சூடா ஒரு கப் டீ!
அவள் பெயர் குணா என்று மட்டும் தெரியும். அதுவும் ‘ஏய் குணா...’ என்று யாரோ கத்தியதால். சைக்கிளில் டீ கேன். டிஸ்போசபிள் கப். அவள் கணவன் இல்லாத நேரம் இவள் நிற்பாள். எதிரே ஹாஸ்பிடல். அப்பாவைச் சேர்த்து நான்கு நாட்கள் ஓடிவிட்டன. ஆண்கள் வார்டில்தான் படுத்திருக்கிறார். அவர் தூங்குகிறார் என்று தோன்றும்போது எழுந்து வந்து டீ குடிப்பேன். அதில் பழக்கம் குணாவும், அவள் வீட்டுக்காரரும்.
 அவன் அவ்வளவு பேசுவதில்லை. வைத்திருப்பதே டீ கேன் ஒன்றுதான். எதிரில் வந்து நின்றால் ‘என்ன வேண்டும்...’ என்பது போல் ஒரு பார்வை பார்ப்பான். டீ என்று உதடு அசைத்தால் மட்டுமே டீ கப் நிரப்புவான்.குணா படு ஸ்மார்ட். அவள் நிற்கும்போது போனால் கேள்வியே இல்லை. டீ கப்பில் கொஞ்சம் கூடுதலாகவே நிரப்பும் பிரமை. ஒரு தடவை பன் பாக்கட் ஒன்றையும் சேர்த்து நீட்டினாள்.‘‘சொம்மா வெறும் டீயை குடிச்சுகிட்டு இருக்கே... இதைத் தின்னுட்டு டீயைக் குடி...’’‘‘பன்னா..?’’
 ‘‘ஏன்... வகுத்துல இறங்காதா..?’’ முகம் என் பக்கமே பார்க்காது. வாய் மட்டும் பேசும். மூன்றாம் முறை அவளிடம் டீ வாங்கிக் குடித்த நேரம் நாங்கள் இருவர் மட்டுமே. மொத்த சரித்திரத்தையும் என்னிடம் பேசி வாங்கி விட்டாள்.‘‘உனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்லியா..?’’ ‘‘இருக்காங்க...’’
 ‘‘கண்ணாலம் ஆயிருச்சா..?’’ ‘‘இல்ல...’’‘‘ஒத்தையிலயே காலம் கழிச்சிரலாம்னா..?’’ சொல்லிவிட்டு சிரித்தாள். ‘‘என் வூட்டுக்காரரும் இத்தையேதான் பொலம்புவாரு. கட்டாம இருந்தா நிம்மதியா இருந்துருப்பேன்னு...’’ பக்கத்திலேயே குப்பைத்தொட்டி. ‘அதுல போட்டுரு...’ என்று அவள் சொல்வதற்கு முன்பே அதில்தான் போட்டேன். அம்பது ரூபாயை நீட்டினேன்.
‘‘பத்து ரூபா இல்லியா..?’’‘‘இல்லை...’’‘‘சரி... அடுத்த தபா வரப்போ சேர்த்து வாங்கிக்கறேன்...’’இதுதான் அவளிடம் என்னை ஈர்த்தது. ஒரு அலட்சியம்... ஒரு தீர்மானம்... ஒரு நம்பிக்கை. இது அவள் கணவனிடம் இல்லை என்கிற யோசனை என்னிடம்.‘‘எங்கேடா போயிட்ட..?’’ என்றார் அப்பா.கட்டிலில் துவண்டு படுத்திருந்தார். இரண்டாவது நாளே தன்னைக் கீழே படுக்க விடு என்று அடம் பிடித்தார். ‘‘இங்கெல்லாம் அப்படி படுக்க விட முடியாதுப்பா...’’ என்றால் ‘‘அப்போ வீட்டுக்கே போயிரலாம்... என்னமா நாறுது..?’’ என்றார் முகம் சுளித்து.
