குழந்தைக்காகப் போராடும் அம்மா! நயன்தாராவின் திருமணப்பரிசு
நயன்தாராவின் கல்யாணப் பரிசாக வெளிவரஉள்ளது ‘O2’. ‘அறம்’, ‘மூக்குத்தி அம்மன்’ படங்களைத் தொடர்ந்து நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் இயக்கியுள்ளார்.இயக்குநர் விக்னேஷுக்கு ஓர் அறிமுகம் கொடுங்களேன்?
 அம்மா - மகன் இருவரும் பஸ் பயணம் செய்கிறார்கள். அதுல சிக்கல் வருது. அதிலிருந்து தன் மகனை எப்படி காப்பாற்றுகிறார் அந்த தாய் என்பது படத்தோட ஒன்லைன். என்னோட சொந்த ஊர் சென்னை. எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல்தான் சினிமாவுக்கு வந்தேன். ஸ்கூல் படிக்கும்போதே சினிமா மீது ஆர்வம். வீட்ல இருக்கிறவங்களை கன்வின்ஸ் பண்ணி விஸ்காம் படிச்சேன். ஒரு சினிமா இயக்குநருக்கு ஸ்டோரி நாலெஜ் இருக்கணும்.
 எனக்கு அந்த திறமை இருக்குன்னு புரிஞ்சது. சின்ன வயசுல எனக்கு பாராட்டு கிடைச்சிருந்தா அது நான் சொன்ன கதைக்காகத்தான் இருக்கும். சினிமாவுக்கு வரும் முன் ‘காசிமேடு காதல்’ குறும்படம் எடுத்தேன். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு சாரிடம் ‘மாஸ் என்கிற மாசிலாமணி’யில் ஏ.டி.யா ஜாயின் பண்ணினேன்.
 ஒரு படம்தான் ஒர்க் பண்ணியிருப்பேன். அந்த ஒரு படத்துல சினிமாவுக்குத் தேவையான எல்லா விஷயத்தையும் நிறைவா கத்துக்கிட்டேன். பிறகு, இந்தியில் ‘மிட்டி’ குறும்படம் எடுத்தேன். 15 மில்லியன் வியூஸ் கிடைச்சது. பாகிஸ்தான் பையனுக்கும், இந்திய ராணுவ வீரனுக்கும் இடையே நடக்கும் எமோஷன் கதை அது. பிறகு படம் இயக்கும் முயற்சியில் கதை எழுத ஆரம்பிச்சேன். ரெண்டு, மூணு கதைகள் எழுதினேன். சில கதைகள் ஒர்க் அவுட்டாகவில்லை. சில கதைகள் எனக்கே பிடிக்கல. இந்தப் பயணத்தில் எழுதியதுதான், ‘O2’.
நயன்தாரா ஹீரோயின் ஓரியண்டட் படத்தில் நடிக்க ஏகப்பட்ட கண்டிஷன் போடுவாங்களே?
கதை எழுதும்போது நயன் மேடம் இல்லை. பார்வதி என்ற கேரக்டர்தான் இருந்துச்சு. எழுதி முடிச்ச பிறகு நயன் மேடம் இருந்தால் இந்தக் கதை கவனம் பெறும் என்று தோணுச்சு. அவங்களுடைய மேனரிசம், இதுல இருக்கிற ஆக்ஷன் சீக்வன்ஸ் அவங்களுக்குப் பொருந்திப் போகுமளவுக்கு இருந்துச்சு. சினிமா வட்டாரத்துல ‘பிட்ச் பைபிள்’னு சொல்வாங்க. அந்த ஃபார்மேட்ல கதையோட அவுட்லைனை நயன் மேடத்திடம் சொன்னேன். அந்த பிரசன்டேஷன் பிடிக்கவே கதை சொல்ல சொன்னாங்க. படத்துல பார்வதி என்ற பாட்டனி புரபஸரா வர்றார்.
