பி.சி.ஸ்ரீ ராம் அசிஸ்டெண்ட்... ஆனா, 16 வருஷங்களுக்குப் பிறகு இப்பதான் என் ஒர்க் வெளியில தெரிய ஆரம்பிச்சிருக்கு!



சொல்கிறார் ‘எஃப்.ஐ.ஆர்’ ஒளிப்பதிவாளரான அருள் வின்சென்ட்

‘‘ஒளிப்பதிவு தனித்து தெரிவதல்ல; கதையின் உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டும்...’’ என்கிறார் ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட். பி.சி.ஸ்ரீராமின் மாணவரான இவர் ‘ஜித்தன்’ ரமேஷ் நடித்த ‘ஜெர்ரி’  மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். சினிமாவில் நீண்ட காலம் இருந்தாலும் விஷ்ணு விஷால் நடித்து வெளியான ‘எப்.ஐ.ஆர்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்ததன் மூலம் அருள் வின்சென்ட் மீது புது வெளிச்சம் பாய்ந்துள்ளது.

கேமரா மீதான காதல் எப்படி ஆரம்பமானது?

எனக்கு சினிமா பேக்ரவுண்ட் எதுவும் இல்ல. ஆனா, எப்படியாவது சினிமாவில் நடிகனாகிவிட வேண்டும் என்று முயற்சித்து வந்தேன். காலேஜ் படிக்கும்போது சன் டிவியில் ஒளிபரப்பான ‘நீங்கள் கேட்ட பாடல்’ நிகழ்ச்சியில் உங்களுக்குப் பிடித்த பாடல் எது என்று தொகுப்பாளர் கேட்டதும், ‘அந்த அரபிக்கடலோரம்...’ பாடலைச் சொன்னதும், ‘அந்தப் பாடலுக்கு நடனமாட முடியுமா’ என்று கேட்டார்கள். நானும் யோசிக்காம டான்ஸ் பண்ணினேன்.

அந்த நிகழ்ச்சி சன் டிவியில் வெளியானதும் ஒரே நாளில் காலேஜ்ல ஹீரோவானேன். போற இடத்துல எல்லாம் அந்த நிகழ்ச்சியை சொல்லி நீங்க டிவில வந்தவர்தானேனு ஆசையா கிட்ட வந்து பேசினாங்க. சினிமா ஆசைல இருந்த எனக்கு அது புது தெம்பை கொடுத்துச்சு.காலேஜ் விட்டு வந்ததும், ரேடியோ சேனலில் இரண்டு வருடம் வேலை பார்த்தேன்.
மறுபடியும் லயோலாவுல விஸ்காம் பண்ணினேன். அதுக்கப்புறம் அசிஸ்டெண்ட் டைரக்டரா சேரலாம்னு பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர்னு மூணே முணு இயக்குநர்களை செலக்ட் பண்ணி அவுங்க ஆபீஸுக்கு மட்டும் ரவுண்ட் அடிக்க ஆரம்பிச்சேன். என்னுடைய முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கல.

அந்த சமயத்துல பி.சி.ஸ்ரீராம் சாரை தற்செயலா சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. என்னுடைய பயோடேட்டாவை வாங்கிப் பார்த்த பி.சி.சார், ‘ஜாயின் பண்ணிக்க’னு ‘டக்’னு சொல்லிட்டார். சார்கிட்ட ஆறேழு வருடம் இருந்தேன். அதுல சினிமாவுக்கானது மட்டுமல்ல, வாழ்க்கைக்குமான பாடமும் நிறையவே கிடைச்சது. அப்பாவாக, குருநாதராக, ஆசானாக எல்லாமுமாக பி.சி.சார் இருந்தார். சாக்பீஸ் எடுத்து கறுப்பு பலகையில் பாடம் எடுக்கும் வாத்தியாராக இல்லாமல், என்னுடைய போக்கில் இயல்பாகவே திறமையை வளர்த்துக்கொள்ள இடம் கொடுத்தார். சினிமா நாலெஜ் இல்லாதவங்க கூட சாரோட அணுகுமுறையால புத்திசாலியா மாறிடுவாங்க.

