ஒரு கணம் ஒரு போதும் பிரியக்கூடாதே!



‘ஐ லைக் ஹெர் இன் சாரி’... நயன்தாரா எந்த உடையில் இன்னும் அழகாக இருப்பார்? உங்க ஃபேவரைட் சாய்ஸ் எது? இப்படிக்கேட்டால் விக்னேஷ் சிவன் சொல்லும் பதில் இதுதான்.
இந்த வார்த்தைகளை உள்ளூர ரசித்தாரோ என்ன வோ நயன்தாரா தனது திருமணப் புடவை மூலம் கொண்டாடித் தீர்த்துவிட்டார்.  இருவரிடமும் எதைக் கேட்டாலும், பேசினாலும் சிரிப்பும், வெட்கமும் மட்டுமே பதிலாகக் கிடைக்கின்றன.

சென்னை மகாபலிபுரம் அருகே கடற்கரைச் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 9ம் தேதி நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
அன்று காலை 10.20 மணிக்கு இந்து பாரம்பரிய முறைப்படி நயன்தாராவின் கழுத்தில் தாலி கட்டினார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.  இவர்களது திருமணத்திற்கு 200 முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஷாருக்கான், ரஜினிகாந்த் உட்பட பல முக்கிய திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு திருப்பதி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டனர். அடுத்து பட வேலைகள், ஷூட் என பிசியாகப் போகிறார்களாம். ‘‘தங்கமே பாட்டுதான் நயன்தாராவுக்கு நான் கொடுத்த முதல் பரிசு...’’ என்னும் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா இருக்கும் இடம் எதுவானாலும் அதுதான் அவர் ஃபேவரைட் இடமாம்.
நயன்தாரா பற்றி ஒரு சீக்ரெட் ப்ளீஸ் என்றால் ‘‘இரவு உணவு முடிந்து அவரே அத்தனை தட்டுகளையும், பாத்திரங்களையும் கழுவி விடுவார்’’ என்றார்.

இருவரின் முதல் சந்திப்பும் சென்னை தாஜ் கிளப் ஹவுஸில் தான் நிகழ்ந்திருக்கிறது. அதுவும் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் கதை சொல்லத்தான் சந்தித்திருக்கிறார் விக்கி. அதனால்தான் ‘ரௌடி பிக்சர்ஸ்’ சினிமா நிகழ்வுகள் உட்பட, பத்திரிகையாளர்கள் சந்திப்பு என அனைத்தையும் அங்கேயே நடத்துகிறார்கள்.

திருமணத்தில் பலரையும் ஈர்த்தது அந்த சிவப்பு நிற புடவைதான். அழைப்பிதழில் விருந்தினர்களுக்கு ‘பாஸ்டல் (pastel)’ எனப்படும் வெளிர் நிற தீம் கொடுக்கப்பட்டது. எனவேதான் சினிமா பிரபலங்கள் பலரும் லைட் கலர் சாய்ஸ் உடையில் தோன்றினர். இதனை ‘ராஜவம்சம் தீம்’ என்றும் கூட சொல்லலாம். சுற்றி இருப்பவர்கள் அனைவரும் வெளிர் நிறத்தில் தோன்ற, கல்யாணப் பெண் அடர் நிறத்தில் மகாராணி போல் காட்சியளிப்பார். வட இந்தியத் திருமணங்களில் இதுதான் சமீபத்திய டிரெண்ட். உதாரணத்திற்கு காத்ரீனா கைஃப் திருமண உடையைச் சொல்ல
லாம்.

திருமணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே பிரபல டிசைனரான ‘ஜேட்  பை மோனிகா மற்றும் கரிஷ்மா (JADE by Monica and Karishma)’விடம் நயன்தாராவின் திருமணப் புடவையை வடிவமைக்க ஆர்டர் கொடுத்துள்ளனர். குங்குமச்சிவப்பு நிறத்தில் லெஹங்கா போன்ற வடிவமைப்பில் நயன்தாராவின் திருமணப் புடவை அமைந்திருந்தது. அந்தப் புடவையில் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள ஹொய்சால என்ற கோவிலின் வடிவம், சிலைகளை எம்ப்ராய்டரிங் செய்துள்ளனர்.  மேலும் நயன்தாராவின் முழுக்கை வைத்த பிளவுஸில், மகாலட்சுமியின் உருவமும், பல்வேறு மணிகளும் டிசைன் செய்யப்பட்டுள்ளன.

நயன்தாராவின் புடவையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. இந்தப் புடவைக்கு ஏற்றாற்போல மரகதம் பொருந்திய வைர நகைகளை நயன்தாரா அணிந்திருப்பார். கழுத்தில் ஜாம்பியன் மரகதம் நெக்லஸ், போல்கி செயின், சாட்லடா எனப்படும் 5 அடுக்கு வைர ஹாரம் உள்ளிட்டவற்றை அணிந்திருந்தார். வெண்பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம் அணிந்து விக்னேஷ் சிவனும் கலக்கலாக இருந்தார். மணமக்களுக்கு வாழ்த்துகள்!

ஷாலினி நியூட்டன்