நிறையும் பிளாஸ்டிக்...பெருகும் கேடு..!
ஜீரோ கார்பன் இலக்கை நோக்கி ஒட்டுமொத்த உலக அரசுகளும் வேகமாகச் செல்ல முனையும் காலம் இது. சமீப காலமாக மாறிவரும் பருவநிலை கோளாறுகள் என்பவை இயற்கை நம் மீது தொடுத்திருக்கும் சுற்றுச்சூழல் போர் என்பதை கடந்த ஆண்டு கிளாஸ்கோ மாநகரில் நடைபெற்ற சர்வதேச சுற்றுச்சூழல் மாநாடு உணரச்செய்தது. அதன் பிறகு சுற்றுச்சுழலைக் காக்க உலக நாடுகள் பெரும் வேகம் காட்டி வருகின்றன. அதிலொன்று பிளாஸ்டிக்கை ஒழிப்பது. ஆனால், பிளாஸ்டிக் உபயோகத்தை முழுமையாக ஒழிப்பது என்பது இன்றைய தேதிக்கு எளிதானது அல்ல. இந்நிலையில் உணவுப்பொருட்கள் பயன்பாட்டிலும் பிளாஸ்டிக் நுழைந்திருப்பதுதான் நிஜமான ஆபத்து.
 *நல்ல பிளாஸ்டிக் எது?
தரமான பிளாஸ்டிக்கை உணவுப்பொருட்களில் பயன்படுத்தினால் நல்லதுதானே என்று சிலர் கேட்கிறார்கள். உண்மையில் நல்ல பிளாஸ்டிக் என்ற ஒன்று இல்லவே இல்லை. பிளாஸ்டிக்கை மோசமானது, மிக மோசமானது என்று மட்டுமே வகைப்படுத்த முடியும். ஒரு லட்சம் சிந்தடிக் கெமிக்கல்கள் பிளாஸ்டிக்கில் உள்ளன. அதில் ஆறாயிரத்தை மட்டுமே இதுவரை ஆய்வு செய்துள்ளார்கள். மீதம் உள்ளவை என்ன வகையான தீமைகளை ஏற்படுத்தும் என யாருக்குமே இன்று வரை தெரியாது. இதுதான் அதிர்ச்சியான உண்மை. சமீபத்தில் மேற்கத்திய நிறுவனம் ஒன்று உலகம் முழுவதும் பொருளாதார நிலையில் ஆரோக்கியமாக உள்ளவர்களின் ரத்த மாதிரியை ஆய்வு செய்தது. அந்த சோதனையில் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் சுமார் 275 வகையான ரசாயனங்கள் கலந்திருக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.
 *எங்கும் பிளாஸ்டிக் எதிலும் பிளாஸ்டிக்!
பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவை வைக்கும்போது பிளாஸ்டிக்கில் உள்ள ‘தாலேட்ஸ்’ எனும் விஷம் உணவோடு கலந்துவிடும். பிளாஸ்டிக் பொருட்கள் தாலேட்ஸ் (Phthalates) இல்லாமல் உருவாக்கப்படுவது இல்லை. இந்த தாலேட்ஸ்தான் பிளாஸ்டிக்கை மென்மையாக்கி அதை இஷ்டப்படி வளைக்க உதவுகிறது. இதில் ஏழு வகை தாலேட்ஸ்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றுமே மிகவும் ஆபத்தானவை.
 *பிளாஸ்டிக் ஆபத்துகள்
தாலேட்ஸ் உள்ள பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதால் ஆண்களுக்கு இயல்புக்கு மீறிய பாலின உறுப்புகள் வளர்ச்சி, ஆண்மைக் குறைவு, குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு அதீத மார்பக வளர்ச்சி, மாதவிலக்குக் கோளாறுகள், கருச்சிதைவு, குறைப்பிரசவம், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும் மிகவும் மட்டரகமான பிளாஸ்டிக்கை உணவுப்பொருட்கள் பேக் செய்ய பயன்படுத்தும்போது பிபிஏ என்ற கெமிக்கல் அதிக அளவில் வெளிவந்து உணவுடன் கலந்துவிடும். தொடர்ச்சியாக பத்து ஆண்டுகளுக்கு மேல் பிளாஸ்டிக் கவரிலோ, பாத்திரங்களிலோ சாப்பிட்டுவந்தால், புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.
