பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி உள்ள பகுதிகளில்தான் மாணவ & மாணவியர் வீடு வாடகைக்கு எடுத்து, தங்கிப் படிப்பதை பார்த்திருக்கிறோம். இப்படி எந்தப் பெரிய கல்வி நிலையமும் இல்லாத ஒரு சாதாரண கிராமத்திலும் இதுபோல தங்கிப் படிக்கிறார்கள் என்றால் ஆச்சரியம்தானே!
திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடிதான் இப்போது படிப்பாளிகளின் கிராமமாக மாறி இருக்கிறது. 6 ஆண்டுகளுக்கு முன், ஆயக்குடி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் கிராமத்தினரும் அரசு தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே இலவசப் பயிற்சி தர ஆரம்பித்தனர். கடந்த 2007ம் ஆண்டு 24 ஆயக்குடிக்காரர்கள் வி.ஏ.ஓ. தேர்வில் பாஸாகி தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்க வைத்தனர். அன்றிலிருந்து ஒவ்வொரு அரசுத் தேர்விலும் ஆயக்குடிக்காரர்கள் அசத்த ஆரம்பித்தனர். இந்தச் சாதனை வெளியில் தெரிந்ததும், வெளியூர்களிலிருந்தும் நூற்றுக் கணக்கானோர் ஆயக்குடி பயிற்சி மையத்துக்கு வர ஆரம்பித்தனர். இப்போது இன்னும் பிரபலம் ஆகி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கல்விக்கட்டிடங்களையும் தாண்டி, மரத்தடியிலும் வெட்டவெளியிலும் ஐந்தாயிரம் பேர் வரை பயிற்சி பெறுகின்றனர்.
ஒவ்வொரு அரசுத் தேர்வுக்கும் 6 மாதம் வரை இலவச வகுப்புகள் நடப்பதால், ஆயக் குடியிலேயே வீட்டை வாடகைக்குப் பிடித்து 10 & 15 பேர் ஒன்று சேர்ந்தும் படித்து வருகின்றனர். குட்டியூண்டு ஆயக்குடியில் ஒவ்வொரு தெருவிலும் இப்படி படிப்பாளிகள் வீடு இருக்கின்றன. திருமணமான பெண்கள்கூட ஒன்றிரண்டு மாதம் இப்படி வீடுகளில் தங்கி ‘குரூப் ஸ்டடி’ செய்வது அழகு!
அண்மையில் வெளிவந்த வி.ஏ.ஓ. தேர்வில்கூட ஆயக்குடி கோச்சிங்கில் படித்த 312 பேர் வென்றுள்ளனர். இது தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்த சாதனை!
சேலம் மாவட்டம் ராசிபாளையத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி... ‘‘அரசுத் தேர்வுப் பயிற்சி வகுப்புகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கட்டி படிக்க முடியாததால்தான் ஆயக்குடிக்கு வந்தேன்’’ என்கிறார். இப்பயிற்சி வகுப்பு பயனுள்ளதாக இருப்பதால் டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார் கலைச்செல்வி!
ராமநாதபுரம் ஹேமாவதி திருமணமான பிறகு படிக்க வந்திருப்பவர்... ‘‘பத்து பெண்கள் ஒன்று சேர்ந்து வீடு வாடகைக்கு எடுத்து படித்து வருகிறோம். இது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது’’ என்கிறார் அவர்.
மதுரையைச் சேர்ந்த பிரவீன் அன்சாரி, ‘‘ரொம்ப நம்பிக்கையுடன் இருக்கிறேன்’’ என்கிறார். காரணம் கடந்த வி.ஏ.ஓ. தேர்வில் ஆயக்குடியில் படித்த பலர் தேர்ச்சி பெற்றிருப்பதுதான்!
ஸ்ரீவில்லிபுத்தூர் சுந்தரராஜன் ஒரு மாதமாக இங்கே தங்கி குரூப்&2 தேர்வுக்குப் படிக்கிறார். ‘‘வசதியற்றவர்களின் வேலைவாய்ப்பு பயிற்சி அலுவலகமே ஆயக்குடிதான்’’ என்கிறார் அவர்.