சாரிடமிருந்து வெளியே வந்ததும், கேமராமேனா ஒர்க் பண்ணிய படம் ‘ஜெர்ரி’. அந்தப் பட வாய்ப்பையும் எனக்கு பி.சி.சார்தான் வாங்கித் தந்தார். இயக்குநர் மெளலி சாரோட பிரதர் அந்தப் படத்தை இயக்கினார். மறைந்த கிரேசி மோகன் சார் முதன் முதலாக கதை, திரைக்கதை எழுதிய படம் அது. அந்தப் படத்துக்குப் பிறகு மகிழ்திருமேனி இயக்கிய ‘முன்தினம் பார்த்தேனே’ பண்ணினேன். கதிர் நடிச்ச ‘கிருமி’யும் நான் பண்ணிய படம்தான்.

‘எப்.ஐ.ஆர்’ அனுபவத்த சொல்லுங்களேன்?

‘எப்.ஐ.ஆர்’ என் வாழ்க்கையில மறக்கமுடியாத படம். ஏன்னா, இந்த மாதிரி ஒரு பெரிய வெற்றிக்காகத்தான் இவ்வளவு நாளா காத்திருந்தேன். சினிமாவைப் பொறுத்தவரை நாம் எவ்வளவு திறமையைக் காட்டி படம் பண்ணினாலும் ‘வெற்றிப் படமா’ என்றுதான் பார்ப்பாங்க. இருபது வருட பயணத்துல அந்த ஒரு தருணம் எனக்கு இப்பதான் அமைஞ்சது. பல இடங்களிலிருந்து ஃபோன் பண்ணி பாராட்டினாங்க. இந்த வெற்றி யும் சும்மா கிடைக்கல. மூணு வருஷம் மொத்த டீமும் வெறித்தனமா வேலை பார்த்தோம்.

படத்துல என் இருப்பை காட்டிக்கணும் என்பதற்காக எதையும் பண்ணலை. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானருக்கு என்ன வேணுமோ அதைத்தான் பண்ணினேன். கதையோட உணர்வுகளைப் பிரதிபலிப்பதுலதான் சினிமாட்டோகிராஃபியின் சக்ஸஸ் இருக்கு. தன்னை தீவிரவாதியா பார்க்கும் உலகத்துக்கு முன்னாடி தன் உணர்வுகளை ஆவேசத்தோடு கொட்டும் இளைஞனைக் காட்ட லென்சிங்ல கொஞ்சம் வித்தியாசம் பண்ணினேன். சினிமாவுல எவ்வளவு டெக்னிக்கலாக படம் பண்ணினாலும் ஆக்டர் முக்கியம். அதுக்காக நான் இதுல ஆக்டருக்கு முக்கியத்துவம் தர்ற மாதிரி டைட் ஃபிரேம்ல எடுத்தேன். அதை நிறைய பேர் கவனிச்சி பாராட்டினாங்க.

படத்துல என்னுடைய ஃபோட்டோகிராஃபி பேசப்பட இயக்குநர் மனு ஆனந்த் ஒரு முக்கிய காரணம். ஒரு சக கலைஞனாக ஃபுல் ஃப்ரீடம் கொடுத்தார். ஆர்ட் டிபார்ட்மென்ட்டும் கைகொடுத்தது. படத்துல எல்லா காட்சியும் 360 டிகிரியில இருக்கும். ரியல் லொகேஷனில் எடுத்ததால் லைட்டிங் பண்ணுவதற்கு வசதி இருக்காது. க்ளைமாக்ஸ் காட்சியை ஒரு கெமிக்கல் ஃபாக்டரியில் எடுத்தோம். அங்கு இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தியதிலை. நாங்க ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி ஷூட் பண்ணினோம்.

