இந்தோனேஷியன் யூடியூபர்ஸ்



தென்கிழக்கு ஆசியாவில் வீற்றிருக்கும் முக்கியமான ஒரு நாடு, இந்தோனேஷியா. அடிக்கடி இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் நாடுகளில் இதுவும் ஒன்று. இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இந்நாட்டில் சுமார் 17 ஆயிரம் தீவுகள் இருக்கின்றன. 27 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் இந்த தேசத்தையும் யூடியூப் சேனல்கள் தம்வசமாக்கியிருக்கின்றன. இந்தோனேஷியாவிலிருந்து வெளியாகும் பல யூடியூப் சேனல்கள் ஆசியாவிலேயே முதன்மையான சேனல்களாகத் திகழ்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றிய விவரங்கள் இதோ...

ரிஸிஸ் ஆபிஷியல் (Ricis Official)

இந்தோனேஷியாவின் நம்பர் ஒன் பெண் யூடியூபராக வலம் வரும் ரியா யுனிதாவின் சேனல் இது. ரசிகர்களால் ரியா ரிஸிஸ் என்று அழைக்கப்படுகிறார். பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டே பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் ஒரு உணவகத்தில் வெயிட்டராக வேலைக்குச் சேர்ந்தார். அவருக்கு நடிகையாக வேண்டும் என்பது கனவு. அதனால் பல ஆடிசன்களில் கலந்துகொண்டார். ஆனால், எதிலும் அவர் தேர்வாகவில்லை.

நடிகை கனவைப் போல அவருக்குப் பிடித்த ஒன்று ஸ்குயிஸி என்கிற மென்மையான பொம்மைகள். இந்த வகை பொம்மைகளைச் செய்வதில் ரியா கில்லாடி. நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்ஸ்டாகிராமில் ஒரு பக்கத்தைத் திறந்து, அதில் ஸ்குயிஸி பொம்மைகள் குறித்த வீடியோக்களைப் பகிர்ந்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க, யூடியூப் பக்கம் வந்தார் ரியா. ஸ்குயிஸி பொம்மைகள் செய்வது, பொம்மைகள் குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோக்களைப் பகிர்ந்தார். பிறகு அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், பிரபலங்களுடனான சந்திப்புகள்... என பலதரப்பட்ட வீடியோக்களால் மிளிர்கிறது ரியாவின் சேனல். ஜனவரி 15, 2016-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலை 3.2 கோடிப்பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதுவரை இதில் பதிவிடப்பட்ட வீடியோக்கள் 500 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளன.

ஏஹெச்(AH)

இந்தோனேஷியாவில் மிகப்பிரபலமான யூடியூப் சேனல் இது. பாடகர், நடிகர், பிசின்ஸ்மேன் என பன்முகங்களைக் கொண்ட ஆளுமையான ஆட்டா ஹலிலிண்டார் இந்தச் சேனலை நிர்வகித்து வருகிறார். ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களைப் பெற்றவர்களுக்கு டைமண்ட் ப்ளே பட்டனை வழங்கி கௌரவிப்பது யூடியூப்பின் வழக்கம். அப்படி டைமண்ட் ப்ளே பட்டனைத் தன்வசமாக்கிய முதல் தென்கிழக்கு ஆசியர் இவர்தான்.

யூடியூப் சேனல் மூலம் ஆட்டா அடைந்த பிரபலம் மற்றும் வருமானத்தைப் பார்த்து, தானும் ஒரு நாள் ஆட்டாவைப் போல ஆகவேண்டும் என்பது இந்தோனேஷிய இளைஞர்களின் கனவாக
மாறிவிட்டது. ‘‘அன்பையும், மகிழ்ச்சியையும் பரப்புவதுதான் என் வேலை. அதற்காகவே இந்த யூடியூப் சேனல்’ என்கிற ஆட்டா பாடல்கள், பிராங்க் ஷோக்கள், தன்னிடமுள்ள விலையுயர்ந்த கார்களைப் பற்றிய விவரங்கள், தன் குழந்தையுடனான நிமிடங்கள்...என ஜாலியான வீடியோக்களை இந்தச் சேனலில் பகிர்கிறார். ஜனவரி 26, 2014-ல் தொடங்கப்பட்ட இந்தச் சேனலை 2.97 கோடிப்பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதுவரை இதில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோக்கள் 398 கோடிக்கும் அதிகமான பார்வைகளை அள்ளியுள்ளன.