‘எல்லாமே இலவசம்’ என்ற நோக்கில் ராமமூர்த்தி தலைமை யிலான அணி இந்தப் பயிற்சியைத் திறம்பட நடத்துகிறது. பயிற்சியின்போதும் ஜெயித்த பிறகும் ‘அரசுப்பணியில் லஞ்சம் வாங்கமாட்டேன்’ என்ற உறுதிமொழியை மட்டுமே இந்த அணி கட்டணமாகக் கேட்டு வியக்க வைக்கிறது.
கடந்த 7 ஆண்டுகளில் 1079 பேரை அரசுப்பணிக்கு அனுப்பியிருக்கிறது இந்த இலவச பயிற்சி மையம். சமீபத்தில் ஆயக்குடி மகிமையால் வி.ஏ.ஓ. தேர்வில் வென்ற 312 பேரில் ஒருவர்கூட பணபலம் இல்லாதவர்! இப்படி ஜெயித்தவர்களின் நெகிழ்ச்சிக்கதைகளில் சில...
முத்துச்சாமி 23 வருடம் கழித்துத்தான் புத்தகங்களையே தொட ஆரம்பித்தேன். ரொம்ப எளிமையாகச் சொல்லிக் கொடுத்தார்கள். வி.ஏ.ஓ பாஸ் பண்ணிவிட்டேன்!
பார்த்தசாரதி (உடுமலை)டி.என்.பி.எஸ்.சி. என்றால் என்னவென்றே தெரியாது. இங்கு ஒரு கிளாஸ்கூட மிஸ் பண்ணாமல் படிச்சேன். பாஸ் செய்தேன்.
மல்லிகா( எரியோடு கோவிலூர்)6 வருடங்களுக்கு முன் அரசுத்தேர்வு எழுதி ஃபெயிலானேன். நம்பிக்கை போனது. திருமணம், குழந்தை என்று ஆனது. குழந்தையை வைத்துக்கொண்டே கோச்சிங் கிளாஸ் போனேன். வி.ஏ.ஓவாகி இருக்கிறேன்!
அழகேசன் (சாலைபுதூர்)நான் முதலில் பத்தாவதே ஃபெயில். அதன்பின் இந்த எக்ஸ்£ம் வரை பாஸ் செய்து வருகிறேன். காரணம் இங்கு தரும் பயிற்சிதான்!
அனுராதாரொம்ப பணம் செலவு பண்ணி வாங்கற கைடுல நிறைய தப்புகள் இருக்கிறதோட தவறான கேள்விகளையும் தந்திருக்காங்க. இங்கே இலவசமா தந்த சரியான நோட்ஸாலதான் பத்து லட்சம் பேரில் நான் பாஸாகிவிட்டேன்!
கிருஷ்ணன் (மதுரை)‘உனக்கெதுக்கு கவர்ன்மென்ட் ஜாப்’னு மாற்றுத்திறனாளியான என்னைக் கிண்டல் செஞ்சாங்க பல பேர். இங்கே வந்ததும் முதல்ல தன்னம்பிக்கை ஊட்டி படிக்க வச்சாங்க. தினம் 8 மணி நேரம் கடினமா படிச்சேன்... ஜெயிச்சிருக்கேன்!
கேசவமூர்த்தி (கிணத்துக்கடவு) கரெக்டான நோட்ஸை இவங்க தந்ததால பதற்றமில்லாம எழுதினேன். என் முதல் மாச சம்பளத்தை இந்த மையத்துக்கு நன்கொடையா தரப் போறதோட, லஞ்சம் வாங்காம வேலை செய்யணும்ங்கற கண்டிஷன்படியும் கடைசிவரை பணியாற்றுவேன்.
பணமும் அனுபவமும் இல்லாத அடித்தட்டு மக்களுக்கு இலவசப் பயிற்சி தரும் நோக்கத்தில் ஆயக்குடியில் பிறந்த இளைஞர்கள் போட்ட விதை இன்று பலருக்கு சுவாசக்காற்றாக இருக்கிறது. ஆயக்குடி இனி சாதாரண கிராமம் அல்ல... ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடி போல படிப்பாளிகள் கிராமம்!
கட்டுரை, படங்கள்: பா.கணேசன்