ரஞ்சிதமே ரஞ்சிதமே... மனோரஞ்சிதப் பூவும், புஷ்பா செம்மரமும் சிப்பிப்பாறை நாயும், காங்ேகயம் பொலிகாளையும்...



ஐம்பது அறுபதுக்கும் மேல் இருப்பார்கள். வேட்டி, சட்டை போட்ட ஆண்கள், சேலை, ரவிக்கை அணிந்த பெண்கள் மட்டுமல்ல; ஜீன்ஸ், சுடிதார், மிடி லெக்கின்ஸ் அணிந்த இளைஞிகளும் கூட்டம் கூட்டமாக அந்தப் பண்ணைக்குள் நடக்கிறார்கள். அது ஆர்கானிக் எனப்படும் இயற்கை விவசாயப் பண்ணை. அவர்களுக்கு ஒவ்வொரு செடி, கொடி, மரமாக அறிமுகப்படுத்திக் கொண்டே செல்கிறார் ஒருவர்.

‘‘இது பட்டர் ஃப்ரூட். கொடைக்கானல்  மாதிரியான இடங்களில் எல்லாம் இன்னும் நல்லா புஷ்டியா வரும். பாருங்க... இந்த வெயிலுக்கு  கருகிக்கருகி வருது. கருகுது, கஷ்டப்படுது. திரும்ப வருது. இதுக்கு நாலு வயசாச்சு. இதே கொடைக்கானல்ல இருந்திருந்தால நல்லா காய்விட்டு, பழம் தந்து பலன் தந்திருக்கும்.அந்தந்த மரம் அந்தந்த மண்ணில் வரணும்ங்கிறதுதான் கான்செப்ட். இந்த கிளைமேட்டுக்கு வச்சா ஈல்டு கம்மியாத்தான் இருக்கும். நம்ம மண்ணுக்கு முருங்கை மரம், வேப்பமரம், மத்தி மரம் போன்றவை வச்சா நல்லா வரும்!

இது பாக்கு மரம். ஹைபிரிட் வந்துடுச்சு. முந்தியெல்லாம் பாக்கு மரம்ன்னா வழுக்குமரம் ஏறுவதுதான் நினைவுக்கு வரும். அப்படி பெரிய பெரிய மரங்களா இருக்கும். இப்ப எல்லாம் அப்படி இல்லை. ஹைபிரிட்லயே இண்டர்மங்களான்னு ஒரு வெரைட்டி வந்துடுச்சு. சின்னப்பசங்க கூட நின்னுட்டே பறிக்கலாம். இதோ, இதை வெண்தேக்குன்னு சொல்லுவாங்க. ரொம்ப ஃபாஸ்ட்டா வரும். துமில். இது பர்னிச்சருக்கு நல்லா யூஸ் ஆகும்!

இது ரெண்டும் நாட்டு நாவல் மரம். அது இலுப்பை மரம். அப்படியே அதோ... அங்கே அதிக வாசனை தரக்கூடிய பூ உள்ள மரம்... வாங்க இப்ப பார்க்கலாம்..!’’
அவரைப் பின்தொடர்கிறார்கள். புதர்கள், சில மரங்கள் கடந்த பின்பு ஒரு மரத்தின் முன்பு நின்று, ‘ஆஹா, ஒரே ஒரு பூ மட்டும் உங்களுக்காகப் பூத்திருக்கு. இந்தப் பூவின் பெயர் என்ன சொல்லுங்க பார்க்கலாம்!’’ கூட்டத்தைப் பார்த்துக் கேட்கிறார்.

