குட்லக் சகி
சமீபத்தில் ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் தெலுங்குப் படம், ‘குட்லக் சகி’. ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த துடிப்பான இளம் பெண் சகி. கோலி விளையாட்டில் அவளை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.
 குறி பார்த்து கோலி அழிப்பதில் கில்லாடி. ஆனால், ஊரே அவளை துரதிர்ஷ்டக்காரி சகி என்று சொல்கிறது. அவள் முகத்தைப் பார்த்தாலே கெட்டது நடக்கும் என ஊர் மக்கள் நம்புகின்றனர். அவளைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகள் எல்லோருமே சகியின் வீட்டை அடைவதற்கு முன்பே ஏதாவதுபிரச்னையில் மாட்டிக்கொள்கின்றனர். அவளுக்கு எதிரே வருபவர் கூட ஏதாவது சிக்கலில் அகப்பட்டுக்கொள்கின்றனர்.
இந்நிலையில் கிராமத்துக்கு வருகிறார் ஒரு கர்னல். அந்த கிராமத்திலிருந்து நல்ல துப்பாக்கி சுடும் வீரனைத் தேர்ந்தெடுத்து தேசிய அளவில் போட்டிக்கு அனுப்ப வேண்டும் என்பது அவரது நோக்கம். அவர் சிலரை தேர்ந்தெடுத்து பயிற்சியளிக்கும் நபர்களில் சகியும் அடக்கம். துரதிர்ஷ்டக்காரி என்றழைக்கப்படும் சகி, எப்படி அதிர்ஷ்டக்காரியாக மாறுகிறாள் என்பதே திரைக்கதை.
கொஞ்சம் கூட சலிப்புத்தட்டாமல் வேகமாகச் செல்லும் திரைக்கதை படத்துக்கு பலம். சகியாக கலக்கியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். படத்தின் இயக்குனர் நாகேஷ் குகுனூர்.
|