ஃபிரெஞ்ச் யூடியூபர்ஸ்!



ஃபிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் வீடியோக்களைப் பகிர்வதற்கு ஏராளமான தளங்கள் உள்ளன. இருந்தாலும் அங்கேயும் ஆதிக்கம் செலுத்துகிறது யூடியூப்.
அங்கே நகைச்சுவை மற்றும் கேம்ஸ் சார்ந்த யூடியூபர்களே பெரிதும் மக்களை ஈர்க்கின்றனர். தவிர, சில யூடியூப் சேனல்கள் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை அள்ளி அசத்துகின்றன. அந்த அதிக பார்வைகளையும், சப்ஸ்கிரைபர்களையும் அள்ளிய பிரெஞ்ச் யூடியூப் சேனல்களின் அறிமுகங்கள் இதோ...

ரெமி கெய்லார்ட் (Remi Gaillard)

ஃபிரான்ஸின் பிரபலமான பிராங்க் ஸ்டார் ரெமி கெய்லார்டின் சேனல் இது. ஃபிரான்ஸில் உள்ள ஒரு ஷூ கடையில் வேலை செய்து வந்தார் ரெமி. வேலையை இழந்ததும் வெறுமனே சும்மா இருக்க வேண்டிய நிலை. பொழுதைப் போக்குவதற்காக பொது இடங்களில் பிராங்க் செய்ய ஆரம்பித்தார். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்க, தான் செய்யும் பிராங்கு களை வீடியோவாக்கி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். அந்த வீடியோக்கள் அப்ளாஸை அள்ள, ஜூலை 4, 2007ல் அவர் பெயரிலேயே யூடியூப் சேனலை தொடங்கிவிட்டார்.

இச்சேனலில் ஃபுட்பால் பிராங்க், கேமிங் பிராங்க், அனிமல் பிராங்க், ஸ்போர்ட்ஸ் பிராங்க், எலிவேட்டர் பிராங்க்... என விதவிதமான வகைகளில் பிராங்க் வீடியோக்கள் அள்ளுகின்றன.
72.9 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 191 கோடி பார்வைகளுடன் மிளிர்கிறது இந்த சேனல்.

சைப்ரீன் (Cyprien)

ஃபிரான்ஸைச் சேர்ந்த யூடியூப் சேனல்களில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களின் வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது ‘சைப்ரீன்’. ஃபிரான்ஸின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், டப்பிங் கலைஞர், பிளாக்கர் என பன்முகங்களைக் கொண்ட சைப்ரீன் இயோவின் சேனல் இது.

ஆரம்ப நாட்களில் ‘டெய்லிமோசன்’ எனும் வீடியோ பகிரும் தளத்தில் இயங்கி வந்தார் சைப்ரீன். அப்போதே அவரின் வீடியோக்களுக்கு செம வரவேற்பு கிடைத்தது. இந்த வரவேற்பு கொடுத்த உற்சாகத்தில் பிப்ரவரி 26, 2007ல் ‘சைப்ரீனை’ தொடங்கினார். முன்பே அவருக்கு நிறைய ரசிகர்கள் இருந்ததால் சேனலைப் பிரபலப்படுத்துவது சுலபமாக இருந்தது. விதவிதமான, வேடிக்கையான காமெடி வீடியோக்கள்தான் இச்சேனலின் முக்கிய அம்சங்கள். இதுபோக அவர் எழுதி, இயக்கிய சில குறும்படங்களையும் இதில் பதிவேற்றுகிறார் சைப்ரீன். ஒவ்வொரு வீடியோவும் மில்லியன் கணக்கில் பார்வைகளை அள்ளுகின்றன.

குறிப்பாக ‘ஒரு யூடியூபர் பிரான்ஸின் அதிபரானால்’ என்ற வீடியோ கோடிகளில் பார்வைகளைக் குவித்தது. ஆங்கில சப்டைட்டிலுடன் மிளிர்வதால் ஃபிரான்ஸைத் தாண்டி உலகமெங்கும் இச்சேனலுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். இதில் பதிவிடப்பட்ட வீடியோக்கள் 293 கோடிக்கும் அதிகமான பார்வைகளுடன் அசத்துகின்றன. சேனல் நடத்துவதோடு ஃபிரெஞ்சில் வெளியாகும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார் சைப்ரீன்.

ஸ்குவீஸீ (Squeezie)

அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட ஃபிரெஞ்ச் யூடியூப் சேனலாக கெத்து காட்டுகிறது ‘ஸ்குவீஸீ’. ஆம்; ஜனவரி 9, 2011ல் தொடங்கப்பட்ட இச்சேனலை 1.67 கோடிப்பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். வீடியோ கேமில் நிபுணத்துவம் வாய்ந்த இளைஞரான லூக்காஸ் ஹோச்சார்டின் சேனல் இது. லூக்காஸிற்கு 12 வயதாக இருந்தபோதே ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கி ‘டோபஸ்’ எனும் கேமைப் பற்றி இரண்டு வீடியோக்களைப் பகிர்ந்திருந்தார். இந்த சேனல் ஆரம்பித்த சில மாதங்களிலேயே அதிலிருந்து விலகிவிட்டார்.