யாரோ ஒரு பெண், ‘‘செண்பகப்பூ!’’ என்கிறார். ‘‘இல்லை. பாட்டனி நேம் சொல்லுங்க!’’ என்கிறார். மறுபடி ஒரு குரல் ஒலிக்கிறது. ‘‘மனோரஞ்சிதப்பூ!’’ என்றதும் கேள்வி கேட்டவர் முகத்தில் பிரகாசம். ‘‘ஆமா. இது மனோரஞ்சிதப்பூ. இதைப்பத்தி நிறைய மூடநம்பிக்கை இருக்கு. பல பேர் கதை உடுவாங்க, இந்த மனோரஞ்சிதப்பூ வச்சிருந்தா பாம்பு வந்துடும்னு. அதெல்லாம் வராது. பாருங்க பக்கத்து வீட்ல எல்லாம் குடியிருக்காங்க. அப்படி பாம்பு வந்திருந்தா சும்மாயிருப்பாங்களா?

தாழம்பூ வாசம் வருது. அதுல பூ நாகம் இருக்குன்னு எல்லாம் சொல்லுவாங்க. அதுபோல இந்த பூவுக்கும் கட்டுக்கதை விட்டிருக்காங்க. இந்த பூமரம் அடர்த்தியா வரும். புதர் மண்டிக்கிடக்கும். அதுல எங்காவது பாம்பு பார்த்திருப்பாங்க. அதனால இந்தப்பூவை வச்சா பாம்பு வரும்ன்னு கட்டுக்கதை விட்டிருப்பாங்க. மனோரஞ்சிதம் ரொம்ப ஃபேமஸ். ‘ரஞ்சிதமே, ரஞ்சிதமே...’ பாட்டு வைரல் இல்லையா? இது மனோரஞ்சிதம். மனோ என்றால் மனம். இது வச்சிருக்கிறவங்க மனம் ரம்மியமா இருக்கும். இந்தப்பூவை வீட்ல வச்சீங்கன்னா மனநிலை சரியில்லாதவங்களுக்குக் கூட மனம் சரியாயிடும். இந்தப்பூவை அவங்க பெட்டுக்கு பக்கத்துல வச்சுட்டாக்கூட கொஞ்ச நாள்ல சரியாயிடுவாங்க.

நம்ம முன்னோர்கள் தமிழில் பெயர்களை கரெக்ட்டாத்தான் வச்சிருக்காங்க. நம்மதான் ஆங்கிலத்தை சேர்த்துட்டோம். எப்படி உளுந்து வடையை டோனட்னு சொல்றோமோ, பருப்பு வடைய ஆமை வடைன்னு சொல்றோமோ அப்படி. அதனாலயே நம் மரம், செடி, கொடி, பூக்களோட பெயர்களின் மகத்துவம் கூட நமக்குப் புரிவதில்லை..!’’ என்று நீண்டதொரு விளக்கம் சொல்கிறார். வந்திருந்தவர்களில் சிலர் குறிப்பெடுத்துக் கொள்கிறார்கள்.

‘‘பட்டைகள் முதலை செதில் மாதிரி இருக்கும் இந்த ட்ரீக்குப் பேர் க்ராக்கடைல் பார்க். ‘புஷ்பா’ படத்தில் காட்டறது பெயிண்ட் அடிச்ச மரம். இதுதான் ஒரிஜினல் மரம். இதுக்கு பத்து வயசு ஆச்சு. இப்பதான் முக்கால் அடி சுற்றளவுக்கு வளர்ந்திருக்கு. இது முழுசா வளர்ச்சி பெறுவதற்கு நூறு வருஷம் ஆகும். அதுக்குள்ளே என் பையன், பேரன், கொள்ளுப்பேரன் எல்லாம் வந்துடுவான். நான் இருக்க மாட்டேன். இது ஏன் வச்சிருக்கிறேன்னா நீங்க எல்லாம் இதைப் பார்த்துத் தெரிஞ்சுக்கணும்ன்னுதான்...!’’இப்படியே, முள்சீதாமரம், நாட்டுநாவல், ஸ்டார்ஃப்ரூட், மாம்பழம், வாழைப்பழம், பப்பாளி என விளக்கம் கொடுத்தபடியே செல்கிறார்.

