டிக் டிக் பூம்
இரண்டு ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் இடம், கோல்டன் குளோப் விருது உட்பட ஏராளமான விருதுகளை அள்ளியிருக்கும் ஆங்கிலப் படம், ‘டிக் டிக் பூம்’.
‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது. நியூயார்க்கில் பிறந்து, வளர்ந்து பெரும் புகழடைந்த ஜொனாதன் லார்சனின் வாழ்க்கைக் கதைதான் இந்தப் படம்.
 இசையமைப்பாளர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்ட கலைஞன் ஜொனாதன். ஒரு ரெஸ்டாரண்டில் வெயிட்டராக வேலை செய்துகொண்டே, தனது இசைத் திறமைக்கு உகந்த வாய்ப்புகளுக்கான அவரது தேடல், நிராகரிப்புகள், ஏமாற்றங்கள், இதற்கிடையில் மலரும் காதல், பக்க பலமாக இருக்கும் நட்புகள் மற்றும் இசையின் மீதான அவரது அர்ப்பணிப்பு என விரிகிறது இன்ஸ்பிரேஷன் திரைக்கதை. தொண்ணூறுகளில் நியூயார்க்கில் கலைஞனாக வாழ்க்கையை ஓட்டியவர்களின் அழுத்தத்தை ஜொனாதனின் வாழ்க்கையினூடாக ஆழமாகச் சித்தரித்திருக்கிறது இந்தப் படம். ஜொனதானாகவே வாழ்ந்திருக்கிறார் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட். 2022ம் வருடத்தின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதின் இறுதிப் பட்டியலில் ஆண்ட்ரூவின் பெயரும் உள்ளது. இசைக் காதலர்கள் தவறவிடக்கூடாத ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் லின் - மேனுவல் மிராண்டா.
தொகுப்பு: த.சக்திவேல்
|