காதலும் காமெடியாக கவிழும் இது நம்ம ஊர் டைட்டானிக்
டைட்டானிக்... ரீல் மற்றும் ரியல் உலகில் மிகப்பெரும் வரலாறு படைத்த பெயர். அந்த தலைப்புடன் ‘டைட்டானிக்’ படக்குழு ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சிவி குமார் தயாரிப்பில், ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ராகவ் விஜய், கயல் ஆனந்தி, ஆஸ்னா ஜாவேரி, காளி வெங்கட், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம்தான் இந்த ‘டைட்டானிக்’.

‘‘எனக்கு சொந்த ஊரு ஈரோடு. பி.டெக் கெமிக்கல் முடிச்சிருக்கேன். அப்பா இல்ல, அம்மா மட்டும்தான். சின்ன வயதில் இருந்தே நான் இயக்குனர் பாலா சாருடைய தீவிர ரசிகன். அவருடைய ‘சேது’ படம் பார்த்துதான் சினிமா மேல தீராத காதலும், ஆசையும் வந்துச்சு...’’ கடகடவென தன்னைப்பற்றி ரத்தினச் சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டார் இயக்குநர் ஜானகிராமன்.
‘‘சினிமா ஆசையுடன் சென்னை வந்து சேர்ந்தேன். சென்னை எப்படி என்னை ஏத்துக்கிட்டதோ, அதே மாதிரி என்னை சுதா கொங்கரா மேடமும் அவங்களுடைய முதல் படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக ஏத்துக்கிட்டாங்க. அவங்க கூட ‘துரோகி’ படம் முழுக்க வேலை செய்தேன். அவங்க மூலமா பாலா சாருடைய சந்திப்பு கிடைச்சது.
 பாலா சார் கூட சேர்ந்து ‘அவன் இவன்’ படத்திலே வேலை செய்தேன். அடுத்து ‘காதலில் சொதப்புவது எப்படி?’ படத்தில் பாலாஜி மோகன் கூட வேலை. என் நண்பர்தான் அவர். அந்த நேரம்தான் நான் தனியா ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிச்சேன்...’’ என்றவரிடம், ‘‘ஏன் ‘டைட்டானிக்’ என்னும் பெயர்...?’’- எனக் கேட்டதற்கு தொடர்ந்து பதில் அளித்தார்.
‘‘ஆக்ச்சுவலி படத்துக்கு முதல்ல வச்ச சப்டைட்டில் ‘காதலும் கவிழ்ந்து போகும்’. தொடர்ந்து நிறைய மெயின் டைட்டில் யோசிச்சோம். கடைசியில் சிவி குமார் சார் சொன்ன டைட்டில் தான் ‘டைட்டானிக்’. பாமரனையும் படக்கென திரும்பிப் பார்க்க வைக்கும் தலைப்பு இது. மேலும் படத்தினுடைய ஒன்லைனுக்கும் இந்த தலைப்புக்கும் கூட மிகப்பெரிய சம்பந்தம் இருக்கு...’’ என்றவர், படத்தின் கதையைக் குறித்தும் விவரித்தார்.
‘‘ஜாலியான காமெடி காதல் திரைப்படம். உங்க டென்ஷன் எல்லாம் மறந்து வந்து தியேட்டரில் உட்கார்ந்தா போதும். கொஞ்ச நேரம் சிரிச்சு ரிலாக்ஸ் பண்ணிட்டு போகலாம்...’’ என்ற ஜானகிராமனிடம், ‘‘படத்தின் கேரக்டர்கள் பற்றி சொல்லுங்களேன்..?’’ என்றோம். அருகிலிருந்த கலையரசன் தனது கேரக்டரை, தானே விவரித்தார்.
‘‘கொடைக்கானல்... அங்கே ஒரு இன்ஜினியரிங் காலேஜ். அதில் படிக்கிற ஸ்டூடண்ட்ஸ் மற்றும் அவங்களுக்கு நடுவுல நடக்கிற சம்பவங்கள் தான் கதை. அதுல ஒரு பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி நான். முக்கியமா கேரக்டர்களின் பெயர்களைச் சொல்லவே கூடாது. அதை வச்சு ஒரு மிகப்பெரிய திருப்பம் கூட படத்துல இருக்கு. என் கூட காளி வெங்கட் நடிச்சிருக்காரு. கூடவே கயல் ஆனந்தி. இன்னொரு போர்ஷன் வேற ஒரு களத்திலே நடக்கும். அது சஸ்பென்ஸ். ஒரு பெரிய இளம் பட்டாளமே இருக்காங்க...’’என்று கலையரசன் நிறுத்த, ஜானகிராமன் தொடர்ந்தார்.
‘‘படத்தில் காளி வெங்கட் அண்ணாவும், ஜாங்கிரி மதுமிதாவும்தான் ஹீரோ ஹீரோயினுக்கே செம போட்டியான ஜோடியா இருப்பாங்க...’’ என்று சிரித்துக்கொண்டே தொடர்ந்தார் ஜானகிராமன். படத்தில் சினிமாட்டோகிராபி பல்லு, ஆர்ட் டைரக்டர் ராம்பிரசாத், நான் சென்னை வந்த காலம் முதலே என் கூட பயணிச்சிட்டு இருக்கறாங்க. எடிட்டிங் ராதாகிருஷ்ணன் தனபால். மியூசிக் நிவாஸ் கே பிரசன்னா. அத்தனை பேரும் முதல் பட இயக்குனர் அப்படிங்கற எந்த ஃபீலும் தராம டெடிகேஷனா வேலை செய்திருக்காங்க...’’ என்ற ஜானகிராமன் சிறிது இடைவெளி விட, கலையரசன் தொடர்ந்தார்.
‘‘எப்பவுமே சீரியஸான படங்களாகவே நடிச்சுட்டு இருக்கேன். ரியல் லைஃப் எதார்த்தம், காமெடி இந்த மாதிரி படம் செய்யவே மாட்டியான்னு என் ஃபிரண்ட்ஸ் கூட சொல்லிட்டே இருப்பாங்க. அதுக்கு இந்தப் படம் ஒரு நல்ல பதிலா இருக்கும்...’’ என்று நம்பிக்கையுடன் தொடர்ந்தார் கலையரசன். ‘‘ஜானகிராமனை ‘டார்லிங் 2’ படத்தின் போதே தெரியும். அவர் கதைன்னு சொன்ன உடனே காமெடி, காதல், எதார்த்தமா தான் இருக்கணும்னு தோணுச்சு. அப்படியான கதையுடனே வந்தார்.
ஆனந்தி செம டெடிகேஷனான நபர். நாங்களே கூட சில இடங்களில் குளிர் அது இதுன்னு சொன்னா கூட அவங்க பதிலே சொல்லாம ஷாட்டுக்கு ரெடி ஆயிடுவாங்க...’’ என்றார் கலையரசன். ‘‘ ‘டைட்டானிக்,’ ஆடியன்ஸுக்கு என்ன கொடுக்கும்..?’’ என்றவுடன், ‘‘ஜாலியான காதல், காமெடி, ரிலாக்ஸ் திரைப்படம்...’’ என்று கோரசாக சொல்லி முடிக்கிறார்கள் ஜானகிராமனும், கலையரசனும்.
ஷாலினி நியூட்டன்
|