அரண்மனை குடும்பம்-23
ஜல்லி ‘பீதாம்பரஜாலம்’ என்று சொன்ன சொல் போதிமுத்துவை வாயைப் பிளக்கச் செய்துவிட்டது. “மாயாஜாலம் கேள்விப்பட்ருக்கேன்... அதென்ன ஜல்லி பீதாம்பர ஜாலம்..? நீயும் அடிக்கடி சொல்லிட்டே இருக்க... என்ன அது? புதுசா இருக்குதே?” என்று பதில் கேள்வி கேட்டான். “உனக்கு எல்லாம் புதுசுதான்... இப்ப எதுவும் பேசாம என்கூட வா... இனிமே பணம் கிடைக்குதுன்னு ஆழம் தெரியாம காலை விடாதே...” “ஆமாம் ஜல்லி... இது எனக்கு பெரிய பாடம்! இப்ப நினைச்சாலும் திக்குங்குது... நல்ல நேரத்துல நீ வந்தே...” “அப்படியெல்லாம் நல்ல நேரம் வந்துடல... அவசரப்படாதே! அவங்களுக்கு கொஞ்ச நேரத்துல சுயபுத்தி வேலை செய்ய ஆரம்பிச்சிடும். அதுக்கப்புறம் உன்னப் பிடிச்சு விசாரிச்ச விஷயம் எப்படி வேணா போகும்.
 இப்போதைக்கு நீயும் சரி, நானும் சரி மண்டப்பாறைக்குப் போய் அங்க இருக்கற குகைக்குள்ளார பதுங்கிடுவோம்... ஒரு நாலு நாளைக்கு நீ வெளிய வராத. என்ன எவனும் எதுவும் செய்ய முடியாது... இந்த நாலு நாள்ள என்ன நடக்குதுன்னு பாப்போம்...”“அதுவும் சரிதான்... ஆமா இந்த இருட்டுல மண்டப்பாறைக்கு எப்படி போக முடியும்..?” “எனக்கெல்லாம் ராத்திரிலதான் சோலியே... பயப்படாம கூட வா! என் குருவான மாரப்ப வாத்யார் இப்ப அங்கதான் இருக்காரு. அவரப் பாக்கவும் கால்ல விழுந்துடு... ஆரம்பத்துல வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டுவாரு. நீ கண்டுக்காதே. அவரெல்லாம் சித்தர் சாமி மாதிரி...” “அப்ப நாம இந்த இருட்டுல மண்டப்பாறைக்கு போகப்போறோமா?”
 “ஆமா... ஏழு மைல் தூரம்! உக்காந்து உக்காந்துதான் போகணும். விடியக் கருக்கலாயிடும். வழியில உடும்பும் தேவாங்கும் ஆப்ட்டா அது நம்ம அதிர்ஷ்டம்...” “இருட்டுல என்னத்த தெரியும்?” “தெரியும்பார்... வெரசா நடைய போடு. ஆமா லட்ச ரூவாய வெச்சிருந்தியே... அது இப்ப உன்கிட்ட இருக்கா... அவங்ககிட்டயா?” ‘‘அதத்தான் முதல்ல புடுங்குனாங்க... நல்லவேளை பாம்புத் தோலு, விஷக் குப்பியெல்லாம் என் குடிசைல இருக்குது. அது இருந்திருந்தா அதையும் பிடுங்கி அதுக்கொரு கேஸ் போட்ருப்பானுங்க...” “விடு... இந்த லட்சம் போனா என்ன? நம்மகிட்ட இருக்கற வித்தைக்கு கோடிலயே சம்பாதிக்கலாம்... அதுவும் உனக்கு பணத்தைக் கொடுத்த அந்த முதலாளிகிட்ட இருந்தே...” “அப்புடியா..?”
“ஆமா... கொலை செய்ய உன்னை ஏவுனவன் யார்னு தெரிஞ்சா போதும்... அவனை நாம வெச்சி செய்யலாம்...” “அதான் தெரியாதே... இந்த சதீஷ் யாரு... என்ன... எதுன்னுல்லாம் எதுவுமே சொல்லலியே...” “அவன் சொல்லாட்டி என்ன... நாம கண்டுபிடிப்போம்...”
“முடியுமா? போலீஸ் மாதிரியே பேசுறியே..?”
