கப்பலோட்டிய தமிழனின் இல்லம்!
‘‘வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்…’’
எனக் ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் வரும் அந்த உணர்ச்சிப் பாடலை எல்ேலாருமே ரசித்திருப்போம். அதில் வ.உ.சியை தத்ரூபமாக நம் கண்முன்னே நிறுத்தியிருப்பார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எஸ்.எஸ்.காலியா கப்பலில் நின்றபடி அவர் கைகாட்டும் அந்தக் காட்சியைப் பார்க்கும் எவருக்கும் சுதந்திர உணர்வு தானாகவே ஏற்படும். இப்படியாகவே வ.உ.சியின் முகமும் தமிழர்கள் பலரின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தது.

தமிழகத்தில் பாமர மக்களிடமும் சுதந்திர எழுச்சியை முதன்முதலில் ஏற்படுத்திய அந்தப் பெரியவரின் 150வது பிறந்தநாளை தற்போது தமிழக அரசு, அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறது. மட்டுமல்ல, ஓட்டப்பிடாரத்தில் அவரின் பிறந்த வீட்டை கடந்த அறுபது ஆண்டுகளாக நினைவு இல்லமாகப் பராமரித்து வருகிறது.
 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து 36 கிமீ தொலைவில் இருக்கிறது ஓட்டப்பிடாரம். தூத்துக்குடி-மதுரை நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் குறுக்குச்சாலை வழியே இவ்வூரை அடையலாம். இங்கிருந்து வெள்ளையர்களை எதிர்த்த கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி கிராமம் 2 கிமீ தொலைவிலேயே உள்ளது. இதனால் கட்டபொம்மன், ஊமைத்துரையின் வீரவுணர்வைப் போற்றும் நாட்டுப் பாடல்களைக் கேட்டு வளர்ந்தார் வ.உ.சி. எப்போதும் தம் ஊரைக் குறிப்பிடும்போது கட்டபொம்மன் ஊர் பாஞ்சையின் பக்கத்திலுள்ளது என்றே சொல்கிறார்.  அந்த ஓட்டப்பிடாரத்திலிருந்து புதியம்புத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் இருக்கிறது வ.உ.சி பிறந்த தெரு. அந்தத் தெருவின் வாசலிலேயே வ.உ.சியின் சிலை பார்வையாளர்கள் அனைவரையும் உள்ளனுப்பி வைக்கிறது. பழமையைப் பறைசாற்றும் அந்தத் தெருவின் நடுவில் 2/119A என்ற முகவரி கொண்ட வீடு வ.உ.சியினுடையது.
 ஒரே ஒரு மாடி கொண்ட அந்த வீடு கருங்கற்களால் புனரமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆரம்பத்தில் இருந்த வீட்டை புனரமைத்துள்ளதாகச் சொல்கின்றனர் அங்கிருந்தவர்கள். வீட்டின் இடதுபக்கத்தில் 1957ம் ஆண்டு அன்றைய முதல்வர் கு.காமராஜ் அஸ்திவாரக்கல் நாட்டிய குறிப்புகள் உள்ளன. அதுவும், ‘சுதந்திரப் போராட்டத்தின் 100வது ஆண்டு விழாவைெயாட்டி வ.உ.சிதம்பரம் பிள்ளையின் ஞாபகார்த்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா’ என்கிற வாசகங்கள் 1857ல் நடந்த சிப்பாய்க் கழகத்தை நினைவூட்டுகின்றன.
வலதுபக்கத்தில் 1961ல் பொதுத்துறை அமைச்சர் கக்கன் தலைமையில் முதல்வர் கு.காமராஜ் திறந்துவைத்த நிகழ்வின் குறிப்புகளும் உள்ளன. கீழ்ப் பகுதியில் வ.உ.சி பற்றின தகவல்கள் என்றால் மாடிப் பகுதியில் அரசுப் பொது நூலகம் செயல்பட்டு வருகிறது. அதற்கான பெயர்ப் பலகையும் வீட்டில் வைக்கப்பட்டுள்ளன. வீட்டின் உச்சியில் தமிழக அரசின் சின்னமும், அதற்குக் கீழே கருங்கல்லில் செதுக்கிய கப்பல் வடிவமும் காண்போரை ரசிக்கச் செய்கின்றன.
