ஓய்வு பெற்றார் லேடி தெண்டுல்கர்!
இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் தூண், லேடி தெண்டுல்கர், மகளிர் கிரிக்கெட்டின் வழிகாட்டி, உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீராங்கனைகளில் ஒருவர்... எனப் புகழப்படுபவர், மிதாலி ராஜ். கடந்த ஜூன் 8, 2022-ம் தேதி அன்று அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக மிதாலி ராஜ் அறிவித்ததுதான் கிரிக்கெட் உலகின் ஹாட் நியூஸ். அனில் கும்ப்ளே, விவிஎஸ் லக்ஷ்மண்... என பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் மிதாலியின் ஓய்வுக்கு வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
 இந்நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜின் பயணத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜோத்பூர் நகரில் வசித்து வந்த ஒரு தமிழ்க்குடும்பத்தில் பிறந்த மிதாலி துரைராஜின் வயது 39. மிதாலியின் தந்தை துரைராஜ் இந்திய விமானப் படையில் பணியாற்றியவர். அம்மா லீலா ராஜ். பிறந்தது ஜோத்பூர் என்றாலும் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில்தான் படித்தார்.
 சிறுமி மிதாலிக்கு கிரிக்கெட்டைவிட பரதநாட்டியத்தில்தான் ஆர்வம் அதிகம். ஆனால், பத்து வயதிலேயே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டார். கிரிக்கெட் அவருக்குப் பிடித்துப் போகவே மற்றதெல்லாம் மிதாலிக்கு இரண்டாம்பட்சமாக மாறியது. தீவிர வேட்கையுடன் கிரிக்கெட் விளையாடிய மிதாலி, 14 வயதிலேயே ரயில்வே மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துவிட்டார். தனித்துவமான வலது கை ஆட்டக்காரராகத் திகழ்ந்த மிதாலி, சுழற்பந்து வீச்சாளராகவும் இருந்தார்.
 ரயில்வே அணியில் ஆட ஆரம்பித்த நாட்களிலேயே, உள்ளூர் போட்டிகளில் யாராலும் தொடமுடியாத ஓர் இடத்தைப் பிடித்தார் மிதாலி. அப்போது அவரை மிஞ்ச இந்தியாவில் இன்னொரு கிரிக்கெட் வீராங்கனை இல்லை. அதனால் 16 வயதிலேயே தேசிய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. ஜூன் 26, 1999-ம் வருடம், அதாவது 17-வது வயதில் மில்டன் கீன்ஸ் மைதானத்தில் அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்கினார் மிதாலி.
இந்தப் போட்டியில் ஓப்பனிங்கில் இறங்கிய அவர், 114 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம், அறிமுகமான போட்டியில் சதமடித்தவர்களில் ஒருவர் என்ற சிறப்பைப் பெற்றார். இதுவரை 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் மிதாலி, 7,805 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 7 சதங்களும், 64 அரைச்சதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 125 ரன்களை அடித்திருக்கிறார். தவிர, இந்திய மகளிர் அணி மட்டுமல்லாமல் ஆசியா வுமன் XI, ஏர் இந்தியா வுமன், இந்தியா ப்ளூ வுமன், வெலோசிட்டி போன்ற அணிகளிலும் விளையாடியிருக்கிறார். ஒருநாள் போட்டியில் மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஜொலித்தார் மிதாலி.
ஆம்: ஜனவரி 14, 2002ம் வருடம் லக்னோ மைதானத்தில் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட்டில் களமிறங்கினார் மிதாலி. இதில் 2 ஓவர்கள் வீசி, 7 ரன்களை விட்டுக்கொடுத்தார். நான்காவது ஆளாக பேட்டிங் செய்த அவர், ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மிதாலி, 699 ரன்களைக் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும், 4 அரைச்சதங்களும் அடங்கும்.
செப்டம்பர் 30, 2021ம் வருடம் கராரா மைதானத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக கேப்டன் பொறுப்பில் விளையாடியதுதான் அவரது கடைசி டெஸ்ட் போட்டி. முதல் இன்னிங்ஸில் 86 பந்துகளைச் சந்தித்து, 30 ரன்களை அடித்தார். இந்தப்போட்டியில் மிதாலி பந்து வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து டி20 போட்டிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார் மிதாலி.
ஆகஸ்ட் 5, 2006ம் வருடம் டெர்பி மைதானத்தில் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக தனது முதல் டி20 போட்டியில் களமிறங்கினார் மிதாலி. இதில் இந்திய மகளிர் அணிக்கு கேப்டனும் மிதாலிதான். இந்தப் போட்டியில் மூன்றாவது ஆளாக பேட்டிங் செய்த அவர், 37 பந்துகளைச் சந்தித்து, 28 ரன்களை அடித்தார்.
அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 97 ரன்களை அடித்துள்ளார். மார்ச் 9, 2019ம் வருடம் கவுஹாத்தியில் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக விளையாடியதுதான் மிதாலியின் கடைசி டி20 போட்டி. இந்தப் போட்டியில் நான்காவது ஆளாக பேட்டிங் இறங்கிய அவர், 32 பந்துகளைச் சந்துத்து, ஆட்டமிழக்காமல் 30 ரன்களை அடித்திருந்தார். இதுவரை 89 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் மிதாலி, 2,364 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 17 அரைச்சதங்கள் அடங்கும்.
இதுபோக அனைத்துவிதமான சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டிலும் அதிக ரன்களைக் குவித்தவர், மிக இளம் வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீராங்கனை, பெண்களுக்கான ஒருநாள் போட்டியில் அதிக வருடங்கள் விளையாடியவர் மற்றும் அதிக ரன்களைக் குவித்தவர், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 7 முறை அரைச் சதம் அடித்தவர், மிக இளம் வயதில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்தவர், கேப்டனாக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர், டி20 போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்த முதல் இந்தியர், மகளிர் உலகக்கோப்பைக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணிக்கு அதிக முறை கேப்டனாக இருந்தவர், 2017-ம் வருடம் இங்கிலாந்தில் நடந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வரை இந்திய மகளிர் அணியை அழைத்துச் சென்றவர்... என மிதாலியின் சாதனைகள் நீள்கின்றன.
தவிர, பத்மஸ்ரீ, அர்ஜுனா விருது, இந்தியாவில் விளையாட்டுக்காக வழங்கப்படும் உயரிய விருதான கேல்ரத்னா உட்பட ஏராளமான விருதுகளையும், கௌரவங்களையும் தன்வசமாக்கியிருக்கிறார் மிதாலி.இதுவரை மிதாலி திருமணம் செய்துகொள்ளவில்லை. ‘‘என்னுடைய இளம்பருவத்தில் திருமணம் குறித்த எண்ணங்கள் வந்தது. ஆனால், இப்போது திருமணமான ஜோடிகளைப் பார்க்கும்போது அந்த எண்ணம் தோன்றுவதில்லை.
தனியாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது...’’ என்று தனது திருமணம் குறித்து சொல்லியிருக்கிறார் மிதாலி. ஆனால், திருமணம் செய்துகொண்டு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பியுங்கள் என்று அவரது ரசிகர்கள் மிதாலியிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். மிதாலியின் வாழ்க்கையைத் தழுவி ‘சபாஷ் மிது’ என்கிற இந்திப் படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்ரீஜித் முகர்ஜி. இதில் மிதாலியாக நடித்திருக்கிறார் டாப்ஸி. வரும் ஜூலை 15-ம் தேதி படம் வெளியாகவிருக்கிறது.
த.சக்திவேல்
|