இன்று ஒரு மாதிரி செட் ஆகி விட்டார். முதல் நாள் சேர்த்தபோது இருந்த தெம்பு வடிய ஆரம்பித்துவிட்டது. கையைத் தூக்குவதாய் அவர் நினைப்பதும் கை ஒத்துழைக்க மறுப்பதும் பார்க்கவே சங்கடமாய் இருந்தது.அவர் கையைப்பற்றி என் கைக்குள் வைத்துக்கொண்டேன். அப்படியே மொத்த உடம்பும் என்னுள் ஒடுங்கிய நிம்மதியை அவர் முகத்தில் பார்த்தபோது கொஞ்சம் திகைப்பாகவும் இருந்தது.
இருவரும்தான் சேர்ந்து இருக்கிறோம். சில நாட்கள் அவர் சமையல். சில நாட்கள் நான். இருவருக்கும் போரடித்தால் மாமி மெஸ். ‘‘வனஜாட்ட வேணா போய் ஒரு வாரம் இருந்துட்டு வாயேன்...’’ ‘‘உனக்கு என்னால ஏதாச்சும் தொந்தரவா..?’’
‘‘அதுக்கு இல்லைப்பா...’’‘‘அந்தப் பேச்சை விடு...’’ வனஜாவின் கணவனோடு ஒருமுறை வாய்த் தகராறு வந்துவிட்டது. அவனும் சீண்டல் பேர்வழி. அப்பாவின் மென்மையான பக்கத்தைத் தொட்டுவிட்டான். பொறுக்க முடியாமல் பதில் சொல்லிவிட்டார். அதிலிருந்து அவள் வீட்டுக்கே போவதில்லை.ரெயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றதில் பென்ஷன் வருகிறது. அதை வாங்கப்போகும் நாளில் அப்பா முகத்தில் அசாத்திய புன்னகை படர்ந்திருக்கும். ‘‘சம்பளத்தை விடக் கூடவே வருது...’’ என்றார் ஒருமுறை.
‘‘உன் அக்கவுண்ட்லயே இருக்கட்டும்...’’ என்று மறுத்துவிட்டேன். என்ட்ரி போடவும் கைச்செலவுக்கு என்று கொஞ்சம் எடுத்து வருவதும் அவர் வழக்கம். அவ்வப்போது வனஜாவின் கணக்கில் போடச் சொல்வார். நெட் பேங்கில் அனுப்பிவிட்டு அவள் கைப்பேசிக்குத் தகவலும் அனுப்பிவிடுவேன். பதில் வராது. எப்போதாவது பார்க்கும்போது கேட்பேன். ‘‘ஆங்... வந்துச்சு...’’ பதில் அவ்வளவுதான்.
அப்பாவின் கை இறுகியது. என்னை அவர் பக்கம் கவனம் திருப்பியது.‘‘என்னப்பா...’’‘‘வனஜாக்கு பணம் அனுப்பணும்...’’ ‘‘சரி... அனுப்பிடறேன். வழக்கம் போல்தானே..?’’‘‘நான் வீட்டுக்கு வந்தபிறகுதான் எடுத்துத் தர முடியும்...’’‘‘அது பரவாயில்லை... அடுத்த மாசம் சேர்த்து வாங்கிக்கறேன்...’’‘‘உன்கிட்ட இருக்குமா..?’’
‘‘நான் பார்த்துக்கிறேன்பா...’’ ஒவ்வொரு கட்டிலின் அருகிலும் யாரோ ஒரு உறவு. சிலருக்கு ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு. ‘‘டீ வேணுமாப்பா..?’’‘‘வாசல்ல போய் வாங்கணுமா...’’ ‘‘ம்ம்...’’‘‘குடிக்கலாமா..?’’
