பழுதான பேருந்துகளில் பள்ளி வகுப்பறைகள்



கொரோனாவின் ருத்ர தாண்டவத்துக்குக் கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகமும் (KSRTC) தப்பிக்கவில்லை. குறிப்பாக லாக்டவுன் காலத்தில் பெரும் நஷ்டத்தில் இயங்கியது கேஎஸ்ஆர்டிசி. லாக்டவுனுக்குப் பிறகும் பயணச்சீட்டு விற்பனை பெரிதாக லாபத்தை ஈட்டித்தரவில்லை.

இந்நிலையில் ‘ஷாப் ஆன் வீல்ஸ் (Shop on Wheels)’ எனும் புதிய திட்டம் மூலம் பழுதான பழைய பேருந்துகளை வண்ணமயமான கடைகளாகவும், உணவகமாகவும் மாற்றியமைத்து நல்ல வரவேற்பைப் பெற்றது கேஎஸ்ஆர்டிசி. இதன் மூலம் கணிசமான வருமானமும் கிடைத்தது. இதன் வெற்றியைத் தொடர்ந்து பழுதான பேருந்துகளைப் பள்ளி வகுப்பறைகளாக மாற்றும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது கேரள அரசு. இதற்கு நாலாப்பக்கமிருந்தும் ஆதரவுகள் குவிகின்றன.

இந்த அற்புத திட்டத்தின் கீழ், முதல் பேருந்து வகுப்பறை மணக்காடு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்துக்குள் பழுதான பேருந்துகளைக் கொண்டு வந்து, இரண்டு முதல் நான்கு வகுப்பறைகளாக மாற்ற வேண்டும் என்பதே கேரள அரசின் நோக்கம். இதன்படி, மணக்காட்டின் முதல் டபுள் டெக்கர் பேருந்து வகுப்பறை தயாராகிவிட்டது. இதன் கீழ்த் தளத்தில் ஸ்மார்ட் டிவி, குளிர்சாதன வசதி, வண்ணமயமான மேசைகள், இருக்கைகளுடன் புத்தகங்கள் வைக்க அலமாரிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

‘‘முதல் தளம் மாணவர்களுக்கான சிறிய நூலகமாகவும், பொழுதுபோக்கு இடமாகவும் செயல்படும்...’’ என கேரளாவின் பொதுக்கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். மாணவர்கள் ஏறி விளையாட வேண்டும் என்பதற்காக பேருந்து வகுப்பறையில் ஓட்டுனரின் இருக்கையும், ஸ்டீயரிங் வீலும் அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளன. பேருந்து வகுப்பறையின் வெளிப்புறத்தில் அழகான பறவைகள், விலங்குகளின் ஓவியங்கள் வரையப்பட்டு ஆரம்பப் பள்ளி மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வரவும், கல்வியில் கவனம் செலுத்தவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.  

இதேபோல பாலக்காட்டில் ஒரு பள்ளிக்கு பழைய பேருந்தை நூலகமாக மாற்றி கேரள போக்கு வரத்துக் கழகம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய திட்டங்களைப் பார்த்து, கட்டடங்கள் இல்லாத அங்கன்வாடிகளுக்கு பழுதான பேருந்துகள் வழங்கப்பட வேண்டும்; அதில் அங்கன்வாடிகள் செயல்படும்படி அரசாங்கம் வழிவகுக்க வேண்டும் என்று கேரளாவின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை கோரிக்கை வைத்துள்ளது.

‘‘புதிதாக ஒரு வகுப்பறையைக் கட்ட வேண்டும் என்றால் அதற்கு பல லட்ச ரூபாய் செலவாகும். ஆனால், பழுதான பழைய பேருந்துகளை மாற்றியமைத்து, முக்கிய காரியங்களுக்கு மறுபயன்பாடு செய்யும்போது பல கோடி ரூபாய் மிச்சமாகும்...’’ என்று  மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பள்ளியின் தேவையைப் பொறுத்து பழுதான பழைய பேருந்துகளை வகுப்பறைகளாகவோ, நூலகமாகவோ அல்லது மாணவர்களுக்கான லேப்களோகவோ மாற்றியமைத்துக்  கொடுக்கப் போவதாக அமைச்சர் குறிப்பிட்டதுதான் இதில் ஹைலைட்.

ஸ்வேதா கண்ணன்