 *லஞ்ச் பாக்ஸ் அபாயம்
ஓரளவு மிதமான அல்லது சூடே இல்லாத உணவுப்பொருட்களை பிளாஸ்டிக் டிபன் பாக்ஸில் எடுத்துச்சென்றால்கூட நாட்பட மெல்ல பிளாஸ்டிக்கின் நஞ்சு உணவில் கலக்கும். இதனால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.
*தண்ணீர் பாட்டில் உஷார்
மினரல் வாட்டர் குடித்த பிறகு அந்த பிளாஸ்டிக் பாட்டிலை பத்திரமாக வீட்டுக்குக் கொண்டுவந்து அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் பழக்கம் நம் ஊரில் பலருக்கும் உள்ளது. இது மிகவும் ஆபத்தான செயல். வாட்டர் பாட்டிலின் அடிப்பகுதியில் முக்கோண வடிவ அச்சினுள் எண்1 என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதுபோலவே பாட்டிலின் லேபிளிலும் ‘ஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி எறியுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றை ஒருமுறை பயன்படுத்திய பிறகு டி.இ.எச்.பி (Di(2-Ethylhexyl) Phthalate (DEHP)) என்ற ரசாயனம் வெளியாகும். இது நீருடன் கலக்கும்போது அலர்ஜி முதல் புற்றுநோய் வரை எண்ணற்ற கேடுகளை உருவாக்கும்.
*ஹோட்டல் பார்சலில் என்ன பிரச்சனை?
பொதுவாக, 40 மைக்ரான்கள் கொண்ட பிளாஸ்டிக் கவர்கள் ஓரளவு தரமானவை என்று சொல்கிறார்கள். அதில்கூட சூடான பொருட்களை பார்சல் கட்டக்கூடாது. ஆனால், ஹோட்டல்களில் ஆவி பறக்க, சுடு சோறு, இட்லி, தோசை, சப்பாத்தி, சாம்பார், ரசம், பொரியல் என பேக் செய்கிறார்கள். இந்த பிளாஸ்டிக் கவரில் உள்ள டயாக்சின் (Dioxin) என்ற ரசாயனம் உணவோடு சூடாகக் கலக்கும்போது வயிற்றுக்கோளாறு, பசியின்மை, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும். தொடர்ந்து ஹோட்டல் உணவையே பார்சல் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் மலட்டுத்தன்மை, புற்றுநோய்கூட ஏற்படும்.
*பீஸ்பீனால் ரிஸ்க்
உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் பிளாஸ்டிக் பைகளில் பிஸ்பீனால்-ஏ (Bisphenol-A) என்ற வேதிப்பொருள் கலந்திருக்கும். இது மூளை மற்றும் இனப் பெருக்க மண்டலங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பிஸ்பீனால்-A பற்றிய விரிவான ஆராய்ச்சியை கனடா மேற்கொண்டு, பீஸ்பீனால் ஏ-யை பிளாஸ்டிக்கில் சேர்க்கத் தடை விதித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் சாம்பார் தூள் முதல் சகலமும் பீஸ்பினால் கலந்த பிளாஸ்டிக் பைகளில் அடைத்துத்தான் விற்கிறார்கள்.
ஜூஸ், பால் மற்றும் பன்னீர் போன்ற பொருட்களை அடைத்து வைத்திருக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு பாலியோலெஃபின்ஸ் (Polyolefins) என்று பெயர். இதில் பென்சோஃபீனோன் (Benzophenone) என்கிற ரசாயனம் இருக்கிறது. இது பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தைப் பாதித்து, மாதவிடாய் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
கண்ணாடிப் பாத்திரங்கள்தான் உணவைப் பதப்படுத்திவைக்க சிறந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. எனினும் சில நிறுவனங்கள் அதிக அளவில் செறிவூட்டப்பட்ட உணவுப்பொருட்களைச் சேமித்து வைக்கும்பொருட்டு கண்ணாடிப் பாத்திரங்களில் காரீயம் (led) கலக்கிறார்கள். இந்த காரீயம் உணவுப்பொருளில் கலந்து உடலில் சேரும்போது வாந்தி, கல்லீரல் பிரச்னை, சிறுநீரகக் கோளாறுகள் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, கண்ணாடியிலும் கவனம் தேவை. சிறந்த பிராண்டட் கண்ணாடிப் பாத்திரங்கள் வாங்குவதே நல்லது.
