COFFEE TABLE



எவரெஸ்ட்டில் கால் பதித்த ஏழு வயதுச் சிறுமி!

உலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட். 8 ஆயிரத்து 848 மீட்டர் உயரம் கொண்ட இச்சிகரத்தில் ஏறுவதை பலரும் சாகசமாக விரும்பிச் செய்கின்றனர். இதற்கு பெண்களும்
விதிவிலக்கல்ல.

சமீபத்தில் குழந்தைகள் கூட இந்தச் சிகரத்தின் அடிவாரம் வரை சென்று சாதனை படைத்து வருகின்றனர். கடந்த இருவாரங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த ரிதம் மாமனியா என்கிற பத்து வயதுச் சிறுமி பதினோரு நாட்களில் எவரெஸ்ட்டின் பேஸ் கேம்ப் வரை சென்று சாதித்தார். அதாவது, 5 ஆயிரத்து 364 மீட்டர் வரை சென்று வந்தார்.

ஆனால், கடந்த வாரம் பஞ்சாப் ரோபார் நகரைச் சேர்ந்த சான்வி சூட் என்ற 7 வயதுச் சிறுமி இதே பேஸ் கேம்ப்பை ஒன்பது நாட்களில் அடைந்து முத்திரை பதித்துவிட்டுத் திரும்பியுள்ளார். இரண்டாம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுமி அதற்குமேல் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ‘‘இது கடினமாக இருந்தாலும் ஒருநாள் நிச்சயம் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தே தீருவேன்’’ என மழலைக் குரலில் நம்பிக்கை பொங்க சொல்கிறார் சான்வி.

சேலையில் ஸ்கேட்டிங் செய்தவர்!

டிராவல் மற்றும் லைஃப் ஸ்டைலில் ஆர்வமுள்ளவர்கள், அவர்கள் செல்லும் இடங்களில் பார்க்கும் விஷயங்களைப் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம்.

இதே ஆர்வமுள்ள மும்பையைச் சேர்ந்த விஷுவல் ஆர்ட்டிஸ்ட்டான லரிஸ்ஸா டி’சா என்கிற பெண் சமீபத்தில் பதிவிட்ட வீடியோ படுவைரலாகி இருக்கிறது. காரணம், கேரளாவிற்கு பயணம் சென்றவர் அம்மக்களின் பாரம்பரிய உடையான வெள்ளை நிற சேலை அணிந்து கொண்டு சாலையில் ஸ்கேட்டிங் போர்டில் செல்ல, அது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை அம்மணி அப்படியே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, 2 லட்சம் லைக்குகள் சட்டென குவிந்தது. இன்ஸ்டாவில் சுமார் 7 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்டுள்ள லரிஸ்ஸா, ‘‘நான் இதைச் செய்யும்போது நிறைய பேர் ரசித்தனர். சிலர் என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். உண்மையில், நீங்கள் சேலை அணிந்திருக்கும் போது லாங்போர்டு செய்வது எளிதானது அல்ல…’’ எனக் கண்சிமிட்டுகிறார்.

180வது இடத்தில் இந்தியா

சமீபத்தில் அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகமும், கொலம்பியா பல்கலைக்கழகமும் இணைந்து உலக நாடுகளில் சுற்றுச்சூழலின் லட்சணங்கள் எப்படி இருக்கிறது என ஒரு சர்வே எடுத்தது.

சுமார் 180 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா? 180. அதாவது கடைசி இடம். சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு என்று ஒவ்வொரு நாட்டையும் சுமார் 40 வகையான பிரிவுகளில் ஆய்வு செய்ததில் காற்றுமாசு மற்றும் கிரீன்ஹவுஸ் வாயு எனும் வளிமண்டல வாயுக்களை வெளியிடுதலில் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. அதனாலேயே இந்தக் கடைசி இடம் இந்தியாவிற்குக் கிடைத்துள்ளதாகச் சொல்கிறது இந்த ஆய்வு.

தற்போது அதிக சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன்  இந்தியாவும் 2050க்குள் இணையும் என கணித்துள்ளது இந்த ஆய்வு. ஆனால், வழக்கம்போலவே இந்தியா இந்த ஆய்வை மறுத்துள்ளது.

ஐ யெம் ஆனிர்  அண்ட் ஐ யெம் கே

இந்தியில் கடந்த 2005ல் ‘மை பிரதர்… நிகில்’ என்ற இந்திப்படம் மூலம் அறிமுகமாகி அதிக கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ஆனிர்.

மட்டுமல்ல. 2010ல் ‘ஐ யெம்’ படத்திற்காக தேசிய விருது பெற்றவர். பாலிவுட்டில் வெளிப்படையான ஓரினச்சேர்க்கை இயக்குநர்களில் ஒருவர் என்கிற அடையாளத்துடன் வலம் வருபவர். தற்போது தன் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ‘ஐ யெம் ஆனிர் அண்ட் ஐ யெம் கே’ என புத்தகமாக மனம் திறந்திருக்கிறார்.

இதனை அவரின் சகோதரி ஐரீன் தாருடன் சேர்ந்து எழுதியிருக்கிறார் ஆனிர். பூட்டானில் தனது குழந்தைப்பருவத்தில் இருந்து இந்தித் திரையுலகில் நுழைவது வரை பட்ட கஷ்டங்கள், போராட்டங்கள் அனைத்தையும் இதில் விவரித்திருப்பதாகச் சொல்கிறார். ‘‘விரைவில் வெளியாகவுள்ள இந்தப் புத்தகம் மக்கள் தங்கள் பாலுணர்வில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க உதவும்...’’ என நம்பிக்கை அளிக்கிறார் ஆனிர்.

சீனா, ரஷ்யாவை இணைக்கும் முதல் பாலம்

சீனாவையும், ரஷ்யாவையும் இணைக்கும் முதல் நெடுஞ்சாலைப் பாலம் கடந்த வாரம் திறக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கும், சீனாவிற்கும் இடையில் கிழக்கில் ஆமுர் என்கிற நதி ஓடுகிறது.

இந்த நதியின் மீதுதான் பாலத்தை அமைத்துள்ளனர். அதாவது நதியின் அந்தப் பக்கமுள்ள ரஷ்யாவின் பிலகோவேஷிசேன்ஸ்க் நகரையும், மறுபக்கமுள்ள சீனாவின் ஹெய்ஹீ நகரையும் இணைக்கும்படி வடிவமைத்துள்ளனர். சுமார் 2.2 கிலோமீட்டர் நீளம் கொண்ட இப்பாலத்தைக் கட்டிமுடிக்க, இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 671 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. ஏற்கனவே உக்ரைன் உடனான போரினால் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடை ரஷ்யா மீதுள்ளது. இந்நிலையில் சீனாவுடன் வர்த்தகம் என்பதை பல்வேறு நாடுகளும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியுள்ளன.

ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சர் விட்டலி சேவ்லியேவ் ‘‘இந்தப் பாலம் இருதரப்பு வர்த்தகத்தையும் ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன்களுக்கு மேல் உயர்த்த உதவும்...’’ என்கிறார். இதனால், இனி சீனப் பொருட்கள் மேற்கு ரஷ்யாவை அடைய 1500 கிமீ தூரம் குறையும் என்கின்றனர்.

தொகுப்பு : குங்குமம் டீம்