லைன்னு சொல்லலாம்.

வானர சம்பந்தம் ராமாயணத்தோட சரி, யட்ச, கந்தர்வ சம்பந்தம் மகாபாரதத்தோட சரி, அசுர சம்பந்தங்களும் சில புராணங்களோட சரி, நாக சம்பந்தம் மட்டும் எல்லா வேத, இதிகாச, புராணங்கள்லயும் இருக்கு.அது மட்டுமில்ல... எந்த தெய்வத்தோட சிலா ரூபமும் நாக தொடர்பில்லாம இல்லை. விஷ்ணுன்னா ஆதிசேஷன், சிவன்னா வாசுகி, அம்பாள்னா கார்க்கோடகி, விநாயகர்னா பூணூல் வடிவத்துல அனந்தன், முருகன்னா காலடில குளிகன்னு நாகங்கள் இவர்களோட சேர்ந்தே இருக்கு. நாம இந்த தெய்வங்களை வணங்கும்போது இந்த நாகங்களையும் சேர்த்தே வணங்கறோம்...”என்று கனபாடிகள் தனக்குத் தெரிந்த தகவல் சகலத்தையும் சொல்லி முடித்தார்.

“அய்யரே! கனபாடிகள்ங்கற பட்டத்துக்கு பொருத்தமா சர்ப்பங்களைப் பற்றி தெரிஞ்ச அவ்வளவையும் சொல்லிட்டீங்க. எவ்வளவோ உயிரினங்கள் இருந்தாலும், எல்லா தெய்வங்கள்கிட்டயும் சர்ப்பங்கள் மட்டும் தொடர்போட இருக்க நுட்பமான காரணம் ஒண்ணு இருக்கு. அதை யோசிச்சு பார்த்திருக்கீங்களா?” மண்ணாங்கட்டியார் சர்ப்பங்கள் குறித்த அடுத்த கேள்வியைக் கேட்டார். ஆனால், கனபாடிகளிடம் பதிலில்லை. “எனக்குத் தெரியல சித்தரே... நீங்களே சொல்லிடுங்க...” என்றார்.

“உயிரணுவோட மூல வடிவம்தான் சர்ப்பம். கால், கை, காது, முட்டி, புட்டம், பிரத்யேகமா வயிறு, முதுகுன்னு எந்த பாகங்களும் இல்லாத ஒரு குழலுடம்புதான் சர்ப்பம்னும் சொல்லலாம். இது அசைஞ்சா மொத்த உடம்பும் அசையும்.ஒரு சர்ப்பத்தை நாம் பார்க்கும்போது நாம் நம்மோட மூல வடிவத்தையே பார்க்கிறோம்... அதை வணங்கும்போது நாம் நம்மையே வணங்கிக்கறோம். இதனால நாம வேற பிரம்மம் வேற இல்லங்கற ஒரு ஞான சித்தி தூண்டப்படுது!அப்படி தூண்டப்படணும்கறதுக்காகவே இறைரூபங்களோட சர்ப்பங்கள் சம்பந்தம் கொண்டிருக்கு...
அடுத்து நான் இப்ப சொல்லப் போற விஷயம்தான் ரொம்ப சூட்சுமமானது...” என்று பீடிகை போட்டார் மண்ணாங்கட்டியார்.

இந்திரா செளந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி