கைச்சிலம்பாட்டத்தில் கலக்கும் வழக்கறிஞர்



‘‘சிலம்பாட்டம்  பத்தி எல்ேலாருக்கும் தெரியும். அது நம் தமிழர்களின் தற்காப்புக் கலை.  ஆனா, இது கால் சிலம்பை கைகளில் ஏந்தி அம்மனை நெஞ்சுல நிறுத்தி ஆடுகிற  கிராமியக்கலை. சிலம்பாட்டத்துல இருந்து வேறுபடுத்திக் காட்டவே நம்  முன்னோர்கள் இந்த ஆட்டத்தை கைச்சிலம்பாட்டம்னு குறிப்பிட்டாங்க. பொதுவா,  இந்த ஆட்டம் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட  வடமாவட்டங்கள்ல அதிகமா நிகழ்த்தப்படுது. நாங்க தலைமுறை தலைமுறையா  கைச்சிலம்பாட்டம் ஆடிட்டு இருக்கோம்…’’ - கைச்சிலம்பை கைகளில் ஏந்தியபடி  பேசுகிறார் புஷ்பராஜ் எனும் ராஜ். வழக்கறிஞராகப் பணி செய்து கொண்டே கைச்சிலம்பாட்டக்  கலையில் கலக்கிக் கொண்டிருக்கும் இளைஞர் இவர். சமீபத்தில் நடந்த ‘விக்ரம்’  பட ஆடியோ ரிலீஸில் இவரின் கைச்சிலம்பாட்டம் நிகழ்த்தப்பட்டு பலரின்  பாராட்டைப் பெற்றது.  

‘‘கிராமியக் கலைகள்ல கரகாட்டம், காவடியாட்டம்,  புரவியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம், மலை  மக்கள் நடனங்கள்னு பல வகைகள் இருக்கு. இதுல கைச்சிலம்பாட்டம் முக்கியமானது.  கைகள்ல சிலம்பை பிடிச்சுக்கிட்டு கால்ல சலங்கையுடன் ஆடுகிற ஆட்டம் இது.  அப்ப மனசுல அம்மனை நினைச்சுகிட்டு வணங்கி, போற்றி இந்த ஆட்டத்தை  ஆடணும். இப்ப கோயில் திருவிழாக்கள், காதணி விழாக்கள், குலதெய்வ  வழிபாடுகள்னு பல இடங்கள்ல ஆடப்படுது. இதுதவிர அரசு சார்ந்த நிகழ்ச்சிகள்,  வெளிநாட்டு நிகழச்சிகள்னு நிறைய இடங்களுக்குப் போயும் நிகழ்த்தப்படுது.

இந்த  கைச்சிலம்பாட்டக் கலை ராஜராஜ சோழன் காலத்திலேயே இருந்ததற்கான குறிப்புகள்  இருக்கு. இன்னொரு குறிப்புல கண்ணகி காலில் போட்ட சிலம்பு என்பதால் அதை  கையில் எடுத்து ஆடப்படுதுனு சொல்றாங்க. இப்படி கைச்சிலம்பாட்டம் பத்தி  நிறைய வரலாறுகள் இருக்குது...’’ என்கிற ராஜ் உற்சாகமாகத் தொடர்ந்தார். ‘‘எங்களுக்கு  சொந்த ஊர் காஞ்சிபுரம். இந்த ஊரைப் பொறுத்தவரை பல வீடுகள்ல பூஜைப்  பொருட்களுடன் கைச்சிலம்பும் வச்சிருப்பாங்க. குறிப்பா, பிள்ளையார்பாளையம்  ஏரியா பக்கம் போனீங்கனா ஒவ்வொரு வீட்டுலயும் கைச்சிலம்பு இருக்கும். அவங்களே கோயில் திருவிழாக்கள்ல வந்து ஆடுவாங்க. அந்தளவுக்கு  கைச்சிலம்பாட்டக் கலை மீது பிரியம் உள்ளவங்க.

நான் டி.ஏ.னு சொல்லப்படுற  டிப்ளமோ இன் ஆர்ட்ஸ் எஜுகேஷன் கோர்ஸ் முடிச்சிட்டு, பிறகு சட்டம் படிச்சேன். இப்ப  காஞ்சிபுரம் கோர்ட்ல வழக்கறிஞரா இருக்கேன். இந்த கைச்சிலம்பாட்டக்  கலைக்குள் வந்தது அப்பா வடிவேலைப் பார்த்துதான். அப்பா தன்னுடைய பத்து  வயசுலயே இந்தக் கலைக்குள் வந்துட்டார். தாத்தாவும் கைச்சிலம்பாட்டக்  கலைஞர்தான். ஆனா, தாத்தாவும் பாட்டியும் அப்பாவின் சின்ன வயசுலயே  இறந்துட்டாங்க.

அதனால, அப்பா அவரின் பாட்டி வீட்டுல வளர்ந்திருக்கார்.  இந்தக் கலையின் மீது ஆர்வமாகி கத்துக்கிட்டார். படிப்படியா வளர்ந்து நல்ல  தொழில்முறைக் கலைஞரா மாறினார். தமிழக அரசின் கலை நன்மணி விருது உள்பட பல்வேறு  விருதுகளைப் பெற்றார். கடந்த ஐம்பதாண்டு காலமா இந்தக் கலையை ஈடுபாட்டுடன்  செய்திட்டு வர்றார். இப்ப காஞ்சிபுரம் மாவட்ட பம்பை, உடுக்கை,  கைச்சிலம்பாட்டக் கலைஞர் சங்கத்தின் செயல்தலைவரா இருக்கார்.

அதனால,  எனக்கும் இந்தக் கலை ரொம்பப் பிடிச்சிருந்தது. என்னை அறியாமலே நானும்  ஆடினேன். ஒரு ஆத்ம திருப்தி கிடைச்சது. அப்படியே இந்தக் கலையின் மீது  ஆர்வம் வந்திடுச்சு. தொடர்ந்து அப்பாகிட்ட நிறைய கத்துக்கிட்டேன். அவரின்  அனுபவத்தையும், ஆசீர்வாதத்தையும் பெற்றேன். பிறகு, தாண்டவா கலைக்கூடம்னு  ஆரம்பிச்சு பல இடங்கள்ல நிகழ்ச்சிகள் செய்தேன். செய்திட்டும் வர்றேன்.

இதனால, 2008ல் கலை, பண்பாட்டுத் துறை வழங்கிய கலை இளமணி விருது கிடைச்சது.  தமிழக அரசு நடத்தின கலைப்போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடமும், மாநில  அளவில் கைச்சிலம்பாட்டத்தில் தங்கப்பதக்கமும் வாங்கினேன். நான் மட்டுமல்ல, என் அண்ணன்கள், தங்கை என எல்லோருமே  இந்த கைச்சிலம்பாட்டக் கலைக்குள் இருக்கோம்...’’ என கலகலவென பேசுகிற  ராஜ், ‘விக்ரம்’ ஆடியோ நிகழ்வுக்குள் வந்தது பற்றி குறிப்பிட்டார்.  

‘‘‘விக்ரம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுல டான்ஸ் மாஸ்டர் சாண்டி மூலம்  எங்களுக்கு வாய்ப்பு கிடைச்சது. சாண்டி மாஸ்டர் என்னுடைய  கைச்சிலம்பாட்டத்தை காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் நடந்த கோயில்  திருவிழாக்கள்ல பார்த்திருக்கார். பிறகு எங்களைத் தொடர்பு கொண்டு இந்த  வாய்ப்பை வழங்கினார். நாங்க இந்த நிகழ்ச்சியில் வித்தியாசமா பண்ணுவோம்னு  கட்டைக் கூத்து உடையில் கைச்சிலம்பாட்ட நடனத்தை ஆடினோம். நல்ல ெரஸ்பான்ஸ்  கிடைச்சது. கமல் சார் எங்க நிகழ்வைப் பார்த்துட்டு பாராட்டினதா சொன்னாங்க.  சாண்டி மாஸ்டருக்குத்தான் நன்றி சொல்லணும்.