“முடியுமாவா..? சண்டிக் கொரளிக்கும், ரத்த சாத்தனுக்கும் படையல் போட்டா போதும்... நாம எதையும் சாதிக்கலாம்...” இருவரும் பேசிக்கொண்டே ஏற்காடு அடிவாரத்தில் இடப்பக்கமாய் கும்மிருட்டுக்குள் ஒரு ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினர்.
கால்கள் இடறாமல் இருக்க ஜல்லி ஒரு டார்ச்சை எடுத்து அடிக்கவும் அவர்கள் முன்னே மூன்று மீட்டர் தூரத்துக்கு ஒரு வட்ட வெளிச்சம் விழுந்து பாதையும் புலனாயிற்று. விண்ணில் இருந்தபடியே முக்கால் அளவுக்கான நிலவும், சில பல நட்சத்திரங்களும் அவர்கள் நடப்பதை வேடிக்கை பார்த்தபடி இருந்தன!செக்போஸ்ட்டில் சாமிக்கண்ணுவுக்கு தலைவலிக்கிற மாதிரி இருந்தது. தலையை ஈரக்கோழி போல சிலிர்ப்பிக் கொண்டார். கிட்டத்தட்ட அதேபோல நடந்து கொண்டார் கான்ஸ்டபிள் மாணிக்கம்.
நல்லவேளை... சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சதாசிவத்துக்கு தலைவலியெல்லாம் இல்லை. மாறாக தன்னை மறந்து புகை பிடித்துக்கொண்டிருந்தார். சூழலில் கும்மென்று ஒரே சிகரெட் புகை... நடுவில் லேசான இருமலுடன் “மாணிக்கம்... எங்கய்யா இருக்கே?” என்று ஆரம்பித்தார் சாமிக்கண்ணு. “சார்... இங்க... உங்ககூடதான் சார் இருக்கேன்...” என்று அவர்முன் போய் நின்றார் மாணிக்கம். ஏனோ மாணிக்கத்தை உற்றுப் பார்க்கத் தொடங்கினார் சாமிக்கண்ணு.
“என்ன சார்... ஏதோ புதுசா பாக்கற மாதிரி பாக்கறீங்க..?” “ஆமா... இப்ப இங்க என்ன நடந்துச்சி..?” “என்ன நடந்துச்சாவா... தெரியலியே... ஆங்..! ஒரு பாம்பு பிடிக்கற பிடாரனைப் பிடிச்சு வெச்சு விசாரிச்சிக்கிட்டிருந்தோம் சார்... அதுக்குள்ள மறந்துபோச்சு பாருங்க...” “ஆமாய்யா... மறந்துதான் போச்சு... தலையெல்லாம் ஒரு மாதிரி பாரமா இருக்குதுய்யா... நெத்திப் பொட்டுல விண்விண்ணுன்னு வலி தெறிக்கிது... எல்லாம் அவன் விபூதி பூசிவிட்டதுல இருந்துதான்... இல்ல..?”
“ஆமா சார்... என் கைலகூட ஒரு வேர் துண்ட கொடுத்து பாக்கெட்ல வெச்சுக்குங்கன்னானே...” என்றபடி அந்த வேர்துண்டை வெளியில் எடுத்தார் மாணிக்கம். சதாசிவமும் புகைப்பதை நிறுத்திவிட்டு அவர்களைப் பார்த்து மெல்ல ஒரு சிரிப்பு சிரித்தார். “நீங்க என்ன சார் சிரிக்கிறீங்க..?” “சிரிக்காம... இன்னுமா உங்களுக்கு புரியல... வைத்யன்னு சொல்லிக்கிட்டு வந்தவன் நம்மளை எல்லாம் அப்படியே கட்டிப் போட்டுட்டான்யா...” “அப்படின்னா..?”
“சித்து வேலை காட்டி, அந்த பாம்பு பிடாரனைக் கூட்டிக்கிட்டு போயிட்டான்... இன்னுமா புரியல..?” “சித்து வேலையா..?” சாமிக்கண்ணு புருவம் இடுங்க நெற்றியில் சுருக்கம் விழ அதிரத் தொடங்கினார்.“ஆமாம் சார்... அவன் வந்து பேச ஆரம்பிக்கவுமே நாம எல்லாரும் ஆஃப் ஆயிட்டோம்... அவன் பேச்சுக்கு தலையாட்னோம். நல்லா ஞாபகம் இருக்குது... ஒரு அக்யூஸ்ட்ட சேர் போட்டு உக்காரவெல்லாம் சொன்னோம்...” “ஆமால்ல... எப்படிய்யா... எல்லாமே பெரிய மாய்மாலமா இல்ல..?”
