COFFEE TABLE



மூடப்பட்டது வெஸ்ட்லேண்ட் பதிப்பகம்

அமேசான் நிறுவனம் டிவி முதல் ஜட்டி வரை ஆன்லைனில் விற்றுக்கொண்டிருக்கையில் அது விற்ற புத்தகங்களும் வாசகர்களுக்கு மிக மலிவாகக் கிடைத்து வந்தது. கடந்த 6 ஆண்டுகளுக்குமுன் மற்ற பதிப்பகத்தாரின் புத்தகங்களைத் தவிர்த்து தனக்கென ஒரு தனி பதிப்பகத்தையும் தொடங்கியது. அதன் பெயர் ‘வெஸ்ட்லேண்ட்’. இந்த வெஸ்ட்லேண்ட் பதிப்பகத்தில் மிக காத்திரமான இந்திய மற்றும் உலக எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டது. இதற்கு இந்தியர்களிடையே பலத்த வரவேற்பு கிடைக்க, விற்பனையும் அதிகரித்தது.

ஆனால், கடந்த வாரம் இந்த வெஸ்ட்லேண்ட் பதிப்பகத்தை மூடப்போவதாக அறிவித்திருக்கிறது அமேசான். காரணம், ‘வெஸ்ட்லேண்ட்’ வெளியிட்ட பல புத்தகங்கள் பாஜகவுக்கு எதிரான கருத்துள்ள புத்தகங்களாக உள்ளதுதான். இதனாலேயே நெருக்குதலுக்கு பயந்து பதிப்பகத்தை அமேசான் மூடிவிட்டது என்கிறார்கள் விமர்சகர்கள். ஆக்கர் பட்டேல், தேவ்தத் பட்நாயக், கிறிஸ்டோஃபர் ஜெஃபர்லே, நம்ம ஊர் பெருமாள் முருகன் உட்பட பிரபல எழுத்தாளர்கள் எழுதி, ‘வெஸ்ட்லேண்ட்’ வெளியிட்ட புத்தகங்கள் இனிமேல் இந்திய வாசகர்களுக்குக் கிடைக்காது என்பதுதான் இந்த வாரத்தின் மிகப்பெரும் துயரம்.

5வது முறையாக அண்டர் 19 கிரிக்கெட் உலகக் கோப்பை

ஐந்தாவது முறையாக அண்டர் 19 கிரிக்கெட் உலகக் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது இந்திய அணி. மேற்கிந்தியத் தீவில் நடந்த இந்தப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வந்த இந்திய அணி இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியைச் சந்தித்தது. 189 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்டி அதிகமுறை கோப்பை வென்ற அணி என்கிற பெயரையும் பெற்றது.  இதில், இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் பனா, வெற்றி இலக்கை சிக்சர் அடித்து முடித்து வைத்தார்.

இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, ‘இந்தக் காட்சியை இதற்கு முன்பு எங்கே பார்த்தோம்’ என இன்ஸ்டாகிராமில் ஒரு கேப்ஷன் போட்டு வீடியோ வெளியிட... அது பரபரத்தது. காரணம், அதில், 2011ல் இந்திய அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனி சிக்சர் அடித்து வெற்றி பெற வைத்த காட்சி இடம்பெறுகிறது. மட்டுமல்ல; தோனியைப் போலவே அதே லாங்ஆனில் தினேஷின் சிக்சரும் செல்ல கோடிக்கணக்கான ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்தனர்.

