முதல் புற்றுநோய் மருந்து!
இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்பது மாதிரி, ஒருவகையான புற்றுநோய்க்கு முதன்முறையாக மருந்து கண்டுபிடித்திருப்பதின் மூலம் புற்றுநோயாளிகளின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார்கள் அமெரிக்காவில். இந்த நிகழ்வு மருத்துவ உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
 புற்றுநோயில் ஒருவகை ரெக்டல் கேன்சர்(rectal cancer) எனும் மலக்குடல் புற்றுநோய். பெருங்குடலின் நுனி வாயில் இந்த புற்றுநோய் ஏற்படும். 2020 ஆம் ஆண்டு கணக்குப்படி பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய்தான் புற்றுநோயில் முதலிடம் வகிக்கிறது. அடுத்து நுரையீரல் புற்று நோய். மூன்றாவதாக இடம்பிடித்திருப்பது இந்த மலக்குடல் புற்று நோய்தான்.  உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி 2020 - ம் ஆண்டில் 6 பேர் வெவ்வேறு விதமான புற்றுநோயினால் இறந்திருக்கிறார்கள் என்றால், அதில் ஒருவராவது இந்த மலக்குடல் புற்றுக்கு இறப்பதாகத் தெரிய வருகிறது. எதனால் மலக்குடல் புற்றுநோய் உண்டாகிறது?
வயதாகுதல், சர்க்கரை நோய், அல்சர், உடல் பருமன், புகைபிடித்தல், உடல் உழைப்பின்மை, நோய் எதிர்ப்புச் சக்தியின்மை, வைரஸ் தொற்று, உணவு செரிமானப் பிரச்சனை, சிலவகை இதய நோய்கள் போன்ற பல காரணங்களால்தான் இந்த மலக்குடல் புற்று உண்டாவதாக சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
சரி, இந்த நோயை எப்படி அமெரிக்கா கடந்தவாரம் குணப்படுத்தியது என்பதுதான் இதில் ஹைலைட். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இயங்கிவரும் பிரபலமான புற்றுநோய் மருத்துவமனை, ஸ்லோவன் கெட்டரிங் (sloan ketttering) மருத்துவமனை. இங்குள்ள 12 மலக்குடல் புற்றுநோயாளிகளுக்கு வழக்கமாக புற்றுநோய்க்கான சிகிச்சையாக வழங்கப்படும் கீமோதெரபி, அணுக்கதிர் வீச்சு தெரபி எனும் ரேடியோ தெரபி மற்றும் அறுவை சிகிச்சைகளை செய்து வந்தனர்.
இந்த நேரத்தில்தான் 12 பேரும் சோதனைக்கூடங்களில் உருவாக்கப்பட்ட டோஸ்டர்லிமாப்(dostarlimab) எனும் மருந்தை மூன்றுவார இடைவெளியில் 6 மாதத்துக்கு எடுத்துக்கொண்டனர் . இது விருப்பப்பட்டால் மட்டுமே எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு பரிசோதனை சிகிச்சை. என்ன ஆச்சரியம். சுமார் 3 சதவீத பக்கவிளைவுகளை மட்டுமே ஏற்படுத்திய இந்த மருந்து 6 மாதத்துக்குப் பிறகு இந்த மலக்குடல் கட்டியையே காணாமல் போகச் செய்துவிட்டது.
உலகநாடுகள் பெருமையாகக் கொண்டாடும் இந்த மருத்துவ வெற்றி இன்னும் உறுதிப்படவேண்டும் என்பதற்காக இது தொடர்பான மேலும் சில ஆய்வு களையும் இந்த மருத்துவக் குழு தற்போதைக்கு மேற்கொண்டு வருகிறது.
டி.ரஞ்சித்
|