“மாய்மாலமேதான்... பல பஸ் ஸ்டாண்டுல பவுடர் பார்ட்டின்னு சில பார்ட்டிங்க திரிவாங்க... ஒரு சிட்டிகை மயக்க பவுடரை எடுத்து முகத்துக்கு நேரா ஊதுவாங்க... அப்புறம் நமக்கு நம்ம ஞாபகமே இல்லாமப் போயிடும். அந்த சமயத்தை பயன்படுத்தி நம்ம சூட்கேஸ்ல இருந்து எல்லாத்தையும் சுட்டுக்கிட்டு போயிருவாங்க. ஈரோடு, கோயமுத்தூர், அவினாசி பஸ்ஸ்டாண்டுல இப்படி பல தடவை நடந்திருக்கு. கேள்விப்பட்டதில்லையா..?” “அப்ப இங்க வந்தவன் அப்படி ஒருத்தனா?”
“அதுல என்ன சந்தேகம்..?” “அட... இப்படி ஏமாந்துட்டோமே...” “விட்டுத்தள்ளுங்க... குலசேகர ராஜா சார் கூட அவனை விட்றுங்கன்னு சொன்னப்ப நீங்க கேக்கல. இப்ப அவன் கூட்டாளி வந்து நோகாம கூட்டிக்கிட்டு போயிட்டான்... நல்லவேளை... நீங்க எஃப் ஐ ஆர்ன்னு எதையும் போடலன்னு நினைக்கறேன். எந்த பிரச்னையுமில்ல... மேல போய் பாடிய டிஸ்போஸ் பண்ணிட்டு அடுத்து ஆகவேண்டியத பாருங்க...
இங்க நமக்கு நடந்தது வெளிய தெரிஞ்சா நமக்குதான் கேவலம்...” என்ற சதாசிவம் எழுந்து தன் தொப்பியை எடுத்து அணிந்துகொண்டு உடல் மொழியாலேயே வருகிறேன் என்பது போல் செக்போஸ்ட்டை விட்டு வெளியேறினார்.சாமிக்கண்ணுவுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது! “என்ன சார்... இப்படி ஆயிடிச்சேன்னு சங்கடமா இருக்கா..?”
“சங்கடமா மட்டுமா... வெக்கமா இருக்குய்யா... இவர் என்னடான்னா மயக்கப் பொடி அது இதுன்னுட்டு போறாரு... இந்த பிடாரனும் சரி, இவனைக் கூட்டிக்கிட்டுப் போக வந்த கூட்டாளியும் சரி... ரொம்ப பயங்கரமானவங்கய்யா... இவங்கள போய் விட்டுட்டோமேய்யா...” “சார்...விடுங்க சார்... நம்ம கண்ணுல படாமலா போயிடுவாங்க... அப்ப சேர்த்து வெச்சு வெளுத்துடலாம் சார்...” “ஆமாம் மாணிக்கம்... இவன்லாம் ஒரு பேங்குக்கு போய் இப்படி பொடியைப் போட்டு, எல்லார் கண்ணையும் கட்டி அங்க இருக்கற பணத்தை ஆட்டைய போட்டா என்னய்யா பண்ணமுடியும்..?”
“ஒண்ணும் பண்ணமுடியாது சார்...”“இது ஒருவகை மிஸ்டிக் டெக்னிக்... இந்த கேஸையும் சரி, அவன்களையும் சரி... நான் விடவே மாட்டேன்...” சாமிக்கண்ணு சொல்லும்போது ஒரு உக்ரம் நன்கு புலப்பட்டது!ஏற்காட்டு பங்களாவில் படுக்கையில் தூக்கம் வராமல் மேலேயே பார்த்துக் கொண்டிருந்தாள் ரத்தி. பக்கத்தில் ஒரு டேபிள் மேல் லேப்டாப் இருக்க அதில் தனக்கு வந்திருந்த மெயில்களுக்கெல்லாம் பதில் போட்டு முடித்த நிலையில் அதை மூடிவிட்டு எழுந்து வந்த கணேசன், ரத்தி விழித்தபடியே இருப்பதைப் பார்த்து அவள் அருகில் சென்று அமர்ந்தான்.
