MUST WATCH



மதர்

‘நெட்பிளிக்ஸை’ அதிரவைத்திருக்கும் ஜப்பானிய மொழிப்படம், ‘மதர்’ .பொறுப்பற்ற சிங்கிள் மதராக வலம் வருகிறாள் அகிகோ. அவளுக்கு சுகேய் என்று ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். அகிகோ எந்த வேலைக்கும் போவதில்லை. தன்னுடை பிறந்த வீட்டில் வாங்கிய கடனைத் திருப்பித் தராததால் அகிகோவுக்குப் பணம் கொடுக்க யாருமே இல்லை. கண்ணில் படுகிற ஆண்களை வசமாக்கி, அவர்களுடன் உறவுகொண்டு தன் குடும்பச் செலவை சமாளிக்கிறாள். அம்மாவின் பொறுப்பற்ற செயல்களால் சுகேய் பெரிதும் பாதிக்கப்படுகிறான். இருந்தாலும் அவன் அம்மாவை விட்டுப் போவதில்லை.

இந்நிலையில் தன்னுடைய காதலன் ஒருவனால் கர்ப்பமாகிறாள் அகிகோ. அவள் கர்ப்பமடைந்தது தெரிந்ததும் அகிகோவிடம் இருந்து நழுவி விடுகிறான் அந்தக் காதலன். தங்க இடம் இல்லை. வயிற்றில் ஒரு குழந்தை மற்றும் ஐந்து வயது மகனை அகிகோ எப்படி வளர்த்தாள்? சுகேய் அம்மாவுடனே இருந்தானா? இல்லை ஓடிவிட்டானா? என்பதே நெகிழ்ச்சி திரைக்கதை.

மொழியைத் தாண்டி பார்வையாளனுக்குப் புரியும்படி எளிமையாகப் படமாக்கப்பட்டிருப்பது சிறப்பு. அம்மாவாக நடித்தவர் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். படத்தின் இயக்குனர் தட்சுகி ஒமோரி.  

ஜன கண மன

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, விவாதத்தைக் கிளப்பிய மலையாளப் படம், ‘ஜன கண மன’. ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.
தீயில் எரிக்கப்பட்ட நிலையில் பேராசிரியை சபாவின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. வன்புணர்வு செய்யப்பட்டு, தீயில் எரிக்கப்பட்டிருக்கிறார் சபா என்ற செய்தி காட்டுத்தீ போல பரவுகிறது. சமூக வலைத்தளங்கள் கொந்தளிக்கிறது.  

மாணவர்களின் போராட்டம் வெடிக்கிறது. காவல்துறைக்கு அழுத்தம் அதிகமாகிறது. இந்த வழக்கை விசாரிக்க ஏசிபி சஜ்ஜன் நியமிக்கப்படுகிறார். அவர் குற்றவாளிகளைப் பிடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்கிறார். அத்துடன் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்து ஹீரோவாகிறார் சஜ்ஜன். இந்த வழக்கை கையில் எடுக்கிறார் வழக்கறிஞர் அரவிந்த்.

உண்மையில் சபாவுக்கு நிகழ்ந்தது என்ன? உண்மையான குற்றவாளிகள் யார்? சஜ்ஜன் யார்? போன்ற விவரங்களை அவர் வெளிக்கொண்டு வர,  ஆரம்பிக்கிறது அரசியல் திரைக்கதை. கடந்த சில வருடங்களில் வெளியானவற்றில் முக்கியமான அரசியல் படமாக மிளிர்கிறது இந்தப் படம். அரவிந்தாக பிருத்விராஜும், சஜ்ஜனாக சூரஜ்ஜும் கலக்கியிருக்கிறார்கள். படத்தின் இயக்குனர் டிஜோ ஜோஸ் அந்தோணி.  

தொகுப்பு: த.சக்திவேல்