சமூக செயற்பாட்டாளர் தன்ராஜ் + தமிழ்நாடு ஆதிதிராவிட பழங்குடி நல ஆணைய உறுப்பினர் லீலாவதியின் லவ் ஸ்டோரி



ஒரு காதல் பழங்குடி மக்களின் உரிமைக்காக போராடவைக்கும்!

‘ஒரு காதல் என்ன செய்யும்..?’ - சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இப்படியொரு டிரெண்ட் உருவாக அதில் பலரும் தங்கள் கருத்தைப் பதிவிட்டனர்.இதே கேள்வியை சமூக செயற்பாட்டாளர்களான தன்ராஜ், லீலாவதி தம்பதியிடம் முன்வைத்தால், ‘பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராட வைக்கும்’ என்றே வாக்கியம் மாறாமல் பதில் அளிப்பார்கள். பழங்குடி மக்களுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன் இணைந்த காதல் தம்பதிகள் இவர்கள்.

கடந்த பதினாறு ஆண்டுகளாக பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வருபவர் தன்ராஜ். அவருக்குப் பக்கபலமாக இருப்பவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அவர் மனைவி லீலாவதி. சமீபத்தில் கூட தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையத்தின் உறுப்பினராக லீலாவதியை நியமித்தது. அந்தளவுக்கு இருவரும் பழங்குடிகளுக்கான செயற்பாட்டாளர்களாக கைகோர்த்து நடக்கின்றனர்.   

திருநெல்வேலி மாவட்டத்தின் கடைக்கோடியில் இருக்கும் ராதாபுரத்தில் பிறந்தவர் தன்ராஜ். கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியிலுள்ள குடகு மலையின் அடர்ந்த காட்டுப்பகுதியில் பிறந்தவர் லீலாவதி. வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நிலப்பரப்பில் பிறந்த இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இணைந்த கதை உண்மையில் ஆச்சரியமானது.‘‘எங்க ரெண்டு பேருக்கும் மாநிலம், கலாசாரம், பண்பாடு, மொழி, சாதினு எல்லாமே வேற வேறனாலும் எங்களை இணைச்சது பழங்குடி என்கிற ஒற்றைச் சொல்தான்.

பொதுவா, பழங்குடிகள் தங்கள் பெண்ணை வேறு சாதி ஆட்களுக்கோ, வெளியேவோ திருமணம் பண்ணிக் கொடுக்கிறதில்ல. இருந்தும் என்மீதிருந்த நம்பிக்கையும் என்னுடைய பணிகளும் அவங்களுக்கு பிடிச்சு இவன் நமக்கானவன்னு நினைச்சதாலேயே எங்க காதலை அங்கீகரிச்சாங்க. இந்த உலகத்தில் எல்லாவற்றையும் மாற்றக்கூடியது காதல்...’’ என நெகிழும் தன்ராஜ் செயற்பாட்டாளரான தருணத்திலிருந்து தொடங்குகிறார்.   

‘‘என் அப்பா சண்முகவேல் ராதாபுரத்தில் எல்லோராலும் விரும்பக்கூடிய ஊர்த்தலைவரா இருந்தார். கல்வித்துறையில் பணியாற்றினார். அம்மா ஞானசெல்வம் கடின உழைப்பாளி. கஷ்டப் படுறவங்களுக்கு உதவிகள் செய்யணும்னு நினைப்பாங்க. அவங்க ரெண்டு பேரின் குணங்களும் எனக்கு இயல்பா வந்திடுச்சு. என் கூட பிறந்தது ஒரு அண்ணனும், ஒரு அக்காவும். நான் 1979ல் பிறந்தேன். சின்ன வயசுலயே அடுத்தவங்களுக்கு உதவி செய்கிற ஆளா இருந்தேன்.

பிளஸ் டூ படிக்கிறப்ப சின்னச் சின்ன பத்திரிகைகள்ல பகுதிநேர நிருபரா வேலை செய்தேன். அப்ப கூடங்குளம் அணு உலைக் கட்டுமானங்கள் தொடங்குச்சு. அந்நேரம், அணு உலைக்கு எதிரா போராடுகிற ஒய்.டேவிட், உதயகுமார் ஆகியோரின் தொடர்பு கிடைச்சது. அவங்களுடன் சேர்ந்து வேலை செய்தேன்.