அந்தப் பக்கமாய் தியா ஒரு பொம்மையை மார்பில் அணைத்தபடியே தூங்கி விட்டிருந்தாள்.“என்ன ரத்தி... தூங்கலையா?” “தூக்கமே வரமாட்டேங்குது ஜீ...” “எதையாவது நினைச்சுக்கிட்டேயிருக்கே நீ... அதான் உன்னால தூங்கமுடியல...”“அப்படி எதாவது ஒண்ணு நடந்துக்கிட்டே இருக்கே... நான் என்ன பண்ணுவேன் ஜீ..?” “பைத்தியம்... எதுவும் நடக்கல... சொல்லப்போனா நல்லதுதான் நடந்துருக்கு. தியா இவ்வளவு சீக்கிரம் குணமாகி இப்படி நிம்மதியா தூங்கறத பார்த்தா என் மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..?”
“உண்மைதான்ஜீ... அந்த சந்தோஷம் என்கிட்டயும் இருக்கு. அதே சமயம் பயமாவும் இருக்கு...” “எதுக்கு பயப்பட்றே? இப்ப என்ன நடந்துடிச்சி..?”“இதுவரை நடக்கல... இனி நடந்துருமோன்னுதான்...” “நீ ரொம்ப கற்பனை பண்ணிக்கறே... அப்புறம் கொழப்பிக்கறே... நான் இருக்கறவரை உங்களுக்கு எதுவும் ஆகாது... அத முதல்ல நீ நம்பு...” “நான் ஒண்ணு சொன்னா கேப்பீங்களா..?”“சொல்லு...”
“பேசாம நாம இங்க இந்த ஏற்காட்லயே இருந்திடலாமா..?”
“ஏன்... சேலத்துல நம்ம பங்களாவுக்கு என்ன குறை..?” “இல்ல... இந்த க்ளைமேட்... இந்த தனிமை... இதெல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு. தியாவையும் இங்க எதாவது ஸ்கூல்ல சேர்த்துடலாம்...”
“பைத்தியம்... என்னோட பிசினஸ் ஆக்டிவிட்டீஸ்க்கு சேலம் மாதிரி சிட்டியே போதல... எல்லாரும் சென்னைக்கு வந்துடுங்க... பெங்களூருக்கு வந்துடுங்கன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க. நீ என்னடான்னா ஒரு வெக்கேஷன் லைஃபை, ரெகுலர் லைஃபா ஆக்கிக்க சொல்றே... பேசாம படு. டயமாச்சு பார். மிச்சத்த காலைல பேசிக்கலாம்...”
சர்வ அலட்சியமாக கணேசன் பேசிவிட்டு பக்கத்தில் இருந்த வாட்டர் பாட்டிலில் இருந்து ஒரு மடக்கு தண்ணீரையும் எடுத்து குடித்தவன் அப்படியே போய் படுக்கையில் விழுந்து விளக்கையும் அணைத்தான்!அதிகாலை பிரம்மமுகூர்த்த வேளை... ஜல்லியும், போதிமுத்துவும் மண்டப்பாறை குகையை அடைந்து விட்டிருந்தனர்.உள்ளே குகைப்பகுதியில் திபுதிபுவென்று தீ எரிவது குகைச்சுவர்களின் பிம்பத்தில் தெரிந்தது.எட்டிப்பார்த்த போதிமுத்துவுக்குதிக்கென்றது!
(தொடரும்)
‘‘கிரகண சமயத்தில் அந்த சர்ப்பம் வராமல் போகவும் வாய்ப்பிருக்கிறது...’’ என்று நாடி ஜோதிடர் சொன்னது எதை வைத்து என்றும் ஒரு கேள்வி எழும்பியது. அதற்கும் அவரே பதில் கூறலானார். “நம்ம கோயில் இருக்கற சன்னதி தெருவுலதான் கோயில் குருக்கள் குருநாதனோட வீடு இருக்கு. குருநாதன் இப்ப படுத்த படுக்கையா இருக்கார். அவர் ஜாதகத்தை குருநாதனோட பிள்ளை மணிகண்டன் என்கிட்ட காட்டி அப்பாவோட நிலையைப் பத்தி கொஞ்சம் சொல்லச் சொன்னான். அந்த ஜாதகத்தை நான் ஆராய்ந்து பார்த்த அளவுல அவர் நாளைய கிரகண காலத்தைத் தாண்டமாட்டார்.