அடுத்து இரண்டு வருடங்கள் கழித்து வீடியோ கேம்ஸ் சம்பந்தமான இன்னொரு சேனலை ஆரம்பித்தார். பெரிதாக சப்ஸ்கிரைப் ஆகவில்லை. அதனால் மூன்று வீடியோக்களை மட்டும் பதிவு செய்துவிட்டு இந்தச் சேனலையும் மூடிவிட்டார். தனது 15வது வயதில் ‘ஸ்குவீஸீ’யை ஆரம்பித்தார். சேனலில் ஆரம்பகட்ட வீடியோக்கள் எல்லாம் வீடியோ கேம் டெஸ்ட்டிங்கில் கவனம் செலுத்தின. இப்படியான டெஸ்ட்டிங்கில் யாரும் இறங்காததால் பார்வைகளை அள்ளின.

இதன் மூலம் 17 வயதில் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களை அள்ளிய ஃபிரெஞ்ச் யூடியூபர் என்ற சாதனையைத் தன்வசமாக்கினார் லூக்காஸ். அப்போது அவர் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் சராசரியாக 3 லட்சம் பார்வைகளைக் குவித்தன. இன்று ஐரோப்பாவிலேயே வீடியோ கேம் சம்பந்தமான முக்கிய யூடியூப் சேனலாகத் திகழும் ‘ஸ்குவீஸீ’யில் பதிவாகியுள்ள வீடியோக்கள் 883 கோடி பார்வைகளைக் குவித்துள்ளன. அவ்வப்போது பாடல்களையும் சேனலில் அரங்கேற்றுகிறார் லூக்காஸ்.

நோர்மன் பைத் டே வீடியோஸ்  (Norman fait des videos)

ஃபிரெஞ்ச் காமெடி நடிகர் நோர்மன் தவாட்டின் சேனல் இது. சின்ன வயதிலேயே அப்பாவிடமிருந்த கேமராவை வாங்கி வீடியோ செய்ய ஆரம்பித்த ஆளுமை இவர்.
மொழியைத் தாண்டி வயிறு குலுங்க சிரிக்க விரும்புபவர்கள் இந்தச் சேனலுக்கு விசிட் அடியுங்கள். ‘ஸ்குவிட் கேம்’ சீரிஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களையும், கோவிட் சோதனை போன்ற அன்றாட நிகழ்வுகளையும் தனக்கே உரிய பாணியில் கேலி செய்து வீடியோக்களை வெளியிடுவது நோர்மனின் வழக்கம்.

அத்துடன் துபாய், டோக்கியா, ஹவாய் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று, விதவிதமான வேடங்களில் வீடியோக்களைப் பதிவிடுகிறார். இவருடைய பல வீடியோக்கள் கோடிக்கணக்கான பார்வைகளை அள்ளியிருக்கின்றன. ஜனவரி 4, 2011ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலுக்கு 1.2 கோடி சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இதுவரை இந்தச் சேனலில் பதிவிடப்பட்ட வீடியோக்கள் 264 கோடிக்கும் மேலான பார்வைகளை அள்ளியுள்ளது.

டிபோ இன்ஷேப் (Tibo InShape)

ஃபிட்னஸ் பிரியர்களுக்கான முக்கியமான ஃபிரெஞ்ச் யூடியூப் சேனல் இது. திபோட் டெலாபார்ட் என்பவர் இச்சேனலை நிர்வகித்து வருகிறார். ஆரம்ப நாட்களில் தன்னுடைய அறையில் நண்பருடன் சேர்ந்து ஃபிட்னஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார் திபோட். அவருடைய சேனல் பார்வைகளை அள்ள, திபோட்டின் கையில் பணமும் சேர்ந்தது. பிறகு பிட்னஸில் முக்கியமான ஆளுமைகளை வைத்து வீடியோ செய்ய ஆரம்பித்தார்.

இந்த வீடியோக்கள் ஒவ்வொன்றும் லட்சக்கணக்கில் பார்வைகளை அள்ளியது. 2017ம் வருடத்தில் சிறந்த ஃபிட்னஸ் யூடியூபர் என்ற விருதை தன்வசமாக்கினார். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள எடுத்துக்கொள்ள வேண்டிய சத்தான உணவுகளின் பட்டியல்கள், ஃபிட்னஸ் டிப்ஸ்கள் வேண்டுபவர்கள் இந்தச் சேனலை அணுகலாம். ஆகஸ்ட் 15, 2008ல் தொடங்கப்பட்ட இந்தச் சேனலை 84.3 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதுவரை பதிவாகியுள்ள வீடியோக்கள் 296 கோடிக்கும் மேலான பார்வைகளைக் குவித்துள்ளன.  

த.சக்திவேல்