உலகின் மிகப்பெரிய  இக்லூ கஃபே

பனிக்கட்டிகளைக் கொண்டு கட்டப்படும் வீடுகளுக்கு, ‘இக்லூ’ என்று பெயர். சமீபத்தில் காஷ்மீரில் உள்ள குல்மார்க் எனும் இடத்தில் பிரமாண்டமான இக்லூ கஃபேவைத் திறந்திருக்கிறார் சயித் வாசிம் ஷா. இந்தப் பனிக்கட்டி உணவகத்துக்குப் பெயர், ‘ஸ்நோக்லூ’. சில வருடங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்துக்குச் சென்றிருந்தார் சயித். அங்கே பனிக்கட்டிகளால் கட்டப்பட்ட காபிக்கடைகளும், உணவகங்களும் அவரைக் கவர்ந்திருக்கிறது. காஷ்மீருக்குத் திரும்பிய அவர், சுவிட்சர்லாந்தில் இருப்பதைப் போலவே இக்லூ கஃபேவை அமைக்கத்
திட்டமிட்டார்.

ஆனால், கொரோனா லாக்டவுன் அவரது ஆசைக்குத் தடைபோட்டுவிட்டது. லாக்டவுன் சரியான பிறகு 25 பேருடன் களத்தில் இறங்கினார் சயித். 64 நாட்களில் 37.5 அடி உயரமும், 44.5 அடி விட்டமும் கொண்ட இக்லூ கஃபே தயாராகிவிட்டது. இந்த கஃபேவுக்குள் 10 டேபிள்கள் வரை போட முடியும். அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 40 பேர் வரை அமர்ந்து சாப்பிட முடியும். காஷ்மீரின் பிரசித்தி பெற்ற அனைத்து உணவுகளும் இங்கே கிடைக்கும்.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு இக்லூ கஃபே, 33.8 அடி உயரம், 42.4 அடி விட்டத்துடன் உலகின் பெரிய இக்லூ கஃபேவாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தது. இந்த கின்னஸ் சாதனையையும் தன்வசமாக்கிவிட்டது சயித்தின் இக்லூ கஃபே.

8 வயது எழுத்தாளர்!

மறைந்தது இந்திய இசைக் குரல்... அமெரிக்காவில் உள்ள போய்ஸ் நகரைச் சேர்ந்த சிறுவன் தில்லான் ஹெல்பிக். அவனுக்கு ஐந்து வயதாக இருந்தபோதே உள்ளூர் நூலகத்துக்குச் செல்வது வழக்கம். அப்போதே அந்த நூலகத்தில் தன்னுடைய புத்தகமும் இடம்பெற வேண்டும் என்பது கனவாகிவிட்டது. ஆனால், நூலகத்தில் புத்தகம் இடம்பெறவேண்டும் என்றால் பல்வேறு விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை தில்லான்.

தனது 8 வயதில் ‘The Adventures of Dillon Helbig’s Crismis’ எனும் காமிக் புத்தகத்தை எழுதிமுடித்தான். ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதி அது.
கடந்த வாரத்தில் ஒரு நாள் நூலகத்துக்கு தனியாகச் சென்றான் தில்லான். நூலகத்தில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து மற்ற புத்தகங்களுக்கு நடுவில் தன்னுடைய புத்தகத்தையும் வைத்துவிட்டு ஒரே ஓட்டமாக வீட்டுக்கு வந்துவிட்டான்!

அடுத்த நாள் தில்லானின் புத்தகம் நூலகத்தில் இருப்பதைக் கண்ட நூலகருக்கு அதிர்ச்சி. இருந்தாலும் சிறுவனை உற்சாகப்படுத்த வேண்டும் என்று நூலகத்தில் தில்லானின் புத்தகத்தையும் இணைத்துக்கொண்டார். கிராஃபிக் நாவல் பிரிவில் அடுக்கி வைக்கப்பட்ட அந்தப் புத்தகத்தை நூலக உறுப்பினர் ஒருவர் எடுத்துக்கொண்டு போயிருக்கிறார். பின் இப் புத்தகம் வேண்டி 56 பேர் முன்பதிவு செய்துள்ளனர். தில்லானின் புகழ் எங்கும் பரவி வருகிறது. அத்துடன் விருதுகளும், பாராட்டுகளும் குவிகின்றன.

தொகுப்பு: குங்குமம் டீம்