பிறகு, சட்டம் படிக்க மதுரைக்கு வந்தேன். அங்க ஒய்.டேவிட் அமைப்புடன் சட்டக்கல்லூரியில் படிச்சுகிட்டே வேலை செய்தேன். அந்நேரம் பளியர் பழங்குடிகள் சம்பந்தமா ஓர் ஆய்வு செய்தோம். அப்பதான் பழங்குடிகளுக்காக வேலை செய்யணும்னு தோணுச்சு. ஒய்.டேவிட்டும், ‘நீங்க சட்டம் படிச்சிருக்கீங்க. அதனால, பழங்குடிகளுக்காக வேலை செய்றது எளிதா இருக்கும். சிறப்பாகவும் செய்ய முடியும்’னு சொன்னார்.

இந்தியா முழுவதும் பயணிச்சேன். சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள்னு பல மாநிலங்களுக்குப் போறதும், அங்குள்ள பழங்குடி சட்டங்கள், பழங்குடி உரிமைகள் என்னனு பார்க்கிறதும், படிக்கிறதுமானு இருந்தேன்.

அப்ப, ‘வனஉரிமை சட்டம் 2006’ மசோதா அளவுல இருக்கு. ஒய்.டேவிட் இந்த மசோதாவுல நம்முடைய கருத்தை சேர்க்கணும்னு சொன்னார். அதுவே பழங்குடி மக்களுக்காக வேலை செய்யணும் என்கிற எண்ணத்தை எனக்குள் தீவிரமாக்குச்சு...’’ என்கிறவர், காதல் மனைவிைய சந்தித்த கதைக்குள் வந்தார்.  

‘‘2007ம் ஆண்டு மே 1ம் தேதி கர்நாடகாவுல குடகு மலைக்குப் போனப்ப அங்க ராய் டேவிட்னு ஒரு தமிழ் நண்பர் அந்தப் பகுதி பழங்குடி மக்களுக்காக வேலைகள் செய்திட்டு இருந்தார். அவரின் அலுவலகத்துல பழங்குடி இளைஞர்களின் தலைமைப் பண்புக்கான ஒரு பயிற்சி நடந்துச்சி. நானும் கலந்துக்கிட்டேன். அதுல ஒரு பொண்ணும், அவர் தம்பியும் கலந்துக்கிட்டாங்க. அந்தப் பொண்ணுதான் லீலாவதி. முதல்முறையா கல்லூரி போறதாவும் மங்களூர்ல சோஷியல் வொர்க் படிச்சுட்டு இருப்பதாகவும் என்கிட்ட திக்கித் திக்கி ஆங்கிலத்துல சொன்னாங்க.  

குடகு மலையின் உயரமான சிகரம் தடியண்டாமோல். அடர்ந்த காட்டுப்பகுதி. அங்க மலைகுடியானு ஒரு பழங்குடி சமூகத்துல பிறந்தவங்கதான் லீலாவதி. அவங்க அப்பா பெயர் குடியார முத்தப்பா. அவர் என் நண்பர்.

நான்கு நாட்கள் பயிற்சி முடிஞ்சதும் அவங்க கிளம்பிட்டாங்க. ஆனா, பழங்குடிப் பணிக்காக இவங்கள மாதிரி ஒரு பழங்குடிப் பெண்ணை ஏன் திருமணம் செய்துகொள்ளக்
கூடாதுனு எனக்கு தோணிச்சு. அது அபத்தமாவும் தெரிஞ்சது. ஏன்னா, அவங்க சின்ன பெண். அழகா வேற இருக்காங்க. இது தப்பான சிந்தனையாச்சேனு நினைச்சேன். இருந்தும் மனசு கேட்கல.