இப்ப நாங்க இந்தத்  தலைமுறையினருக்காக கைச்சிலம்பாட்டக் கலையை வெஸ்டர்ன், ஃபோக், ஹிப்ஹாப்  ஆகியவற்றுடன் சேர்த்து பண்ணினால் எப்படியிருக்கும்னு பயிற்சி செய்திட்டு  இருக்கோம். இதுக்காகவே தாண்டவா கலைக்கூடத்தை தாண்டவா டான்ஸ் ஸ்டூடியோன்னு மாத்தி  வச்சிருக்கோம். இதுல நூறு பேர் பயிற்சி எடுத்திட்டு இருக்காங்க. குறிப்பா,  குழந்தைகள் நிறையப் பேர் பயிற்சி எடுக்குறாங்க. கிராமியக் கலையுடன் சேர்த்தே  இதை கத்துக் கொடுக்குறோம். இதன் நோக்கம் அடுத்த தலைமுறைக்கு இந்தக்  கைச்சிலம்பாட்டக் கலையைக் கடத்து
றதுதான். அதனால, எங்க லோகோவில் ஒரு காலில்  ஷூவும், இன்னொரு காலில் சலங்கையும் கட்டியிருக்கும்படி கிரியேட்  செய்திருக்கோம்.

எங்களுக்கு இந்தக் கலையை வளர்க்க வேண்டிய கடமையும்  பொறுப்பும் இருக்கு. அதனால, அரசுகிட்டயும், பொதுமக்கள்கிட்டயும் எங்களுக்கு  நல்லதொரு மேடை கொடுங்கனு வாய்ப்பு கேட்குறோம்...’’ என ராஜ்  நிறுத்த,   அவரின் தந்தை வடிவேல் நிதானமாகத் தொடர்ந்தார். ‘‘இந்தக் கைச்சிலம்பாட்டம்  பிறந்தது காஞ்சிபுரம்னு சொல்வாங்க. எனக்கு இந்தக் கலை இறைவன் அருளால் பத்து  வயசுலே கிடைச்சது. அப்போதிலிருந்து ஐம்பது ஆண்டுகளாக இந்தக் கலையில்  இருக்கேன். இப்ப என் மகன்களும், மகளும் ஆடுவது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

 இந்த ஆட்டத்தில் பிள்ளையாரில் ஆரம்பித்து எல்லா அம்மன்களையும் சேர்த்து  பாடி ஆடுவோம். பம்பை, உடுக்கை எல்லாம் அடித்து ஆடப்படும் ஆட்டம் இது. நான்  பம்பை அடித்து பாடுவேன். அதற்கேற்ப குழுவினர் ஆடுவார்கள். இதுவரை பல  நிகழ்ச்சிகள் செய்திட்டோம். தமிழக அரசின் கலை, பண்பாட்டுத்துறை மூலமாக அரசு  விழாக்கள்லயும் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கோம். அடுத்த தலைமுறைக்குக்  கடத்துகிற வேலையை என் மகன் செய்திட்டு வர்றான். மகிழ்ச்சியா இருக்கு...’’  என வடிவேல் நெகிழ, ராஜ் தொடர்ந்தார்.

‘‘என்னுடைய லட்சியம் உலக அரங்கில்  இந்த கைச்சிலம்பாட்டக் கலையைக் கொண்டு போகணும். அடுத்து வரும் தலைமுறைக்கு  எடுத்திட்டு போகும்போதுதான் இந்தக் கலை வளரும். அதுக்கு என்னாலான எல்லா  முயற்சிகளும் செய்வேன்’’ என நம்பிக்கையோடு முடித்தார் புஷ்பராஜ்.

ஆர்.சந்திரசேகர்