உள்ளே கீழ்த்தளத்தின் நடுஅறையில் 2016ல் வைக்கப்பட்ட வ.உ.சியின் முழு உருவச்சிலை பரவசப்படுத்துகிறது. அதைச் சுற்றிலும் வ.உ.சியின் புகைப்படங்களும், குறிப்புகளும் காணப்படுகின்றன. முதலில் வ.உ.சியின் வாழ்க்கைக் குறிப்புகள் ஒரு பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. 1872ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி உலகநாதபிள்ளை, பரமாயி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார் என்பதில் தொடங்கி ஓட்டப்பிடாரத்தில் தொடக்கக் கல்வி பயின்றது, 1891ல் தூத்துக்குடி செயிண்ட் சேவியர் பள்ளியில் படித்தது, திருச்சியில் சட்டக் கல்லூரியில் படித்தது, 1895ல் வள்ளியம்மையை திருமணம் செய்தது, ஓட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டது, 1901ல் வள்ளியம்மை மறைவுக்குப் பிறகு மீனாட்சியம்மையை மணமுடித்தது, 1905ல் சுதேசிய கப்பல் கம்பெனியை நிறுவியது, 1906ல் சுதேசிய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி பதிவுடன் இரண்டு கப்பல்கள் வாங்கியது, 1908ல் ராஜத் துவேஷ குற்றச்சாட்டால் கைது செய்யப்பட்டது, 1912ல் விடுதலையானது, 1922ல் கோவில்பட்டியிலும், தூத்துக்குடியிலும் வழக்கறிஞர் பணி செய்தது, 1936ல் தூத்துக்குடியில் மறைந்தது என மொத்த வாழ்க்கைச் சுருக்கத்தையும் அறிய முடிகிறது.
இதற்கடுத்து 1900ல் வ.உ.சியின் புகைப்படத்தைப் பார்க்கலாம். தொடர்ந்து வ.உ.சியின் முதல் மனைவி வள்ளியம்மையுடன் இருக்கும் புகைப்படமும், அடுத்து இரண்டாவது மனைவி மீனாட்சியம்மையுடன் உள்ள புகைப்படமும் பிறகு உறவினர் ஒருவருடன் உள்ள புகைப்படமும் அழகூட்டுகின்றன. இதன்கீழே வ.உ.சியின் புதல்வர்கள், புதல்விகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கடுத்து ஓவியர் கொண்டையராஜு வரைந்த வ.உ.சியின் புகைப்படம் தத்ரூபமாக மின்னுகிறது.
பிறகு, ‘தென்னாட்டு சுதந்திரப் போராட்டத் தியாகி களுடன் வ.உ.சி’ என்கிற பெயர் தாங்கிய புகைப்படம் பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறது. காரணம், இதில் சோமசுந்தர பாரதியார், சத்தியமூர்த்தி, குருசாமி முதலியார், வேதநாயகம் பிள்ளை, வரதராஜுலு நாயுடு, முத்துராமலிங்கத் தேவர், முத்துசாமி ஆசாரி, சீனிவாச அய்யங்கார், கர்மவீரர் காமராஜர் ஆகியோருடன் நடுவில் கம்பீரமாக வ.உ.சி அமர்ந்திருப்பதுதான்.
இதனருகே 1972ல் வ.உ.சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் இந்திராகாந்தி, முதல்வர் கலைஞர் கருணாநிதியுடன் இணைந்து வ.உ.சியின் சிலையை தூத்துக்குடியில் திறந்து வைக்கும் புகைப்படமும், அதே நிகழ்வில் வ.உ.சியின் தபால்தலையை இந்திராகாந்தி வெளியிட அதனை வ.உ.சியின் புதல்வர் ஆறுமுகம் பெற்றுக் கொண்ட புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளன.
பிறகு, கோவையில் வ.உ.சி இழுத்த செக்கின் புகைப்படமும், 1936ல் அவர் தூத்துக்குடியில் மரணித்தபோது எடுக்கப்பட்ட இறுதி யாத்திரைப் புகைப்படமும் கவனிக்கச் செய்கின்றன.
வ.உ.சி.பாளையங்கோட்டை சிறையில் விசாரணைக் கைதியாக இருந்தபோது சுதேசி கப்பல் கம்பெனியாருக்கு எழுதிய கடிதத்தின் சாராம்சத்தை வைத்திருந்தனர். இதுதவிர, வ.உ.சி 1928ல் கோவில்பட்டியிலிருந்து தன் மகனின் வேலைக்குத் தகுதியான சிபாரிசு கிடைக்குமா எனக் கேட்டு தந்தை பெரியாருக்கு எழுதிய கடிதம் உள்ளது. இதில், வ.உ.சியின் கையெழுத்தைப் பார்க்க முடிகிறது. நிறைவில், வ.உ.சி எழுதிய சில சொற்கள் வைக்கப்பட்டுள்ளன.
அதையெல்லாம் படிக்கும்போது அவர் சுதந்திரப் போராட்ட வீரர் மட்டுமல்ல, எழுத்தாளர், தமிழறிஞர் என பன்முகத் தன்மை கொண்ட மாபெரும் ஆளுமை என்பதை அறியமுடியும். அவர் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். பல நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். ‘விவேகபாநு’, ‘இந்துநேசன்’, ‘தமிழ்நேஷனல்’ உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தியிருக்கிறார். நூல்களை பதிப்பித்திருக்கிறார். இதுபோன்ற விஷயங்களையும் இந்த வீட்டில் அடுக்கி வைத்துள்ளனர். அதையெல்லாம் பார்த்துவிட்டு திரும்பினால் வீட்டின் நடுவில் நிற்கும் வ.உ.சி சிலை நம்மிடம், ‘சுதந்திரம் நம் பிறப்புரிமை’ என கம்பீரமாகச் சொல்வதுபோல் தோன்றுகிறது.