பிறகு, 2008ல் பெரியகுளம் சோத்துப்பாறை அணைக்கு மேல  காட்டுப் பகுதியில் தேசிய அளவுல ஒரு பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைச்சேன். அதுக்கு பங்கேற்பாளரா லீலாவதி வந்தாங்க. ஏற்கனவே என்னைத் தெரியும் என்கிறதால என்கிட்ட பேசினாங்க. பரஸ்பரம் போன் நம்பர் வாங்கிக்கிட்டோம்.

அப்புறம் அவங்க அடிக்கடி மெசேஜ் செய்ய ஆரம்பிச்சாங்க.
நாலஞ்சு மாசம் கழிச்சு போன்ல ‘உங்க கூட வாழ்க்கை முழுவதும் பேசிட்டு இருக்கணும்’னு சொன்னாங்க. நான், ‘அது சாத்தியமில்லாதது. அப்படி இறுதி வரை பேசணும்னா கணவன் மனைவியால் மட்டுமே முடியும். இயற்கை அப்படியொரு வாய்ப்பை நமக்குக் கொடுத்தால் பேசுவோம்’னு சொன்னேன். ரெண்டு பேருமே காதலிப்பதை ரெண்டு பேராலயும் உணர முடிஞ்சுது. ஆனா, வாய்விட்டு ரெண்டு பேருமே சொல்லிக்கல.

அந்த வருஷம் தீபாவளி அப்ப ரெண்டு பேரும் மங்களூர்ல சந்திச்சோம். அவங்க தன் காதலைச் சொல்லிட்டு அழுதாங்க. ஏன்னா, அவங்க சமூகத்துல பெண்கள் எல்லாருமே அழகா இருப்பாங்க. அதனால, மாற்று சமூகத்தில் உள்ள ஆண்கள் அந்த பழங்குடி சமூகத்திலுள்ள பெண்களை காதலிச்சு திருமணம் பண்ணி ஒருசில ஆண்டுகள்ல கைவிட்டுட்டு போற சம்பவங்கள் நடந்திருக்கு. இதனாலயே லீலாவதியின் அப்பா, ‘நீ நல்லா படிச்சு நம்ம சமூகத்துல படிக்காத ஒரு பையனை திருமணம் பண்ணி முன்மாதிரியா இருக்கணும். அடுத்த சமூகத்துல திருமணம் பண்ணி ஏமாந்து போகக்கூடாது’னு சொல்லியே வளர்த்திருக்கார்.

அப்படியிருந்தும் என்மேல அவங்களுக்கு காதல் வந்திருக்கு. ‘உன்னை எனக்கு என் தெய்வம் தந்தது’னு சொன்னாங்க. அவங்களுக்கு கடவுள், அமானுஷ்யங்கள் மீது நம்பிக்கை அதிகம். பழங்குடி மக்களுக்கே உண்டான நம்பிக்கை அது. நிச்சயம் நம்ம திருமணம் நடக்கும்னு எனக்கு தைரியம் சொன்னாங்க. ஆனா, உண்மையில் எங்கள இணைச்சது நாங்க எங்க குடும்பத்தின் மீதும், பழங்குடி மக்கள் மீதும் வச்சிருக்கிற அன்புதான்...’’ என தன்ராஜ் நிறுத்த லீலாவதி தொடர்ந்தார்..

‘‘அவங்கள பார்க்கும்போது மனசுக்குள்ள ஏதோ ஒரு ஃபீலிங். அந்த உணர்வை சொல்லத் தெரியல. அவங்க பேசுகிற விதம், வேலைகள் செய்கிற விதம், கம்யூனிகேஷன், அதைத்தாண்டி நான் ஒரு பழங்குடி பொண்ணா இருந்தால்கூட அவங்க எங்களை முன்னேற்ற சிந்திக்கிறாங்க பாருங்க... அந்தச் சிந்தனை ரொம்பப் பிடிச்சது. நமக்கானவர்னு தோணுச்சு. ஆனா, குடும்ப விஷயங்களால் தயக்கமாகி தடுமாறி நின்னேன். இப்ப சந்தோஷமா இருக்கேன்...’’ என லீலாவதி நெகிழ... தன்ராஜ் தொடர்ந்தார்.