*சில மாற்றுவழிகள்
குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை வாங்கும்போது பி.பி.ஏ ஃப்ரீ (BPA Free), தாலேட்ஸ் ஃப்ரீ (Phthalates free) மற்றும் பி.வி.சி ஃப்ரீ (P.V.C free) என்று குறிப்பிடப்பட்டுள்ளதா எனக் கவனிக்க வேண்டும். அவனில் (Oven) சமைக்க பிளாஸ்டிக்கை அறவே பயன்படுத்தாதீர்கள். எவ்வளவு பெரிய பிராண்ட் தயாரிப்பாக இருந்தாலும் அவனில் தவிர்த்துவிடுங்கள். கண்ணாடிப் பாத்திரங்கள் அதற்கு ஏற்றவை. வீட்டுக்கு வாங்கும் தண்ணீர் கேனின் எண் 2, 4, 5 என அச்சிடப் பட்டிருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை நெருப்பிலிருந்தும், சூரிய ஒளியில் இருந்தும் தள்ளியே வைக்கவேண்டும். பிளாஸ்டிக்குக்குப் பதில் கண்ணாடி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பீங்கான், மண் பாத்திரம், இரும்புப் பாத்திரம், செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.
பிளாஸ்டிக் பொருட்களின் அடிப்பாகத்தில் முக்கோண வடிவ அச்சில் 1 முதல் 7 வரை எண்கள் அச்சிட்டிருப்பார்கள். அதன் விவரம் இதோ…
எண் 1: Polyethylene terephtalate (PETE or PET) - தண்ணீர், சோடா, குளிர்பானங்கள் வரும் பாட்டில்கள்.
எண் 2: High density polyethylene (HDPE) - பால் கேன், டிடர்ஜென்ட், பழச்சாறு பாட்டில்கள்.
எண் 3: Polyvinyl chloride (PVC) உணவை மூட உதவுபவை, சமையல் எண்ணெய் பாக்கெட் மற்றும் பாட்டில்கள்.
எண் 4: Low density polyethylene (LDPE) - மளிகைப் பொருட்கள், அழுத்திப் பிழியக்கூடிய பாட்டில், உணவை மூடும் கவர், பிரெட் கவர்
எண் 5: Polypropylene - தயிர் கப், யோகர்ட் கப், தண்ணீர் பாட்டில் (cloudy design), மருந்து, கெட்ச் அப், சிரப் பாட்டில்கள், ஸ்ட்ரா.
எண் 6: Polystyrene/Styrofoam - மருந்து பாட்டில்கள், மின்விளக்கு ஸ்விட்ச்.
எண் 7: இதில் எண் 1 முதல் 6 வரை அனைத்து பிளாஸ்டிக்குகளும் பயன்படுத்தி இருப்பார்கள். சிடி, கணினி பகுதிகள், பேபி பாட்டில் போன்றவை இந்த பிளாஸ்டிக்கால் தயாராகின்றன. இதில் எந்த உணவுப்பொருட்களையும் சேமித்து வைக்கக்கூடாது.
உணவுப் பொருள் பயன்பாட்டில் எந்த எண் பெஸ்ட்?
குறைந்த மோசமான பிளாஸ்டிக் எண்கள் - 2, 4, 5 குறைந்த மோசமான பிளாஸ்டிக்; ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது - 1 மிகவும் மோசமான பிளாஸ்டிக் எண்கள் - 3, 6, 7
இளங்கோ கிருஷ்ணன்
|