கிரகணம் தொடங்கறதுக்கு முந்தி இருக்கற முப்பது நிமிஷங்கள்ல எப்ப வேணா அவர் மூச்சு அடங்கலாம். அப்படி நடந்துட்டா கிரகண தீட்டோட, சாவுத் தீட்டும் சேர்ந்துடும். இப்படி தீட்டு இருக்கற சமயங்கள்ல சர்ப்ப ரூபத்துல எந்த சித்த புருஷரும் வழிபாட்டுக்கு வரமாட்டாங்க. அதை வெச்சுதான் நான் சொல்றேன்...” என்று காரணத்தையும் விளக்கினார். ஜோதிடர் சொல்லவுமே கனபாடிகள் நேராக அசோகமித்திரனைத்தான் பார்த்தார்.
அசோகமித்திரன் அதைக்கேட்டு சன்னமாகச் சிரித்தார். “என்ன சார் சிரிக்கறேள்... நீங்க வருத்தம்ல படணும்?” என்றார் கனபாடிகள். “எனக்கென்னவோ என்னை சமாதானப்படுத்தறதுக்காக இவர் வந்த மாதிரி இருக்கு. சர்ப்ப வழிபாடுங்கறதே ஒரு நம்ப முடியாத விஷயம். அதுக்கு இப்பவே குருக்களோட சாவு... அதனால தீட்டுன்னு சப்பக்கட்டு கட்ற மாதிரிதான் எனக்கு படுது சாமி. இந்த மாதிரி ஏதாவது நடந்து ஏமாற்றம்தான் மிஞ்சும்னு ஒரு எண்ணம் எனக்குள்ள இல்லாம இல்லை. அதை நினைச்சேன், என்னையறியாம சிரிப்பு வந்துச்சி...” என்றார் அசோகமித்திரன்.
ஜோதிடர் கற்பக விநாயகம் முகம் அதைக்கேட்டு சலனித்தது. “என்ன ஜோசியரே... இவருக்கு நீங்க என்ன பதில் சொல்லப்போறீங்க..?” என்று கேட்டார் கனபாடிகள்.
“இவருக்கு நான் எதுக்கு பதில் சொல்லணும் சாமி..? நான் வந்தது உங்களப் பாக்க... உங்களோட பேச! பேச வந்ததுலயும் பாதிதான் சொல்லியிருக்கேன். மீதியையும் சொல்லிட்றேன்.
இந்த கிரகண சமயத்துல எவ்வளவுக்கெவ்வளவு பூஜை புனஸ்காரத்தோட வீட்டோட இருக்கோமோ அவ்வளவு நல்லது. நீங்க எப்பவும் அந்த சமயத்துல காயத்ரி ஜெபத்துல இருப்பீங்க. இந்த தடவையும் நீங்க அப்படித்தான் இருப்பீங்கன்னு நினைக்கறேன். ஆனா, இப்ப யாரும் கிரகண சமயத்துல தியானம், பூஜைன்னு அடங்கி இருக்கறதில்ல. வெளிய எப்பவும் போல நடமாட்றாங்க. இந்த தடவை நம்ம கோயில்லயும் சர்ப்ப வழிபாடு இல்லாம போகப்போகுது. குருக்களே காலமாகப் போறதால குருக்களோட தகனக்கிரியைக்குப் பிறகுதான் கோயில் நடை திறந்து புண்யாவசனம் பண்ணப்பட்டு அப்புறமா பூஜை நடக்கும். இது நம்ம ஊருக்கு ஒரு பின்னடைவுதான். ஒரு பெரிய வெள்ள சேதம், அப்புறம் நூற்றுக்கணக்குல ஆடு மாடுகளோட சாவு, இடியாலயும் மரணம்னு வரப்போற நாட்களை நினைச்சா கலக்கமா இருக்கு. பூஜை நடக்காதது மட்டுமில்ல... ஊருக்குள்ள பல தப்புகள் நடக்க ஆரம்பிச்சிடுச்சி. இதை உத்தேசிச்சு என்கிட்ட இருக்கற சிவ நாடியில அகத்தியர் வாக்கை கேட்டேன். ஊர்ல ஒருவர் பாக்கி இல்லாம ஒண்ணுசேர்ந்து மகாசண்டி ஹோமம் பண்ணி தேவதைகளைத் திருப்தி செய்தா இந்த பெரிய உத்பாதம் சிறிய அளவா போய் ஊர் சுபிட்சமாயிடும்னார். இதை சொல்லத்தான் வந்தேன்.
