டிஸ்னி பெண்!



கேரளவில் பிறந்து துபாயில் பிசினஸ்வுமனாக இருக்கும் பெண், ரிஸ்வானா. சமூக வலைத்தளங்களில் இவரை ‘டிஸ்னி பெண்’ என்று அழைக்கின்றனர். என்ன காரணம் என்று ரிஸ்வானாவைப் பற்றித் தேடிப்போனால் ஆச்சர்யத்தில் மூழ்குகிறோம். ஆம்; டிஸ்னியின் அனிமேஷன் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் பொம்மைகளாக கிடைக்கின்றன. கடந்த 25 வருடங்களாக டிஸ்னி பொம்மைகளைச் சேகரிப்பதை வாழ்க்கையின் ஒரு பகுதியாக வைத்திருக்கிறார் ரிஸ்வானா.

ஏழு வயதில் இருந்தே இந்த பொம்மை சேகரிக்கும் பழக்கம் அவருக்குத் தொடங்கிவிட்டது. டிஸ்னிலேண்டஸ், டிஸ்னிவேர்ல்டு, பொம்மைக் கடைகள்... என பல இடங்களில் டிஸ்னி பொம்மைகளை வாங்கிக் குவித்திருக்கிறார். இப்போது அவரது வீட்டை 1,350 டிஸ்னி பொம்மைகள் அலங்கரிக்கின்றன. இந்த பொம்மைகளின் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கும். யாரிடமும் இல்லாத பல அரிய டிஸ்னி பொம்மைகள் ரிஸ்வானாவிடம் மட்டுமே இருக்கின்றன. தவிர, அதிக டிஸ்னி பொம்மைகளை வைத்திருக்கும் பெண் என்று ‘லிம்கா’வின் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துவிட்டார் ரிஸ்வானா.

சக்தி