ஏதோ பள்ளி, கல்லூரி, ஆய்வு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்வு அல்ல இது. இன்றைக்கு மக்கள் விவசாயத்தையே மறந்து வருகிறார்கள். அடுத்த தலைமுறைக்கு அதுபற்றிய விழிப்புணர்வு சுத்தமாக மங்கி வருகிறது. கோயமுத்தூர் விவசாயத்திற்கு பெயர் பெற்ற பூமி. அதன் நிமித்தம்தான் அங்கே விவசாயக்கல்லூரி ஆங்கிலேயர் காலத்திலேயே உருவாகி, அது பின்னர் விவசாயப் பல்கலைக்கழகமாக உருவெடுத்தது. அப்படியான மண்ணில் கோயமுத்தூரின் பாரம்பரியமே இயற்கை விவசாயத்தில் அடங்கியுள்ளது என்பதை சுட்டிக்காட்டும் முகமாக இந்த விழா அரங்கேறியது.

கோவையில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து ‘யங் இந்தியன்ஸ்’ உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் சார்பில் 15வது ‘கோவை விழா’ நடைபெற்றது. பொதுவாக இந்த நிகழ்வில் கலை, இலக்கிய, விளையாட்டுப் போட்டிகள், கேளிக்கை விஷயங்கள், ஓவியக்கண்காட்சிகள் போன்றவைதான் நடப்பது வழக்கம்.  இந்த ஆண்டு கூடுதலாக இயற்கை விவசாயம் பற்றிய அறிவை மக்கள் வளர்த்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கோவை சின்னத்தடாகம் அருகே உள்ள இயற்கை விவசாயப்பண்ணையில் மக்களைக் கூட்டிச் சென்று அது எப்படி பராமரிக்கப்படுகிறது என்பதைக் காட்சிப்படுத்தினர். அதில்தான் மேற்படி நிகழ்வு.

இந்தப் பண்ணையின் சொந்தக்காரர் ஜெயப்பிரகாஷ் தனியார் கல்லூரிப் பேராசிரியர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். அவர் தன் பண்ணையில் உள்ள இயற்கை விளைபொருட்களை விளக்கியதோடு, தன் பண்ணையில் வளர்க்கப்படும் கோழி, சிப்பிப்பாறை நாய்க்குட்டிகள் பற்றியெல்லாம் விளக்கினார். காளைகளில் காங்கேயம் காளை, அதுவும் இனவிருத்திக்குப் பயன்படும் பொலிகாளையை (ஒரு டன் எடை) கொண்டு வந்து நிறுத்தியிருந்தார். யானை சைசில் இருந்த அது ரொம்ப சாதுவாகப் பழகியது. குழந்தைகள் கொடுக்கும் மக்காச்சோளக்கதிரைக்கூட வாங்கிச் சாப்பிட்டது.

அதேபோல் இப்போதெல்லாம் நாட்டு விதைகளில் எந்த வகையும் கிடைப்பதில்லை. எல்லாம் ஹைபிரிட்தான். நாற்றுகள்தான். அதையும் விட்டால் பிடி கத்திரிக்காய், பிடி புடலங்காய் என மாறிவிட்டது. அப்படியல்லாமல் ஐடி கம்பெனியில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் கரூரில் செய்யும் விவசாயத்தையும், அதில் இயற்கை விவசாய முறையில் அவர் விதைப்பண்ணையையே உருவாக்கி வைத்திருக்கும் விதத்தையும் காட்சிப்படுத்தி அதையும் அவர் மூலமே விளக்கிப் பேச வைத்திருந்தார்.

‘‘15 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளில் பல நிகழ்ச்சிகளை நானே நடத்தியிருக்கேன்...’’ என்றபடி பேச ஆரம்பித்தார் ஜெயப்பிரகாஷ்.  ‘‘எல்லாமே மாநகரம் சார்ந்ததாகவே நடந்திட்டிருக்கு. மாநகரம் சார்ந்த வரலாறு, பூகோள அமைப்பு, சூழல் என சகலத்தையும் நாங்க அள்ளிக் கொடுத்துட்டுத்தான் இருக்கோம். ஆனா, அந்த மாநகரத்தை விட கிராமங்கள் ரொம்பப் பெரிசு. அதை வரைபடம் போட்டு விளக்க முடியாது இல்லையா? அதனால அந்த மக்களை இந்த கிராமத்திற்கே அழைத்து வந்திருக்கிறோம்.