நயன் மேடத்தைப் பொறுத்தவரை ரொம்ப இயல்பானவர். நான் கவனிச்ச வரை அவர் சீனியர், ஜூனியர் என எந்த இயக்குநருடன் வேலை செய்தாலும் அவர்களுக்கு கம்ஃபோர்ட் கொடுக்குமளவுக்கு அவருடைய அப்ரோச் இருக்கும். கதை சொன்ன முதல் நாளே நார்மல் ஃபீல் உணர முடிஞ்சது. இரண்டு நண்பர்கள் எவ்வளவு யதார்த்தமா பேசுவார்களோ அதுமாதிரி தான் நாங்க பேசிக்கிட்டோம்.
கதை சொல்லும்போதே அவருடைய ரியாக்ஷனை கவனிச்சு, கதை அவங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சது. படப்பிடிப்புல ஆர்வத்தோட இருப்பாங்க. சஜஷனா சில விஷயங்களைக் கேட்பார். ‘விக்னேஷ் இப்படி பண்ணா ஓ.கே.வா, வேற டிரை பண்ணவா’னு ரொம்ப ஆர்வம் காட்டுவாங்க. கதையில் நயன்தாராவைப் பார்க்க முடியாது. ஒரு குழந்தையின் அம்மாவாகத்தான் பார்க்க முடியும். அம்மா கேரக்டர்ல நடிக்கத் தயங்கினார்களான்னு சிலர் கேட்டார்கள். கதை அதை மறக்கச் செய்தது. தாய்மையை மீறி இது உணர்வுபூர்வமான கதை என்பதால் முழு மனசோட நடிச்சாங்க.
யூடியூப் பிரபலம் ரித்விக் இதுல எப்படி?
யூடியூப்ல பிரபலமாவதற்கு முன்பே ஆடிஷன்ல செலக்ட் பண்ணியிருந்தேன். படத்துல வீரா என்ற கேரக்டர் பண்றார். பெரிய நடிகரா வருவார். கிளிசரின் இல்லாம அழுது மிரள வெச்சார். ‘ஆடுகளம்’ முருகதாஸ், பரத் நீலகண்டன், ஆர்.என்.ஆர்.மனோகர், ரிஷிகாந்த், தாரிணி இருக்காங்க. இதுல சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் பிரமாதப்படுத்தினாங்க. ஆக்சிஜன் இல்லாத இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தணும். அதை சரியா பண்ணினாங்க. ரொமான்ஸ் சீன், காமெடி சீனுக்கு ரெஃபரன்ஸ் எடுக்கலாம். இதுக்கு ரெஃபரன்ஸ் எடுக்க முடியாது. ஆனா, என்னுடைய ஆர்ட்டிஸ்ட்ஸ் அதுல பெரிய மேஜிக் பண்ணினாங்க.
ஒளிப்பதிவு தமிழ் அழகன். ‘மன்மத லீலை’ பண்ணியவர். எக்ஸலன்ட்டா பண்ணினார். கதைக்களம் குறுகிய இடத்துல நடக்கும். அதுக்குள் வித்தை காட்டினார். விஷால் சந்திரசேகர் சார் லேட்டாதான் வந்தார். கதைக்குத் தேவையான மியூசிக் கொடுத்திருக்கிறார். காற்றின் சத்தத்தை முக்கியப்படுத்தி பிரமாதமா பின்னணி இசை பண்ணினார். எடிட்டர் செல்வா. ‘சார்பட்டா பரம்பரை’, ‘கர்ணன்’ பண்ணியவர்.
அவருடைய எடிட்டிங்கிற்கு நான் ரசிகன். ‘ட்ரீம் வாரியர்ஸ்’ நிறுவனத்துல என்னுடைய முதல் படத்தைப் பண்ணுவது பெருமையா இருக்கு. அதீத வெயில், புயல், வெள்ளம் என்று கால நிலை மாறியுள்ள நிலையில் இந்தப் படம் இப்போதைய சமுதாயத்துக்கு மிக மிக முக்கியம். மக்கள் மத்தியில் இயற்கையுடனான புரிதல் மிகவும் மோசமாக உள்ளது. இதற்குக் காரணம் இயற்கையுடன் இயைந்து வாழாமல் இருந்து விட்டோம். இயற்கையுடன் சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை ‘O2’ அழுத்தமாகப் பதிவு செய்துள்ளதாக நம்புகிறேன்.
எஸ்.ராஜா
|