த டிண்டர் ஸ்விண்ட்லர்



டேட்டிங் ஆப்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆங்கிலத்தில் களமிறங்கியிருக்கிறது ‘த டிண்டர் ஸ்விண்டலர்’. ‘நெட்பிளிக்ஸி’ல் பார்க்கலாம். இஸ்ரேலைச் சேர்ந்த இளைஞன் சைமன் ஹயூத். சிறு வயதிலே திருட்டு, மோசடி என பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு மூன்று வருடங்கள் சிறையில் இருந்தவன். டேட்டிங் ஆப்களில் பிரபலமானது ‘டிண்டர்’. இதில் வைர வியாபாரியின் ஒரே மகன் என்று போலியாக புரொஃபைல் தயார்செய்து பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை நடத்தியவன்.

பெரிய கோடீஸ்வரன் என்று பெண்களை நம்ப வைப்பதற்காக சொந்தமாக விமானம், ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பது போல புகைப்படங்கள் இட்டு ஏமாற்றியவன். இந்த சைமனையும், அவனால் பாதிக்கப்பட்ட பெண்களையும் குறித்த படம்தான் இது.

ஆவணப் பட ஸ்டைலில் படமாக்கப்பட்டிருப்பது சிறப்பு. டேட்டிங் ஆப்கள் மற்றும் ஆன்லைன் வழியாக அரங்கேறுவது காதல் அல்ல; அது ஆபத்தான விளையாட்டு என்று அழுத்தமாகப் பதிவு செய்கிறது ‘த டிண்டர் ஸ்விண்ட்லர்’. படத்தின் இயக்குநர் ஃபெலிசிட்டி மோரிஸ்.