பறவைகளுக்காக 2.5 லட்சம் கூடுகளைக் கட்டிய மனிதர்!



தில்லியிலுள்ள அசோக் விஹாருக்குச் சென்று ராகேஷ் கட்ரியின் பெயரைச் சொன்னாலே போதும். சின்னக்குழந்தை கூட அவர் வீட்டுக்குப் போகும் வழியைச் சொல்லும்.

அந்தளவுக்கு மக்களின் மத்தியில் பிரபலம் அவர்.
அசோக் விஹாரில் வசிப்பவர்கள் ராகேஷ் கட்ரியை ‘கூடு மனிதன்’ என்றே அழைக்கின்றனர். சின்ன வயதிலிருந்தே பறவைகள் என்றால் ராகேஷிற்கு உயிர். பறவைகளைத் தன்வசம் ஈர்ப்பதற்காக கூடுகளை வடிவமைப்பார். ஆனால், அவருடைய நண்பர்கள், ‘‘இதில் எல்லாம் பறவைகள் வந்து தங்குமா..?’’ என்று ராகேஷைக் கிண்டலடிப்பார்கள்.

நண்பர்களின் கேலியைக் கவனத்தில் கொள்ளாமல் கூடுகளை வடிவமைத்து வீட்டுக்கு வெளியில் வைப்பார். அவர் நினைத்ததைப் போலவே பறவைகள் வந்து அந்தக் கூட்டுக்குள் தங்கும்.

அப்போது ஆரம்பித்த இந்த கூடுகட்டும் சேவையை ஐம்பது வயதைத் தாண்டிய பிறகும் செய்துகொண்டிருக்கிறார் ராகேஷ். தில்லியில் உள்ள பறவைகளைப் பாதுகாப்பதற்காக மட்டுமே 2.5 லட்சம் கூடுகளைக் கட்டியிருக்கிறார்.

சணல் மற்றும் டெட்ரா பேக்குகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தக் கூடுகள் பறவைகளின் நிஜக்கூடுகளைப் போலவே காட்சிதருகின்றன. இதுபோக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்குக் கூடுகளை வடிவமைப்பது குறித்து வகுப்பும் எடுத்திருக்கிறார். ராகேஷின் தன்னலமற்ற செயலைப் பாராட்டும்விதமாக ஏராளமான விருதுகள் குவிகின்றன.

த.சக்திவேல்