பட்டையைக் கிளப்பும் பென்சில்
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் ஆஸ்தான ஆடை வடிவமைப்பு அத்தனையும் பென்சில் கட் ஸ்டைலில்தான் இருக்கும். அந்தக் காலத்தில் சரியான உடலமைப்பும், வளைவுகளும் கொண்ட ஒரு நடிகை மர்லின். அதனால் மர்லின் மன்றோவுக்குப் பொருத்தமாக பென்சில் கட் எனும் தையல் முறையில் உடைகளைத் தைத்துக்கொடுப்பது டிசைனர்களின் வழக்கம். அப்போது இந்த மாடல்களை ஹவர் கிளாக்(மணல் கடிகாரம்) ஸ்டைல் என்றும் சொல்வார்கள்.
 1940-50களிலேயே இந்த பென்சில் கட் ரொம்ப பெரிய டிரெண்டாக இருந்தது.இவ்வளவு பழமையான ஒன்று எப்படி இன்னமும் டிரெண்ட் பட்டியலில் உள்ளது? தவிர, ஏற்கனவே இருந்த டிசைன்களைப் பின்னுக்குத்தள்ளி யிருப்பதுதான் ஆச்சரியத்தின் உச்சம்.இதற்கு ஏன் பென்சில் கட் எனப் பெயர் வந்தது? இதை எப்படி அணியலாம்? யாருக்கெல்லாம் பொருத்தமாக இருக்கும்? போன்ற கேள்விகளை செலிபிரிட்டி ஃபேஷன் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட் ரேகா ராகுலிடம் அடுக்கினோம்.
 ‘‘நமது உடலை ஒல்லியாக, வளைவுகளுடன் காட்டக்கூடிய ஸ்டைல்தான் இந்த பென்சில் கட். எப்படி பென்சிலுடைய மரத்துண்டுகள்ல இருந்து எழுதற பாகம் மட்டும் சரியா வெளியே வருதோ, அதே பாணிதான் இதிலும் பின்பற்றப்படுகிறது. அதாவது உடைகளுக்கு வெளியே கை, கால்கள் கச்சிதமாக வெளியே தெரியும். பொதுவாகவே ஜீன்ஸ், காட்டன் பேன்ட்கள்ல பெல்பாட்டம், ஃபூட்கட், நேர் கட்னு நிறைய வெரைட்டிகள் வந்துட்டு இருந்துச்சு. ஆனால், எப்போ இந்த பென்சில் கட் வந்ததோ அப்போதிருந்து மத்த மாடல்கள் எல்லாம் காணாமல் போயிடுச்சு. இதற்குப் பொருளாதார ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி சில காரணங்கள் இருக்கு.
 பொருளாதாரக் காரணம் இந்த ஸ்டைல் உருவாக்கத்தில் ரொம்ப குறைவாக மெட்டீரியல்களைப் பயன்படுத்துவோம். உதாரணத்துக்கு, பெல்பாட்டம்களில் காலுக்குக் கீழே சம்பந்தமே இல்லாமல் அதிக அளவில் மெட்டீரியல்கள் தேவைப்படும்.ஆனால், உடல் அளவுக்கு ஏற்ற மாதிரி ஃபிட்டான டிசைன்களில் பென்சில் கட் வரும். மேலும் இதனுடைய உயரமும் கணுக்கால் அளவுக்கு மேலே தாண்டுவது கிடையாது. தவிர, ஜீரோ ஸ்ட்ரக்ச்சர் மற்றும் ஒல்லி பெல்லிதான் இப்போதைய டிரெண்ட். இதைத்தான் நிறையவே புரமோட் செய்றாங்க...’’ என்ற ரேகா, பென்சில் கட் டிசைனிங் உடைகளை யாரெல்லாம் அணியலாம் என்பது குறித்தும் விவரித்தார்.