அப்பாவின் கண்களில் இச்சை தெரிந்தது. நர்சைக் கேட்டேன். இரண்டு விதமாகவும் புரிந்துகொள்கிற மாதிரி தலையை ஆட்டினாள். ‘‘வாங்கிட்டு வரேன்பா...’’குணா என்னை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். ‘‘சாப்பாட்டு காசை மிச்சம் பிடிக்கப் போறியா டீயாக் குடிச்சு..?’’ ‘‘அப்பாக்கு...’’‘‘ஒங்கப்பாரை நான் பார்க்கணுமே..?’’
‘‘உன் வியாபாரம்..?’’ ‘‘இப்ப அது வந்துரும். சொல்லிட்டு வரேன்...’’ ரூபாயை நீட்டினால் மறுத்தாள். ‘‘இந்த ஒரு டீக்குக் காசு வேணாம்...’’ ‘‘ஏன்..?’’
‘‘அப்பாக்குன்னு சொன்னியே...’’ சில பூக்கள் தாமாகவே மலர்கின்றன. யாருக்காகவும் எதற்காகவும் இல்லாமல். அதன் அழகே அப்படி மலர்வதில்தான் என்பது போல். அப்பா டீயை ரசித்துக் குடித்தார். ‘‘நல்லா இருக்குடா...’’ ‘‘ம்ம்...’’ ‘‘இதான் நீ வழக்கமா குடிக்கிறதா..?’’
‘‘ஆமா...’’ கண்களை மூடிக் கொண்டார். பக்கத்தில் உட்கார்ந்திருப்பதில் ஒரு அலுப்பும் வந்தது. டாக்டர் ரவுண்ட்ஸ் வரும்போது இஷ்டமிருந்தால் நின்று பேசுவார். இல்லாவிட்டால் கூட வரும் நர்சிடம் விசாரித்துக்கொள்ள வேண்டியதுதான்.அப்பாவின் கை மீண்டும் காற்றில் அலைந்து என்னைப் பற்றிக்கொண்டது. நான் அருகில்தான் இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அவர் செய்யும் யுக்தி என்று மனசுக்குப் புரிந்தது.
இந்த நான்கு நாட்களில் நாங்கள் பேசிக் கொண்டதுதான் அதிகம் என்று தோன்றியது. வீட்டில் இருந்தபோது அவரும் நானும் பேசிக் கொள்வோமா என்றே ஒரு குழப்பம். காலை ஏழு மணிக்கு ஆபீஸ் போய் விடுவேன். நடுவில் போன் விசாரிப்பு எதுவும் கிடையாது. மாலை நினைத்த நேரம் வீடு திரும்புவேன். ஏதாவது சாப்பிட வைத்திருப்பதை நான் தனியே அமர்ந்து சாப்பிடுவேன். யாரோ சற்று உரத்த குரலில் கூப்பிட்ட பிரமை. எதிரே பார்த்தால் குணா.‘‘சர்த்தான்... பேசன்ட்டை வச்சுகிட்டு தூங்கறியா..?’’ சிரித்தாள்.
‘‘அப்பா... இவங்கதான் டீ...’’ ‘‘அப்பா... நான் குணாப்பா...’’ அப்பா சிரித்தார். எப்போதுமே அந்நியர்களுடன் சட்டென்று ஈஷிக் கொண்டு விடுவார். நாலைந்து கேள்விகள் வைத்திருப்பார். அடுத்த முறை எப்போது பார்த்தாலும் அதே தகவல்களை ஞாபகமாய் சொல்லி விசாரிப்பார். என் நட்பில் இருந்த எதிராளி அப்பா கட்சிக்குத் தாவி விடுவார்.எனக்கு இம்மாதிரி எதுவும் ஒத்து வருவதில்லை. ஏனென்றே புரியவில்லை. இப்போது குணாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கும்போது என்னை சுய விமர்சனம் செய்து கொண்டிருந்தேன்.
