COFFEE TABLE
உலக சாம்பியனை தோற்கடித்த இளம் கிராண்ட் மாஸ்டர்!
‘ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி’, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றனர்.எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39வது நகர்த்தலின்போது வெற்றியை வசமாக்கினார். தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த பிரக்ஞானந்தா, மொத்தம் 8 புள்ளிகளுடன் 12வது இடத்தில் உள்ளார்.
 இந்நிலையில், உலக சாம்பியன் கார்ல்சனை தோற்கடித்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘என்ன ஓர் அற்புதமான உணர்வு. அனுபவம் வாய்ந்த, உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை கருப்பு காய்களுடன் விளையாடி தோற்கடித்தது மாயாஜாலம். மேன்மேலும் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள். இந்தியாவுக்கு நீங்கள் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்...’ என பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.
 மோசமான நிலையில் கடல்பிரதேசம்
உலகின் 74 சதவீத மக்கள் கடலையொட்டி 50 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திலேயே வசிப்பதாக ஓர் ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள்.
அங்குள்ள குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களான இவர்கள், இவ்வளவு பேர் வசிக்கும் இந்த நிலப்பகுதியின் நிலை இப்போது பரிதாபகரமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
அதாவது, கடல் பிரதேசத்தின் 84 சதவீத நிலம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகச் சொல்லும் இவர்கள், இதில் பாதிப் பகுதி மீண்டும் சீர்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள்.
மக்கள் வசிப்பிடம் என்பதையும் தாண்டி கடல் பிரதேசத்தில் அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு, ‘மதிப்பு மிக்க பவளப் பாறைகள், அலையாத்திக் காடுகள், முகத்துவாரம், சதுப்பு நிலங்கள், உப்பளங்கள், கடல் புற்கள், ஆற்று கழிநீரை அகற்றும் கழிமுகங்கள் மற்றும் வலசை பறவைகளுக்கான வேடந்தாங்கல்கள்’ எனப்பட்டியலிடுகின்றனர்.
இவையெல்லாம் அழிக்கப்படாமலும், ஆக்கிரமிக்கப்படாமலும் இருந்தால்தான் இன்று நாம் சந்திக்கும் புயல்கள், காலநிலை மாற்றம், கரியமில வாயு உள்ளிட்ட தீங்குகளைச் சமாளிக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கீழடியில் செவ்வக வடிவ பகடைக்காய்
கீழடி அகழாய்வில் முதல்முறையாக செவ்வக வடிவ பகடைக்காய் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தைத் தந்துள்ளது. தமிழர்களின் நாகரிகத்தைப் பறைசாற்றும் கீழடியில் இதுவரை ஏழு கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்துள்ளன. இதில் முதுமக்கள் தாழிகள், மண்பானைகள், பாசிகள், உறை கிணறுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தன.
இப்போது எட்டாம் கட்டப் பணியை கடந்த 11ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில்தான் தந்தத்தால் ஆன செவ்வக வடிவ பகடைக்காய் கிடைக்கப் பெற்றுள்ளது.
இது நான்கு செமீ நீளமும், ஒரு செமீ தடிமனும் கொண்டதாகக் காணப்படுகிறது. இதுகுறித்து தொல்லியல் துறையின் அமைச்சரான தங்கம் தென்னரசு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவ (Rectangular), தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு.
இதுகாறும் தமிழ்நாடு தொல்லியல் துறை கீழடியில் மேற்கொண்ட ஆய்வுகளில் கனசதுர (Cubical) வடிவில் மட்டுமே பகடைக்காய்கள் கிடைத்தது’ என மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை கீழடியில் கனசதுர வடிவில் மொத்தம் மூன்று பகடைக்காய்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. இதில், 2 சுடுமண்ணால் செய்யப்பட்டது. ஒன்று தந்தத்தினால் ஆனது.
தொகுப்பு: குங்குமம் டீம்
|