‘‘இவங்க படிப்பை முடிச்சதும் பெண் கேட்டு குடகுமலைக்கு நானும் ஒய்.டேவிட்டும் போனோம். முதல்ல ராய்டேவிட்டை பார்த்தோம். அப்ப ஒய்.டேவிட், ‘தன்ராஜ் இங்குள்ள ஒரு பழங்குடி பெண்ணை விரும்புறார். அந்தப் பெண்ணுக்கும் இவரைப் பிடிச்சிருக்கும்னு நினைக்கிறோம். ஆனா, உங்களுடைய விருப்பம் இல்லாமல் அந்தவீட்டுல பெண் கேட்க தயாரா இல்லை. ஏன்னா, உங்கள வச்சுதான் அந்தப் பெண்ணைத் தெரியும். நீங்க வேண்டாம்னு சொல்லிட்டா நாங்க இப்படியே திரும்பிடுறோம்’னு சொன்னார். அவர், ‘யார் அந்தப் பெண்’னு கேட்டார்.

நான் குடியார முத்தப்பா மகள் லீலாவதினு சொன்னதும் அவருக்கு ஷாக். பிறகு, சரி, இந்த விஷயத்துல என் மகன் மாதிரி நினைச்சு அவர்கிட்ட கேட்கறேன்னு சொன்னார்.
அவங்க வீட்டுக்கு நாங்க போய்ச் சேர இரவு 12 மணி ஆகிடுச்சு. நாங்க ஏன் வர்றோம்னு லீலாவதிக்கு மட்டும் தெரியும். அங்க மின்சாரம் கிடையாது. அந்நேரம் என்ன எதுனு அவங்க அப்பா குடியார முத்தப்பா கேட்டதும், ‘தன்ராஜ் உங்க பெண்ணை விரும்புறார். திருமணம் செய்துக்கணும்னு நினைக்கிறார்’னு ராய்டேவிட் சொன்னார்.

கொஞ்ச நேரம் யோசிச்ச லீலாவதியின் அப்பா, பிறகு, தன் பெண்ணைக் கூப்பிட்டு பேசினார். லீலாவதி மனஉறுதியுடன் ‘இவரோட வாழமுடியும்’னு நம்பிக்கையோடு சொன்னதும் தங்கள் பழங்குடி சமூக வழக்கப்படி தன் மனைவி, பிள்ளைகளைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லி ஒவ்வொருத்தர் கருத்தையும் கேட்டார்.இப்படி ஜனநாயக ரீதியா எல்லாரும் உட்கார்ந்து பேசி முடிவெடுக்கிறது அவங்க சமூகத்துல உள்ள வழக்கம்.

அதுக்கு முன்னாடி என் படிப்பு, பெற்றோர், சாதியைப் பத்தி கேட்டார். ‘எல்லோரும் மனித சாதிதான். ஆனா, நான் கர்நாடகாவுல ஒரு அத்துவான காட்டுப்பகுதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு பெண்ணை கட்டிக் கொடுக்குறேன்னா ஏன்னு என் உறவினர்கள் கேட்பாங்க. அவங்களுக்கு நான் பதில் சொல்லணும்... அதனாலதான் சாதியைக் கேட்கறேன்’னு சொன்னார்.

உடனே ஒய்.டேவிட், ‘அவர் தலித் சமூகம். அவங்க அப்பா கல்வித்துறையில் பணி செய்றார். சொத்து இருக்கு. தோட்டம் இருக்கு’னு சொன்னார். உடனே லீலாவதியின் அப்பா, ‘ஆஸ்தி, அந்தஸ்து எல்லாம் கேட்கல. நாங்க எங்க பகுதியில் தலித் சமூகம் வீட்டுல தண்ணீர் குடிக்கமாட்டோம். சாப்பிடமாட்டோம். ஆனா, நான் அப்படியில்ல. ஆதிவாசிகளும், தலித்களும் ஒண்ணா இருக்கணும்னு நினைக்கிறவன். அதுக்காக போராடுகிறவன். அவங்க கல்விக்காகவும், உரிமைக்காகவும் நிறைய போராடியிருக்கேன். என் மனைவியின் நிலத்தைக் கூட தலித் மக்களுக்காக எழுதிக் கொடுத்திருக்கேன். தெரிஞ்சுக்கதான் கேட்டேன்’னு சொல்லிட்டு ‘எங்க சாமிகிட்டயும், பெரியவங்ககிட்டயும் கேட்டுட்டு சொல்றோம்’னு சொன்னார். ஒரு வாரத்துல பிடிச்சிருக்குனாங்க. அடுத்து நடந்ததுதான் சிறப்பு.

