மாயோன் ரதம்
அர்னால்ட், டாம் குரூஸ் என உலக மகா நடிகர்களின் படமாக இருந்தாலும் சினிமா வணிகத்தில் புரமோஷன் என்பது மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெற்றி கரமாக ஓடிய ‘விக்ரம்’ படத்துக்காக கடல் கடந்து சென்று புரமோஷன் செய்தார் கமல். கைமேல் பலனாக படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. அந்த வரிசையில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள ‘மாயோன்’ படத்தை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்க்கும் விதமாக ‘மாயோன் ரதம்’ என்ற பெயரில் மாயோன் உருவச்சிலையை பிரம்மாண்டமாக நிர்மாணித்து அதை தமிழ்நாடு, ஆந்திரா என்று தென் மாநிலங்கள் முழுவதும் மக்கள் பார்வைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளார்.
 ‘‘ ‘Love all; Hate none. Spread positivity’ - இதுதான் ‘மாயோன்’ படத்தின் டேக் லைன். உலகம் முழுவதும் மனிதநேயம் தழைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இது பக்திப் படம் மட்டுமல்ல; நம்முடைய கலாச்சாரம், பாரம்பரியத்தையும் சொல்லும் படமாக இருக்கும். ஆக்ஷன், காமெடி மாதிரி இதுவும் சினிமாவில் புது ஜானராக இருக்கும். டிரெண்ட் செட்டிங் படமாகவும் இருக்கும். இந்தப்படத்துக்குப் பிறகு இந்த ஜானரில் நம்முடைய பழம் பெருமைகளை வெளிப்படுத்தும் படங்களை எடுக்க பலர் முன்வருவார்கள்.
‘மாயோன்’ ரதம் சென்னையிலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, திருவண்ணாமலை, பாண்டிச்சேரி என்று பல இடங்களை அடைந்தபோது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வரவேற்பு படத்துக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது...’’ என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்.‘மாயோன்’ ரதம் தியேட்டர், மால், கோயில், கல்லூரி என முக்கியமான இடங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள இந்தப்படத்தை கிஷோர் இயக்கியுள்ளார். டபுள்மீனிங் புரொடக்ஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். ‘வாட்ச்மேன்’, ‘சைக்கோ’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் இவர்.
எஸ்.ராஜா
|