அப்புறம் ஒரு முக்கிய விஷயம்... குருக்கள் நாளைக்கு காலமாகப் போறத நான் அவர் மகன்கிட்ட சொல்லல. உங்ககிட்ட மட்டும்தான் சொல்றேன். நீங்களே பிரசிடென்ட்டைப் பார்த்து பக்குவமா சொல்லிடுங்க...” என்று சொல்லிவிட்டு புறப்படத் தயாரானார். “கற்பக விநாயகம்... ஒரு நிமிஷம்! நம்ப அசோகமித்திரன் சார் ஒரு ஆராய்ச்சியாளர். குறிப்பா சர்ப்பங்களைப் பற்றின ஆராய்ச்சில இப்ப இருக்கார். இவர் வந்திருக்கறதே நம்ப கோயில்ல கிரகண சமயத்துல சர்ப்பம் வந்து வழிபாடு செய்யப்போறத பாக்கத்தான்...
இப்ப நீங்க அது நடக்காதுங்கற மாதிரி சொல்லவும் ஏமாற்றமா மட்டுமில்ல, இந்த மாதிரி அமானுஷ்யமெல்லாமே ஒரு கட்டுக்கதைங்கற மாதிரி இவர் நினைக்கும்படியாயிடாதா?” என்று கனபாடிகள் கேட்ட மறு நொடியே, “இவர் நினைச்சா நினைச்சுட்டு போகட்டும் சாமி... அதனால பூமி சுத்தறதுலயோ, சூரிய சந்திரர் போக்குலயோ ஒரு மாற்றமும் ஏற்படப்போறதில்ல. நாம மட்டும் எதுக்கு வருத்தப்படணும்..?
இருந்தாலும் சொல்றேன்... இவரோட சாமுத்ரிகா லட்சணப்படியும், இவர் என்னையும், இவரை நானும் பாத்த அந்த நேரப்படியும் (இப்படிச் சொல்லும் போது ஜோதிடர் கைக்கடிகாரத்தை ஒரு பார்வை பார்த்துக்கொண்டார்) பிரசன்ன ஆருட முறைல நான் சொல்றேன்... இவர் கூடிய சீக்கிரம் செத்துப் பிழைப்பார்.
அந்த அனுபவம் இவரை பெரிய அளவுல மாற்றும். அதன்பிறகு இவர் என்னை வந்து பார்க்கும்போது இவருக்கான நாடியில இவரோட முற்பிறப்பு, வரப்போற காலம்னு எல்லாத்தையும் நான்... இல்லையில்ல... என் வாக்குல வந்து அகத்தியர் சொல்வார். இப்ப நீங்க நம்ம ஊர்ல சண்டிஹோமம் நடக்க என்ன செய்யணுமோ அதைச் செய்யுங்க. நான் வரேன்...” ஜோதிடர் புறப்பட்டுவிட்டார். அசோகமித்திரன் என்ன நினைப்பார், எப்படி எடுத்துக்கொள்வார் என்கிற எதைப்பற்றிய கவலையும் அவரிடமில்லை. அவர் விலகவும் கனபாடிகள் அசோகமித்திரனிடம் ஆறுதலாகப் பேசத்தொடங்கினார். “என்ன சார்... இந்த ஊருக்கு என்கூட ஏண்டா வந்தோம்னு இருக்கா?”
“அப்படியெல்லாம் இல்லை. அந்த ஜோதிடரோட கான்ஃபிடன்ஸ் எனக்கொரு ஆச்சரியம். ஜோதிடம் பற்றி நான் நிறைய யோசிச்சிருக்கேன். அதை ஒரு விசித்ரமாதான் நினைக்கறேன். பாம்பு பூஜை செய்யும்கற விஷயம் இப்பவே இல்லேன்னு ஆயிடுச்சு. ஆனா, குருக்கள் கிரகணத்துக்கு முன்னால இறந்துடுவார்னு சொன்னார் பாருங்க... அதுல தெரிஞ்சிடும் இவரோட வண்டவாளம்...
அப்புறம் நானும் செத்துப் பிழைப்பேன்னு சொல்லியிருக்கார். சைக்கலாஜிக்கலா என்ன ஷேக் பண்ற ஒரு முயற்சியாதான் எனக்குத் தோணுது. ஆனா, நான் ஷேக் ஆகமாட்டேன்...” என்றார் அசோகமித்திரன் மிகுந்த மன உறுதியோடு...
இந்திரா செளந்தர்ராஜன் ஓவியம் : வெங்கி
|