நெருங்கிய நண்பன் வீடு கட்ட ஆரம்பித்து முடிவடையும் சமயத்தில் பணப்பிரச்னையில் மாட்டிக்கொண்டான். தேர்ந்தெடுத்த இரண்டு மூன்று பேரிடம் மட்டும் உதவி கேட்டான். என்னால் உதவ முடியாத சூழல். ஆனால், வேறு ஏதாவது... அட்லீஸ்ட் கடனாவது வாங்கிக் கொடுத்திருக்கலாம். ‘‘இல்லியே...’’ என்று என் கஷ்டத்தை சொன்னதும் அவன் பெரிதுபடுத்தவில்லை. பிறகு அவன் பட்ட சிரமம் வேறு ஒருவர் மூலம் தெரிய வந்தபோது நொந்து போனேன்.
குணா என் எதிரே நின்று கையைத் தட்டினாள். ‘‘மறுபடி தூக்கமா..?’’ என் கண்கள் கலங்கி இருந்ததைப் பார்த்துவிட்டாள். ‘‘அப்பாருக்கு நல்லாயிரும்... என்னமா பேசுறாரு. அவருக்கு நூறு ஆயுசு போட்டிருக்கு...’’ ‘‘அதில்லை...’’
‘‘எதுனாச்சும் போட்டு மனசை ஒழப்பிக்கிறியா..?’’ குணாவின் குரலில் என்ன ஒரு தீர்க்கம். துல்லியமான கணிப்பு. என்னையும் மீறிச் சொல்லிவிட்டேன். நண்பன் கடன் கேட்டபோது தராதது... அப்பா, தங்கையிடம் கூட ஒரு இடைவெளி விட்டு நிற்பது... ‘‘நான் ஏன் இப்படி இருக்கேன்னு...’’
‘‘ம்ஹும்... இதெல்லாம் விட வேற ஏதோ பெருசா உன்னைப் புரட்டிப் போடுது. அது என்ன... சொல்லலாம்னா சொல்லு..?’’ குணாவையே வெறித்தேன். இவள் டீக்காரியா அல்லது மனோதத்துவக்காரியா. ‘‘ம்ம்... அவ லவ்வை நான் ஏத்துக்கல...’’
‘‘இப்பவும் உனக்காக காத்துகிட்டு இருக்காங்களா..?’’ ‘‘ஆமா...’’ ‘‘இந்த ஆம்பளைங்க புத்தி இருக்குதே... கெஞ்சினா மிஞ்சுவாங்க... மிஞ்சினா கொஞ்சுவாங்க...’’ ‘‘நான் அப்படி இல்ல...’’
‘‘ஒண்ணு சொல்லட்டுமா... என் கணிப்பு தப்பாது. ஒனக்கு அடிப்படையாவே எப்பவும் ஒரு குழப்பம். சந்தேகம். திட புத்தி இல்லை. அது தப்பில்ல. ஒவ்வொருத்தர் குணம் அப்படி. சிலபேர் தெளிவாயிருவாங்க. சிலர் லாஸ்ட் வர குழப்பிகிட்டே...’’ என்ன சொல்கிறாள்? அவளையே பார்த்தேன்.‘‘வாழ்க்கை எப்பவும் ரோடு போட்டு வச்சிருக்காது. நாமதான் நம்ம ரூட்டுக்கு ரோடு போட்டுக்கணும். புரியுதா... நீ புத்திசாலி. கப்புனு புடிச்சுக்குவே. வா... ஒரு டீ குடிச்சா எல்லாம் சரியாயிரும்...’’அழைத்து விட்டு கண்ணடித்தாள்.
‘‘ஆனா, இந்த டீக்கு துட்டு உண்டு. டபுள் ரேட்டு. உனக்கு புத்தி சொல்லியிருக்கேன்ல..?’’ பரபரவென்று நகர்ந்து போய் விட்டாள்.போகுமுன் அப்பாவிடம் ‘‘நல்லாயிருவ நீ... சீக்கிரமே...’’ என்று மறக்காமல் சொல்லிவிட்டு.டீ வாசனை இன்னமும் காற்றில் தெரிந்தது.
ரிஷபன்
|