ஜெஸ் நோ லிமிட் (Jess No Limit)

அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட இந்தோனேஷிய யூடியூப் சேனல்களின் தரவரிசைப் பட்டியலில் மூன்றாம் இடத்திலிருக்கும் சேனல் இது. ஆன்லைன் கேமில் கெத்துகாட்டும் டோபியாஸ் ஜஸ்டின் தான் இந்தச் சேனலின் நிர்வாகி. ஆரம்பப் பள்ளியில் பாடம் படிக்கும்போதே ஆன்லைனில் கேம் ஆட ஆரம்பித்துவிட்டார் ஜஸ்டின். கையில் நிறைய  காசு இருந்தால் தொடர்ந்து 10 மணி நேரம் கூட விளையாடுவார்.

ஆன்லைன் கேமான மொபைல் லெஜண்ட்ஸ் மற்றும் ப்ராங்க் கேமிற்கு பிரத்யேகமான தளமாகத் திகழ்கிறது இந்தச் சேனல். ஆன்லைனில் கேமில் உள்ள விதவிதமான டெக்னிக்கு களைச் சொல்லி அசத்துகிறார் ஜஸ்டின். இதுபோக சந்தையில் புதிதாக இறங்கியிருக்கும் கேம் குறித்த விவரங்களையும், விமர்சனங்களையும் பகிர்கிறார். செப்டம்பர் 7, 2017-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலை 2.47 கோடிப்பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதுவரை இதில் வெளியாகியிருக்கும் வீடியோக்கள் 303 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன.

ரான்ஸ் என்டர்டெயின்மென்ட் (Rans Entertainment)

ர ஃபி அகமது - நகிதா ஸ்லாவினா என்ற தம்பதியினரின் சேனல் இது. கணவனும், மனைவியும் சேர்ந்து நடத்தும் யூடியூப் சேனல்களின் பட்டியலில் இந்தோனேஷியாவிலேயே நம்பர் ஒன் சேனல் இது. ஆரம்ப நாட்களில் மேக் அப் குறித்த வீடியோக்களைப் பகிர்ந்தனர். அப்போது யூடியூப் மூலம் பணம் ஈட்ட முடியும் என்பதுகூட இந்த தம்பதியினருக்குத் தெரியாது. சில வீடியோக்கள் பார்வைகளை அள்ள, விளம்பரங்கள் தேடி வந்தன.

பிறகு யூடியூப் சேனல் நடத்துவது மட்டுமே தம்பதியினரின் முழு நேர வேலையாகிவிட்டது. இந்தோனேஷியாவின் ஸ்பெஷல் உணவுகள் மற்றும் சமையல் குறிப்புகளை வீடியோவாக்கி பகிர்ந்தனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது இசை, கேம்ஸ், பயணம், பிராங்க் ஷோ என பல தளங்களில் வெற்றிகரமாக இயங்குகிறது இந்தச் சேனல். டிசம்பர் 27, 2015-ல் தொடங்கப்பட்ட இந்தச் சேனலை 2.38 கோடிப்பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதுவரை இதில் பதிவாகியுள்ள வீடியோக்கள் 554 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளன.

டிரான்ஸ்7 ஆபிஷியல் (TRANS7 OFFICIAL)

இந்தோனேஷியாவில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ‘டிரான்ஸ் மீடியா’வின் சேனல் இது. இதன் சேனல்தான் கடந்த முறை நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தோனேஷியாவில் ஒளிபரப்பியது. ‘டிரான்ஸ் மீடியா’வுக்குச் சொந்தமான சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்வுகளை இந்த யூடியூப் சேனலில் பார்க்கலாம். செய்திகள், இசை நிகழ்ச்சிகள், டாக் ஷோக்கள், குழந்தைகளுக்கான நிகழ்வுகள், ஆவணப்படங்கள் என நல்ல பொழுதுபோக்குத் தளமாகத் திகழ்கிறது இந்தச் சேனல்.

தவிர, ஆயிரம் கோடிக்கும் அதிகமான பார்வைகளை அள்ளிய முதல் இந்தோனேஷிய யூடியூப் சேனல் இதுவே. செப்டம்பர் 4, 2014-ல் தொடங்கப்பட்ட இந்தச் சேனலை 2.29 கோடிப்பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதுவரை இதில் பதிவாகியுள்ள வீடியோக்கள் 1210 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளன.

த.சக்திவேல்