அது தாழ்வான மேற்கூரை உள்ள இடம். அங்கு லைட்டிங் பண்ணி படப்பிடிப்பு நடத்துவது சிரமம். அப்ப, ஃபைட் மாஸ்டர் சில்வா ஒரு சூப்பர் ஐடியா கொடுத்தார். வழக்கமா 180 ஷட்டர் ஸ்பீட்ல ஷூட் பண்ணுவோம்.  மாஸ்டர், ‘லோ ஷட்டரான 40 ல எடுக்கலாம்’ என்றார். இந்த லோ ஷட்டர் ஸ்பீட் ஹெவி லைட்டிங் பண்ண முடியாத இடங்களுக்கு யூஸாகும். விஷ்ணுவிஷால், ரெய்சா உட்பட எல்லோருமே அபாரமா ஒத்துழைச்சாங்க.  

சினிமா ஒளிப்பதிவாளருக்கு இருக்க வேண்டிய முக்கியமான குவாலிட்டி என்ன?

பேப்பர்ல இருக்கிறதை அப்படியே விஷுவலா கொண்டு வரணும். கதையை படிக்கும்போதே அந்த காட்சியை எப்படி படமாக்கினால் சிறப்பாக இருக்கும் என்ற ஐடியா கேமராமேனுக்குள் உதிக்க ஆரம்பிக்கணும். கதையை படிக்கும்போது குழப்பமில்லாமல் காட்சியை புரிஞ்சிக்கிற மனநிலைதான் ஒளிப்பதிவாளருக்கு இருக்க வேண்டிய முக்கியமான குவாலிட்டியா நான் பார்க்கிறேன்.

சினிமா டிஜிட்டலுக்கு மாறிவிட்ட நிலையில், கதை சொல்வதும், அதை அழகாகக் காட்டுவதும் எந்தளவுக்கு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது?

உண்மையில டிஜிட்டல் வந்ததால் எளிமையாகக் காண்பிக்க முடிகிறது. அவுட்புட் உடனடியாகத் தெரிவது பெரிய வரப்பிரசாதம். இப்ப, எல்லோரிடமும் செல்ஃபோன் கேமரா இருக்கிறது. எந்த ஒரு நிகழ்வையும் கையில் இருக்கும் செல்ஃபோன் கேமராவில் படமாக்கி, உடனே மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல முடிகிறது.

சினிமா என்பது பெரிய தளம் என்பதால் அதற்கு கொஞ்சம் கூடுதல் லைட்டிங் தேவைப்படும். இரவுக் காட்சி எடுப்பதாக இருந்தால் டிஜிட்டலில் ஈஸியாக எடுக்க முடியும். அதே காட்சியை ஃபிலிம்ல எடுப்பதாக இருந்தால் தனியாக லைட்டிங் பண்ணவேண்டி வரும். அந்த வகையில, டிஜிட்டல் நேச்சுராலிட்டியைக் கொண்டு வருகிறது.
கண்களுக்கு விருந்தளிக்கும் ஒளிப்பதிவை எந்த கூறு தீர்மானிக்கிறது?

கதை, கதை மாந்தர்கள் என்று வரிசைப்படுத்தலாம். ஷங்கர் சார் படங்களில் பெரிய லேண்ட் ஸ்கேப், உயரமான கட்டடங்களும் அழகைக் கொண்டு வரும். இன்னொரு பக்கம் லைட்டிங் மூலமாகவும் பிரம்மாண்டத்தை கொண்டு வரலாம். அடுத்து இயக்குநர் எழுதியுள்ள கதை. அதற்கு தகுந்த பட்ஜெட் இருக்கணும். வடசென்னையில் ஷூட் பண்ணுவதற்கும் அண்ணா நகரில் ஷூட் பண்ணுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

டிஜிட்டல் சினிமா வந்தபிறகு படமாக்கும் முறை மாறியிருக்கிறதா?