சென்னையில் வாழ்ந்த வ.உ.சி.
* 1906ல் சென்னைக்கு வந்த வ.உ.சி திருவல்லிக்கேணியில் உள்ள சுங்குராமசெட்டித் தெருவில் நண்பர் வீட்டில் தங்கியிருக்கிறார். அப்போது பாரதி ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியர். இருவரும் நண்பர்களாகின்றனர். 1907ல் இருவரும் சேர்ந்து சூரத் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
* 1908ம் ஆண்டு முதல் 1912 வரை கோவை மற்றும் கண்ணனூர் சிறைகளில் இருந்துவிட்டு வ.உ.சி விடுதலையாகிறார். அதன்பிறகான அவர் வாழ்க்கை சென்னையில்தான் தொடங்குகிறது. 1913ல் சென்னைக்கு வந்தவர் 1920 வரை அங்கு இருக்கிறார்.
* முதலில் சென்னை சிந்தாதரிப்பேட்டை அருணாச்சல நாயக்கன் தெருவிலும், 1915ல் மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோயில் அருகேயுள்ள பரிபூரண விநாயகர் கோயில் தெருவிலும், 1916 முதல் 1920 வரை பெரம்பூர் கந்தப்பிள்ளைத் தெருவிலும் வசிக்கிறார். இந்த கந்தப்பிள்ைளத் தெரு இன்று கந்தன் தெருவாக உள்ளது. இதனருகே வ.உ.சியின் சிலையும் இருக்கிறது. இந்த வீட்டுக்கு 1919ம் ஆண்டு பாரதியும், ஒரு குள்ளச்சாமியாரும் வந்த கதையை ‘நான் கண்ட பாரதி’ நூலில் வ.உ.சி எழுதியுள்ளார்.
* 1915ல் மயிலாப்பூர் பரிபூரண விநாயகர் தெருவில் வசித்தபோது காந்தியடிகளுக்குக் கடிதம் எழுதுகிறார். இதிலிருந்தே அவர் அந்தத் தெருவில் வசித்தது தெரிய வருகிறது. இதனால் அவர் வாழ்ந்த இடங்களில் தகவல் பலகைகளோ அல்லது நினைவுத் தூண்களோ வைக்கவேண்டும் என்கிற கோரிக்கையை வைத்துள்ளனர் வ.உ.சி ஆர்வலர்கள்.
கப்பலோட்டிய கதை...
1906ம் ஆண்டு சுதேசி ஸ்டீமர் கம்பெனி எனும் பெயரில் வ.உ.சி ஒரு கப்பல் கம்பெனியை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து ‘விவேகபாநு’ எனும் பத்திரிகையில் வ.உ.சி விரிவாக எழுதியுள்ளார். எஸ்.எஸ்.காலியா என்ற கப்பலை பம்பாய் சென்று கொண்டு வருகிறார். பிறகு, லாவோ என்கிற கப்பலும் வாங்குகிறார். வ.உ.சியின் சுதேசி கம்பெனி இரண்டு கப்பல்கள், இரண்டு ஸ்டீமர்களைக் கொண்டு தன் ேபாக்குவரத்தைத் தொடங்குகிறது. இது பிரிட்டிஷ் நேவிகேஷன் கம்பெனிக்குக் கோபத்தை ஏற்படுத்த பல இடைஞ்சல்கள் கொடுக்கின்றனர். தவிர, கட்டணத்தைக் குறைத்து இயக்குகின்றனர். ஆனால், எதற்கும் அஞ்சாமல் வ.உ.சி தன் பணிகளை மேற்கொள்கிறார்.
இதன்பிறகு, வ.உ.சியிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும், கப்பல் கம்பெனியை விட்டுவிடும்படியும் கேட்கின்றனர். இதற்கும் அவர் மயங்கவில்லை. ஒருகட்டத்தில் கம்பெனியின் உள்ளிருந்த பங்காளிகளே இவர்மீது பொறாமை கொள்ள வ.உ.சி கப்பல் கம்பெனியிலிருந்து வெளியேறுகிறார். 1908ல் கோரல் மில் போராட்டம் நடக்கிறது. அதில், வ.உ.சி கைது செய்யப்படுகிறார். திருநெல்வேலி எழுச்சிப் போராட்டம் நடக்கிறது. ராஜத்துவேஷ வழக்கில் கைது செய்யப்பட்ட வ.உ.சி சிறை செல்கிறார். இத்துடன் சுதேசி கப்பல் கம்பெனியின் நிலை மோசமாகி 1911ல் அதன் கதை முடிந்துபோகிறது.
பேராச்சி கண்ணன்
|