‘‘ ஒல்லியாக இருக்கிறவர்கள் பென்சில் கட் உடைகளை அணிந்தால், அவர்களை மேலும் ஒல்லியாகக் காட்டும். அதே நேரத்தில் மணல் கடிகாரம் மாதிரி மேலே தோள்பட்டை பகுதி விரிந்தும், பின்பக்கம் சற்று எடுப்பாகவும் தெரிவதால் பெண்களுக்கே உரித்தான வளைவு, நெளிவுகளை இந்தப் பென்சில் கட் ஹைலைட் செய்து காட்டும். முக்கியமாக இப்போது இருக்கும் நிறைய ஒல்லியான பெண்களுக்கு மார்புப்பகுதிகளும் சரி, பின்பக்கமும் சரி எடுப்பாகத் தெரிவதில்லை.
அவர்களுக்கும் இந்த பென்சில் கட் வரப்பிரசாதம். அப்படியானால் உடல் பருமனான பெண்கள் அணிய முடியாதா? என்ற கேள்வி எழும். அவர்களுக்குத்தான் இது மிகப்பெரிய வரப்பிரசாதம். உடல் சற்று பருமனாக பூசினாற்போல் இருக்கிறவர்கள் பென்சில் கட் ஸ்டைலில் உடைகளை அணிந்தால் மார்புப் பகுதியையும், பின்பக்கப் பகுதியையும் எடுப்பாகக் காட்டி, வளைவுகளுக்குச் சிறப்பு சேர்க்கும். அதேபோல் சில பெண்கள் ஒல்லியாக இருந்தாலும் சரி, பருமனாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு இயற்கையாகவே பெண்மைக்குரிய வளைவுகள் இல்லாமல் ஆண்களைப்போல் நேராக உடலமைப்பு இருக்கும். அவர்களுக்கும் இந்த பென்சில் கட் செயற்கையான வளைவுகளைக் கொடுக்கும்...’’ என்ற ரேகாவிடம், ‘‘பென்சில் கட் டிசைனிங்கில் என்னென்ன உடைகள் உள்ளன..?’’ என்றோம்.
‘‘எத்தனையோ வெரைட்டிகள் வந்துடுச்சு. இதில் அக்காலம் முதல் இக்காலம் வரையிலும் சூப்பர் டிரெண்ட் என்றால் அது பென்சில் கட் ஸ்கர்ட்தான். மர்லின் மன்றோ காலத்திலிருந்து நம்ம ராஷ்மிகா மந்தனா வரையிலும்கூட பென்சில் கட் ஸ்கர்ட்கள் அணியாத ஹீரோயின்களே கிடையாது என்று சொல்லலாம். அதேபோல் கல்லூரிப் பெண்கள் முதல் அலுவலகம் செல்லும் பெண்கள் வரை, ஏன்- ஆண்களையும் சேர்த்து ஈர்த்திருக்கிறது பென்சில் கட் ஜீன்ஸ் மற்றும் காட்டன் பேன்ட்.
தவிர, பென்சில் கட் மேக்ஸி உடைகள், பென்சில் கட் காக்டெயில் உடைகள், ஃபார்மல் பென்சில் கட் சூட்கள்... என பென்சில் கட்டைப் பொறுத்தவரை நிறைய வெரைட்டிகள் இருக்கு. இதுபோக இன்னமும் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைக்காத சில வெரைட்டிகள் கூட இருக்கு. அதில் குறிப்பாக பென்சில் ஷர்ட் இன்னமும் இங்கே டிரெண்ட் ஆகலை.
சரியா இடைப்பகுதியில் ஷர்ட் குறுகி வரும். இதில் ‘V’ கட் கொடுத்த பென்சில் ஸ்கர்ட்கள்தான் இப்போதைய பெண்களின் ஃபேவரைட் சாய்ஸ். பென்சில் கட் டிசைன் உடைகள் 99 சதவீதம் வெஸ்டர்ன் உடைகளாகத்தான் இருக்கும். அதற்குரிய காலணிகளையும், ஆக்சஸரீஸ்களையும் சிம்பிளாகப் போட்டுக்கொண்டாலே உடைகள் ஹைலைட்டாகத் தெரியும்...’’ என்று அழுத்தமாக முடித்தார் ரேகா ராகுல்.
ஷாலினி நியூட்டன்
|