என்னை பத்து நாட்கள் ‘வாங்க பழகலாம்’னு அவங்க வீட்டுல தங்க வச்சாங்க. இதுவும் பழங்குடி சமூகத்துல உள்ள ஒரு வழக்கம். பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பேசி முடிச்சிட்டா அவன் இயல்பானவனா, பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்குறானா, கெட்டபழக்கம் உள்ளவனா, எப்படி நடந்துக்கிறான், சமையல்ல பங்கெடுப்பானா, பேச்சு வழக்கு சுத்தமா இருக்குமா, உறவுகளுடன் இருக்க தகுதி உள்ளவனானு எல்லாம் பார்க்க இந்த நிகழ்வை செய்வாங்க. இந்த அடிப்படையில் அவங்க வீட்டுல ஒருவாரம் தங்கி நல்ல பையன்னு நிரூபிச்சேன்.

அப்புறம், அவங்க எங்க வீட்டுக்கு வந்து பேசினாங்க. 2010ம் ஆண்டு குடகுமலையில் பழங்குடிகள் முறைப்படி திருமணம் நடந்தது. அவங்க முறையில் தாலி கட்டமாட்டாங்க. பாரம்பரிய உடை உடுத்தி கையைப் பிடிச்சுக் கொடுப்பாங்க. அவ்வளவுதான். அப்புறம், அவங்க திருமணத்துல புகுந்த வீட்டுக்குப் போற பொண்ணுக்கு புதுசா ஒரு பெயர் வைக்கிற சடங்கு இருக்கு. அதை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க செய்வாங்க. அப்படியா என் மனைவிக்கு நாங்க வினினு பெயர் வைச்சோம்.

திருமணத்தின்போது என் மாமனார் என்கிட்ட கேட்டது ஒரே ஒரு விஷயம்தான். அது, ‘தமிழ்நாட்டுல போய் நீங்களும், என் மகளும் சேர்ந்து பழங்குடிகளுக்காக வேலை செய்யணும். நீங்க அதை உறுதிமொழியா கொடுக்கணும்’னு கேட்டுக்கிட்டார். அந்த உறுதிமொழியைக் கொடுத்தேன். இப்ப வரை காப்பாத்திட்டும் இருக்கேன். என்கூட போராட்டம், மீட்டிங்னு சகலத்துக்கும் லீலாவதியும் வர்றாங்க.

எங்களுக்கு தர்ஷன், சாதனானு பையனும், பெண்ணும் பிறந்தபிறகு இப்ப குடும்பமா பயணிக்கிறோம். பொள்ளாச்சியில் தங்கி காடர்கள், பளியர்கள் புலையர்கள், மலசர், இரவாளர்கள் ஆகிய பழங்குடிகளுக்காக வேலை செய்றோம். இதுல என் மனைவியின் பங்களிப்பு நிறைய. பழங்குடி மக்களுக்காக வேலைகள் செய்றது, அவங்க உரிமைகளுக்காக போராடுறது, அதேநேரம் அவங்க கல்வி, கலாசாரம், பண்பாடு மாறாமல் அவங்களுக்கான வளர்ச்சியை உருவாக்குறதுனு வேலைகளை முன்னெடுக்குறோம்.

எங்க நோக்கம் ஒன்றே ஒன்றுதான். வாழ்க்கை முழுவதும் பழங்குடிகளுக்காக வேலை செய்யணும். அவங்ககிட்ட மாற்றத்தை உருவாக்கணும்...’’ மெய்ப்படும் கனவுடன் சொல்கிறார்கள் தன்ராஜும் லீலாவதியும்.  

பேராச்சி கண்ணன்