கற்றதும் பெற்றதும்!



மஞ்சு வாரியர்... மலையாள சினிமாவின் பெருமை! ‘அசுரனி’ல் இவருடைய நடிப்பு மனதுக்குள் அப்படியே பத்திரமாக இருக்கும்வேளையில் ‘துணிவு’டன் வந்துள்ளார். மலையாள சேச்சிக்கு தமிழ் எப்படி வரும் என்று யோசிப்பதற்குள் தமிழில் பொளந்துகட்ட ஆரம்பித்தார்.

‘துணிவு’ அனுபவம் எப்படி இருந்தது?

முற்றிலும் புது அனுபவம். எப்படி சொல்கிறேன் என்றால்,  இயக்குநர் வினோத், ஹீரோ அஜித் ஆகியோருடன் இப்போதுதான் முதன் முறையாகச் சேர்ந்து படம் செய்திருக்கிறேன்.
அதே சமயம்  என்னுடைய கரியரில் சீரியஸ்  ஆக்‌ஷன் படத்தில் நடித்ததும் இதுவே முதன் முறை. இதற்கு முன்பு ஆக்‌ஷன் படத்தில் நடித்திருந்தாலும் இப்படியொரு ஆக்‌ஷன் படம் பண்ணியதில்லை.

அருமையான, திறமையான டீமோடு ஒர்க் பண்ணியது ரொம்வே பிடித்திருந்தது. அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. சினிமாவைக் குறித்து மட்டுமல்ல, பர்சனலாகவும் நிறைய கற்றுக் கொண்டேன்.

அஜித்திடம் கற்றது?

மேக்கப் இல்லாமல் நேச்சுரலாக இருப்பார். சீப்பு இல்லாமல் கையால் தலை கோதியதுதான் ஞாபகத்துல இருக்கு. அஜித் சார் எல்லோரிடமும் அன்பாகவும், மரியாதையாகவும் பழகுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது எவ்வளவு உண்மை என்பதை அஜித் சாரை நேரில் சந்தித்த பிறகுதான் தெரிந்தது.அவரைப்பற்றி கேள்விப்பட்டதைவிட நேரில் சந்திக்கும்போது பல மடங்கு அன்பாகப் பழகுவார் என்பதைத் தெரிந்து கொண்டேன். என்னிடம் பழகியதை மட்டும் வைத்துச் சொல்லவில்லை. என்னைச்சுற்றி இருப்பவர்களிடமும் அவர் அப்படித்தான் பழகினார்.  

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், மனித நேயம் மிக்க, மனிதர்களை மதித்து நடக்கத் தெரிந்த நபராக அவரைப் பார்க்கிறேன்.அவரைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பை மட்டும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து செயலிலும் அவரது அன்பை வெளிப்படுத்தி, மற்றவர்களைக் கவர்ந்துவிடுகிறார். உள்ளே ஒன்று, வெளியே ஒன்று என இரண்டு முகங்கள் இல்லாதவர்.

இந்தக் குணத்தைப் பார்த்து பிரமித்துவிட்டேன். அவரைப் பார்த்து நிறைய கற்றுக்கொள்ளவும் தொடங்கியிருக்கிறேன். அவரைப் போலவே என்னுடைய  வாழ்க்கையில் நானும் நடந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.

‘துணிவு’ படத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பணம் மிகமிக அவசியம்தான். ஆனால், பணமே வாழ்க்கை கிடையாது. இதைத்தான் படம் உணர்த்துகிறது. ரசிகர்களும் படத்தை அதே வகையில்தான் புரிந்துகொண்டு ப்ளாக்பஸ்டராக மாற்றியிருக்கிறார்கள்.

இயக்குநர் வினோத் ?

இதற்கு முன்பு வினோத் சாரின் படங்களை ரசித்துப் பார்த்திருக்கிறேன். அப்படி இருக்கும்போது எனக்கு வினோத் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது  ஆச்சர்யமாக இருந்தது. வினோத் செட்டுக்குள் வந்துவிட்டால் படத்தைத் தவிர வேறு எதையும் யோசிக்கவே மாட்டார் என்பதுபோல்தான் அவரின் நடவடிக்கை இருக்கும். எதைப் பேசினாலும், படத்தைப் பற்றியும், காட்சிகளைப் பற்றியும்தான் இருக்கும்.

படத்தைத் தொடாமல் அல்லது தவிர்த்துவிட்டு அவர் பேசி நான் கேட்டதே இல்லை. அதைப் பார்க்கும்போது, அவர் எந்தளவு ஒரு படைப்பின் மீது கவனம்  செலுத்துகிறார் என்பது தெரிந்தது.
இன்னொரு விஷயம் - கொஞ்சமாகத்தான் பேசுவார். அதுவும் படத்தை சார்ந்துதான் இருக்கும். அவரோடு படத்தில் நானும் பங்களிப்பு செய்தது சந்தோஷமாக இருக்கிறது.

‘துணிவு’ டீமில் உங்களைக் கவர்ந்த அம்சங்கள் என்ன?

பொதுவாக, என்னுடைய படப்பிடிப்பு அனுபவம் என்னவென்றால், சிங்கிள் ஷெட்யூலாகத்தான் பெரும்பாலான படப்பிடிப்பு நடக்கும்.மலையாளப் படங்களின் படப்பிடிப்பு அப்படித்தான் நடக்கும். ஆனால், ‘துணிவு’ அப்படியில்லை. எனக்கு 2 நாள் ஒர்க் இருந்தால், அடுத்த 2 வாரங்களுக்கு  எந்த ஒர்க்கும் இருக்காது.