இங்கே வந்திருக்கிற 60 - 70 பேரும் மாநகரில் வசிக்கிறவர்கள். அவர்களுக்கு இயற்கை விவசாயம்ன்னா என்ன, கீரை, பழங்கள், மரங்கள் சாகுபடி செய்யறதுல என்னவெல்லாம் கஷ்ட நஷ்டங்கள் இருக்கு... இப்படி எல்லாம் தெரிஞ்சிக்கிட்டாங்க. ஏன் இந்த காய்கறி, பழங்கள் வேற மாதிரி இருக்கு. விலை அதிகமா இருக்குனு நாங்க சொல்லிக் கொடுத்திருக்கோம். அதை அவங்களும் தெரிஞ்சுக்கிட்டாங்க. இதன் மூலம் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் விவசாயத்திற்கும், தொழிலுக்கும், வர்த்தகத்திற்கும் ஒரு புரிதல், நட்புறவு ஏற்படும்னு நம்பறோம்!’’ என்றவர் தன் பண்ணையில் உள்ளவற்றை சுருக்கமாக விவரித்தார்.

‘‘இந்தப் பண்ணையில் பாரம்பரியமிக்க மரவகைகள் வளர்க்கறோம். தேக்கு, குமிழ், சந்தனம், மகாகனி, நாகலிங்கம், செம்மரம், புன்னை, மகிழம், மருதாணி, ஈட்டி... இப்படி நிறைய மரங்கள் இருக்கு. இது இயற்கைக்கு அரணாகவும் அழகாகவும் விளங்குகிறது. இதை லாபம் பார்த்து வளர்க்க முடியாது. மரம் வளர்ந்துட்டே இருக்கும். பின்னாடி பார்த்தா புங்க மரம் இருக்கு. அது வளர்ந்துட்டு இருக்கு. நல்ல காற்றைக் கொடுக்கும். இலைதழைகள் உதிரும். அது மண்ணில் மக்கி உரமாகும்.

அடுத்தது பழமரங்கள். சீதாவில் முள்சீதா, மலைசீதா, ராம்சீதான்னு பல வெரைட்டி இருக்கு. நெல்லியில் நாலு வகை இருக்கு. நாவல்ல இயற்கையா வரக்கூடிய ரகமும் இருக்கு. ஹைபிரிட் வெள்ளைக்கலர்ல வர்றதும் இருக்கு. கீரைகள்ல பத்து வகை இருக்கு. நாட்டுப்புதினா, கொத்தமல்லி, வெந்தயம், கோங்கராங்கிற புளிச்ச கீரை, பொன்னாங்கண்ணியில் ஒரு மூணு வகை, கறிவேப்பிலையில் செங்காம்பு,  கரிசலாங்கண்ணி, புதினா, மின்ட்டு... இப்படி பலது இருக்கு.

அது போக தென்னை மரங்கள். அதுதான் வருமானம் தரக்கூடியது. இயற்கை விவசாயம் என்பதால் இதில் வெள்ளைப்பூச்சியே இல்லை. நோய் வந்ததே இல்லை. வருஷத்துக்கு நூறு காய்கள்தான் கொடுக்கும். ஆனா, ஹைபிரிட் முன்னூறு காய்கள் கொடுக்கும். அதேநேரம் பூச்சி, நோய்த்தாக்குதல் பயங்கரமா இருக்கும். அதுக்கு மருந்து அடிச்சு அடிச்சே மனுசன் ஓய்ஞ்சுடுவான். பத்துப் பதினைஞ்சு வருஷத்துக்குள்ளே மரமே விழுந்துடும். தவிர அந்த மருந்தும், ரசாயனமும் நம் உடம்புக்கும் நல்லதல்ல.