கண்டிப்பா. சினிமா ஃபிலிம்ல இருந்தப்ப இருந்த டிசிப்ளின் இப்ப போயிடிச்சு. நடிகர்கள் சைடிலும் சரி, டெக்னீஷியன்கள் சைடிலும் சரி அதை பார்க்கலாம். ஃபிலிம்ல எடுக்கும்போது ஒரு டேக்ல அல்லது  மிஞ்சிப்போனா இரண்டாவது டேக்கில் ‘ஷாட்’டை எடுத்து முடிக்கணும் என்ற கான்ஷியஸ் இருக்கும். அப்ப, எல்லாமே ஒரு வரையறைக்குள் இருக்கும். இப்போ, அப்படியொரு வரையறை எதுவுமில்லை. சி.ஜி., டி.ஐ. போன்ற டெக்னாலஜி சினிமாவை எளிதாக்கியிருக்கு. டிஜிட்டல் என்பது புது தியரி என்றே சொல்லலாம்.

பாலிவுட்ல நம்ம கேமராமேன்களுக்கு இருக்கும் வரவேற்பு குறித்து...?

ஆரோக்யமா இருக்கிறது. நம்ம ஊர் கேமராமேன்களிடம் தொழில் பக்தி  அதிகம். அதுவே அவர்களுக்கு நல்ல பெயரை வாங்கித் தருகிறது. டெக்னிக்கலாகவும் நம்ம கேமராமேன்கள் ஜீனியஸ் என்பதால் நல்ல டிமாண்ட் இருக்கிறது. என்னளவில் எடுத்துக்கொள்ளும்போது நான் இப்போது தெலுங்கில் படங்கள் பண்ணி வருகிறேன். அங்கே எனக்கு நல்ல வரவேற்பு தருகிறார்கள். சமீபத்தில் அல்லு அர்ஜுனை சந்திக்கும்போது கேமராமேனின் ஒர்க்கை சிலாகித்துப் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.

ஒளிப்பதிவாளர்கள் இயக்குநர்களாக மாறுவதைப் பற்றி...?

இங்கு டைரக்டர் என்பதே சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறது. இங்குதான் இயக்குநர் என்பவரே கதாசிரியராகவும் இருக்கிறார். படம் பண்ணுபவர்கள் இயக்குநர்களாக இருந்தாலும் சரி ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநர்களாக மாறுபவர்களும் சரி அவர்களுடைய கதையை படமாக்க முயற்சிக்கிறார்கள். ஒரு ஒளிப்பதிவாளர் டைரக்‌ஷன் பண்ணும்போது காட்சியை அழகுபடுத்துவதில்தான் கவனம் செலுத்துவார். என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல கதாசிரியரை வைத்து படம் இயக்குவது நல்ல முயற்சியாக இருக்கும்.
இத்தனை வருட சினிமா பயணத்தில் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

பொறுமை. வெற்றி, தோல்வி எல்லா துறைகளிலும் இருக்கும். சினிமாவைப் பொறுத்தவரை ஏற்ற, இறக்கம் என்பது வேற மாதிரி இருக்கும். ஏன்னா, இங்கு வீழ்ந்தால் திரும்ப எழுந்திருக்க முடியாதளவுக்கு அடி விழும். மற்ற துறைகளில் மாதம் ஒரு ஊதியம் இருக்கும். சினிமாவில் அது கிடையாது. சினிமாக்காரரை நம்பி யாரும் கடனும் தரமாட்டார்கள். தனிப்பட்ட விதத்தில் சினிமா எனக்கு சாதாரண வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்துள்ளது.

உங்களுக்கு பிடிச்ச இயக்குநர்கள், கேமராமேன்கள்?

கேமராமேன்களில் என்றுமே என்னுடைய குரு பி.சி.ராம் சார். இயக்குநர்களில் இன்னிக்கும் பாரதிராஜா சாருடன் படம் பண்ணணும் என்ற ஆசை மனசுல அப்படியே இருக்கிறது.
இப்போது என்ன படம் பண்ணுறீங்க?தெலுங்குல மகேஷ்பாபுவின் மைத்துனர் சுதிர்பாபு நடிக்கும் படம். தமிழில் இப்பதான் கதவுகள் திறக்க ஆரம்பித்துள்ளன.

எஸ்.ராஜா