திரும்ப 2 நாள் ஒர்க் இருக்கும். அதன்பிறகு ஒரு மாதத்துக்கு எதுவும் இருக்காது. இதனால், டீமில் எல்லோரையும் பார்த்து ஹாய் சொல்வதற்குள், என்னுடைய போர்ஷன் முடிந்துவிடும்! அதனால் பழகுவதற்கும், அண்டர்ஸ்டாண்டிங்கிற்கு வருவதற்குமே கொஞ்சம் டைம் எடுத்துக் கொண்டேன்.ஆனால், ரொம்ப அழகான, ஸ்வீட்டான டீம் அது. என்னுடைய கேள்விகள் அனைத்துக்கும் வினோத்தும், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவும் பொறுமையாக பதில் சொல்வார்கள்.

தாய்லாந்து ஷூட்டிங் அனுபவங்கள்..?

தாய்லாந்து படப்பிடிப்பை பொறுத்தவரை, நிறைய ஆக்‌ஷன் காட்சிகள்தான் படமாக்கப்பட்டன. அது ரொம்பவே சவாலாக இருந்தது. அதேசமயம், அங்கே  நிறைய புதுப் புது விஷயங்களையும் கற்றுக்கொண்டேன். பொதுவாகவே, இந்தப்படத்தைப் பொறுத்தவரை தினம் தினம் ஒவ்வொன்றுமே எனக்கு புது அனுபவமாகத்தான் இருந்தது. நிறைய கற்றுக் கொள்ளவும் வாய்ப்பாக இருந்தது. உடல் உழைப்பு அதிகமாக இருந்தாலும், மிகவும் கஷ்டப்பட்டு நடித்தாலும், எல்லாருமே ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று  நினைக்காமல், அர்ப்பணிப்புடன் அவ்வளவு உழைத்தார்கள்.

படத்தில் துப்பாக்கியெல்லாம் பயன்படுத்தினீர்களே... பயிற்சி எடுத்தீர்களா?

உண்மையைச் சொல்லணும்னா எனக்கு  துப்பாக்கியை எப்படி பிடிக்க வேண்டும் என்றுகூடத் தெரியாது. அஜித் சார் கிட்ட போய், ‘சார் இந்த துப்பாக்கியை  எப்படி  பிடிக்கணும்’ என்றெல்லாம் கேட்பேன். ஏனெனில், கண்மணி கேரக்டர் துப்பாக்கியை லாவகமாகக் கையாளும் கேரக்டர். எனவே, அந்த பாடி லேங்வேஜ் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எப்படி துப்பாக்கியைப் பிடிக்க வேண்டும் என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன்.அதற்கு அஜித் சார்தான் சரியான  நபர். ஏனெனில், அவருக்கு ஆக்‌ஷனோ, ஸ்டைலோ சர்வ சாதாரணமாக வரக்கூடிய ஒன்று அல்லவா!

அஜித் படம் என்றாலே பிரியாணி வாசம் தூக்கும். உணவு விஷயத்தில் நீங்கள் எப்படி?

என்னுடைய ஃபேவரைட் ஃபுட் என்று எதுவும் இருந்ததில்லை. விதவிதமான, வித்தியாசமான உணவுகளை அதிகம் விரும்பிச் சாப்பிட வேண்டும் என்று  நினைப்பேன். அதிலும் படப்பிடிப்புக்காக எந்த  ஊர் சென்றாலும், அங்குள்ள  பாரம்பரிய  உணவுகளை  ருசி பார்க்க   நினைப்பேன். அதுல  எனக்கு பிடித்த மாதிரியான ஒரு ஃபுட் கண்டிப்பாக  இருக்கும். அதை ரசித்து, சுவைத்து சாப்பிடுவேன்.

உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு பிடித்த மூன்று நபர்கள்..?

அம்மா, அப்பா, அண்ணன்.

சமூக வலைத்தளங்களில் வரும் ட்ரோல் குறித்து?

ட்ரோல் பண்ணாதீங்கனு சொல்லமாட்டேன். யாரையும் புண்படுத்தாமல் பண்ணினால் ரசிக்கலாம். ட்ரோல் பண்ணுகிறவர்களின் சென்ஸ் ஆஃப் ஹியூ மர் எனக்கு பிடிக்கும்.

அடுத்து என்ன படம் பண்ணுகிறீர்கள்?

மலையாளத்துல ஒரு படம் சைன் பண்ணியுள்ளேன். ஜனவரி இறுதியில் தொடங்குகிறது. அறிமுக இயக்குநர் ராஜேஷ்  இயக்குகிறார். மலையாள சினிமா உலகில் மிகவும் பிரபலமாக இருக்கும் கிரி கங்காதரன் இந்தப் படத்தை ஒளிப்பதிவு  செய்து தயாரிக்கிறார். இன்ட்ரஸ்ட்டிங்கான கதைக் களம் அது. இப்பவே அதைப்பற்றி  பேசி அதன் மீதுள்ள ஆர்வத்தைக் குறைக்க விரும்பல.

விஜய் படம் எப்போது?

இந்தக் கேள்வி வரவில்லையே என்று யோசித்தேன். விஜய் சாருடன் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

எஸ்.ராஜா