இந்த தென்னை அப்படியில்ல. தண்ணி இதுக்குப் பாய்ச்சியே நாலு மாசம் ஆச்சு. மூடாக்குதான் போட்டிருக்கோம். மழைத்தண்ணியிலேயே அது காய்க்குது கோழியோட, மாட்டோட, ஆட்டோட கழிவு அதுக்குப் போறதால உரமே தேவையில்லை. கோழிகளை அடைத்து வளர்ப்பதில்லை. இரவில் மட்டும் கூட்டுக்கு வந்துடும். அந்த முட்டைக்கு நல்ல வரவேற்பு உண்டு. பாரம்பரியமிக்க நாய்கள் வளர்க்கணும். ஆனா, அது நம்மளைக் கடிச்சிடக்கூடாது. வர்றவங்களையும் கடிச்சிடக்கூடாது.

ஏ.சி. ரூம்ல வளர்க்கற பெட் நாயாகவும் இருக்கக்கூடாதுன்னு பார்த்தோம். அதுல தேர்ந்தெடுத்ததுதான் சிப்பிப்பாறை நாய்கள். அது ஆக்ரோஷமா இருக்கும். ரொம்ப சத்தம் போடும். ரொம்ப தொல்லை பண்ணினா மட்டும்தான் கடிக்கும். அதுவும் ஓனர் இருக்கும்போது அது யாரையும் கடிக்காது. இது வேட்டை நாய். பலசாலியானது. அது ஒரு ஜோடி வாங்கினோம். முதல்ல ஒரு குட்டி போட்டது. அடுத்து இப்ப ஒன்பது குட்டி போட்டிருக்கு.

இதப் பார்க்கறதுக்குன்னே பெரிய குழந்தைகள் கூட்டம் வந்துடுது. அவங்க எல்லாம் பொமரேனியன், ஜெர்மன் ஷெப்பர்டு பார்த்து வளர்ந்தவங்க. நாய்னா புஸுபுஸுன்னு இருக்குமே... அதைக் காணோமேங்கிறாங்க. இது நம்ம நாட்டுநாய். வெயில்ல வளர்ற நாய்களுக்கு ரோமம் கம்மியா இருக்கும். இதுவே ஜெர்மன் ஷெப்பர்டு நாய்களுக்கு வெயில் காலத்துல ஈரத்துணி போர்த்துவாங்க. ஏசியில் வைப்பாங்க. அது இதுக்குத் தேவையில்லை எட்டு குட்டி, பத்து குட்டி போடுதுன்னா ஹெல்த்தியா இருந்தால்தானே போட முடியும்..? அதையெல்லாம் குழந்தைகளுக்கும் புரியும்படி சொல்றோம்.

இதேபோலத்தான் விதைகள். கரூர் ரங்கமலை ஃபார்ம்ஸ்ல இருந்து விழாவுக்கு வந்திருக்காங்க. அதாவது கிராம மக்களுக்கே இன்னொரு கிராமத்தில் இருந்து விதைகளைப் பற்றி பாடம் எடுக்க வந்திருக்காங்க. அதுவும் ஒரு நல்ல எக்ஸ்போஷர். நிறைய பேருக்கு நம்ம காங்கேயம் காளைகளைப் பற்றித் தெரிவதில்லை. சட்டுனு அவங்களுக்கு ஜல்லிக்கட்டுக் காளைகள் ஞாபகத்துக்கு வந்துடும். நாட்டு மாடுன்னா முட்டும், உதைக்கும், ரொம்ப கோபமா இருக்கும்னு சும்மா கட்டுக்கதை திரிச்சு விடறாங்க. அப்படியில்லை. பெரிய காளையா இருந்தாலும் எவ்வளவு சாதுவாக இருக்கும்னு மக்களுக்கு உணர்த்தறதுக்கு அதையும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கோம்!’’ என்கிறார் ஜெயப்பிரகாஷ்.  

கா.சு.வேலாயுதன்