மியாவ்



‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளைக் குவித்துக்கொண்டிருக்கும் மலையாளப் படம், ‘மியாவ்’. பெருங்கோபக்காரர் தஸ்தகீர். சின்ன பிரச்னைக்கே பெரிதாக வெடித்துவிடுவார். கோபம் வரும்போது பீங்கான் தட்டுகளை உடைத்து தன்னை சமாதானப்படுத்திக் கொள்வார். துபாயில் ஒரு சூப்பர் மார்க்கெட்டை நடத்திவருகிறார். அவனுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். தஸ்தகீரின் கோபத்தை தாங்க முடியாமல் தனது பெற்றோரின் வீட்டில் வசித்துவருகிறாள் அவரது மனைவி.

தஸ்தகீரின் பெரிய மகள் காதல் வயப்படுகிறாள். இதை அறிந்த தஸ்தகீர் கடுங்கோபம் கொண்டாலும் கட்டுப்படுத்திக்கொள்கிறார். தன்னால் குழந்தைகளை சரியாக வளர்க்க முடியவில்லை என்று மனைவியின் உதவியை நாடுகிறார். மனைவி வந்தாரா... தஸ்தகீரின் கோபம் குறைந்ததா... என்பதே மீதிக்கதை. நல்ல வாழ்க்கையைத் தேடி சொந்த ஊரை விட்டு வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களை நகைச்சுவையாக சித்தரிக்கிறது இந்தப் படம். அதே நேரத்தில் கோபம் எவ்வளவு அபத்தமானது என்று அழுத்தமாக பதிவு செய்கிறது. படத்தின் நீளம் கொஞ்சம் சலிப்படைய வைக்கிறது. தஸ்தகீராக அட்டகாசம் செய்திருக்கிறார் சௌபின் சாஹீர். படத்தின் இயக்குநர் லால் ஜோஸ்.